சயந்தன் கனவு காண் படலம்
 
4130.
விண் உளார்களும் சயந்தனும் வியன் மகேந்திரத்தின்
உண்ணிலாம் பெரும் துயருடன் மாழ்கியது உணர்ந்தான்
எண் இலா உயிர் தோறும் உற்று இன்னருள் புரியும்
அண்ணலார் குமரேசனாம் அறுமுகத்து அமலன்.
1
   
4131.
வெம் சிறைத் தலை மூழ்கியே அவுணரால் மெலிந்து
நெஞ்சு அழிந்திடும் அவர்தமை அருள்வது நினைந்தான்
தஞ்சம் இன்றியே தனித்து அயர் சிறுவரைத் தழுவி
அஞ்சல் என்று போற்றிட வரும் ஈன்ற யாய் அனையான்.
2
   
4132.
இனிய சீறடிக் குமரனில் செந்தி வந்து இமையோர்
வினை கொள் கம்பலை அகற்றுவான் இருந்திடும் விமலன்
தனது உணர்ச்சி இன்றாகியே அவசமாஞ் சயந்தன்
கனவின் முன் உற வந்தனன் அருள் புரி கருத்தால்.
3
   
4133.
வீறு கேதனம் வச்சிரம் அங்குசம் விசிகம்
மாறு இலாத வேல் அபயமே வலம் இடம் வரதம்
ஏறு பங்கயம் மணி மழுத் தண்டுளில் இசைந்த
ஆறு இரண்டு கை அறுமுகம் கொண்டு வேள்                                     அடைந்தான்.
4
   
4134.
தந்தை இல்லது ஓர் பரமனைத் தாதையா உடைய
கந்தன் ஏகியே அனைய தன் உருவினைக் காட்ட
இந்திரன் மகன் உளப்படும் யாக்கையுள் இருந்த
முந்து கண்களால் கண்டனன் தொழுதனன் மொழிவான்.
5
   
4135.
தொண்டனேன் படும் இடுக்கணை நாடியே தொலைப்பான்
கொண்ட பேர் அருள் நீர்மையில் போந்தனை குறிக்கின்
விண்டும் அல்லை அப் பிரமனும் அல்லை மேல் ஆகும்
அண்டர் நாதனும் அல்லை நீ ஏவர் மற்று அருளே.
6
   
4136.
என்ற காலையில் அறுமுகப் பண்ணவன் யாம் அக்
கொன்றை வேணியன் மிலைச்சிய பரஞ்சுடர் குமரன்
உன்றன் அல்லலும் இரக்கமும் மையலும் உணர்ந்து
சென்றனம் எனக் கூறியே பின்னரும் செப்பும்.
7
   
4137.
நுந்தை தன் குறை நும் குறை யாவையும் நுவன்று
வந்து நம் தமை வேண்டலும் வரம்பு இல் சேனையொடும்
இந்த ஞாலத்தின் எய்தியே கிரவுஞ்சம் என்னும்
அந்த வெற்பையும் தாரகன் தன்னையும் அட்டாம்.
8
   
4138.
அனையவன் தனை அட்டபின் செந்தி வந்து அமர்ந்தாம்
வனச மீமிசை இருந்திடு பிரமனும் மாலும்
உனது தாதையும் அமரரும் நம் வயின் உறைந்தார்
இனையல் வாழி கேள் நுங்கையும் மேருவின் இருந்தாள்.
9
   
4139.
வீர வாகுவாம் தூதனை யாம் இவண் விடுத்தேஞ்
சூரன் மைந்தன் அங்கு ஒருவனைப் பலரொடும்
                               தொலையா
நேர் இலாத இக் கடி நகர் அழித்து நீறாக்கிப்
பாரின் மாலையின் மீண்டிடப் புரிதும் இப்பகலின்.
10
   
4140.
செல்லும் இப் பகல் கழிந்த பின் நாளையே செந்தி
மல்லல் அம் பதி நீங்கி இந் நகர்க்கு அயல் வைகிச்
சொல்லும் ஐந்திரு வைகலின் அவுணர் தம் தொகையும்
அல்லல் ஆற்றிய சூரனும் முடிந்திட அடுதும்.
11
   
4141.
அட்ட பின்னரே நின்னை வானவருடன் அவுணன்
இட்ட வெம் சிறை நீக்கி நும் திருவெலாம் ஈதும்
விட்டு இங்கு உனது ஆகுலம் என்றனன் வினை தீர்ந்து
உள் தெளிந்தவர் போதத்தின் உணர்வுமாய் உறைவோன்.
12
4141.
அட்ட பின்னரே நின்னை வானவருடன் அவுணன்
இட்ட வெம் சிறை நீக்கி நும் திருவெலாம் ஈதும்
விட்டு இங்கு உனது ஆகுலம் என்றனன் வினை தீர்ந்து
உள் தெளிந்தவர் போதத்தின் உணர்வுமாய் உறைவோன்.
12
   
4142.
ஐயன் ஈங்கு இவை உரைத்தவை கேட்டலும் அகத்துள்
மையல் மாசு இருள் அகன்றன புகுந்தன மகிழ்ச்சி
மெய்யும் ரோமங்கள் சிலிர்த்தன உகுத்தன விழிநீர்
சையமே என நிமிர்ந்தன சயந்தன் தடந்தோள்.
13
   
4143.
பற்றினால் வரும் அமிர்தினை எளிது உறப் படைத்துத்
துற்றுளோர் எனத் தண் எனத் தனது மெய் சுருதி
கற்ற கற்றன பாடினான் ஆடினான் களித்தான்
மற்று அவன் பெறும் உவகையின் பெருமையார் வகுப்பார்.
14
   
4144.
நிகழ்ந்திடும் அறவியை நீங்கி இவ்வகை
மகிழ்ந்திடும் இந்திரன் மதலை எம்பிரான்
திகழ்ந்திடு பதமலர் சென்று இறைஞ்சியே
புகழ்ந்தனன் இனையன புகல்வது ஆயினான்.
15
   
4145.
நொய்ய சீர் அடியரேம் நோவு மாற்றியே
ஐய நீ வலிது வந்து அளித்தி யான் உரை
செய்வதும் உண்டு கொல் சிறிது நின் கணே
கையடை புகுந்தனம் காத்தியால் என்றான்.
16
   
4146.
சயந்தன் மற்று இவ்வகை சாற்ற யாரினும்
உயர்ந்திடு பரஞ்சுடர் ஒருவன் கேட்குறா
அயர்ந்த நும் குறை அற அளித்தும் திண்ணம் என்று
இயைந்திட மேலும் ஒன்று இசைத்தல் மேயினான்.
17
   
4147.
இந் நகர் குறுக யாம் ஏய தூதுவன்
நின்னையும் சுரரையும் நேர்ந்து கண்ணுறீஇ
நல் நயம் கூறியே நடப்ப உயக்குதும்
அன்னதும் காண்க என அருளிப் போயினான்.
18
   
4148.
படைப்பு உறாது அயந்திடும் பங்கயன் கனா
அடுத்து உனக்கு அருள் செய ஆறொடு ஐவரை
விடுத்தும் என்று ஏகிய விமலன் போலவே
இடர்ப்படு சயந்தன் முன் இவை சொற்று ஏகினான்.
19
   
4149.
ஏகிய காலையின் இறந்து முன்னரே
போகிய புலம் எலாம் பொறியில் தோன்றலும்
ஆகிய கனவினை அகன்று பைப்பய
நாகர் கோன் திருமகன் நனவின் நண்ணினான்.
20
   
4150.
தந்தி நஞ்சம் தலைக் கொளச் சாய்ந்தவர்
மந்திரத்தவர் வாய்மை வந்து உற்றுழிச்
சிந்தை மையலைத் தீர்ந்து எழுமாறு போல்
இந்திரன் தன் மதலை எழுந்தனன்.
21
   
4151.
நனவு தன்னிடை நண்ணிய சீர் மகன்
கனவின் எல்லையில் கண்டன யாவையும்
நினைவு தோன்றினன் நெஞ்சம் குளர்ந்து நம்
வினையெலாம் இவண் வீடியவோ என்றான்.
22
   
4152.
கவலை தூங்கிக் கடும் துயர் நீரதாய்
அவலம் ஆகிய ஆழியில் ஆழ்ந்துளான்
சிவ குமாரன் திருவருள் உன்னியே
உவகை என்னும் ஒலி கடல் மூழ்கினான்.
23
   
4153.
அனைய காலை அயர்ந்திடு வான் உளோர்
கனவு தோறும் கடிது சென்று இந்திரன்
தனயனுக்கு முன் சாற்றிய வாறு சொற்றி
இனையலீர் என ஏகினன் எம்பிரான்.
24
   
4154.
அம்மென் கொன்றை அணி முடிக் கொண்டவன்
செம்மல் ஏகலும் தேவர் கனா வொரீஇ
விம் மிதத்தின் விழித்து எழுந்தே இரீஇத்
தம்மில் ஓர்ந்து தவமகிழ்வு எய்தினார்.
25
   
4155.
சில்லை வெம்மொழித் தீயவர் கேட்பரேல்
அல்லல் செய்வர் என்று அஞ்சிக் கனாத் திறம்
மல்லன் மைந்தன் மருங்கு உறுவார் சிலர்
மெல்ல அங்கு அவன் கேட்க விளம்பினார்.
26
   
4156.
அண்டர்கள் மொழி தரும் அற்புதத்தை உள்
கொண்டனன் அங்கு அவை குமரன் தன் முனம்
கண்டது போன்றிடக் களித்துப் பார் எலாம்
உண்டவன் ஆம் என உடலம் விம்மினான்.
27
   
4157.
அறு முகம் உடைய தோர் ஆதி நாயகன்
இறை தரும் உலகெலாம் நீங்கல் இன்றியே
உறைவதும் கருணை செய் திறனும் உன்னியே
மறை முறை அவன் அடி வழுத்தி வைகினான்.
28