காவலாளர் வதைப் படலம்
 
4373.
சுடரும் வேல் படைத் தொல் குமரேசனது
அடிகள் முன்னி அருளுடன் ஆண்டகை
படி அளந்திடும் பண்ணவனாம் என
நெடிய பேர் உருக் கொண்டு நின்றான் அரோ.
1
   
4374.
திசை அளந்தன திண் புயம் சென்று சேண்
மிசை அளந்தன மேதகு நீள் முடி
வசுதை யாவும் அளந்தன வார் கழல்
அசை வரும் திறல் ஆடவன் நிற்பவே.
2
   
4375.
திரு உலாம் கழல் சீறடிச் செம்மல் பேர்
உருவு தாங்கி உகந்தனன் நிற்றலும்
அரவின் வேந்தரும் ஆதி அம் கூர்மரும்
வெருவினார்கள் வியன் பொறை ஆற்றலார்.
3
   
4376.
கதிர் எறித்திடு காமரு பூணினான்
மதுகை பெற்ற வடிவொடு நிற்றலும்
அது பரித்தற்கு அருமையின் ஆற்றவும்
விதலை உற்றது வீர மகேந்திரம்.
4
   
4377.
உலம் கொள் வாகுவின் ஒண் பதம் ஊன்றலும்
விலங்கியே தளர் வீர மகேந்திரம்
இலங்கை நீர்மை எய்தாமல் இருந்ததால்
குலம் கொள் தானவக் கோமகன் ஆணையால்.
5
   
4378.
சேண் அளாவிய சென்னியன் எண் திசை
காண நிற்புறு காட்சியன் கந்தவேள்
ஆணை காட்டி நிறுவிய ஆடலாம்
தாணு என்னத் தமியன் விளங்கினான்.
6
   
4379.
சான்ற கேள்வித் தலைமகன் தாள் துணை
ஊன்று கின்ற உழிதொறும் மா நிலம்
ஆன்று கீண்டிட அவ்வப் புழை தொறும்
தோன்று கின்றன சூழ்கடல் நீத்தமே.
7
   
4380.
ஆத்தன் ஊன்றும் அடிதொறும் தோன்றிய
நீத்தம் யாவும் நெடும் திறல் வெய்ய சூர்
வாய்த்த கோயில் வளைந்து இறை போற்றிய
வேத்து அவைக் களம் தன்னினும் மேவிய.
8
   
4381.
பூழை கொண்டு புறம் படர் நீத்த நீர்
மாழை கொண்டவன் கோயில் வளைந்துராய்ப்
பேழை கொண்ட பிணிப்பு அறு பாந்தள் போல்
கூழை கொண்ட மறுகில் குலாயதே.
9
   
4382.
துய்ய பூழை தொறும் தொறும் தோன்று நீர்
மையல் வெம் கரி வாம் பரி தேர் படை
கையரிக் கொடு காசினி ஆறு போல்
செய்ய மா நகர் யாங்கணும் சென்றதே.
10
   
4383.
தோட்டது அன்ன சுழிப்படு வாரியின்
ஈட்ட மாநகர் வீதி தொறும் ஏகியே
பாட்டின் மாளிகை பல பல சாடியே
மீட்டும் ஒல்லையின் வேலை மடுத்ததே.
11
   
4384.
எம்மை ஆள் உடை எந்தை தன் தூதுவன்
செம்மை நீடு திரு உரு நோக்கியே
கைம்மறிக் கொடு கண்டனர் யாவரும்
அம்மவோ என அச்சம் உற்று ஓடினார்.
12
   
4385.
மா உலா வரும் மன்னவன் கோயில் உள்
காவலாளர் இக் காளையைக் கண் உறீஇ
ஓவி தோர் வஞ்சன் உற்றனன் ஈண்டு எனாக்
கூ விளித்தனர் தத் தமில் கூடினார்.
13
   
4386.
கூடுகின்ற குணிப்பரும் காவலோர்
நீடு மெய்கொடு நின்றவற்கு அஞ்சியே
ஆடல் பூண்டிலம் என்னின் அரசனே
சாடு நம்மைச் சரதம் என்று எண்ணினார்.
14
   
4387.
குமரி மா மதில் கோயில் உள் போற்றியே
அமரி யோர்கள் ஒர் ஐம்பது வெள்ளத்தர்
திமிர மேனியர் தீ உகு கண்ணினர்
சமர் இயற்றத் தலைத்தலை மண்டினார்.
15
   
4388.
மண்டி மற்றவர் வல் எழுத் தோமரம்
பிண்டி பாலம் பெரும் கதை ஆதியாக்
கொண்ட கொண்ட கொடும் படை வீசியே
அண்டம் விண்டிட ஆர்த்தனர் ஆடினார்.
16
   
4389.
ஆடும் எல்லை அடு மடைத் தானவர்
பாடு சூழ்ந்த பரிசினை நோக்கினான்
நீடு சான்ற இடித் தொகை ஆயிர
கோடி போல் புயம் கொட்டி நின்று ஆர்ப்பவே.
17
   
4390.
அலைக்க வந்த அவுணப் படை எலாம்
கலக்க மூழ்கிக் கருத்து உணர்வு அஃகியே
உலக்கு உறாத உரும் இடி உண்டிடும்
புலைக் கடும் தொழில் புள் எனல் ஆயவே.
18
   
4391.
பன்மழைக் குலங்களில் படைக்கலங்கள் யாவையும்
வன்மை பெற்ற வீரர் உய்ப்ப வந்து மேனி படுதலும்
சின் மயத்தன் ஒற்றன் மிக்க செய்ய வீழ் விழுத்திய
தொன் மரத்து இயற்கை போன்று சோரி சோர நின்றனன்.
19
   
4392.
ஆன காலை வீரவாகு அறிவன் அங்கியில் சினைஇ
மான வீரர் மீது அலாது வாள் எடுக்கலேன் எனாத்
தேனின் மாப் பெரும் கடல் திளைத்தலைக்கு மத்து எனத்
தானவப் பதாதியைத் தடிந்து அலைத்தல் மேயினான்.
20
   
4393.
மிதித்தனன் கொதித்தனன் விடுத்திலன் படுத்தனன்
சதைத்தனன் புதைத்தனன் தகர்த்தனன் துகைத்தனன்
உதைத்தனன் குதித்தனன் உருட்டினன் புரட்டினன்
சிதைத்தனன் செகுத்தனன் செருக்கினன் தருக்கினன்.
21
   
4394.
சிரத்தினை நெரித்தனன் திறல் புயம் இறுத்தனன்
கரத்தினை முரித்தனன் களத்தினைத் திரித்தனன்
உரத்தினைப் பிரித்தனன் உருத்தனன் சிரித்தனன்
புரத்தினை உரித்தனன் பொடித்தனன் படைத்திறம்.
22
   
4395.
எடுத்தனன் சுழற்றினன் எறிந்தனன் சிலோர்தமைப்
புடைத்தனன் இடித்தனன் புயத்தினாற் சிலோர் தமைப்
பிடித்தனன் பிசைந்தனன் பிழிந்தனன் சிலோர்தமை
அடித்தலம் கொடித் தலத்து அரைத்தனன் சிலோர்தமை.
23
   
4396.
பெருத்தனன் சிறுத்தனன் பெயர்ந்தும் வேறு பல் உருத்
தரித்தனன் நடந்தனன் தனித் தனி தொடர்ந்தனன்
மருத்தெனக் கறங்கினன் வளைந்தனன் கிளர்ந்தனன்
ஒருத்தன் வெள்ளம் ஐம்பதும் உலக்குறக் கலக்கினான்.
24
   
4397.
மஞ்ஞை அன்னம் ஒண்புறா மடக்குயில் திரள் பயில்
செய்ஞ் ஞலம் கொள் மாடமீது சேனம் கூளி பிள்ளைகள்
பிஞ்ஞகன் குமாரன் ஆடு பேர் அமர்க் களம் படும்
அஞ்ஞை யாளர் குருதி ஊன் அருந்து மாறு இருந்தவே.
25
   
4398.
மான் இனம் செறிந்து இரைந்து வந்த எல்லை தன்னிடைத்
தான் ஒர் சிங்க ஏறு புக்க தன்மை போல அவுணர்தம்
கோன் இருந்த உறையுளில் குலாய காவலாள ராம்
சேனை வெள்ளம் ஐம்பதும் சினத்தின் வல்லை சிந்தினான்.
26
   
4399.
முறிந்தனர் உறுப்பி யாக்கை முற்றும் வேறு வேறவாய்ப்
பிறிந்தனர் தகர்ந்தனர் பிறங்கு சென்னி சோரியுள்
செறிந்தனர் புதைந்தனர் சிதைந்தனர் உருண்டனர்
மறிந்தனர் இறந்தனர் மடிந்தனர் கிடந்தனர்.
27
   
4400.
இன்ன பான்மை வீற்று வீற்றின் அவுணர் தானை                                    யாவையும்
சின்ன பின்னம் ஆகியே சிதைந்து வீழ்ந்து உலந்திட
உன்னுகின்ற முன்னம் அட்டு உலம்பினான் சிலம்பினின்
மன்னன் மங்கை நூபுரத்தின் வந்த வீர வாகுவே.
28
   
4401.
வள்ளல் நின்று சமர் இழைப்ப மாண்ட வீரர் யாக்கையின்
உள்ள தாது வான ஏழும் உருவம் வேறு காண்கிலா
தள்ளல் ஆகி ஒன்று பட்டது அங்கி தன்னின் உருகியே
வெள்ளி ஆதி உலகம் யாவும் விரவும் வண்ணம்                                    என்னவே.
29