மகேந்திரம் செல் படலம்
 
3867.
வீரவாகு நின்று அவ் அதிவீரனை வீட்டித்
தாரை வாளுறை செலுத்தியே வெம் சமர் தணித்து
நேர் இல் வீரமா மகேந்திரம் போவது நினைந்தே
ஏர் உலா வரும் இலங்கையின் எல்லை நீத்து எழுந்தான்.
1
   
3868.
எழுந்து வான்வழிச் சேறலும் ஆர் கலி இடையே
விழுந்து கீழ் உறும் இலங்கை மீண்டு எழுந்தது விரைவில்
கழிந்த தொல் பரம் நீங்கிய காலையில் கடல் ஊடு
அழுந்து கின்ற பொன் தேணி மீச் சென்றிடும் அது போல்.
2
   
3869.
வார்த்தயங்கிய கழலவன் வான் வழிக் கொளலும்
ஈர்த்த தெண் கடல் நீத்தம் மேல் எழுதரும் இலங்கை
சீர்த்த நான்முகன் உறங்குழிச் சிந்து ஊடு அழுந்திப்
பேர்த்து ஞாலம் விட்டு எழுதரு மேருவில் பிறழும்.
3
   
3870.
எள்ளு நீரரைப் பற்பகல் ஆற்றலின் இலங்கை
கொள்ளை வெம்பவம் மாசு இருள் அடைந்தது குறைதீர்
வள்ளல் தாள் பட நீத்தது பவம் துகள் மாற்றத்
தெள்ளு நீர்க் கடல் படிந்து எழுந்தால் எனத் திகழும்.
4
   
3871.
கந்தரம் தவழ் தெண் புனல் கரும் கடல் நடுவண்
சுந்தரம் செறி பொன் சுடர் இலங்கை தோன்றியது
முந்து காலையில் எம்பிரான் அருள் வழி முராரி
உந்தி நின்று எழு பிரமன் மூதண்டம் ஒத்து உளதால்.
5
   
3872.
இன்னது ஆகிய இலங்கை மா புரத்தை நீத்து எழுந்து
பின்னும் ஆயிரம் யோசனை வான் இடைப் பெயர்ந்து
பொன் உலா உறு வாகை அம்புயத்தவன் புலவோர்
ஒன்னலான் உறை மகேந்திர வரைப்பின் முன் உற்றான்.
6
   
3873.
நெற்றி நாட்டத்து நந்தி தன் கணத்தவன் நேமிப்
பொற்றை ஆம் எனச் சூழ்ந்து உயர் மகேந்திரப் புரிசைச்
சுற்று ஞாயிலும் வாயில்கள் தொறும் தொறும் தோன்றும்
கற்றை மா மணிச் சிகரியும் நுனித்து முன் கண்டான்.
7
   
3874.
சேரல் ஆர் அமர் மகேந்திர நகர் வட திசையில்
வாரி வாய்தலுட் கோபுரத் தெற்றியின் மாடே
கோரனே அதி கோரனே எனப்படும் கொடிய
வீரர் தானையோடு இருந்தனர் காவல்கொள் வினையால்.
8
   
3875.
கரிகள் ஆயிரம் வெள்ளமே தேரும் அக் கணிதம்
பரிகள் ஆங்கு அதற்கு இரு தொகை அத்தொகை பதாதி
உரிய அப் பெரும் தானையம் பெரும் கடல் உலவா
விரவி மேவர இருந்தனர் காத்திடும் வீரர்.
9
   
3876.
பகுதி கொண்டிடும் தானை அம் சூழலாம் பரவைத்
தொகுதி கண்டனன் விம்மிதம் கொண்டனன் துன்னார்
மிகுதி கொண்டு உறை காவலும் கண்டனன் வியனூர்
புகுதி கொண்டிடும் உணர்வினான் இனையன புகல்வான்.
10
   
3877.
ஈண்டு செல்லினித் தானை சூழ்ந்து அமர் செயும் யானும்
மூண்டு நேரினும் முடிப்ப ஓர் பகல் எலாம் முடியும்
மாண்டது என்னினும் உலவுமோ மா நகர் இடத்து
மீண்டும் வந்திடும் கரி பரி பதாதி தேர் வெள்ளம்.
11
   
3878.
வந்த வந்ததோர் தானவப் படையொடே மலை உற்று
எந்தை கந்த வேள் அருளினால் யான் ஒரு வேனும்
சிந்தி நிற்பனேல் இந் நகர்த் தானைகள் சிதைய
அந்தம் இல் பகல் சென்றிடும் அளியரோ அவுணர்.
12
   
3879.
எல்லை இல் பகல் செல்லினும் செல்லுக இனைய
மல்லன் மா நகர் அவுணர் மாப் பெரும் கடல் வறப்ப
ஒல்லும் நீர்மையால் யான் அடல் செய்வனேல் உருத்துத்
தொல்லை மைந்தரைத் துணைவரை உய்க்குவன் சூரன்.
13
   
3880.
உய்த்த மைந்தர்கள் சூழ்ச்சியின் துணைவர்கள் ஒழிந்தோர்
அத் திறத்து உளோர் யாரையும் வெலற்கு அரிது அயில்                                            வேல்
கைத்தலத்தவன் வலி கொடே பற்பகல் காறும்
இத்தலைச் சமர் ஆற்றியே முடிக்குவன் எனினும்.
14
   
3881.
ஏவரும் வெலற்கு அரிய சூர் பின்னர் வந்து எதிர்க்கும்
ஓவில் வெம் சமர் பல பகல் ஆற்றி யான் உறினும்
வீவது இல்லையால் அங்கு அவன் மேலை நாள் தவத்தால்
தேவ தேவன் முன் அருளிய வரங்களின் சீரால்.
15
   
3882.
அன்னவன் தனை மால் அயன் தனக்கும் வெல்லல்                                     அரிதால்
இன்னும் ஆங்கு அவன் ஆணைக்கும் வெருவியே                                     இருந்தார்
பின்னையார் அவன் தன்னை வென்றிடுவர்கள் பெருநாள்
துன்னியான் சமர் ஆற்றினும் தொலைகிலன் சிறிதும்.
16
   
3883.
தொலைந்து போகிலன் சூர் அமர் இயற்றிடில் துன்னிக்
கலந்த யான் விறல் இன்றி மீண்டு ஏகுதல் கடனோ
மலைந்து நிற்கவே வேண்டுமால் ஆயினும் வறிது
மலைந்து அலைப்படும் சுரர் சிறை அகன்றிட வற்றோ.
17
   
3884.
மற்று இந் நீர்மையில் பற்பகல் அவனொடு மலைந்து
வெற்றி கொண்டிலன் இன்னும் என்று அமரினை வீட்டி
ஒற்றின் நீர்மையை உணர்த்துதல் ஒல்லுமோ உலவா
தெற்றை வைகலும் அமர் செய வேண்டுமால் எனக்கே.
18
   
3885.
போத நாயகன் பரம் பொருள் நாயகன் பொருவில்
வேத நாயகன் சிவன் அருள் நாயகன் விண்ணோர்க்கு
ஆதி நாயகன் அறுமுக நாயகன் அமலச்
சோதி நாயகன் அன்றியார் சூரனைத் தொலைப்பார்.
19
   
3886.
இம்பர் சூரொடு பொருது நின்றிடுவனே என்னின்
நம்பிரான் அறு மாமுகன் பின்னரே நண்ணி
வெம்பு சூரனை வேலினால் தடிந்து வெம் சிறையில்
உம்பர் யாரையும் மீட்டிட வேண்டு மேல் ஒருநாள்.
20
   
3887.
ஆதலால் அமர் ஆற்றுதல் முறையதோ அஃதான்று
ஈது நம் பெருமான் தனது அருளும் அன்று இனைய
தூதர் செய் கடன் ஆம் கொலோ அமர் பெறாத்                                     தொடர்பால்
போதலே கடன் என்றனன் பொருவில் சீர் அறிஞன்.
21
   
3888.
இப்பால் வாய்தலின் எல்லை நீங்கிய
துப்பார் தானைகள் துற்று நின்றவால்
அப்பால் எய்தரிதாம் மருங்கு போய்
வைப்பார் கீழ்த்திசை வாயில் நண்ணுவேன்.
22
   
3889.
என்னா உன்னி இயன்ற உத்தரப்
பொன் ஆர் வேலி புகாது பாங்கர் போய்க்
கொன்னார் கின்ற குணக்கு வாய்தலின்
முன்னா ஏகினன் மொய்ம்பின் வீரனே.
23
   
3890.
மேதிக் கண்ணவன் வீர பானு வென்று
ஆதிக்கத்து அவுணர்க்கு நாயகர்
ஏதிக் கையர் இரண்டு வீரரும்
ஆதிக் கன்னதன் வாயில் போற்றினார்.
24
   
3891.
திரு உந்தும் வட திக்கு வாய்தலின்
விரவும் தானையின் வெள்ளம் மெய்த்தொகை
பரவும் சூரர் பயிற்று பல் பவத்து
உருவம் சூழ்ந்தென ஒத்து நின்றவே.
25
   
3892.
வண்டார் செற்றிய வாகை மொய்ம்பினான்
கண்டான் அன்ன கடிக்கொள் காவலும்
தண்டாது உற்றிடு தானை நீத்தமும்
அண்டா அற்புத நீரன் ஆயினான்.
26
   
3893.
ஆண்டு அங்கு உற்ற அளப்பில் சேனையைக்
காண்டும் இவ்வுழி காவல் போற்றியே
சேண்டு உன்றும் புவி செற்றும் ஆதலால்
ஈண்டும் செல்ல அரிது என்றும் உன்னினான்.
27
   
3894.
நின்று இப் பாற் படல் நீர்மை அன்று அரோ
தென் திக்கின் வழி சென்று நாடுவன்
என்று உட்கொண்டு அவண் நீங்கி ஏகினான்
குன்றின் தொன்மிடல் கொண்ட தோளினான்.
28