சூரன் நகர்புரி படலம்
 
4682.
ஊக வான் படை உலப்ப வச்சிர
வாகு மாண்டதும் வாகை மொய்ம்பினான்
ஏகும் தன்மையும் ஏவல் தூதுவர்
சோகமோடு போய்ச் சூர் முன் கூறினார்.
1
   
4683.
ஈர் ஐந்து சென்னி சேர் இளைய கான் முளை
வீரம் சிந்தியே விளிந்த ஆற்றினைச்
சூரன் கேட்டலும் துளங்கி துன்பு எனும்
வாரி உள்ளுற மயங்கி வீழ்ந்தனன்.
2
   
4684.
கண் இடை நெடும் புனல் கால மைந்தன் மேல்
உள் நிகழ் அன்பு சென்று உயிரை ஈர்ந்திடத்
துண் என உயிர்ப்பு எனும் புகையும் சுற்றிட
எண் அரும் செல்லல் கொண்டு இரங்கி ஏங்கினான்.
3
   
4685.
ஏங்கினன் புலம்பலும் இனைய வெய்ய சூர்
பாங்கு அமர் தமர்களும் பரிசனத்தரும்
தீங்கு செய் அரக்கரும் தெரிவை மார்களும்
நீங்கு அற அழுதனர் நெடும் கண் நீர் உக.
4
   
4686.
பழிதவிர் கற்பு உடைப் பதுமை தன் மகன்
ஒழி உறு தன்மையை ஓர்ந்து மா மலர்க்
குழல் அவிழ்ந்து அலமரக் கொங்கை மேல் புடைத்து
அழுதனள் வீழ்ந்தனள் மறிக்கும் அங்கையாள்.
5
   
4687.
தொல் இயல் இழுக்கிய சூரன் என்பவன்
புல்லிய பின் முறைப் புணர்வின் மாதரும்
சில் இயல் கூந்தல் தாழ் சேடி மார்களும்
எல்லவரும் தழீஇ இரங்கல் மேயினார்.
6
   
4688.
களம் எழு மிசை ஒலி கடி நல் யாழ் ஒலி
துளை ஒலி வயிர் ஒலி தூரியத்து ஒலி
அளமரும் மொழி ஒலி அடங்கி அப்பெரு
வளநகர் புலம்பு ஒலி மயங்கிற்று என்பவே.
7
   
4689.
அன்னது போழ்தினில் அறத்தைக் காய் தரு
துன்னெறி மந்திரி சூரபன்மனாம்
மன்னவன் முன் உற வந்து கை தொழுது
இன்னன கேண்ம் என இசைத்தல் மேயினான்.
8
   
4690.
மெய்ப் புவி அண்டங்கள் பரித்த மேன்மையை
ஒப்பு அரும் திருவினை உலப்பில் ஆயுளை
செப்ப அரும் திறலினை சிறந்த சீர்த்தியை
இப்பரிசு அழுங்குதல் இயற்கை ஆகுமோ.
9
   
4691.
தெண் திரை நேமிவான் செறிந்து கொள்ளினும்
அண்டம் அது அழியினும் அனைத்தும் ஆயினும்
விண்டிடல் இன்றி வாழ் வீர நீ மனம்
கொண்டிடு திண்மையும் குன்றல் பாலதோ.
10
   
4692.
ஏவரும் வியத்தகும் இறைவ நீ இவண்
ஓ என அரற்றியே உயங்கு உற்றாய் எனின்
மூவரும் நகைப்பர்கள் முன்னம் ஏவல் செய்
தேவரும் நகைப்பர்கள் புகழும் தேயும் ஆல்.
11
   
4693.
பூதர் தம் படை அல புராரி நல்கியே
காதலனே அல கழற விட்டது ஓர்
தூதுவன் செய்த புன் தொழிலுக்கு ஆற்றலை
பேதுறல் ஆகுமோ பெருமைக்கு ஈறு இலாய்.
12
   
4694.
தந்தையர் துஞ்சினும் தம்முன் பின்னவர்
மைந்தர்கள் துஞ்சினும் மற்றும் சார்ந்தவர்
தம் தொகை துஞ்சினும் சயத்தின் மேலையோர்
சிந்தை கொள் வன்மையில் சிறிதும் தேயுமோ.
13
   
4695.
மேதகு பெரும்திறல் வீரர் தம்மையும்
மாதரும் வெல்வர் ஆல் மாயும் ஊழ்வரின்
ஆதலின் நின் மகற்கு ஆயுள் குன்றலின்
தூதனும் அட்டனன் ஆகித் தோன்றினான்.
14
   
4696.
வெவ்விய ஒன்னலர் வினையும் வன்மையும்
கைவரு நெல்லி அம் கனியின் நாடியே
செய்வகை தேற்றினம் செய்கலாது இவண்
நைவதும் ஆண்மையின் நலத்திற்கு ஆகுமோ.
15
   
4697.
வரங்களும் மதுகையும் வரம்பின்று எய்தியே
உரங்கிளர் சூரன் என்று ஒரு பேர் பெற்ற நீ
தரங்கம் அது அடைவதும் தலைமைக்கு ஏற்பதோ
இரங்கலை இரங்கலை என்று தேற்றினான்.
16
   
4698.
மேல் திகழ் அறத்தினை வெகுளும் நாமத்தான்
தேற்றலும் அவுணர் கோன் தெளிவு பெற்று எழீஇ
ஆற்றரும் துயரினை அடக்கித் தன் பணிக்கு
கூற்று இயல் உழையரை நோக்கிக் கூறுவான்.
17
   
4699.
சேய் உயிர் வௌவியே சிறந்த இந்நகர்
மாய்வது புணர்த்திடு வலிய தூதுவன்
போயது தெரிந்திரோ புகலக் கேட்டிரோ
நீயிர்கள் வாய்மையை நிகழ்த்தும் என்னவே.
18
   
4700.
துப்புடன் இவ்வழி தூதில் சென்று உளான்
இப்புரம் அகன்றனன் இலங்கை நோக்கு உறா
அப்புறம் ஏகினான் அதனைக் கண்டனம்
மெய்ப் பரிசு இஃது என விளம்பினார் அரோ.
19
   
4701.
அம்மொழி வினவ லோடும் அவுணர் கோன் தன்பால்                                       நின்ற
கம்மியர் தம்மை நோக்கிக் கடிது போய் அகிலம் நல்கிச்
செம் மலர் மிசையே வைகும் திசை முகத்து ஒருவன்                                       தன்னை
இம் எனக் கொணர்திர் என்ன அனையவர் இசைக்கல்                                       உற்றார்.
20
   
4702.
ஈங்கு இது கேட்டி மன்ன இனைய மூதண்டம் நல்கும்
தேம் கமழ் பதுமத்து அண்ணல் தேவர் கோன் ஆதி                                       ஆன
பாங்கினர் ஓடு மேவிப் படையொடும் புவியில் வந்த
காங்கெயன் தன் கண் உற்றான் என்பரால் கண்டோர்                                       என்றார்.
21
   
4703.
தொழுவர்கள் இனைய மாற்றம் சொற்றலும் சூரன் கேளா
விழும் இது விழுமிது என்னா வெய்து உயிர்ப்பு எய்திச்                                        சீறி
அழல் எழ நகைத்து மற்றை அண்டத்தின் இருந்து நல்கும்
செழுமலர் அனையப் பற்றிச் செல்லுமின் வல்லை                                        என்றான்.
22
   
4704.
கொற்றவன் இனைய மாற்றம் கூறலும் உழையர் கேளா
இற்று இது செய்தும் என்னா இசைவு கொண்டு ஒல்லை                                           ஏகி
மற்றை அண்டத்தில் சென்று வானவர் முதுவன் தன்னைப்
பற்றினர் கொணர்ந்தார் தம்கோன் பணித்திடு பரிசு கூறி.
23
   
4705.
பரிசனர் பலரும் ஈண்டிப் பார்புகழ் சூரன் என்னும்
அரசன் முன் கொணர்ந்து வேறு ஓர் அண்டத்தின்                                 அயனை உய்ப்ப
வரிசையால் அவனை நோக்கி மண் அழிவு உற்ற மற்றித்
திருநகர் அதனைத் தொன்மை போலவே செய்தி என்றான்.
24
   
4706.
சூரன் மற்று இதனைச் செப்பச் சொல் பணி தலைக்                                    கொண்டு ஐய
ஓர் இறை ஒடுங்கும் முன்னர் உனது தொல் நகரம் ஆற்ற
ஏர் உற முன்னமே போல் இயற்றுவன் யானே என்னாப்
பேர் உலகு உதவுகின்ற பெற்றியை நினைந்து செய்வான்.
25
   
4707.
பொன் மதில் மாட வீதி பொலன் மணிச் சிகரம் வேரம்
மன்மதன் விழையும் சோலை மண்டபம் வாவி பொய்கை
சென் மலி அரங்க மன்றம் தெற்றியே முதல எல்லாம்
தொன்மை போல் ஆகத் தன்கைத் தொழில் முறை                           படைத்தான் மன்னோ.
26
   
4708.
இவ்வகை நகரம் முற்றும் எழில் பெறப் படைத்த பின்றை
மை வரை மேனி மன்னன் மாபெரும் கோயில் தன்னைச்
செவ்விதின் முதுமை போலச் சிறப்பினால் திருத்தல்                                    செய்தான்
ஐவகை இருபான் கொண்ட அல்லி அம் கமலத்து                                    அண்ணல்.
27
   
4709.
கொன்பெரு நகரும் அம் தண் கோயிலும் படைத்த                                          லோடும்
மன் பெரும் தகைய சூரன் மற்று அவன் செய்கை நோக்கி
அன்பு செய்து உவகை ஆகி அவுணர்கள் யாரும் போற்ற
முன்பு போல் அரி மான் ஏற்று முழு மணித் தவிசின்                                          உற்றான்.
28
   
4710.
உற்றனன் ஆகிப் பின்னர் ஓதிமத்து இறையை நோக்கி
மற்று நின் அண்டம் சென்று வைகுதி நல்கி என்னாச்
சொற்றனர் ஏவ அன்னோன் துண் என விடை பெற்று                                        ஏகிப்
பெற்று தன் அண்டம் சென்று பிறங்கு தன் உலகம்                                        புக்கான்.
29