நகர் புகு படலம்
 
3950.
அண்டம் யாவையும் எழுவகை உயிர்த்தொகை                                     அனைத்தும்
பிண்டம் ஆம் பொருள் முழுவதும் நல்கி எம் பெருமான்
பண்டு பாரித்த திறம் என மகேந்திரப் பதியின்
மண்டு தொல் வளம் நோக்கியே இன்னன மதிப்பான்.
1
   
3951.
எந்தை முன்னரே சூரபன்மா வினுக்கு ஈந்த
முந்தும் அண்டங்கள் அலமரும் உவரிகள் முழுதும்
வந்து மொய்த்தன போலும் ஆல் வரைபுரை காட்சிக்
கந்து பற்றியே ஆர்த்திடும் எல்லை தீர் கரிகள்.
2
   
3952.
இயலும் ஐம் பெரும் நிறத்தின் அண்டங்களின் இருந்த
புயல் இனம் பல ஓர் வழித் தொக்கன பொருவ
மயில் இரும் சரம் முயலொடு யூக மற் றொழிலைப்
பயில் பரித் தொகை அளப்பில வயின் தொறும் பரவும்.
3
   
3953.
அண்டம் ஆயிரத்து எட்டினுள் மேதகும் அடல் மாத்
தண்டமால் கரி ஆயின தம் பெரும் தேர்கள்
எண்டரும் பொருள் யாவும் ஈண்டு இருந்தன இவற்றைக்
கண்டு தேர்ந்தனர் அல்லரோ அகிலமும் கண்டோர்.
4
   
3954.
இணை இல் இவ்விடைத் தானையின் வெள்ளம் ஓர்                                     இலக்கம்
நணுகும் என்றனன் அந்தணன் நாற் பெரும் படையும்
கணிதம் இல்லன இருந்தன வெள்ளி கண் இலன் போல்
உணர்வு இலன் கொலாம் கனகனும் கேட்ட சொல்                                     உரைத்தான்.
5
   
3955.
உரையின் மிக்க சூர் பெற்ற அண்டம் தொறும் உளவாம்
வரையின் மிக்கதேர் கடல்களின் மிக்க கை மாக்கள்
திரையின் மிக்கவாம் பரித் தொகை ஆயிடைச் செறிந்த
பரவை நுண் மணல் தன்னினும் மிக்கன பதாதி.
6
   
3956.
மண் கொள் ஆயிரத்து எட்டு எனும் அண்டத்தின்                                     வளமும்
எண் கொள் எண்பதினாயிரம் யோசனை எல்லைக்
கண் கொள் பான்மையில் ஈண்டிய அற்புதம் கறை தோய்
புண் கொள் வேல் உடைச் சூர் தவத்து அடங்கிய                                     போலாம்.
7
   
3957.
உரைசெய் ஆயிரத்து எட்டு எனும் அண்டத்தின் உளவாம்
கரை இல் சீர் எலாம் தொகுத்தனன் ஈண்டு அவை                                         கண்டாம்
தருமம் மெய்யொளி கண்டிலம் அவற்றையும் தந்து
சுரர்கள் தம்முடன் சிறையில் இட்டான் கொலோ சூரன்.
8
   
3958.
அரண்டு அரும் கழல் சூரன் வாழ் மகேந்திரம் அதனில்
திரண்ட பல்லியத் துழனி ஏழ் கடலினும் தெழிப்ப
முரண்டிறத்து அவை இயம்புவார் அளவையார் மொழிவார்
இரண்டு பத்து நூறு யோசனை உண்டவர் இடங்கள்.
9
   
3959.
கரிகள் சேவகம் ஒருபதினாயிரம் கடும் தேர்
விரியும் நீள் இடை ஒரு பதினாயிரம் விசயப்
பரியின் எல்லை ஓர் இருபதினாயிரம் பையத்து
உருவின் இன்னமும் உண்டுகொல் யோசனைத் தொகையே.
10
   
3960.
இவுளி வாயினும் மால் கரிக் கரத்தினும் இழிந்து
திவளும் நீர்மை சால் விலாழியும் தானமும் செறிந்து
குவளை உண்கணார் நீத்த சாந்து அணிமலர் கொண்டே
உவள கந்தரும் அகழி சென்று அகன் கடல் உறும் ஆல்.
11
   
3961.
வளமை மேதகும் இப் பெரு மகேந்திரம் வகுத்தன்
முளரி அண்ணல் இங்கு ஒருவனான் முடிந்திட வற்றோ
ஒளிறு வாள் படை அவுணர் கோனுடைய அண்டத்தின்
அளவின் நான்முகர் யாரும் வந்து இழைத்தனர் ஆம்                                         ஆல்.
12
   
3962.
புரந்தரன் தனது உலகமும் ஒழிந்த புத்தேளிர்
இருந்த வானமும் எண் திசை நகரமும் யாவும்
வருந்தி இந் நகர் சமைத்திட முன்னரே வண்கை
திருந்தவே கொலாம் படைத்தனர் திசை முகத்தலைவர்.
13
   
3963.
பொன் புலப்படு துறக்கம் வான் மாதிரம் புவிகீழ்
துன்பில் போகமார் உலகு என்பர் தொடு கடல் பெருமை
முன்பு காண் கலர் கோட்டகம் புகழ்தரு முறை போல்
இன்பம் யாவையும் உள நகர் ஈது போல் இயாதோ.
14
   
3964.
கறை படைத்ததாள் கரிபரி அவுணர் தேர்க் கணங்கள்
அறை படைத்து இவண் ஈண்டிய அண்டங்கள்                                    அனைத்தும்
முறை கடல் தொகை முழுவதும் சூர் கொணர்ந்து                                    ஒருங்கே
சிறை படுத்திய போலும் வேறு ஒன்று இலை செப்ப.
15
   
3965.
ஐய பூழியும் ஆரகில் ஆவியும் ஆற்ற
நொய்ய வாகிய அணுக்களும் நுழை வரிது என்னில்
செய்ய இந் நகர் ஆவணம் எங்கணும் செறிந்த
வெய்ய தேர்கரி அவுணர் தம் பெருமையார் விரிப்பார்.
16
   
3966.
அள்ளல் வேலை சூழ் மகேந்திர புரிக்கு இணையாகத்
தெள்ளிதா ஒரு நகரம் இன்று உளது எனச் செப்ப
எள்ளல் இன்றிய அண்டம் ஓர் ஆயிரத்து எட்டின்
உள்ள சீர் எலாம் ஈது போல் ஒரு புரத்து உளதோ.
17
   
3967.
கழிந்த சீர்த்தி கொள் இந் நகர் தன் இடைக் கஞல
வழிந்து தொல் உரு மாழையின் மணி நிழலாகி
இழிந்துளான் பெறு திரு எனப் பயன் பெறாது எவர்க்கும்
ஒழிந்த வேலைகள் தம் புகழ் கொள்வது இவ் வுவரி.
18
   
3968.
ஏற்கும் நேமி சூழ் மகேந்திர வெறுக்கை இவ்வுலகோர்
ஆர்க்கும் ஓர் பயன் பெற்றிலது உயிர்ப்பலி அருந்தும்
கார்க்குழாம் புரை அலகை சூழ் காளி மந்திரத்தில்
சீர்க் கொள் கற்பகம் பிறர்க்கு உதவாத அமர்                                     செயல்போல்.
19
   
3969.
மறக் கொடும் தொழில் இரவி அம் பகை அழல் மடுப்பத்
துறக்கம் ஆண்டது பட்டிமை ஆகும் அத் தொல்லூர்
சிறக்கும் இந்நகர் நோக்கியே தன் நலம் தேய்ந்து
பொறுக்க அரும்பெரு நாண்சுடக் கரிந்தது போலாம்.
20
   
3970.
துங்க மிக்க சூர் படைத்திடும் அண்டமாத் தொகையுள்
செங்கதிரத் தொகை ஆங்கு அவன் பணியினால் சென்று
பொங்கு தண் சுடர் நடாத்தி நின்றென்ன இப்புரியில்
எங்கும் உற்றன செழுமணிச் சிகரம் எண் இலவே.
21
   
3971.
மாண் நிலைப்படும் எழுவகை உலகின் வைப்பு என்ன
வேண் நிலைப் பெரும் சிகரிகள் செறிந்தன யாண்டும்
கோள் நிலைக் கதிர் உடுப்பிறர் பதங்களில் குழுமி
நீண் நிலைத்தலம் பல உள மாடங்கள் நிரந்த.
22
   
3972.
நூறு யோசனை சேண் படு நீட்சியும் நுவலும்
ஆறு யோசனைப் பரவையும் பெற்ற ஆவணங்கள்
ஏறு தேர் பரி களிறு தானவர் படை ஈண்டிச்
சேறல் ஆயிடை அருமையால் விசும்பினும் செல்லும்.
23
   
3973.
அடல் மிகுத்திடு தானவர் அகல் இரு விசும்பில்
கடிதினில் செல மத்திமை காட்டு மாறு ஒப்ப
நெடு முகில் கணம் தழுவு சூளிகை மிசை நிறுவும்
கொடிகள் எற்றிடப் போவன இரவி கொய் உளைமா.
24
   
3974.
மேல் உலாவிய படிக மாளிகை சில மின்னார்
மாலை தாழ் குழற்கு இடும் அகில் ஆவியான் மறைவ
சீலம் நீங்கிய அவுணர் தம் சீர்த்திகள் அனைத்தும்
மேலவே அவர் பவத்தினுள் ஒடுங்குமாறு என்ன.
25
   
3975.
அணிகுலாய கோ மேதகம் மரகதம் ஆரம்
துணியும் நீலம் வச்சிரம் வயிடூரியம் துப்பு
நணிய பங்கயம் புருடராகம் எனும் நவமா
மணிகளால் செய்து மிளிர்வன வரம்பு இல் பொன் மாடம்.
26
   
3976.
இயல் படைத்த வெண் படிகத்தின் இயன்ற மாளிகை மேல்
புயல் படைத்திடு களிமயில் வந்திடப் புடையே
கயல் படைத்த கண்ணியர் புரி அகில் புகை கலப்ப
முயல் படைத்திடு மதியினைச் சூழ் தரு முகில் போல்.
27
   
3977.
வளன் இயன்றிடு செம்மணிப் பளிங்கு மாளிகை மேல்
ஒளிறு பொன் தலத்து அரிவையர் வடிமிசைந்து உறுதல்
வெளிய சேயன பங்கயப் பொகுட்டின் மீமிசையே
அளி இனங்கள் தேன் மாந்தியே வைகும் மாறு அனைய.
28
   
3978.
துய்ய வால் அரி புனற்கு இறை மண்ணியே தொகுப்பச்
செய்ய தீயவன் ஊன்களொடு அவை பதம் செய்ய
மையன் மாதரோடு அவுணர்கள் அரம்பையர் வழங்க
நெய் அளாவு உண்டி உண்குவர் மறுசிகை நீக்கி.
29
   
3979.
துப்பு உறுத்தன குஞ்சி அம் காளையர் தொகையும்
செப்பு உறுத்து சீறடி மினார் பண்ணையும் செறிந்து
மெய்ப் புறத்து இயல் காட்சியும் கலவியும் வெறுப்பும்
எப்புறத்தினும் நிகழ்வன மதன் உலகு இதுவே.
30
   
3980.
பூணும் ஆரமும் கலாபமும் இழைகளும் பொன் செய்
நாணும் ஒற்றரால் பரத்தையர் பால் பட நல்கிப்
பேணி மற்றவர் விலக்கின நயந்தன பிறவும்
மாணு மைந்தர்கள் தேறுவான் ஆறுபார்த்து அயர்வார்.
31
   
3981.
துன்று தானவர் தெரியலின் மாதர் பூம் தொடையின்
மன்றல் மாளிகைச் சோலையின் இலஞ்சியின் மலரில்
குன்றமால் கரித்து அண்டத்தில் யாழ் முரல் குழுவில்
சென்று சென்றன துணர்வு போல் அளிகளும் திரியும்.
32
   
3982.
மாறு இலாத சூர் ஆணையால் வந்திடும் வசந்தன்
ஊறு தெண்கடல் அளவியே தண்டலை உலவி
வீறு மாளிகை நூழையின் இடம் தொறும் மெல்லத்
தேறல் வாய் மடுத்தோர் என அசைந்து சென்றிடும் ஆல்.
33
   
3983.
மாடம் மீது அமர் மடந்தையர் தம் உரு வனப்புக்
கூடவே புனைந்து அணி நிழல் காண்பது குறித்துப்
பாடு சேர் கரம் நீட்டியே பகலவன் பற்றி
ஆடி நீர்மையின் நோக்கியே அந்தரத்து எறிவார்.
34
   
3984.
வன்ன மாட மேல் ஆடவர் பரந்து அமை மகளிர்
உன்னி ஊடியே பங்கி ஈர்த்து அடிகளால் உதைப்பப்
பொன்னின் நாண் அறத் தமது கை எழிலி உள் போக்கி
மின்னு வாங்கியே ஆர்த்தனர் குஞ்சியை வீக்கி.
35
   
3985.
முழங்கு வான் நதி தோய்ந்த சின் மாளிகை முகட்டின்
அழுங்கல் என்பதை உணர்கிலா மாதரார் அகல்வான்
வழங்கு கோளுடன் உருமினைப் பற்றி அம்மனையும்
கழங்குமாய் எறிந்து ஆடுவர் அலமரக் கண்கள்.
36
   
3986.
ஈண்டை மாளிகை மங்கையர் தம் சிறார் இரங்க
ஆண்டு மற்று அவர் ஆடுவான் பற்றி ஆதவன் தேர்
பூண்ட மான் தொகை கொடுத்தலும் ஆங்கு அவன்                                          போந்து
வேண்டி நின்றிட வாங்கியே உதவுவார் மெல்ல.
37
   
3987.
நீடு மாளிகை மிசை வரு மாதர் கை நீட்டி
ஈடு சால் உரும் ஏறுடன் மின் பிடித்து இசைத்தே
ஆடு கிங்கிணி மாலை ஆம் மைந்தருக்கு அணியா
ஓடு கொண்டலைச் சிறு துகிலாப் புனைந்து உகப்பார்.
38
   
3988.
பொங்கு மா மணி மேல் தலத்து இரவி போந் திடலும்
இங்கு இது ஓர் கனி எனச் சிறார் அவன் தனை எட்டி
அங்கை பற்றியே கறித்து அழல் உறைப்ப விட்டு                                        அழுங்கக்
கங்கை வாரி நீர் ஊட்டுவார் கண்ட நற்றாயர்.
39
   
3989.
கண்டு வந்தனை வரும் புகழ் தம் சிறார் கலுழ
விண்டு வந்தனை செய்து எனத் தாழ்ந்த மேல் நிலத்தில்
வண்டு வந்தனைப் படுகதிர்க் கைம்மலர் வலிந்து
கொண்டு வந்தனை மார் இரங்கா வகை கொடுப்பார்.
40
   
3990.
அஞ்சில் ஓதியர் மாளிகை மிசைச் சிலர் அகல்வான்
விஞ்சு தேவரை விளித்தலும் மெய்யுறன் மறுப்ப
வஞ்சர் வஞ்சர் என்று அரற்றி அவ்வானவர் இசைய
நம் சிறாருடன் ஆடுதும் என்பர் நண்ணினர்க்கு.
41
   
3991.
பொருளில் மாளிகைப் படிற்றியர் புணவர் என்று உன்னி
வரவும் அஞ்சுவர் வராமையும் அஞ்சுவர் மடவார்
கரவின் மேவுதல் அவுணர்கள் காண்பர் கொல் என்றும்
வெருவுகின்றனர் என் செய்வார் விண் நெறிப் படர்வார்.
42
   
3992.
மேல் நிலம் தனின் மங்கையர் சிறார் விடாது இரங்க
ஊனம் இல் கதிர் தேர்வர அவரை ஆண்டு உய்த்து
வானகம் தனில் சில்லிடை யேகி நம் மகவைப்
பானுவந்து நீ தருக என விடுக்குநர் பலரால்.
43
   
3993.
கலதி ஆகிய அவுணர் தம் மாதர் கால் வருடிச்
சிலதியார் என வணங்கினோர் ஏவல் செய் கிற்பார்
சலதியார் தரும் உலகமேல் தெரி குறில் தவமே
அலதி யாவுள வேண்டி ஆங்கு உதவ நின்றனவே.
44
   
3994.
ஐந்து ஆகிய தருக்களும் மணியும் நல் ஆவும்
நந்தும் அம்புய நிதியமும் பிறவும் இந் நகரின்
மைந்தர் மாதர்கள் இருந்துழி இருந்துழி வந்து
சிந்தை தன்னிடை வேண்டி ஆங்கு உதவியே திரியும்.
45
   
3995.
மீது போகிய மாளிகைக் காப்பினுள் மேவும்
மாதர் வான் நெறிச் செல்லுவோர் சிலர் தமை வலித்தே
காதலால் பிடித்து ஒரு சிலர் முறை முறை கலந்து
போதிரால் என விடுப்பர் பின் அசமுகி போல்வார்.
46
   
3996.
மேதாவி கொண்ட கதிர் வெய்யவனை வெம்சூர்
சேய்தான் வலிந்து சிறை செய்திடலின் முன்ன
மேதாம் இனம் கொல் என எண்ணி அவன் என்று ஊழ்
வாதாய் அனங்கள் தொறும் வந்து புகல் இன்றே.
47
   
3997.
தேசு உற்ற மாடம் உறை சீப்ப வரு காலோன்
வாசப் புனல் கலவை வார்புணரி கொண்கன்
வீசப் புலர்த்தியிட விண் படரும் வெய்யோன்
ஆசுற்ற தானவர் அமர்ந்து இவண் இருந்தார்.
48
   
3998.
பால் கொண்ட தெண் கடல் மிசைப் பதுமை தன்னை
மால் கொண்டு கண்துயிலும் வண்ணம் இது என்ன
மேல் கொண்ட நுண் பளித மேனிலம் அதன் கண்
சூல் கொண்ட கார் எழிலி மின்னின் ஒடு துஞ்சும்.
49
   
3999.
குழலின் ஓதையும் எழால்களின் ஓதையும் குறிக்கும்
வழுவில் கோட்டொடு காகள ஓதையும் மற்றை
முழவின் ஓதையும் பாடுநர் ஓதையும் முடிவில்
விழவின் ஓதையும் தெண் திரை ஓதையின் மிகுமால்.
50
   
4000.
மதன் இழுக்கு உறு மைந்தரும் மாதரும் வனமா
மதன் இழுக்கிய வீதியில் வீசும் வண் கலவை
பதன் இழுக்கு உறச் சேதம் ஆகும் மீன் பலவும்
பதன் இழுக்கியவாம் தினம் புனைந் தெறி பணிகள்.
51
   
4001.
அளப்பில் வேட்கை அங்கு ஒருவர் கண் வைத்து மற்று                                         அதனை
வெளிப் படுக்கிலர் மெலிதலும் குறிகளே விளம்ப
ஒளிப்பது என் உளம் பகர் என ஆற்றலா துடைந்து
கிளிப் பெடைக்கு இருந்து ஒருசில மடந்தையர் கிளப்பார்.
52
   
4002.
குருளை மான் பிணித்து இளம் சிறார் ஊர்ந்திடும்                                 கொடித்தேர்
உருளை ஒண் பொனை மணித்தலம் கவர்ந்து கொண்டு                                 உறுவ
வெருளின் மாக்களை வெறுப்பது என் முனிவரும்                                 விழைவார்
பொருளின் ஆசையை நீங்கினர் யாவரே புவியில்.
53
   
4003.
விழைவு மாற்றிய தவத்தினரேனும் இவ் வெறுக்கை
மொழியினோரினும் அவுணராகத் தவம் முயல்வார்
ஒழியும் ஏனையர் செய்கையை உரைப்பது என் உலகில்
கழி பெரும் பகல் நோற்றவரே இது காண்பார்.
54
4003.
விழைவு மாற்றிய தவத்தினரேனும் இவ் வெறுக்கை
மொழியினோரினும் அவுணராகத் தவம் முயல்வார்
ஒழியும் ஏனையர் செய்கையை உரைப்பது என் உலகில்
கழி பெரும் பகல் நோற்றவரே இது காண்பார்.
54
   
4004.
குழவி வான் மதிக் கிம்புரி மருப்புடைக் கொண்மூ
விழும் எனச் சொரிது ஆன நீர் ஆறு போல் ஏகி
மழலை மென் சிறார் ஆவணத்து ஆடும் வண் சுண்ணப்
புழுதி ஈண்டலின் வறப்ப வான் கங்கையும் புலர.
55
   
4005.
கங்கை யூண் பயன் ஆகவும் தூய தெண் கடல் நீ
அங்கண் மா நகர்ப் பரிசனம் ஆடவும் அணைந்து
துங்க மேல்நிலை மாளிகை ஆவணம் சோலை
எங்கும் வாவியும் பொய்கையும் பிறவும் ஆய் ஈண்டும்.
56
   
4006.
வில் இயற்றுவோர் வாள் படை இயற்றுவோர் வேறு ஆம்
எல்லை இல் படை உள்ளவும் இயற்று வோர் இகலான்
மல் இயற்றுவோர் மாயம் அது இயற்றுவோர் மனுவின்
சொல் இயற்றுவோர் கண் உறு புலம் தொறும் தொகும்                                            ஆல்.
57
   
4007.
நாடி மேல் எழத் தசை இலாது உலறியே நரையாய்க்
கோடுபற்றி மூத்து அசைந்திடு வோரையும் கூற்றால்
வீடு வோரையும் பிணி உழப்போரையும் மிடியால்
வாடுவோரையும் கண்டிலம் இது தவ வலியே.
58
   
4008.
கன்னல் மாண் பயன் வால் அளை செய் கடும் தேறல்
துன்னு தீயபால் அளக்கர்தம் பேர் உருச் சுருக்கி
மன்னன் ஆணையால் இந்நகர்மனை தொறும் மருவிப்
பல்நெடும் குளன் ஆகியே தனித்தனி பயில்வ.
59
   
4009.
அட்ட தேறலும் அடாது அமை தேறலும் அருந்திப்
பட்டு வார் துகில் கீறியே தம்மொடு மறைந்து
விட்ட நாணின் ஓர் ஒருசில மடந்தையர் வியன் கை
கொட்டி யாவரும் விழை உறக் குரவை ஆட்டு அயர்வார்.
60
   
4010.
திலக வாண் நுதல் மாதர் ஆடவர் சிறு வரையின்
அலகிலா முறை புனைதலின் அணிந்து அணிந்து அகற்றும்
இலகு பூண் துகின் மாலை கந்தம் பிற ஈண்டி
உலகில் விண் நகர் எனச் சிறந்து ஆவணம் உறுமே.
61
   
4011.
கொய்து அலர்ந்த பூ நித்தில மணியுடன் கொழித்துப்
பொய்தல் ஆடுவார் முற்றிலால் எற்று பொன் பூழி
எய்தல் ஆனது இந் நகர் அளவோ கடல் இகந்து
நெய்தல் அம் கரைக் கானலை அடைந்து மேல் நிமிரும்.
62
   
4012.
சுந்தரம் கெழு செய்ய வெண் மலர்களால் தொடுத்த
கந்துகங்களைச் சிறுவர்கள் கரங்களின் ஏந்தி
அந்தரம் புக எறிதலும் ஆங்ஙனம் ஏகி
வந்து வீழுமால் இரு கதிர் வழுக்கி வீழ்வன போல்.
63
   
4013.
கழக மீது முன் போந்திட முதுகணக் காயர்
குழகு மென் சிறார் தனித்தனி வந்தனர் குறுகிப்
பழகு கற்பின் நூல் பயின்றனர் மாலையில் பட்ட
அழகு சேர் மதிப்பின் எழு கணங்கள் மொய்த்து                                       அனையார்.
64
   
4014.
கள்ளின் ஆற்றலால் களிப்பவர் தேறலைக் கரத்தில்
கிள்ளை ஆணினுக்கு ஊட்டியே காம நோய் கிளர்த்தி
உள்ளம் ஓடிய சேவலும் இரங்க ஓதிமத்துப்
புள்ளின் மென் படை மீ மிசை கலந்திடப் புணர்ப்பார்.
65
   
4015.
உரத்தின் முன்னரே வௌவி வந்து ஈட்டிய உம்பர்
சிரத்தின் மா முடித் திருமணி பறித்து ஒரு சிலவர்
அரத்த மேய தம் பங்கியில் பஞ்சியில் அழுத்தும்
பரத்தை மாரடிப் பாதுகை அணி பெறப் பதிப்பார்.
66
   
4016.
தேவி மார் பலர் வருந்தவும் அனையர் பால் சேரார்
ஆவி போவது நினைகிலர் ஆகியே அயலார்
பாவைமார் தமை வெஃகியே பட்டிமை நெறியான்
மேவு வார் சிலர் காண்பதே இதுவும் மென் விழியே.
67
   
4017.
நெருக்கு பூண் முலை இயக்கர் தம் மங்கையர் நெஞ்சம்
உருக்கு மேருடை அமரர் தம் மங்கையர் உளத்தின்
இரக்கம் நீங்கிய அவுணர்தம் மங்கையர் ஏனை
அரக்கர் மங்கையர் கணிகை மங்கையர்களாய் அமர்வார்.
68
   
4018.
கந்தம் ஆன பல் களபமும் சுண்ணமும் கமழும்
பந்து மாலையும் சிவிறி நீரொடு பரத்தையர்கள்
மைந்தரோடு எறிந்து ஆடல் யார் உளத்தையும் மயக்கும்
இந்த வீதி கொல் உருவு கொண்டு அநங்கன் வீற்றிருத்தல்.
69
   
4019.
பொன்னின் அன்னமும் பதும ராகம் புரை புறவும்
செந்நலம் கிளர் மஞ்ஞையும் சாரிகைத் திறனும்
பல் நிறம் கெழு புள்ளினம் இனையன பலவும்
இன்ன தொல் நகர் மங்கையர் கரம் தொறும் இருப்ப.
70
   
4020.
பண்டு வேட்டவர் பின் முறைப் பாவையர் பரிவில்
கண்டு பின்வரை மங்கையர் கானம் அது இயற்றிக்
கொண்ட இல்வழிப் பரத்தையர் கணிகையர் குழாத்துள்
வண்டு பூ உறு தன்மை சென்று ஆடவர் மணப்பார்.
71
   
4021.
தக்க மெல்லடிப் பரிபுரம் முழவுறத் தனமா
மிக்க தாளங்கள் ஒத்த மென் புள் இசை விரவ
இக்கு வேள் அவை காணிய பூந்துகில் எழினி
பக்க நீக்கியே மைந்தரோடு ஆடுவார் பலரே.
72
   
4022.
பாட்டு அமைந்திடும் காளையர் அணிநலம் பாரா
வேட்டு மங்கையர் ஒரு சிலர் தமது மெய் விளர்ப்பக்
கூட்டம் உன்னியே பல் நிறக் கலவையும் குழைத்துத்
தீட்டுவார் அவர் உருவினை வியன் கிழி திருத்தி.
73
   
4023.
சுற்று விட்டலர் தார் உடை வயவர் தொல் உருவில்
பற்று விட்டு உடன் உளத்தையும் விட்டு மென் பார்ப்பைப்
பெற்று விட்டிலாப் பெடை மயில் தழீஇத் துயர் பேசி
ஒற்று விட்டனர் ஒரு சிலர் ஆறு பார்த்து உழல்வார்.
74
   
4024.
அகன்ற கொண் கரை நனவின் எக்காலமும் அகத்தில்
புகன்று மட்டித்த வெம் முலைச் சாந்தொடும் புலர்வார்
பகன்றை போல் முரல் சிலம்படிப் பாவையர் பல்லோர்
முகன் தனில் கருமணிகளில் சொரிதர முத்தம்.
75
   
4025.
மங்கைமார் சிலர் ஆடவர் தம்மொடு மாடத்
துங்க மேல் நிலத்திடைப் படு சேக்கையில் துன்னி
வெம்கண் மெல் இதழ் வேறு பட்டு அணிமுகம் வியர்ப்பக்
கங்குல் ஒண் பகல் உணர்கிலர் விழைவொடு கலப்பார்.
76
   
4026.
மறிகொள் சோரிநீர் பலியுடன் நோக்கி நாண் மலர் தூய்
இறை கொள் இல்லிடைத் தெய்வதம் வழிபடல் இயற்றிப்
பறைகள் தங்க அக் கடவுளை ஆற்று உறப் படுத்தி
வெறி அயர்ந்து நின்று ஆடுவர் அளப்பிலர் மின்னார்.
77
   
4027.
அலங்கல் வேல் விழி மாதரும் மைந்தரும் அமர்ந்த
பொலங்கொள் மாட மேல் ஆடுறு பெரும் கொடி பொலிவ
மலங்கு சூழ்தரு தெண் திரைப் புணரியில் வைகும்
கலங்கள் மேவிய கூம்பு எனக் காட்டிய அன்றே.
78
   
4028.
புரசை வெம் கரி புரவி தேர் பொரு படைத் தலைவர்
பரிசனங்களாம் தோரணர் வாதுவர் பரவ
முரசமே முதல் இயம் எலாம் முன்னரே முழங்க
அரச வேழ மா எண்ணில கோயில் வந்து அடைவ.
79
   
4029.
கள் உறைத்திடு மாலை அம் பங்கியர் கமஞ்சூல்
வள் உறைப் புயன் மேனியர் ஒரு சிலர் வார் வில்
ஒள் உறைப் படை பிறவினில் கவரி தூங்கு உறுத்துத்
தள்ளு தற்கரும் வயமுரசு அறைய முன் சார்வார்.
80
   
4030.
அறுகு வெம்புலி வலியுடை மடங்கல் மான் ஆமாச்
சிறுகு கண் உடைக் கரிமரை இரலை இத் திறத்தில்
குறுகு மாக்களைப் படுத்த அவற்று ஊன் வகைக்                                       குவால்கள்
மறுகுளார் பெறப் பண்டி கொண்டு அளப்பிலோர்                                       வருவார்.
81
   
4031.
மஞ்சு உலா வரு சிகரியும் சூளிகை வரைப்பும்
விஞ்சு மேல் நில அடுக்கமும் சோலையும் வெற்பும்
சஞ்சரீக மார் ஓடையும் வாவியும் தடமும்
எஞ்சல் இல்லதோர் மாடங்கள் எங்கணும் உளவே.
82
   
4032.
எற்றி முன் செலும் முரசினர் கம்மியர் எல்லில்
பற்று தீபிகைச் சுடரினர் மாலை தாழ் படையர்
ஒற்றை முக்குடை இரு புடைக் கவரியர் உலப்பில்
கொற்ற வீரர் ஈண்டு அளப்பிலோர் வந்தனர் குலவி.
83
   
4033.
மண் படைத்திடு தவம் எனும் மகேந்திர மலிசேர்
எண் படைத்த கண் இரண்டினர் காணுதல் எளிதோ
விண் படைத்தவற்கு ஆயினும் அமையுமோ மிகவும்
கண் படைத்தவற்கு அன்றியே கண்டிடல் ஆமோ.
84
   
4034.
வரம்பு இல் கட்புலம் கொண்டவரேனும் மற்று இவ்வூர்
விரும்பி இத்திரு நோக்கினும் அளத்தல் மே வருமோ
வரும் புயல் குழு வைகலும் பருகினும் அதனால்
பெரும் புனல் கடலானது முடிவு பெற்றிடுமோ.
85
   
4035.
கழியும் இந் நகர் ஆக்கமோ கரை இலா இவற்றுள்
விழிகள் எண் இல பெற்றுளார் தாம் கண்ட வெறுக்கை
மொழிவர் என்னினும் நாவது ஒன்றான் முடிந்திடுமோ
அழிவில் ஆயிர கோடி நாப் பெறுவரேல் அறைவார்.
86
   
4036.
வாழ்வின் மேதகு மகேந்திரப் பெருமித வளத்தைத்
தாழ்விலா நெறி கண்டனர் தாலு எண் இலவால்
சூழ்வின் நாடியே பகரினும் மெய் எலாம் துதையக்
கேள்வி மூலங்கள் இல்லவர் எங்ஙனம் கேட்பார்.
87
   
4037.
ஆயிரம் பதினாயிரம் கோடி நா அளவில்
ஆயிரம் விழி ஆயிரம் ஆயிரம் செவிகள்
ஆயிரம் புந்தி கொண்டு உளார்க்கு அல்லது இவ் வகன்சீர்
ஆயிரம் உகம் கண்டு தேர்ந்து உரைப்பினும் அடங்கா.
88
   
4038.
பொய்த்தல் இன்றியே இந் நகர்த் திருவை ஐம் புலத்தும்
துய்த்தல் முன்னியே விழைந்து கொல் நோற்றிடும்                                    தொடர்பால்
பத்து நூறுடன் ஆயிரம் கோடியாப் பகரும்
இத்தொகை சிரம் கொண்டனர் ஈண்டு உளார் எவரும்.
89
   
4039.
முன்னவர்க்கு முன் ஆகிய அறுமுக முதல்வன்
தன் அருள் திறத்து ஒல்லையில் பேர் உருச் சமைந்தே
இந் நகர்த் திரு யாவையும் காண்குவன் இன்னே
ஒன்னலர்க்கு எனைக் காட்டுதல் தகாது என ஒழிந்தேன்.
90
   
4040.
இனைத்த வாகிய பெருவளம் எல்லையின்றி இவற்றை
மனத்தில் நாடினும் பல பகல் செல்லும் ஆல் மனக்கு
நுனித்து நன்று நன்று ஆய்ந்து இவை முழுவதும் நோக்க
நினைத்துளேன் எனின் இங்கு இது பொழுதினில் நிரம்பா.
91
   
4041.
அம்புய ஆசனன் தெளிகிலா அருமறை முதலைக்
கும்ப மா முனிக்கு உதவியே மெய் அருள் கொடுத்த
எம்பிரான் பணி புரிகிலாது இந்நகர் இரும் சீர்
நம்பி நாடியே தெரிந்து பாணிப்பது நலனோ.
92
   
4042.
என்று முன்னியே அறுமுகன் தூதுவன் இமயக்
குன்றம் அன்ன கீழ்த் திசை முதல் கோபுரக் குடுமி
நின்று மா நகர் வளம் சில நோக்கியே நெடும் சீர்
துன்று சூர் உறை திரு நகர் அடைவது துணிந்தான்.
93
   
4043.
வனைந்த மாளிகை ஒளியினில் இடைப்படு மறுகில்
கனைந்து செற்றியே பரிசனம் பரவுதல் காணா
நினைந்த சூழ்ச்சியான் கீழ்த்திசைச் சிகரியை நீங்கி
நனந்தலைப்பட நகரத்து விண் இடை நடந்தான்.
94
   
4044.
வான மா நெறி நீங்கியே மறைகளின் துணிபாம்
ஞான நாயக அறுமுகன் அருள் கொடு நடந்து
தூ நிலா உமிழ் எயிறு உடைச் சூர் முதல் சுதனாம்
பானு கோபனது உறையுளை எய்தினன் பார்த்தான்.
95
   
4045.
பாய்ந்து செம் சுடர்ப் பரிதியைப் பற்றினோன் உறையுள்
ஏந்தல் காணுறீஇ விம்மிதப் பட்டு அவண் இகந்து
காந்து கண் உடை அங்கி மா முகன் நகர் கடந்து
சேந்த மெய்யுடை ஆடகன் உறையுளும் தீர்ந்தான்.
96
   
4046.
உச்சியை இரண்டு இருபது கரதலம் உடைய
வச்சிரப் பெரு மொய்ம்பினோன் மாளிகை வரைப்பும்
அச் செனத் தணந்து ஏகி மூவாயிரவர் ஆகும்
எச்சம் எய்திய மைந்தர் தம் இருக்கையும் இகந்தான்.
97
   
4047.
உரிய மந்திரத் துணைவரில் தலைமை பெற்று உறையும்
தரும கோபன் தன் கடிமனைச் சிகரம் மேல் தங்கிச்
சுரரும் வாசவன் மதலையும் அவுணர்கள் சுற்றப்
பரிவு கொண்டு அமர் சிறைக்களம் நாடியே பார்த்தான்.
98
   
4048.
கறை அடித்தொகை பிரிதலும் கயமுனி கவர்ந்து
மறை இடத்தினில் வேட்டுவர் உய்ப்ப வைகுவ போல்
பொறை உடைத் துயர் இந்திரன் போந்த பின் புல்லார்
சிறையில் உற்றவர் செய்கையில் சிறிது உரை செய்வாம்.
99