சகத்திர வாகுகள் வதைப் படலம்
 
4483.
ஏயின பான்மையின் இவன் மூதூர்
மாய்தரும் எல்லையின் வருகின்ற
ஆயிர வாகுள அடல் வீரர்
மேயின தன்மை விளம்புற்றாம்.
1
   
4484.
ஓலம் உடைக் கடல் உமிழ்கின்ற
நீல விடத்தினை நிகர் மெய்யார்
மாலை உடைப் பல வடவைத் தீக்
கோலம் எனச் சிகை கொண்டு உற்றார்.
2
   
4485.
தீம் களிறு ஆதிய திறல் மாக்கள்
தாங்கு வையோடு தலைப் பெய்தே
ஆங்கு உள சோரி அறா தீமப்
பாங்கர்கள் அன்னது ஒர் பகுவாயார்.
3
   
4486.
எல்லை இல் நேமிகள் யாவும் தாம்
ஒல் ஒலி நீரின் உடைந்து என்னக்
கல் உறை சிந்து கரும் கொண் 'மூச்சு
செல் என ஆர்த்தனர் செல்கின்றார்.
4
   
4487.
மைவரு நீல வரைத் தொகை தாங்கும்
மொய் வரு கின்ற முடிக்குழு என்ன
ஐவகை நூற்றின் அமர்ந்து அகல்வானைத்
தை வருகின்ற தலைத் தொகை கொண்டார்.
5
   
4488.
மரா மரம் ஆனவை மாதிரம் எங்கும்
பராவ விடுத்திடு பலகவடு என்ன
விராவிய அங்கத மேவி விளங்கும்
ஒர் ஆயிரம் ஆகிய ஒண் புயம் உள்ளார்.
6
   
4489.
எழுக் கொடு முத்தலை எஃகம் வில் நாஞ்சில்
கழுக் கடை சங்கொடு கப்பணம் வெவ்வாள்
மழுக் கதை சக்கரம் வச்சிரம் ஆதி
விழுப்படை யாவும் விராவிய கையார்.
7
   
4490.
எண் தகு நேமிகள் ஏழும் அளக்கர்
மண்டலம் ஆனவும் மன் உயிர் யாவும்
கொண்டு இடினும் குறைவு இன்றி நிரம்பாத
அண்டம் அது என்ன அகன்ற வயிற்றார்.
8
   
4491.
விழுமிய பஃறலை வெம் பணி யேனைக்
குழுவொடு போற்றினர் கொண்டு உறல் ஆற்றாது
அழுதிட நாடிய அதற்கு அயர்வார் போல்
கழல்கள் அரற்று கழல் துணை கொண்டார்.
9
   
4492.
இரு புயம் ஓர் முகம் எய்திய வானோன்
ஒருவனை வெல்ல ஒர் ஆயிரர் ஆனேம்
பொருவகை சென்றிடல் புன்மையது என்னா
வரு பழி உன்னி மனம் தளர் கின்றார்.
10
   
4493.
மாகர வான்முனம் மாயையின் வந்தான்
ஆகையினால் இவன் ஐதென வானில்
போகுவனால் இது பொய்யல வல்லே
ஏகுமின் ஏகுமின் என்று செல்கின்றார்.
11
   
4494.
மீளிகையால் எறி மேதகு வேர
மாளிகை கோபுரம் மண்டபம் வீழ்வ
காளிகர் அன்ன கரங்கள் கொடு ஏற்றுத்
தூளிகள் செய்தனர் தூர்த்திடு கின்றார்.
12
   
4495.
எய் என மெய் இடை எங்கும் வியர்ப்பச்
செய்யன கண் வழி செம் தழல் சிந்த
வெய்ய உயிர்ப்பு எழ வேர் உள மூள
ஒய் என ஓடினர் உற்றிடு கின்றார்.
13
   
4496.
நாகர் தமக்கு ஒர் நமன் தனை அன்னோர்
ஆகிய ஆயிரர் ஆயிர மொய்ம்பர்
வேகம் அது ஆகி விழுத் தகு வீர
வாகுவை எய்தி மடங்கலின் ஆர்த்தார்.
14
   
4497.
ஆர்த்திடும் ஓதை அகன்செவி செல்லத்
தார்த் தொகை தூங்கு தடம் புய வீரன்
பார்த்தனன் மூ எயில் பண்டு எரி செய்த
தீர்த்தன் எனச் சிறிதே நகை செய்தான்.
15
   
4498.
மேல் நிமிர் மந்தர வெற்பு என நின்றே
வான் அளவு ஓங்கு மரா மரம் ஒன்றைத்
தேன் இனம் வான் திசை சிந்தி அரற்ற
ஊன் முதிர் கை கொடு ஒசித்தனன் மன்னோ.
16
   
4499.
அண்டம் இருண்டிட ஆதவர் ஆனோர்
மிண்டிய பேர் ஒளி வீந்திட வீரன்
வண் தழை துன்று மரா மரம் அங்கை
கொண்டது பன் முறை கொட்பு உறல் செய்தான்.
17
   
4500.
மாயிரம் மருப்பு உள மராமரம் இறுத்தே
தூயன் அமர் ஆடல் முயல் தொல் நிலைமை நோக்கி
ஆயிரம் அடுத்த புயர் ஆயிரரும் அங்கண்
மூயினர்கள் அண்ணலை முரட் படை சொரிந்தார்.
18
   
4501.
தொடுத்தனர்கள் வார்கணைகள் தொட்டனர்கள் வை வேல்
எடுத்த பல தோமரம் எறிந்தனர்கள் ஆலம்
விடுத்தனர்கள் முத்தலை வியன் கழுமுள் உய்த்தார்
அடல் குலிசம் வீசினர்கள் ஆழிகள் துரந்தார்.
19
   
4502.
இப் பரிசின் உள்ள படை யாவும் முறை தூங்கு
மைப் புயல்கள் என்ன வரைவு இன்றி விரைவாக
ஒப்பு அரிய வீரன் மிசை உய்த்திடலும் அன்னோன்
துப்பு ஒடு மரம் தனி சுழற்றி அடல் உற்றான்.
20
   
4503.
விட்ட படை யாவையும் வெறும் துகள வாகப்
பட்டிட மரம் கொடு பராகம் அவை செய்ய
உள் தெளிவின் மானவர் ஒராயிரரும் வீரர்
கிட்டினர் வளைந்தனர் கிளர்ந்து அமர் முயன்றார்.
21
   
4504.
ஒட்டிய மராடிய ஒர் ஆயிரவர் தாமும்
கெட்டி இரிய மேரு நிகர் கேழ் கிளர் புயத்தோன்
மட்டு நனைவார் சினை மரம் கொடு புடைத்தே
சட்டகம் இறந்து படு தன்மை புரிகு உற்றான்.
22
   
4505.
செக்கர் புரை குஞ்சி கெழு சென்னிகள் கிழிந்தார்
நெக்கனர் கபோல வகை நெற்றி பிளவு உற்றார்
அக்க நிரை சிந்தினர் அலங்கு குழை அற்றார்
உக்கனர்கள் பல் எயிறு உடைந்தனர்கள் துண்டம்.
23
   
4506.
வாய் நிரை பகர்ந்தனர்கள் மாழை திகழ் கண்டம்
ஆனவும் உரிந்தனர்கள் அற்றனர்கள் பொன் தோள்
ஊனம் அகல் அங்கைகள் ஒசிந்தனர் அசைந்தே
பீனம் உறு மார்பிடை பிளந்தனர் தளர்ந்தார்.
24
   
4507.
உந்திகள் குடங்கரின் உடைந்து குடர் யாவும்
சிந்தினர் மருங்கு எழில் சிதைந்தனர் புறம் கண்
முந்து தொடர் என்பொடு முரிந்தனர்கள் வாமம்
சந்து பொருகின்ற முழம் தாள் அடிகள் அற்றார்.
25
   
4508.
வீந்தனர்கள் ஓர் சிலவர் வீழ்ந்து மிதிபட்டுத்
தேய்ந்தனர்கள் ஓர் சிலவர் செய்ய குடர் சிந்திச்
சாய்ந்தனர்கள் ஓர் சிலவர் தம் குருதி ஆற்றுள்
தோய்ந்தனர்கள் ஓர் சிலர் துடித்தனர்கள் சில்லோர்.
26
   
4509.
எறிந்திடு படைத் தொகுதி ஏகு முனம் வீழ்ந்து
மறிந்தனர்கள் ஓர் சிலவர் மாய்ந்து ககனம் போய்ச்
செறிந்தனர்கள் ஓர் சிலர் சிதைந்து தலை போயும்
முறிந்த உடல் கொண்டு அமர் முயன்றனர்கள் சில்லோர்.
27
   
4510.
ஏர் அகலும் வீரர் தம் யாக்கை இது வண்ணம்
சேர விறல் உற்று உடைய செவ்வியின் எழுந்த
சோரி நதி மாநகர் தொலைத்து வளன் வாரி
வாரிதி நிறைந்து அவனி மீதினும் மடுத்த.
28
   
4511.
அறம் தெரிந்து உணர் ஆண்டகை அகன் மரம் புடைப்பக்
குறைந்த சென்னி வான் திரிவன எயிற்றொடு குலவிச்
செறிந்த தேவரோடு அமிர் தொளித்து உண்டவர் சென்னி
நிறைந்திடா மதித் துணை கவர்ந்து உலவுதல் நேரும்.
29
   
4512.
அடல் கொள் மொய்ம்பினன் மரம் புடைத்தலும் சில                                        அவுணர்
உடல் சினப்பரி முகத்தவர் தலை துமிந்து உதிர
நெடிதும் வாய் வழி சிந்த வீழ்ந்தனர் நெடும் கடல் உள்
வடவை மா முகம் அங்கி கான்றிடுவதே மான.
30
   
4513.
வள்ளல் மா மரத்தண்டு கொண்டு இடித்தலும் வலியோர்
பிள்ளை மாமதி எயிற்று அணி சிந்து விண் பெயர்ந்தே
அள்ளல் வேலையின் முறை முறை வீழ்வன அதன்கண்
துள்ளு மீன் கணம் உகண்டு வீழ் கின்றது ஓர் தொடர்பின்.
31
   
4514.
வலிந்த ஊழ் முறை யாவரே கடந்தவர் மரத்தால்
பொலந் தயங்கு பூண் மார்பினன் எற்றிடும் பொழுதில்
கலந்து போர் செய்தார் ஓர் சிலர் வாளொடு கரம் போய்த்
தொலைந்துளார் செலும் நெறியின் வீழ்ந்தவர் சிரம்                                         துணிப்ப.
32
   
4515.
இனைய பற்பல நிகழ்ந்திட இணை இலா ஒருவன்
தினையின் வேலையில் ஆயிரம் புயம் உடைத் திறலோர்
அனைவர் தம்மையும் பஃறுணி படும் திறன் அட்டுத்
தனிமை தன்னொடு நின்றனன் அமர்க் களம் தன்னில்.
33