யாளிமுகன் வதைப் படலம்
 
4617.
திண் திறல் அவுணர் கோன் சிறுவன் வீந்ததும்
மண்டு அமர் இயற்றிட வருநர் இன்மையும்
தண்டம் அது உடைந்ததும் தபனன் மாய்ந்ததும்
கண்டனன் இனையன கருதல் மேயினான்.
1
   
4618.
எந்தையை எள்ளினான் இருந்த கோநகர்
சிந்தினன் புரத்தையும் சிறிது வீட்டினன்
வந்தவர் யாரையும் மாய்வு செய்தனன்
புந்தியின் வெகுளியில் சிறிது போக்கினான்.
2
   
4619.
ஏல வெம் போர் செய எவரும் வந்திலர்
ஞாலம் அது அவிர் ஒளி நடாத்து ஞாயிறு
மேல் கடல் நீந்தினன் விரையப் போயினான்
மாலையும் இவ்விடை வந்து நேர்ந்ததே.
3
   
4620.
அறந்தனை நினைகிலாது அல்லல் செய்பவர்
உறைந்திடு நகர் இதின் ஒற்றில் போந்த யான்
சிறந்திடும் அறுமுகத் தேவ தேவனை
மறந்திடல் ஆம் கொல் இம் மாலை காறுமே.
4
   
4621.
ஏவரும் வழுத்திய எந்தை கந்தவேள்
பூவடி தணந்திடு புலம்பும் இவ்விடைத்
தேவர்கள் புன்மையும் தீர வல்லையில்
போவது துணிவு எனப் புந்தி தேற்றினான்.
5
   
4622.
தேற்றிய திறல் உடைச் செம்மல் இம் என
மாற்றலர் படு நில வரைப்பு நீங்கியே
காற்று எனக் கனல் எனக் காலன் என்ன வெம்
கூற்று என மறுகு இடைக் குலவி ஏகினான்.
6
   
4623.
திறல் கெழு மொய்ம்பு உடைச் செல்வன் செல் உழி
மறுகு இடை அவுணர்கள் மறலி மற்று இவன்
குறுகலிர் நுங்களைக் கொல்வன் கொல்வன் என்று
அறைகுநர் முறை முறை அரற்றி ஓடினார்.
7
   
4624.
எஞ்சிய அவுணர்கள் யாரும் இவ்வகை
அஞ்சினர் இரிந்திட அழிந்து முன்னை ஆள்
துஞ்சிய ஆவணத் தொகைகள் தந் தொராய்
விஞ்சிய மகேந்திரம் விடுத்து நீங்கினான்.
8
   
4625.
புடை அகல் மகேந்திர புரத்தை நீத்தபின்
விடை பொரு வலியினான் விண்ணின் பால் எழீஇ
முடுகினன் வழிக் கொடு முருகர் போற்றியே
வடதிசை இலங்கையின் வரைப்பு நண்ணினான்.
9
   
4626.
ஆங்கு அது காலையில் அனைய
பாங்கரின் மேவரு பழையோன்
ஓங்கிய மூ எயில் உள்ளோர்
தாங்கிய வன்மை தரித்தோன்.
10
   
4627.
முடியும் மகேந்திர மூதூர்
வடதிசையார் அரண் மன்னி
உடைய இலங்கையின் ஓம்பும்
படி அறு காவல் பரித்தோன்.
11
   
4628.
ஆயிர மாமுகன் அடுதோள்
ஓய்வு இல் இராயிரம் உடையோன்
ஞாயிறு தன் மகன் நகரின்
வாயில்கள் அன்னது ஓர் வாயான்.
12
   
4629.
வட வரை ஆயிரம் வந்தோர்
உடல்கொடு மேவியது ஒப்பான்
படை பல பாணி பரித்தான்
கடை அழல் கான்றிடு கண்ணான்.
13
   
4630.
தண் அளியோர் இறை தானும்
உள் நிகழ் அற்ற உளத்தான்
எண் அரும் வெம்பவம் யாவும்
பண்ணினன் அன்று பயின்றான்.
14
   
4631.
மீளில் சினத்து அதி வேகக்
கோளரியைத் தரு கொடியோன்
யாளி முகத்தவன் என்போன்
வாள் வயம் உற்றிடு வலியோன்.
15
   
4632.
பெருந்தகை ஆங்கு அவன் பெயர்ந்த காலையின்
அரும் திறல் சூரனை அடைந்து மீண்டு பின்
மருந்து உறழ் தன் மகன் மாட்சி தேர் உறீஇ
இருந்தனன் வருந்தியே இலங்கை தன் இடை.
16
   
4633.
சண்ட வெம் கதி கொடு தமியன் சேறலும்
கண்டனன் யார் இவன் கள்வன் போலும் ஆல்
விண் தலம் நீந்தியே மேவுவான் எனத்
தொண்டு செய் உழையரில் ஒருவன் சொல்லுவான்.
17
   
4634.
நம் குல நாயக நவில்வன் கேட்டி நீ
செம் கதிர் முளைத்து உழிச் செல்வன் காணிய
பொங்கு ஒளி மகேந்திர புரத்தில் போந்தனை
இங்கு நின் திரு மகன் இருந்து காப்பவே.
18
   
4635.
போந்திடுகின்ற பின் புணரி தன்னுள் வான்
நீந்தினன் நீங்கிவன் நேர அன்னதை
வாய்ந்திடு பெரும் திறல் மடங்கல் பேரினான்
காந்திய கனல் எனக் கண்டு சீறினான்.
19
   
4636.
சீறினன் படையொடு சென்று தாக்கலும்
வீறு ஒடு வரும் அவன் வெகுண்டு வாள் உரீஇ
மாறு அமர் இயற்றியே மற்று அவன் தனைக்
கோறல் செய்து ஒரு விறல் கொண்டு மேயினான்.
20
   
4637.
மின் அவிர் பூண் உடை வீர மொய்ம்பினான்
இன்னது ஓர் இலங்கையின் இடைக் கண் பாய்ந்தனன்
அன்னவன் அடி பொறாது ஆழி உற்றது ஆல்
பொன் நகர் வளன் ஒடும் அம் கண் புக்க போல்.
21
   
4638.
புக்கிட அளப்பு இலர் பொன்ற ஏனையோர்
அக்கணம் எழுந்தனர் அவன் கண்டு அஞ்சியே
திக்கு ஒடு வானமும் சிந்த நின் மகன்
மைக் கடல் அகம் ஒரீஇ வல்லை எய்தினான்.
22
   
4639.
வெய்து என இவண் வரும் வீரனோடு அமர்
செய்தனன் வாள் கொடு செவ்வி அன்னதின்
மை தவழ் மேனியின் மதலை மார்பு தாள்
கை தலை ஒரு தலை கண்டம் ஆக்கினான்.
23
   
4640.
பூழியம் புயம் உடைப் பொருநன் பின் உறக்
கேழ் உறு வான் நெறி கிளர்ந்து போந்திடா
வாழிய மகேந்திர வரைப்பில் புக்கனன்
ஆழ் உறும் இலங்கையும் ஆழி மேல் எழ.
24
   
4641.
சூர் உறை திருநகர் துன்னி ஆய் இடைச்
சீரினை முழுவதும் சிந்தி நம் குல
வீரரொடே அமர் விளைத்து வென்று அவண்
நேருநர் இன்மையின் நீங்கினான் அரோ.
25
   
4642.
என்னலும் உருமினும் இடித்த சொல்லினன்
வன்னி கொள் உயிர்ப்பினன் மடித்த வாயினன்
துன்னிய வியர்ப்பினன் சுழலும் கண்ணினன்
மெய்ந் நிறை வெகுட்சியன் விளம்பல் மேயினான்.
26
   
4643.
காண்டி என் கடிமுறை கடந்து மைந்தனை
ஈண்டு உயிர் வவ்வியே இறைவன் ஊர் புகா
மீண்டிடு கள்வன் இவ் வீரம் தன்னொடே
மாண்டிட அடுகுவன் வன்மையால் என்றான்.
27
   
4644.
என்று இவை விளம்பியே யாளி மாமுகன்
குன்று என எழுந்து ஒரு கொற்ற வாள் கொளீஇ
நின்ற சில் படையொடு நேர்ந்து வீரன் முன்
சென்றனன் இனையன செப்பல் மேயினான்.
28
   
4645.
நம் கடன் முறையினை நடாத்து மைந்தனை
இங்கு அடல் செய்தனை இனைய காப்பு ஒரீஇ
அம் கடல் போந்தனை அழிவு செய்தனை
வெம் கடல் கடந்தனை மீடியே கொல் ஆம்.
29
   
4646.
ஒல் ஒலி அளக்கரை உகண்டு நிற்கு இனிச்
செல்லுதல் அரிதி யான் செருவின் நேர்ந்தனன்
கொல்லுவன் பெருவயம் கொள்வன் நீ இவண்
வல்லது புரிமதி மதி இலாய் என்றான்.
30
   
4647.
சொற்றது கேட்டலும் துழனிப் பேர் ஒலி
உற்று எரி கனல் என உயிர்ப்பு மூரலும்
செற்றமும் எய்தியே துளக்கிச் சென்னியைக்
கொற்ற மொய்ம்பு உடையதோர் குரிசில் கூறுவான்.
31
   
4648.
ஒரு தலை உடைய என் உயர்வும் ஆயிரம்
தரு தலை உடைய நின் தாழ்வும் யாம் இவண்
பொருதலை இழைத்திடும் போது காண்பு உறும்
கருதலை பெருவடி அமைந்த காட்சியே.
32
   
4649.
தீயவ இம்மொழி திண்ணம் திண்ணம் முன்
மாயிரும் புழைக்கையின் மா முகங்கள் ஓர்
ஆயிரம் தன்னையும் அறுத்து வீட்டியே
நாய் இனம் கவரிய நல்குவேன் என்றான்.
33
   
4650.
கருணை கொள் நந்தி அம் கணத்தன் இவ்வகை
உரை தரும் எல்லையின் உததி மேரு மால்
வரையினை விழுங்கிய வளைந்ததே என
விரைவொடு படைஞர்கள் வீரர் சுற்றினார்.
34
   
4651.
சுற்றிய தானையர் தோன்றல் மீது தாம்
பற்றிய படைக் கலம் பலவும் தூண்டியே
செற்றமொடு அமர் வினை செய்யச் சூறைபோல்
மற்றவர் சூழல் உள் வாள் கொண்டு எய்தினான்.
35
   
4652.
துண்டமும் அகலமும் தோளும் தாளும் ஒண்
கண்டமும் சென்னியும் கரமும் ஆனவை
விண்டு விண்டு அழிவு உற வெய்ய தானவர்
தண்டம் அது அனைத்தையும் தடிந்திட்டான் அரோ.
36
   
4653.
அறுகு மா முகத்து அண்ணல் ஆற்றவும்
கறுவு பெற்றிடும் கருத்தின் வீரனைக்
குறுகி ஆயிரம் கொண்ட கைகளால்
இறுதி ஊழி நாள் இடியின் எற்றினான்.
37
   
4654.
அடித்த கைகளை அங்கை ஒன்றினால்
பிடித்து மேலவன் பெரும் கை வாளினால்
உடைத்த சோரி நீர் உகுத்து வீழ்ந்து இறை
துடித்திடும் படி துண்டம் ஆக்கினான்.
38
   
4655.
ஆயிரம் கரம் அறலும் மற்று உள
ஆயிரம் கரம் அவைகள் நீட்டியே
ஆயிரம் கிரி அவை பறித்தனன்
ஆயிரம் கணான் ஆடல் கொண்டு உளான்.
39
   
4656.
பறித்த ஆயிரம் பருப் பதத்தையும்
கறுத்து வீரன் மேல் கடிது வீசலும்
இறத்தல் கொண்டு மெய் எங்கும் எய்தியே
புறத்து வீழ்ந்தன உடைந்து பூழியாய்.
40
   
4657.
பொற்றை யாவையும் பூழி ஆகியே
அற்ற காலையில் ஐயன் தூதுவன்
மற்றை ஆயிரம் வான் கரத்தையும்
கொற்ற வாள் கொடே குறைத்து வீட்டினான்.
41
   
4658.
இழைக்கும் எல்லையின் எய்தும் கூற்றினை
அழைக்கு மாறென ஆர்த்துத் தானவன்
தழைக்கு மொய்ம்பினான் தன்னைப் பற்றுவான்
புழைக்கை முற்றவும் பொள் என்று உய்த்தனன்.
42
   
4659.
உய்த்த காலையின் ஒரு தன் வாளினால்
எய்த்த வன்மை சேர் யாளி மாமுகன்
பத்து நூறு எனப் பட்ட சென்னியும்
கொத்தொடே விழக் குறைத்திட்டான் அரோ.
43