மூன்றாம் நாள் பானுகோபன் யுத்தப் படலம்
 
5767.
இரவி வந்து உற்றுழி எழுந்து சூர் மகன்
மரபுளி நாள் கடன் வழாமல் ஆற்றியே
செருவினில் உடைந்திடும் சிறுமை சிந்தியாப்
பொரு வரு மாயையைப் போற்றல் மேயினான்.
1
   
5768.
போற்றினன் முன் உறு பொழுதின் மாயவள்
கோல் தொழில் கன்றிய குமரன் முன்னரே
தோற்றினள் நிற்றலும் தொழுத கையினன்
பேற்றினை உன்னியே இனைய பேசுவான்.
2
   
5769.
தாதை தன் அவ்வை கேள் சண்முகத்தவன்
தூதுவனோடு போர்த் தொழிலை ஆற்றினேன்
ஏதம் இல் மானமும் இழந்து சாலவும்
நோதக உழந்தனன் நோன்மை நீங்கினேன்.
3
   
5770.
துன்னலரோடு போர் தொடங்கி ஈற்றினில்
பின்னிடுவார் பெறும் பிழையும் பெற்றனன்
என் இனி வரும் பழி இதற்கு மேல் என்றான்
அன்னது மாயை கேட்டு அறைதல் மேயினாள்.
4
   
5771.
மறை நெறி விலக்கினை வான் உளோர் தமைச்
சிறை இடை வைத்தனை தேவர் கோமகன்
முறையினை அழித்தனை முனிவர் செய்தவம்
குறை உறுவித்தனை கொடுமை பேணினாய்.
5
   
5772.
ஓவரும் தன்மையால் உயிர்கள் போற்றிடும்
மூவரும் பகை எனின் முனிவர் தம்மொடு
தேவரும் பகை எனின் சேணில் உற்று உளோர்
ஏவரும் பகை எனின் எங்ஙன் வாழ்தி ஆல்.
6
   
5773.
பிழைத்திடும் கொடு நெறி பெரிதும் செய்தலால்
பழித் திறம் பூண்டனை பகைவர் இந்நகர்
அழித்து அமர் இயற்றிட அவர்க்குத் தோற்றனை
இழைத்திடும் விதியினை யாவர் நீங்கினார்.
7
   
5774.
நூற்று இவண் பல பல நுவலின் ஆவது என்
மாற்ற அரும் திறல் உடை மன்னன் மைந்த நீ
சாற்றுதி வேண்டுவ தருவன் என்றலும்
ஆற்றவும் மகிழ் சிறந்து அனையன் கூறுவான்.
8
   
5775.
நின்று அமர் இயற்றியே நென்னல் என்றனை
வென்றனன் ஏகிய வீர வாகுவை
இன்று அனிகத் தொடும் ஈறு செய்திட
ஒன்று ஒரு படையினை உதவுவாய் என்றான்.
9
   
5776.
அடல் வலி பிழைத்திடும் அவுணன் சொற்றன
கெடல் அரும் மாயவள் கேட்டுத் தன் ஒரு
படையினை விதித்து அவன் பாணி நல்கியே
கடிதினில் ஒருமொழி கழறல் மேயினாள்.
10
   
5777.
மற்று இது விடுத்தியால் மறையில் கந்தவேள்
ஒற்றனைப் பிறர் தமை உணர்வை வீட்டியே
சுற்றிடும் வாயுவின் தொழிலும் செய்யும் ஆல்
இற்றையில் சயம் உனதே ஏகுவாய் என்றாள்.
11
   
5778.
உரைத்து இவை மாயவள் உம்பர் போந்துழி
வரத்தினில் கொண்டிடும் மாய மாப்படை
பரித்தவன் நெருநலிற் பழியை நீங்கியே
பெருத்திடும் பெருமிதப் பெற்றி கூடினான்.
12
   
5779.
கூர்ப்புறு பல்லவம் கொண்ட தூணியைச்
சீர்ப்புறத்து இறுக்கி மெய் செறித்துச் சாலிகை
கார்ப்பெரும் கொடு மரம் கரம் கொண்டு இன்னது ஓர்
போர்ப் பெரும் கருவிகள் புனைந்து தோன்றினான்.
13
   
5780.
கால் படை அழல் படை காலன் தொல் படை
பாற் படு மதிப்படை பரிதியோன் படை
மால் படை அரன் படை மலர் அயன் படை
மேல் படு சூர் மகன் எடுத்தல் மேயினான்.
14
   
5781.
மேனவப் படை மதில் விரவு சாலையுள்
வானவப் படை கொடு வாய்தல் போந்தனன்
ஆனவப் படைதரும் ஆடல் வில்லினான்
தானவப் படைஞர்கள் தொழுது தாழ்ந்திட.
15
   
5782.
சயந்தனைப் பொருதிடும் தார் பெய் தோளினான்
சயந்தனைப் பொருத நாள் சமரில் கொண்டது ஓர்
சயம் தனத்து ஏறினன் தகுவர் யாவரும்
சயம் தனைப் பெறுக என ஆசி சாற்றவே.
16
   
5783.
ஒப்பு அறு செறுநர் மேல் உருத்துப் போர் செயத்
துப்பு உறு சூர் மகன் தொடர்கின்றான் எனச்
செப்பு உறும் ஒற்றர்கள் தெரிந்து போம் எனச்
எப் புறத் தானையும் எழுந்து போந்தவே.
17
   
5784.
பரி பதினாயிர வெள்ளம் பாய் மத
கரி பதினாயிர வெள்ளம் காமர் தேர்
ஒரு பதினாயிர வெள்ளம் ஒப்பு இலா
இரு பதினாயிர வெள்ளம் ஏனையோர்.
18
   
5785.
நால் படை இவ் வகை நடந்து கோமகன்
பால் பட விரவின பரவு பூழிகள்
மால் படு புணரி நீர் வறப்பச் சூழ்ந்தது ஆல்
மேல் படு முகில் இனம் மிசைய வந்து என.
19
   
5786.
திண் திறல் அனிக மீச் சென்ற பூழிகள்
மண்டலம் முழுவதும் வரைகள் யாவையும்
அண்டமும் விழுங்கியே அவைகள் அற்றிட
உண்டலின் அடைத்தன உவரி முற்றுமே.
20
   
5787.
முரசொடு துடி குடமுழவம் சல்லரி
கரடிகை தண்ணுமை உடுக்கை காகளம்
இரலைகள் ஆதி ஆம் இயங்கள் ஆர்த்தன
திரு நகர் அழியும் என்று அரற்றும் செய்கை போல்.
21
   
5788.
உழை உடைக் கற்பினர் உரையில் சென்றிடா
தழை உடைப் பிடிக்கு நீர் தணிக்கும் வேட்கையால்
புழை உடைத் தனிக்கரம் போக்கிப் பொங்கு சூல்
மழை உடைத் திடுவன மதம் கொள் யானையே.
22
   
5789.
கார்மிசைப் பாய்வன கதிரவன் தனித்
தேர் மிசைப் பாய்வன சிலையில் பாய்வன
பார்மிசைப் பாய்வன பார் இடத்தவர்
போர் மிசைப் பாய்வன புரவி வெள்ளமே.
23
   
5790.
அருள் இலர் ஆகிய அவுணர் மாண்டுழித்
தெருள் உறும் அவ் அவர் தெரிவை மாதர்கள்
மருள் ஒரு துன்பு உறும் வண்ணம் காட்டல் போல்
உருளுவ இரங்குவ உலப்பு இல் தேர்களே.
24
   
5791.
கரிந்திடும் மேனியும் கணப்பில் தானவர்
தெரிந்திடும் மாலை சூழ் செய்ய பங்கியும்
விரிந்திடும் நஞ்சு பல் உருவ மேவுறீஇ
எரிந்திடும் அங்கி கான்று என்னத் தோன்றுமே.
25
   
5792.
பொங்கு வெம் கதிர் போன்று ஒளிர் பூணினர்
திங்கள் வாள் எயிற்றார் முடி செய்ய அவர்
துங்க அற்புதர் பொன் புகர் தூங்கு வேல்
அங்கையாளர் அசனியின் ஆர்த்து உளார்.
26
   
5793.
நீள் அமர்க்கு நெருநலில் போந்து பின்
மீளுதற்கு உடைந்தார் தமை வீட்டுதும்
வாளினுக்கு இரை யாவென்று வாய்மையால்
சூள் இசைத்துத் தொடர்ந்தனர் வீரரே.
27
   
5794.
ஓடு தேரின் உவாக்களின் மானவர்
நீடு கையின் நிவந்து உறு கேதனம்
ஆடி விண்ணை அளாவுவ தாருவைக்
கூடவே கொல் கொடி எனும் தன்மையால்.
28
   
5795.
கோலின் ஓங்கு கொடியும் கவிகையும்
தோலும் ஈண்டலில் சூழ் இருள் ஆயின
மாலை சூழ் குஞ்சி மானவர் வன் கையில்
வேலும் வாளும் பிறவும் வில் வீசுமே.
29
   
5796.
இன்ன தன்மை இயன்றிடத் தானைகள்
துன்னு பாங்கரில் சூழ்ந்து படர்ந்திட
மன்னன் மாமகன் மாநகர் நீங்கியே
பொன்ன ஆம் புரிசைப் புறம் போயினான்.
30
   
5797.
போய காலைப் புறம் தனில் வந்திடும்
வேயினோர் களின் வெம்பரி மாமுகம்
ஆயிரம் கொள் அவுணனை நோக்கியே
தீய சூர்மகன் இன்னன செப்புவான்.
31
   
5798.
ஈசன் விட்ட குமரன் இருந்திடும்
பாசறைக் களம் தன்னில் படர்ந்து நீ
மாசிலா விறல் வாகுவைக் கண் உறீஇப்
பேசல் ஆற்றுதி இன்னன பெற்றியே.
32
   
5799.
மன்னன் ஆணையின் மண்டு அமர் ஆற்றியே
தன்னை இன்று தடிந்து இசை பெற்றிட
உன்னி வந்தனன் ஒல்லையின் ஏகுதி
முன்னை வைகலில் போர் என்றும் உன்னலாய்.
33
   
5800.
என்ற மாற்றம் எனது உரை ஆகவே
வென்றியோடு புகன்றனை மீள்க என
நின்ற தூதனை நீசன் விடுத்தலும்
நன்று ஈது என்று நடந்து முன் போயினான்.
34
   
5801.
ஏம கூடம் எனப் பெயர் ஆகிய
காமர் பாசறைக் கண் அகல் வைப்பு உறீஇ
நாம வேல் படை நம்பிக்கு இளவலாம்
தாம மார்பனைக் கண்டு இவை சாற்றுவான்.
35
   
5802.
எல்லை தன்னை இருஞ்சிறை வீட்டிய
மல்லல் அங்கழல் மன்னவன் மாமகன்
ஒல்லை இப்பகல் உன் உயிர் மாற்றுவான்
செல்லு கின்றனன் செப்பிய சூளினான்.
36
   
5803.
ஏவினான் எனை இத்திறம் கூறியே
கூவி நின்னைக் கொடு வருவாய் என
மேவலாள விரைந்து அமர்க்கு ஏகுதி
நாவலோய் எனவே நவின்றான் அரோ.
37
   
5804.
தூதன் இவ்வகை சொற்று எதிர் நிற்றலும்
மூ தகும் திறல் மொய்ம்பன் நகைத்தியான்
ஆதவன் பகை ஆருயிர் உண்டிடப்
போதுகின்றனன் போய்ப் புகல்வாய் என்றான்.
38
   
5805.
ஒற்றன் இத்திறம் ஓர்ந்து உடன் மீடலும்
செற்றம் மிக்க திறல் கெழு மொய்ம்பினான்
சுற்றமோடு தலைவர்கள் சூழ்ந்திடக்
கொற்ற வேல்கைக் குமரன் முன் நண்ணினான்.
39
   
5806.
எங்கும் ஆகி இருந்திடும் நாயகன்
பங்கயப் பொற் பதத்தினைத் தாழ்ந்து எழீஇச்
செங்கை கூப்பி முன் நிற்றலும் செவ்வியோன்
அங்கண் உற்றது அறிந்து இவை கூறுவான்.
40
   
5807.
நென்னல் ஓடும் நிருதன் தனி மகன்
உன்னை முன்னி உரனொடு போந்து உளான்
துன்னு தானைத் துணைவர்கள் தம்மொடு
முன்னை வைகலின் ஏகுதி மொய்ம்பினோய்.
41
   
5808.
போய் எதிர்ந்து பொருதி படைகளாய்
ஏயவற்றில் எதிர் எதிர் தூண்டுதி
மாயை வஞ்சன் புரிந்திடின் வந்து நம்
தூய வேல் படை துண் என நீக்கும் ஆல்.
42
   
5809.
போதி என்று புகன்றிட அப்பணி
மீது கொண்டு விடை கொண்டு புங்கவன்
பாதம் வந்தனை செய்து படர்ந்தனன்
தூதுபோய் அமர் ஆற்றிய தொன்மையோன்.
43
   
5810.
துணை உளார்களும் சுற்றம் உள்ளார்களும்
கணவர் தங்களில் காவலர் யாவரும்
அணி கொள் தேர் புக ஆடல் அம் தோளினான்
இணை இலாத் தன் இரதத்தில் ஏறினான்.
44
   
5811.
ஏறும் எல்லையில் இச்செயல் நோக்கியே
ஊறு இல் பூதர் ஒர் ஆயிர வெள்ளமும்
மாறு இலாதவரையும் மரங்களும்
பாறு உலாவு படையும் கொண்டு எய்தினார்.
45
   
5812.
சார் அதங்கெழு தானைகள் ஈண்டியே
கார் இனங்களில் கல் என ஆர்ப்பு உற
வீர மொய்ம்பின் விடலையைச் சூழ்ந்தனர்
ஆரும் விண்ணவர் ஆசி புகன்றிட.
46
   
5813.
மேன காலை விசயம் கொள் மொய்ம்பினான்
தானை ஆனவும் தம்பியர் யாவரும்
ஏனையோர்களும் ஈண்டச் சென்று எய்தினான்
பானு கோபன் படரும் பறந்தலை.
47
   
5814.
தேர்த்திடும் பார் இடம் செறியும் வெள்ளமும்
கார்த்திடு தானவக் கடலும் நேர்புறீஇ
ஆர்த்தனர் இகலினர் ஆற்றல் கூறியே
போர்த்தொழில் முறையினைப் புரிதல் மேயினார்.
48
   
5815.
கோடுகள் முழங்கின குறுங்கண் ஆகுளி
பீடு உற இரட்டின பேரி ஆர்த்தன
மூடின வலகைகள் மொய்த்த புள் இனம்
ஆடினன் நடுவனும் அமரர் நோக்கவே.
49
   
5816.
இலை அயில் தோமரம் எழுத் தண்டு ஒண் மழு
வலமொடு வச்சிரம் ஆழி மாப்படை
தொலைவு அறு முத்தலைச் சூலம் ஆதிய
சிலை பொதி கணையுடன் அவுணர் சிந்தினார்.
50
   
5817.
முத்தலை கழுவொடு முசலம் வெங்கதை
கைத்தலத்து இருந்திடு கணிச்சி நேமிகள்
மைத்தலைப் பருப்பதம் மரங்கள் ஆதிய
அத்தலைப் பூதரும் ஆர்த்து வீசினார்.
51
   
5818.
பணிச் சுடர் வாளினால் பாணி சென்னி தோள்
துணித்தனர் குற்றினர் சுரிகை ஆதியால்
குணிப்பு அறும் எழுக்கதை கொண்டு தாக்கினார்
கணப் படையொடு பொரும் அவுணர் காளையர்.
52
   
5819.
பிடித்தனர் அவுணரைப் பிறங்கு கைகளால்
அடித்தனர் கிழித்தனர் அணிய கந்தரம்
ஒடித்தனர் மிதித்தனர் உருட்டு கின்றனர்
புடைத்தனர் எழுக்களால் பூத வீரரே.
53
   
5820.
வாசியும் வயவரும் மாயச் சாரதர்
ஆசு அறு கரங்களால் அள்ளி அள்ளியே
காய்சின இபங்களில் கணிப்பில் தேர்களில்
வீசி நின்று எற்றினர் அவையும் வீழவே.
54
   
5821.
ஓத வெங் கடல்களும் ஊழி வன்னியும்
மே தகு வலி கொடு வெகுளி வீங்கியே
ஆதியின் மாறு கொண்டு அமர் செய்தால் எனப்
பூதரும் அவுணரும் பொருதிட்டார் அரோ.
55
   
5822.
குழகு இயல் அவுணரும் கொடிய பூதரும்
கழகு எனும் உரை பெறு களத்தில் போர் செய
ஒழுகிய சோரி ஆறு ஊனை வேட்டு உலாய்
முழுகிய கரண்டம் விண் மொய்த்த புள் எலாம்.
56
   
5823.
துணிந்தன கைத்தலம் துணிந்த தோள் துணை
துணிந்தன சென்னிகள் துணிந்த வாலுரம்
துணிந்தன கழல் அடி துணிந்த மெய் எலாம்
துணிந்தன வலி சில பூதர் துஞ்சினார்.
57
   
5824.
முடித் தொகை அற்றனர் மொய்ம்பும் அற்றனர்
அடித் துணை அற்றனர் அங்கை அற்றனர்
வடித்திடும் கற்பொடு வலியும் அற்றனர்
துடித்தனர் அவுணரும் அநேகர் துஞ்சினார்.
58
   
5825.
வசை உறும் அவுணரின் மன்னர் யாவரும்
இசை பெறு பூதரின் இறைவரும் கெழீஇத்
திசையொடு திசை எதிர் செய்கை போலவே
அசைவு இலர் ஆகி நின்று அமர் அது ஆற்றினார்.
59
   
5826.
மால் கிளர் தீயவர் மலை கொள் சென்னியைக்
கால் கொடு தள்ளினர் களேவரம் தனைப்
பால் கிளர் பிலத்தின் உள் படுத்துச் சென்றனர்
தோல்களை உரித்தனர் சூல பாணி போல்.
60
   
5827.
அரித் திறல் அடக்கினர் அவுண வீரர் தம்
வரத்தினை ஒழித்தனர் மாய நூறியே
புரத்தினை அழித்தனர் போரின் மாதொடு
நிருத்தம் அது இயற்றினர் நிமலன் போலவே.
61
   
5828.
கங்குலின் மேனியர் ஆழிக் கையினர்
துங்கம் ஒடு அவுணரைத் தொலைத்துத் துண் எனச்
சங்கம் அது இசைத்தனர் தண்டம் தாங்குவார்
செங்கண் மால் பொருவினர் சில வெம் பூதரே.
62
   
5829.
அயர்ப்பு உறு மால் கரி அரற்ற வேசுலாய்க்
குயிற்றிய மணி நெடும் கோடு வாங்குவார்
உயற்படு கற்பம் அங்கு ஒன்றில் ஏனத்தின்
எயிற்றினைப் பறித்திடும் குமரன் என்னவே.
63
   
5830.
கொலை பயில் கரி முகம் கொண்டு பூதர் தம்
மலை இடை மறைந்தனர் மறித்தும் தோன்றியே
அலமரு சமர் புரிந்த அவுண வீரரில்
சிலர் சிலர் தாரகன் செயற்கை மேயினார்.
64
   
5831.
மால் ஒடு பொருதனர் மலர் அயன் தனைச்
சாலவும் வருத்தினர் சலதி வேலையின்
பாலர்கள் அவுணரில் பலர் சலந்தரன்
போல் உடல் கிழிந்தனர் பூதர் நேமியால்.
65
   
5832.
போன்றவர் பிறர் இலாப் பூத நாயகர்
மூன்று இலைப் படைகளின் மூழ்கித் தீமை போய்
வான் திகழ் கதியும் வால் உணர்வும் எய்தியே
தோன்றினர் அந்தகா சுரனைப் போல் சிலர்.
66
   
5833.
இலக்க வீரரும் எண்மரும் அத்துணை
விலக்கில் வில் உமிழ் வெங்கணை மாரிதூய்
ஒலிக் கொள் சூறையின் ஒல்லையில் சுற்றியே
கலக்கினார்கள் அவுணக் கடலினை.
67
   
5834.
மிடைந்த கண வீரர்களும் மேலவரும் ஆக
அடைந்து அமர் இயற்றி அவுணப் படைகள் மாயத்
தடிந்தனர் ஒழிந்தன தடம் புனல் குடங்கர்
உடைந்த வழி சிந்தி என ஓடியன அன்றே.
68
   
5835.
ஓடியது கண்டனன் உயிர்த்து நகை செய்தான்
காடுகிளர் வன்னி எனவே கனலுகின்றான்
ஆடல் செய் முன்னி ஒர் அடல் சிலை எடுத்தான்
தோடு செறி வாகை புனை சூரன் அருள் மைந்தன்.
69
   
5836.
வாகு பெறு தேர் வலவனைக் கடிது நோக்கி
ஏக விடுக என்று இரவி தன் பகை இயம்பப்
பாகன் இனிது என்று பரி பூண்ட இரதத்தை
வேகமொடு பூதர் படை மீது செல விட்டான்.
70
   
5837.
பாரிடர்கள் சேனை இடை பானுவை முனிந்தோன்
சேருதலும் ஆங்கு அது தெரிந்து திறல் வாகு
சார் உறு பெரும் துணைவர் தம்மொடு விரைந்தே
நேர் எதிர் புகுந்து ஒரு நெடும் சிலை எடுத்தான்.
71
   
5838.
எடுத்திடும் வில் வீரனை எதிர்ந்த அவுணன் மைந்தன்
வடித்திடு தடக்கைதனில் வார் சிலை வளைத்துத்
தடித்தன குணத்து ஒலி தனைப் புரிய அண்டம்
வெடித்தன முடித்தலை துளக்கினர்கள் விண்ணோர்.
72
   
5839.
எண் இல் பல கோடி உரும் ஏறு உருவம் ஒன்றாய்
வண்ணம் மிகு மின் இடை மறைந்து ஒலி செய்து என்ன
விண் உற நிவந்த வியன் மொய்ம்பு உடைய வீரன்
நண்ணலர் துணுக்கம் உற நாண் இசை எடுத்தான்.
73
   
5840.
நாண் ஒலி செவித் துணையின் நஞ்சம் என எய்தத்
தூண் இகலும் வாகு உடைய சூர் மதலை சீறி
வாண் நிலவு கான்ற பிறை வாளி உலவாமல்
சேண் நிலனும் திசைகளும் செறிய விட்டான்.
74
   
5841.
மாமுருக வேள் இளவன் மற்று அது தெரிந்தே
காமர் பிறை போன்று கதிர் என்ன வெயில் கான்று
தீ முகம் அதாம் அளவில் செய்ய சர மாரி
தூ முகிலும் நாணம் உறவே நெடிது தூர்த்தான்.
75
   
5842.
ஐயன் விடு வெஞ்சரமும் ஆதவனும் அஞ்சும்
வெய்யன் விடும் வெஞ்சரமும் மேவி எதிர் கவ்வி
மொய் உடை அராவின் முனிந்து இகலி வெம்போர்
செய்வது என மாறுகொடு சிந்துவன தம்மில்.
76
   
5843.
கரிந்திடு மாமுகில் கடந்தன வானவர்
புரிந்திடு சேண் நறி புகுந்தன மால் அயன்
இருந்திடும் ஊரையும் இகந்தன போயின
திரிந்தன சாரிகை சிறந்தவர் தேர்களே.
77
   
5844.
தெண் திரை நேமிகள் சென்றன சூழ்வன
எண் திசை மாநகர் எங்கணும் ஏகுவ
மண்டல மால் வரை மண்டி உலாவுவ
அண்டம் உலாவுவ அங்கு அவர் தேர்களே.
78
   
5845.
மங்குலின் மேலதோ மண்டலம் ஆர்வதோ
செங்கணன் ஊரதோ தெண் திரை சேர்வதோ
இங்கு உளர் ஏறு தேர் எங்கு உளவோ எனாச்
சங்கையின் நாடினார் தங்களில் வான் உளோர்.
79
   
5846.
மன்னிய மா முகில் வண்ணம் அது ஆயினர்
அன்ன தொல் வீரர்கள் அண்மிய தேரவை
மின்னுவின் மேவுவ வெம்மையில் வீசிய
துன்னிய வாளிகள் தொன்மழை போல்வவே.
80
   
5847.
ஆங்கு அவர் தேர்களில் ஆண்டு உறு பாகர்கள்
தூங்கல் இல் வாசிகள் தூண்டிய மேலவர்
தீங்கதிர் வாளிகள் சேண் புடை சூழ் உற
ஏங்கினர் ஓடினர் ஈண்டிய வான் உளோர்.
81
   
5848.
பூசல் இவ்வகை புரிந்திடு கின்று உழிப் புரை தீர்
வாசவன் மகன் தனைச் சிறை செய்திடும் வலியோன்
ஆசுகங்களில் ஆசுகம் ஆயிரம் தூண்டி
ஈசன் மாமகன் சேனை நாயகன் நிறத்து எய்தான்.
82
   
5849.
ஆக மீதில் ஓர் ஆயிரம் பகழி புக்கு அழுந்த
ஏக வீரனாம் இளவலும் முனிவு கொண்டு ஏவி
வாகை வெங்கணை பத்து நூறு அவுணர் கோன் மதலை
பாகு மாக்களும் இரதமும் ஒருங்கு உறப் படுத்தான்.
83
   
5850.
படுக்க வெய்யவன் வேறு ஒரு வையமேல் பாய்ந்து
தடக்கை வில்லினை வளைக்கும் முன் ஆயிரம் சரத்தைத்
தொடுக்க மற்று அவன் உரம்தனைப் போழ்தலும் துளங்கி
இடுக்கண் எய்தினன் ஆர்த்தனர் பூதர்கள் எவரும்.
84
   
5851.
பூதரர் ஆர்த்திடும் துழனியைக் கேட்டலும் பொருமிக்
காதில் வெவ்விடம் உய்த்திடும் திறன் எனக் கனன்றே
ஏதம் இல்லது ஓர் பண்ணவப் படைகளால் இமைப்பில்
தூதன் ஆற்றலைத் தொலைக்குவன் யான் எனத்                                    துணிந்தான்.
85
   
5852.
இணை இல் சூர் மகன் வாருணப் படைக்கலம் எடுத்துப்
பணிவு கொண்ட கார் முகம் தனில் பூட்டி நீ படர்ந்து
கணிதம் இல்லது ஓர் நீத்தமாய்ச் சாரதர் கணத்தைத்
துணைவர் தங்களைத் தூதனை முடிக்க எனத்                                  தொடுத்தான்.
86
   
5853.
தொடைப் பெரும் படை கடை முறை உலகுஎலாம்                                தொலைக்கும்
அடல் பெரும் கடல் ஏழினும் பரந்து போய் ஆன்று
தடப் பெரும் புனல் நீத்தமாய் விசும்பினைத் தடவி
இடிப் பெரும் குரல் காட்டியே ஏகியது இமைப்பில்.
87
   
5854.
கண்ட வானவர் துளங்கினர் பூதரும் கலக்கம்
கொண்டு நின்றனர் உணர்ந்திலர் துணைவரும் குலைந்தார்
அண்டர் நாயகற்கு இளையவன் நோக்கியே அகிலம்
உண்டு உலா வரும் அங்கிமாப் பெரும் படை உய்த்தான்.
88
   
5855.
புகை எழுந்தன வெம்மையும் எழுந்தன புலிங்கத்
தொகை எழுந்தன ஞெகிழிகள் எழுந்தன சுடரின்
வகை எழுந்தன பேர் ஒலி எழுந்தன வன்னிச்
சிகை எழுந்தன செறிந்தன வானமும் திசையும்.
89
   
5856.
முடிக்கல் உற்ற தீப் பெரும் படை செறிய மூதண்டம்
வெடிக்கல் உற்றன வற்றின கங்கை மீன் தொகுதி
துடிக்கல் உற்றன சுருங்கின அளக்கர் தொல் கிரிகள்
பொடிக்கல் உற்றன தளர்ந்து மெய் பிளந்தனள் புவியும்.
90
   
5857.
தீர்த்தன் ஏவலோன் விடு படை இன்னணஞ் சென்று
மூர்த்தம் ஒன்றினில் வாருணப் படையினை முருக்கி
நீர்த் திரைப் பெரு நீத்தமும் உண்டு மேல் நிமிர்ந்து
போர்த்ததாம் எனச் சுற்றியது அவுணர் கோன் புறத்தில்.
91
   
5858.
சுற்றுகின்ற அப்படையினைக் கண்டு சூர் புதல்வன்
செற்றம் மேல் கொண்டு மாருதப் பெரும் படை செலுத்த
மற்று அது ஊழி வெங்கால் உருக் கொண்டு மன்                                      உயிர்கள்
முற்றும் அண்டமும் துளங்கு உறச் சென்றது முழங்கி.
92
   
5859.
மாருதப் படை சென்று தீப் படையினை மாற்றிச்
சாரதப் படை மேல் அட வருதலும் தடந்தோள்
வீரன் மற்று அது கண்டு வெம் பணிப் படை விடுத்தான்
சூரியத் தனிக் கடவுளும் தன் உளம் துளங்க.
93
   
5860.
ஆயிரம் பதினாயிரம் இலக்கமோடு அநந்தம்
தீய பஃறலைப் பன்னகத் தொகுதியாய்ச் செறிந்து
காயம் எங்கணும் நிமிர்ந்து செந் தீ விடம் கான்று
பாய் இருஞ்சுடர்க் கதிரையும் மறைத்தது படத்தால்.
94
   
5861.
வெங்கண் நாகங்கள் உமிழ்கின்ற அங்கியும் விடமும்
மங்குல் வானமும் திசைகளும் மாநில வரைப்பும்
எங்கும் ஈண்டிய இரவினில் புவி உளோர் யாண்டும்
பொங்கு தீச்சுடர் அளப்பு இல மாட்டுதல் போல.
95
   
5862.
உலவை மாப்படை உண்டிடும் அங்கியை ஒருங்கே
வலவை நீர்மையால் தம்முழை வரும் படி வாங்கி
அலகு இல் வெம் பணி விடுத்து என அன்னவை உமிழ்                                          தீக்
குலவு கின்றன புகை எனக் கொடு விடம் குழும.
96
   
5863.
இனைய கொள்கையால் பன்னகப் பெரும் படை ஏகி
முனம் எதிர்ந்திடு மாருதப் படையினை முனிந்து
துனைய உண்டு தன் மீ மிசைச் சேறலும் தொல் நாள்
கனலியைத் தளை பூட்டிய கண்டகன் கண்டான்.
97
   
5864.
இன்னதே இதற்கு எதிர் என அவுணர் கோன் எண்ணிப்
பொன் இரும் சிறைக் கலுழன் மாப்படையினைப் போக்க
அன்னது ஏகலும் வெருவியே ஆற்றல் இன்று ஆகிப்
பன்னகப் படை இரிந்தது கதிர் கண்ட பனி போல்.
98
   
5865.
ஆல வெம்பணிப் படை முரிந்திடுதலும் ஆர்த்துக்
கால வேகத்தின் உவணமாப் பெரும் படை கலுழன்
கோலம் எண்ணில புரிந்து நேர் வந்திடக் குரிசில்
மேலை நந்தியந் தேவன் மாப் படையினை விடுத்தான்.
99
   
5866.
சீற்றம் ஆய் அண்ணல் நந்தி தன் பெரும் படை செலுத்த
நூற்று நூறு நூறு ஆயிர கோடி நோன் கழற் கால்
ஏற்றின் மேனி கொண்டு உலகு எலாம் ஒருங்கு உற                                        ஈண்டி
ஆற்ற வெய்து உயிர்த்து ஆர்த்தது மூதண்டம் அதிர.
100
   
5867.
களன் எனப்படு நூபுரம் கழல் இடை கலிப்ப
அளவு இல் கிங்கிணித் தாமங்கள் கந்தரத்து ஆர்ப்ப
ஒளிறு பேர் இமில் அண்ட கோளகையினை உரிஞ்ச
வளரும் நீண் மருப்பு உலகு எலாம் அலைப்ப வந்ததுவே.
101
   
5868.
திரை எறிந்திடும் அளக்கர் உண்டு உலவு சேண் முகிலின்
நிரை எறிந்தது பரிதி தேர் எறிந்தது நெடிதாம்
தரை எறிந்தது திசைக்கரி எறிந்தது தடம் பொன்
வரை எறிந்தது குலகிரி எறிந்தது மருப்பால்.
102
   
5869.
நந்தி மாப் படை இன்னணம் ஏகியே நணுகி
வந்த காருடப் படையினை விழுங்கி மாற்றலனைச்
சிந்து கின்றனன் என்று சென்றிடுதலும் தெரியா
அந்தகன் படை தொடுத்தனன் அவுணர்கட்கு அரசன்.
103
   
5870.
தொடுத்த அந்தகப் படையையும் விடைப் படை துரந்து
படுத்து வீட்டியது அன்னதன் மிடலினைப் பாராக்
கடித்து மெல் இதழ் அதுக்கியே அயன் படைக் கலத்தை
எடுத்து வீசினன் இந்திரன் பதி கனற்கு ஈந்தோன்.
104
   
5871.
வீசு நான்முகப் படைக்கலம் வெகுண்டு விண் நெறி போய்
ஈசன் ஊர்தி தன் படையினைக் காண்டலும் இடைந்து
நீசன் ஏவலின் வந்தனன் நின் வரவு உணரேன்
காய் சினம் கொளேல் எனத் தொழுது உடைந்தது கடிதின்.
105
   
5872.
நூல் முகத்தினில் விதித்திடு நூற்று இதழ் இருக்கை
நான்முகப் படை பழுது பட்டு ஓடலும் நகைத்து
வான் முகத்தவர் ஆர்த்தனர் அது கண்டு மைந்தன்
சூன்முகக் கொண்டல் மேனியன் பெரும் படை                             தொடுத்தான்.
106
   
5873.
ஊழி நாளினும் முடிகிலாது அவன் மகன் உந்தும்
ஆழியான் படை ஆண்டு மால் உருவமாய் அமைந்து
கேழில் ஐம்படை தாங்கி மாயத் தொடும் கெழுமி
வாழி நந்தி தன் படை எதிர் மலைந்தது மன்னோ.
107
   
5874.
நாரணன் படை நந்தி தன் படைக்கு எதிர் நணுகிப்
போர் இயற்றியே நிற்புழி அது கண்டு புனிதன்
சூரர் இத்திறல் சிந்திடச் சிம்புளாய்த் தோன்றும்
வீர பத்திரப் படையினைத் தொழுதனன் விடுத்தான்.
108
   
5875.
ஏயது ஆகிய வீரபத்திரப் படை எழுந்து
போய காலையின் நந்தி தன் படை எதிர் பொருத
மாயவன் படை தொலைந்தது மதியொடு திகழ் மீன்
ஆயிரம் கதிரோன் வரக் கரந்தவாறு அது போல்.
109
   
5876.
செங்கண் நாயகன் படை தொலைந்திடுதலும் தெரிவான்
அங்கண் ஆய் உறா இமைப்பினில் அகிலமும் அழிக்கும்
எங்கள் நாயகன் படையினைத் தூண்டுதற்கு எடுத்தான்
வெங்கண் ஆயிரம் கதிரினைச் செயிர்த்திடும் வெய்யோன்.
110
   
5877.
எஞ்சல் இல்லது ஓர் எம்பிரான் தொல் படை எடுத்து
மஞ்சனம் கந்தம் தூபிகை மணிவிளக்கு அமுதம்
நெஞ்சினில் கடிது உய்த்தனன் பூசனை நிரப்பி
விஞ்சும் அன்பினால் வழுத்தியே தொழுதனன் விடுத்தான்.
111
   
5878.
தாதையாய் அவன் படைக்கலம் விடுத்திடும் தன்மை
காதல் மாமகன் கண்டனன் தானும் அக்கணத்தில்
ஆதி நாயகன் படைதனை எடுத்தனன் அளியால்
போத நீடு தன் புந்தியால் அருச்சனை புரிந்தான்.
112
   
5879.
வழிபடும் தொழில் முற்றிய பின் உற மதலை
அழிதகன் மகன் விடுத்திடும் படைக்கு மாறு ஆகி
விழுமியதாய் இவண் மீளுதியால் என வேண்டித்
தொழுது யாவர்க்கும் மேலவன் படையினைத்                            தொடுத்தான்.
113
   
5880.
தூயன் விட்டிடு சிவன் படை எழுதலும் தொல்லைத்
தீயன் விட்டிடு பரன் படை எதிர்ந்து நேர் சென்றது
ஆய அப்படை இரண்டு மாறு ஆகிய வழிக்கு
நாயகத் தனி உருத்திர வடிவமாய் நண்ணி.
114
   
5881.
ஊழிக் காலினை ஒரு புடை உமிழ்ந்தன உலவாச்
சூழிப் பாய் புகை ஒரு புடை உமிழ்ந்தன தொலைக்கும்
பாழிப் பேர் அழல் ஒரு புடை உமிழ்ந்தன பலவாம்
ஆழித் தீ விடம் ஒரு புடை உமிழ்ந்தன அவையே.
115
   
5882.
கூளி மேலவர் தொகையினை அளித்தன கொடிதாம்
காளி மேலவர் தொகையினை அளித்தன கடுங்கண்
ஞாளி மேலவர் தொகையினை அளித்தன நவை தீர்
ஆளி மேலவர் தொகையினை அளித்தன அயலில்.
116
   
5883.
பேய் இனங்களை ஒரு புடை உமிழ்ந்தன பிறங்கி
மூய தொல் இருள் ஒரு புடை உமிழ்ந்தன முழங்கு
மாயை தன் கணம் ஒரு புடை உமிழ்ந்தன மறலித்
தீயர் தம் குழு ஒரு புடை உமிழ்ந்தன செறிய.
117
   
5884.
எண்ட ருங்கடல் அளப்பு இல கான்றன எரி கால்
கொண்டலின் தொகை அளப்பு இல கான்றன கொலை                                         செய்
சண்ட வெம்பணி அளப்பு இல கான்றன தபன
மண்டலங்கள் ஓர் அளப்பு இல கான்றன மருங்கில்.
118
   
5885.
அனந்த கோடியர் புட்கலை இறைவரை அளித்த
அனந்த கோடியர் கரி முகத்தவர் தமை அளித்த
அனந்த கோடியர் அரி முகத்தவர் தமை அளித்த
அனந்த கோடியர் சிம்புள் மேனியர் தமை அளித்த.
119
   
5886.
ஏறு வெம்பரி வயப்புலி வல்லியம் யாளி
சீறு மால் கரி தேரொடு மான மேல் சேர்ந்து
மாறு இல் பற்படை சிந்தியே முனிந்து மேல் வருவான்
வேறு வேறு எங்கும் உருத்திர கணங்களை விதித்த.
120
   
5887.
ஆரணன் படை அளப்பு இல தந்தன ஐவர்
சாரணன் படை அளப்பு இல தந்தன தந்த
வாரணன் படை அளப்பு இல தந்தன வளத்தின்
காரணன் படை அளப்பு இல தந்தன கடிதின்.
121
   
5888.
வாயுவின் படை எண்ணில புரிந்தன மறலி
ஆயவன் படை எண்ணில புரிந்தன அளக்கர்
நாயகன் படை எண்ணில புரிந்தன நகைசேர்
தீயவன் படை எண்ணில புரிந்தன செறிய.
122
   
5889.
கல் பொழிந்தன ஞெகிழிகள் பொழிந்தன கணக்கு இல்
செல் பொழிந்தன கணிச்சிகள் பொழிந்தன திகரி
எல் பொழிந்தன சூலம் வேல் பொழிந்தன ஈண்டும்
வில் பொழிந்தன சரமழை பொழிந்தன விரைவில்.
123
   
5890.
இம்முறை உருவ நல்கி எம்பிரான் படை இரண்டும்
மைம்மலி கடலும் வானும் மாதிர வரைப்பும் பாரும்
கொம் என விழுங்கி அண்ட கோளகை பிளந்து மேல்                                       போய்த்
தம்மின் மாறு ஆகி நின்று சமர்த் தொழில் புரிந்த                                       அன்றே.
124
   
5891.
வற்றிய அளக்கர் ஏழும் வறந்தன வான் தோய் கங்கை
முற்றிய புறத்தில் ஆழி முடிந்தது அவ் வண்டத்து                                   அப்பால்
சுற்றிய பெருநீர் நீத்தம் தொலைந்தன ஆண்டை வைப்பில்
பற்றிய உயிர்கள் யாவும் பதை பதைத்து இறந்த அம்மா.
125
   
5892.
எரிந்தன நிலனும் வானும் இடிந்தன முடிந்து மேருப்
பொரிந்தன அடுவின் சூழல் பொடிந்தன இரவி தேர்கள்
நெரிந்தன அண்டம் யாவும் நிமிர்ந்தன புகையின் ஈட்டம்
கரிந்தன கிரிகள் ஏழும் கவிழ்ந்தன திசையில் யானை.
126
   
5893.
அலைந்தன சூறை வெங்கால் அவிந்தன வடவைச் செந்தீக்
குலைந்தன பிலங்கள் ஏழும் குலுங்கின அண்டப் பித்தி
உலைந்தன உயிர்கள் யாவும் உடைந்தனர் தெரிந்த                                    வானோர்
தொலைந்தன கமட நாகம் சுருண்டன புரண்ட மேகம்.
127
   
5894.
பூமகள் புவியின் மங்கை பொருமியே துளங்கி ஏங்கித்
தாமரைக் கண்ணன் தன்னைத் தழுவினர் இருவரோடு
நாமகள் வெருவி ஓடி நான்முகற் புல்லிக் கொண்டாள்
காமனை இறுகப் புல்லி இரதியும் கலக்கம் உற்றாள்.
128
   
5895.
மற்று உள முனிவர் தேவர் மடந்தையர் தம்மைப் புல்லி
நிற்றலும் ஆற்றார் உய்யும் நெறியும் ஒன்று இல்லார்                                    ஆயும்
உற்றிடும் அச்சம் தன்னால் ஓடினர் வனத் தீச் சூழப்
பெற்றிடும் பறழ் வாய் கவ்விப் பெயர்ந்திடும் பிணாக்களே                                    போல்.
129
   
5896.
திரண்டிடு பூத வீரர் தியங்கினர் இலக்கர் ஆனோர்
மருண்டனர் துணைவர் தாமும் மயங்கினர் விரற் சூழ்ந்தார்
புரண்டனர் அவுணர் யாரும் பொடிந்தன படர்ந்த தேர்கள்
உருண்டன களிறு மாவும் ஒருவனே அவுணன் நின்றான்.
130
   
5897.
ஆழி சூழ் மகேந்திரத்தில் அமர் தரும் அவுணர் முற்றும்
சூழும் இத் தீமை நோக்கித் துண் என வெருவி மாழ்கி
ஏழ் இரு திறத்த வான உலகங்கள் யாவும் மாயும்
ஊழி நாள் இது கொலோ என்று உலைந்தனர் குலைந்த                                       மெய்யார்.
131
   
5898.
பேர் ஒலி பிறந்த தண்டம் பிளந்தன வளைந்த சூறை
ஆர் அழல் பரவிற்று அம்மா ஆதவன் விளிந்தான் நம்                                           தம்
ஊர் உறை சனங்கள் யாவும் உலைந்தன புகுந்தது என்னோ
தேருதிர் என்று சூரன் ஒற்றரைத் தெரிய விட்டான்.
132
   
5899.
விட்டிடுகின்ற ஒற்றர் செல்லு முன் விரைந்து போரில்
பட்டது தெரிந்து தூதர் ஒரு சிலர் பனிக்கு நெஞ்சர்
நெட்டிரு விசும்பின் நீந்து நெறியினர் இறைவன் தன்னைக்
கிட்டினர் வணங்கி நின்று ஆங்கு இனையன கிளத்தல்                                      உற்றார்.
133
   
5900.
ஐய கேள் உனது மைந்தன் அலரிதன் பகைஞன் நென்னல்
எய்திய தூதனோடும் இருஞ்சமர் விளைத்துப் பின்னர்த்
தெய்வதப் படைகள் உய்த்துச் செகம் எலாம் அழிக்கும்                                      மேலோன்
வெய்யது ஓர் படையைத் தூண்ட அவனும் அப்படையை                                      விட்டான்.
134
   
5901.
அப்படை இரண்டும் ஆகி அகிலமும் ஒருங்கே உண்ணும்
ஒப்பு இல் பல் உருவம் எய்தி உரு கெழு செலவிற்று                                    ஆகித்
துப்புடன் அண்டம் முற்றும் தொலைத்து அமர் புரிந்த                                    மாதோ
இப்பரிசு உணர்ந்தது என்றார் இறையவன் வினவிச்                                    சொல்வான்.
135
   
5902.
இரவியை முனிந்தோன் முக்கண் இறையவன் படையை                                     யாரும்
வெருவர விடுத்தும் இன்னும் வென்றிலன் ஒற்றன் தன்னை
நெருநலில் சிறியன் ஆக நினைந்தனம் அவனை அந்தோ
உருவு கண்டு எள்ளாது ஆற்றல் உணர்வதே உணர்ச்சி                                     என்றான்.
136
   
5903.
வெருவரும் இனைய பான்மை விளைந்திட எம்பிரான் தன்
பொருவரும் படைகள் தம்மில் பொருதன ஆடல் உன்னி
ஒருவரும் நிகர் காணாத ஊழியின் முதல்வன் தானே
இரு பெரு வடிவம் ஆகி இருஞ்சமர் புரிந்ததே போல்.
137
   
5904.
இவ்வகை சிறிது வேலை எந்தை தன் படைக் கலங்கள்
அவ் விருவோரும் காண ஆடலால் அமர் அது ஆற்றி
வெவ் வுருவாகத் தம்பால் மேவர விதித்த எல்லாம்
செவ்விதின் மீட்டும் வல்லே திரும்பிய திறலோர் தம்பால்.
138
   
5905.
திரும்பிய படைகள் தங்கள் செய்கையால் திரிந்த அண்டம்
பெரும் புவி அகல்வான் நேமி பிலம்வரை பிறவும்                                    தொல்லை
வரம்பு உறு மாறு நல்கி மாற்றலர் பக்கம் அல்லா
அரும் பெறல் உயிர்கள் முற்றும் அருள் செய்து போன                                    அன்றே.
139
   
5906.
திண் திறல் மொய்ம்பன் விட்ட சிவன் படை மீடல் ஓடும்
அண்டலன் விடுத்த தொல்லைப் படையும் ஆங்கு                                அவனை நண்ணக்
கண்டனர் அமரர் ஆர்த்தார் கைதவன் இதினும் வெற்றி
கொண்டிலன் முடிவன் இன்னே குறைந்தது எம் மிடரும்                                என்றார்.
140
   
5907.
பாங்கரின் இபங்கள் காணான் பாய் பரித் தொகுதி                                   காணான்
தாங்கு எழில் தேர்கள் காணான் தானவப் படையும்                                   காணான்
ஆங்கு அவை முடியத் தானே ஆயின தன்மை கண்டான்
ஏங்கினன் அவுணன் மைந்தன் இரங்கி மற்று இனைய                                   சொல்வான்.
141
   
5908.
மூண்டு ஒரு கணத்தின் எல்லாம் முடிப்பவன் படையும்                                    நேர் போய்
மீண்டு உளது என்னின் அம்மா விடுத்திட மேல் ஒன்று                                    உண்டோ
மாண்டன அனிகம் முற்றும் வறியனாய்த் தமியன்                                    நின்றேன்
ஈண்டு இனிச் செய்வது என் என்று எண்ணி ஓர் சூழ்ச்சி                                    கொண்டான்.
142
   
5909.
மாயத்தான் எய்தும் நிற்கின் மலைவதும் செயல் அன்று                                        என்னா
மாயத்தான் அருவம் கொண்டு வல் விரைந்து எழுந்து                                        சென்று
காயத்தான் ஆகி நிற்பக் கைதவன் வெருவித் தோன்றாக்
காயத்தான் உடைந்தான் என்றே ஆர்த்தன கணங்கள்                                        எல்லாம்.
143
   
5910.
விடலை விண் எழுந்த காலை மேவலர் தொகையை                                    எல்லாம்
முடிவு செய்க என்று வஞ்ச முரண் படை அவுணன்                                    தூண்டின்
அடும் அது நமையும் என்னா அதற்கு முன் அளக்கர்                                    ஆற்றைக்
கடிதினில் கடந்தான் போலக் கதிரவன் கரந்து போனான்.
144
   
5911.
மைப் புயல் மேனித் தீயோன் மறைந்தது வள்ளல் காணா
இப் பகல் தானும் கள்வன் இறந்திலன் இரிந்து வல்லே
தப்பினன் இனி யான் செய்யத் தகுவது என் உரைத்திர்                                     என்ன
ஒப்பரும் துணைவர் கேளா ஒருங்குடன் தொழுது                                     சொல்வார்.
145
   
5912.
வந்து எதிர் அவுணர் தானை மாண்டன தமியன் நின்றான்
சிந்தினன் கரந்து போனான் இனிவரும் திறலோர் இல்லை
அந்தியும் அணுகிற்று அம்மா அனிகமும் யாமும் மீண்டு
கந்தனை இறைஞ்சிக் காலை வருவதே கடமைத்து                                 என்றார்.
146
   
5913.
இனிய தன் துணைவர் இன்னன கூற
வினவினோன் முருக வேள் அடி காணும்
நினைவு கொண்டிடலும் விண் இடை நின்ற
தினகரன் பகைஞன் இன்ன தெரிந்தான்.
147
   
5914.
முன்னை வைகலின் முரிந்தனன் என்றே
பன்னும் ஓர் வசை பரந்ததும் அன்றிப்
பின்னும் இப்பகல் பிழைத்தனன் என்றால்
என்னை யாவர்களும் எள்ளுவர் மாதோ.
148
   
5915.
தொக்க போரில் வெருவித் தொலைவோரை
தக்கது ஓர் துணைவர் தந்தையர் தாயர்
மக்கள் பெண்டிரும் மறப்பர்கள் என்னின்
மிக்கு உளார் இகழ்தல் வேண்டுவது அன்றே.
149
   
5916.
இன்று நென்னலின் இரிந்துளன் என்றால்
வென்றி மன் எனை வெகுண்டு துறக்கும்
துன்று பல் கதிரினைச் சுளி தொல் சீர்
பொன்றும் எந்தை புகழும் தொலைவாம் ஆல்.
150
   
5917.
யாது ஒர் துன்னலர் எதிர்ந்திடின் இன்று
காதலே வலி கடந்திடு சூழ்ச்சி
நீதி அன்று அதுவும் நேர்ந்திலது என்னில்
சாதலே தகுதி சாயந்திடல் நன்றோ.
151
   
5918.
வருந்தி நின்று எதிர் மலைந்தனன் இன்றும்
இரிந்து உளான் இவன் எனும் பழி கோடல்
பொருந்தல் அன்று புணர்வு என்னினும் ஆற்றி
விரைந்து மாற்றலரை வென்றிடல் வேண்டும்.
152
   
5919.
முன்னம் நின்று ஒரு முரண் படை தன்னை
இன்னல் எய்தும் வகை ஏதுவும் என்னின்
அன்னதற்கு எதிர் அடும் படை தூண்டிச்
விரைந்து மாற்றலரை வென்றிடல் வேண்டும்.
153
   
5920.
இறந்தனன் பொருது இரிந்தனன் என்னாப்
பறந்தலைச் செறுநர் பன்னுற இன்னே
மறைந்து நின்று ஒரு வயப்படை தூண்டிச்
சிறந்த வென்றி கொடு சென்றிடல் வேண்டும்.
154
   
5921.
தெய்வதப் படை செலுத்துவன் என்னின்
அவ் வனைத்தும் அமர் ஆற்றலர் தம்பால்
செவ்விது உற்று உயிர் செகுத்திடல் இன்றே
வெவ் வுருக்கள் கொடு மீளுவது அல்லால்.
155
   
5922.
பண்ணவப் படை படைத்திடும் கோலம்
எண்ணலன் தெரியின் ஏற்றன தூண்டித்
துண் எனத் தொலைவு சூழ்ந்திடும் யானும்
விண் அகத்து உறல் வெளிப்படு மாதோ.
156
   
5923.
வெளிப்படில் செறுநர் விண்ணினும் வந்தே
வளைத்து இகல் புரிவர் மாறு அமர் செய்தே
இளைத்தனன் பொரவும் இன் இனி ஒல்லாது
ஒளித்து முன் பகலின் ஓட அரிதாம் ஆல்.
157
   
5924.
ஏய் எனச் செறுநர் ஈண்டு உழி நண்ணி
ஆய தொல் உணர்வு அனைத்தையும் வீட்டி
வீயும் ஈற்றினை விளைத்திடுகின்ற
மாய மாப்படை விடுத்திடல் மாட்சி.
158
   
5925.
என்று சிந்தை தனில் இன்னன உன்னி
அன்று மாயவள் அளித்திடு கின்ற
வன் திறல் படையை வல்லை எடுத்தே
புன் தொழில் குரிசில் பூசனை செய்தான்.
159
   
5926.
நெறி கொள் முப்புலனில் நெஞ்சினில் யாரும்
அறிவரும் பரிசின் அண்டலர் தம்பால்
குறுகி மெய் உணர்வு கொண்டு உயிர் மாற்றி
எறி புனல் கடலுள் என்று விடுத்தான்.
160
   
5927.
விடுதலும் கொடிய வெம்படை தான் வந்து
அடையும் வண்ணம் அறிதற்கு அரிதாகிக்
கடிது பார் இடை கலந்து கணத்தின்
படையை எய்தியது பாவம் அது என்ன.
161
   
5928.
இருங் கணத்தரை இலக்கரை ஒள்வாள்
மருங்கு சேர்த்திய வயத்துணை வோரை
நெருங்கு தார்ப்புய நெடும் திறலோனை
ஒருங்கு சூழ்ந்து உணர்வு ஒழித்தது மன்னோ.
162
   
5929.
ஆன்ற பொன் நகரில் அண்டர்கள் அஞ்ச
ஊன்றும் வில் இடை உறங்கிய மால் போல்
தோன்றும் மாயை படை தொல் அறிவு உண்ணம்
ஆன்றி யாவரும் மறிந்து கிடந்தார்.
163
   
5930.
மறிந்துளார் தமது மன் உயிர் வவ்விச்
சிறந்த தன் வலி செயற்கு அரிதாக
அறிந்து மாயை படை ஆகுல மூழ்கி
எறிந்து நேமியிட எண்ணியது அன்றே.
164
   
5931.
ஓலம் இட்டு உலகம் உட்கிட ஊழிக்
காலின் வெவ்வுருவு கைக் கொடு மாயக்
கோல வெம்படை கொடுந்தொழில் கொண்ட
ஆல காலம் என ஆன்று உளது அன்றே.
165
   
5932.
வெள்ளம் ஆயிரம் அது என்னும் வியன் உரை படைத்த                                     பூத
மள்ளரைத் தலைவர் தம்மை வயங்கெழு துணையினோரை
நள்ளலர்க் கடந்த துப்பின் நம்பியை உம்பர் ஆற்றால்
பொள் என எடுத்து மாயப் படைக்கலம் போயிற்று                                     அம்மா.
166
   
5933.
போயது சூரன் மைந்தன் புந்தியில் கதி மேல் கொண்டு
மாயிரு நேமி ஆறும் வல்லையில் தப்பி அப்பால்
தூய தெண் புனலாய் ஆன்ற தொல் கடல் அழுவம்                                     நண்ணி
ஆயவர் தொகையை இட்டே அகன்றிடாது ஒம்பிற்று                                     அன்றே.
167
   
5934.
நின்றிடு சூரன் மைந்தன் நிலைமை மற்று இதனை                                   நோக்கிப்
பொன்றினன் வீரவாகு பூதரும் பிறரும் வீந்தார்
குன்றம் அது அன்றால் மீளக் குரை புனல் வேலை                                   ஆழ்ந்தார்
நன்று நம் சூழ்ச்சி என்னா நகை எயிறு இலங்க நக்கான்.
168
   
5935.
அண்டரும் களிப்பின் மேலோன் அவ்விடை அகன்று                                      வல்லே
விண் தொடர் நெறியில் சென்று வியன் மகேந்திரத்தின்                                      எய்தி
எண் திசை உலகம் போற்ற இறை புரி தாதை தன்னைக்
கண்டனன் இறைஞ்சி நின்று ஆங்கு இனையன கழறல்                                      உற்றான்.
169
   
5936.
இன்று யான் சென்று பல்வேறு இருஞ்சமர் இயற்றிப்                                    பின்னர்
வன் தொழில் புரிந்த வீர வாகுவை அவன் பாலோரை
அன்றியும் பூத வெள்ளம் ஆயிரம் தன்னை எல்லாம்
வென்று உயிர் குடித்து யாக்கை வியன் புனல் கடலுள்                                    உய்த்தேன்.
170
   
5937.
சிறிதுநீ கவலை கொள்ளேல் சேனையும் யானும் ஏகி
மறி கடல் எறியும் கால் போல் வளைந்து பாசறையைச்                                   சிந்தி
அறுமுகன் தனையும் வென்றே அரி அயனோடும்                                   விண்ணோர்
இறைவனைப் பற்றி நாளை ஈண்டு தந்திடுவன் என்றான்.
171
   
5938.
என்னும் வேலையில் எழுந்தன உவகையா புடைய
பொன்னின் அங்கத மூட்டற நிமிர்ந்தன புயங்கள்
மின்னு மாமணிக் கடகங்கள் நெரிந்து வீழ்கின்ற
துன்னு மா மயிர் பொடித்தன முறுவல் தோன்றியதே.
172
   
5939.
எழுந்து நின்றிடும் இரவிதன் பகைஞனை இமைப்பில்
அழுந்த மார்பு உறத் தழீஇக் கொடு மடங்கல் ஏறாற்றும்
செழும் தனிப் பெரும் தவிசு இடை ஏற்றி அச்சேயைக்
குழந்தை நாள் எனத் தன் அயல் இருத்தினன்                                   கொண்டான்.
173
   
5940.
தந்தை ஆயினோர் இனிது வீற்று இருப்பதும் தமது
மைந்தர் தம் குடி பரித்த பின் அன்றி மற்று உண்டோ
எந்தை வந்து நம் தொல் முறை போற்றலால் யானும்
சிந்தை தன்னில் ஓர் எண்ணமும் இன்றியே சிறந்தேன்.
174
   
5941.
அன்று நோற்றதும் பற்பகல் உண்டரோ அதற்காக்
கொன்றை வேணியன் கொடுத்தனன் என்பது கொள்ளாச்
சென்ற வார்த்தைகள் நிற்க இவ்வரசும் இத்திருவும்
இன்று நீ தரப் பெற்றனன் ஐய யான் என்றான்.
175
   
5942.
என்று பல பல நய மொழி கூறி முன் இட்ட
வென்றி சேர் அணி மாற்றியே புதுவதா விளித்துத்
துன்று பொன் முடி ஆதியா வார் கழல் துணையும்
நன்று தான் புனைந்து ஒரு மொழி பின்னரும் நவில்வான்.
176
   
5943.
முன்னம் நீ சொற்ற தன்மையே மூஇரு முகத்தோன்
தன்னை வென்று வெஞ் சாரதப் படையினைத் தடிந்து
பின்னர் நின்றிடும் அமரரைச் சிறை இடைப் பிணித்தே
என்னுடைப் பகை முடிக்குதி காலையே என்றான்.
177
   
5944.
என்ன அன்னது செய்குவன் அத்த என்று இசைப்ப
மன்னர் மன்னவன் சமரிடை நொந்தனை மைந்த
பொன் உலாய நின் திருமனைக்கு ஏகு எனப் புகலப்
பல் நெடும் கதிர் மாற்றலன் விடை கொண்டு படர்ந்தான்.
178
   
5945.
சூழி யானை தேர் வரு பரி அவுணர்கள் சுற்ற
நாழி ஒன்றின் முன் சென்று தன் கோ நகர் நண்ணி
வாழ்வின் வைகினன் இது நிற்க வன்புனல் கடல் உள்
ஆழும் வீரர்கள் தேறியே எழுந்தவாறு அறைவாம்.
179
   
5946.
வட பெரும் கிரி சூழ்பவன் தொல் பகை மாயப்
படை விடுத்ததும் பூதரும் துணைவர்கள் பலரும்
தொடையல் வாகுடை வீரனும் மயக்கு உறத் தூநீர்க்
கடலுள் இட்டதும் ஆங்ஙனம் சுரர் எலாம் கண்டார்.
180
   
5947.
அண்டர் அங்கு அது நோக்கியே வெய்து உயிர்த்து                                    அரந்தை
கொண்டு உளம் பதைத்து ஆவலித்து அரற்றி மெய்                                    குலைந்து
கண் துளித்திடக் கலுழ்ந்து நா உலர்ந்து கைம் மறித்து
விண்டிடும் படி முகம் புடைத்து அலமந்து வியர்த்தார்.
181
   
5948.
இன்னல் இத்திறம் ஆகியே அமரர்கள் இரிந்து
சென்னி ஆறு உடைப் பண்ணவற்கு உரைத்திடச் சென்றார்
அன்னது ஆகிய பரிசு எலாம் நாடியே அவர்க்கு
முன்னம் ஓடினன் முறை தெரி நாரத முனிவன்.
182
   
5949.
அம்பு எனும் படி கால் விசை கொண்டு போய் அறிவன்
இம்பர் ஆகிய பாசறைக் கண் உறும் எந்தை
செம் பதங்களை வணங்கி நின்று அஞ்சலி செய்தே
உம்பர் கோமகன் தன் மனம் துளங்கு உற உரைப்பான்.
183
   
5950.
சூரன் மாமகன் கரந்து மாயப்படை துரந்து
வீர வாகுவும் துணைவரும் வெங்கணத்தவரும்
ஆரும் மால் கொள வீட்டியே அன்னதால் அவரை
வாரி நீர்க் கடல் உய்த்தனன் சூழ்ச்சியின் வலியால்.
184
   
5951.
என்று நாரத முனிவரன் புகறலும் இமையோர்
சென்று சென்று வேள் பதங்களை இறைஞ்சியே திருமுன்
நின்று வீரர்கள் அழிந்திடு செயல் முறை நிகழ்த்த
வென்றி வேலினை நோக்கியே எம்பிரான் விளம்பும்.
185
   
5952.
கங்கை அன்னது ஓர் வாலிது ஆகிய புனல் கடல் போய்
அங்கண் வைகிய மாய மாப் படையினை அழித்து
வெங்கண் வீரர் மால் அகற்றியே அனையவர் விரைவில்
இங்கு வந்திடத் தந்து நீ செல்க என இசைத்தான்.
186
   
5953.
செய்ய வேலினுக்கு இன்னது ஓர் பரிசினைச் செப்பி
ஐயன் அவ்விடை விடுத்தலும் நன்று என அகன்று
வெய்ய தீங்கதிர் ஆயிர கோடியின் விரிந்து
வைய மேல் இருள் முழுது உண்டு வல் விரைந்ததுவே.
187
   
5954.
அரவு உமிழ்ந்தது கொடு விடம் உமிழ்ந்ததால் அடு கூற்று
உரு உமிழ்ந்தது செல்லினம் உமிழ்ந்தது எவ்வுலகும்
வெருவு பல்படைக் கலங்களும் உமிழ்ந்தது மிகவும்
கரு நெடும் புகை உமிழ்ந்தது அங்கு உமிழ்ந்தது கனலே.
188
   
5955.
மின்னல் பட்டன முகில் இருள் பட்டன விசும்பில்
துன்னல் பட்டன கார் இருள் பட்டன துன்னார்
இன்னல் பட்டிடு மெய் இருள் பட்டன வெரிமுன்
பன்னல் பட்டன நேமி சூழ் தனி இருள் படலம்.
189
   
5956.
எரி நடுங்கியது அனிலமும் நடுங்கியது எண்பால்
கரி நடுங்கிய அளக்கரு நடுங்கிய கனக
கிரி நடுங்கியது அரவினம் நடுங்கிய கிளர் தேர்
அரி நடுங்கியது இந்துவும் நடுங்கியது அம்மா.
190
   
5957.
அங்கி தன்படை கூற்றுவன் தன் படை அனிலன்
துங்க வெம்படை அளக்கர் கோன் தன்படை சோமன்
செங்கை வெம்படை மகபதி பெரும் படை திருமால்
பங்கயன் படை யாவையும் தொழுது உடன் படர.
191
   
5958.
அடிகள் விட்டிடும் வேற்படை எனப்படும் அலரி
கடிது சேறலும் வானவர் வதனமாம் கமலம்
நெடிது மாமகிழ்வு எய்தியே மலர்ந்தன நெறி தீர்
கொடிய தானவர் முகம் எனும் கருவிளம் குவிய.
192
   
5959.
இரிந்த தானவர் நாளையாம் இறத்தும் என்று இருக்கை
பொருந்தி மாதரை முயங்கினர் கங்குலும் புலர
விரைந்து ஞாயிறு வந்தது என்று ஏங்க மின்னாரைப்
பிரிந்த வானவர் யாவரும் சிறந்தனர் பெரிதும்.
193
   
5960.
இத் திறத்தினால் அயில் படை முப்புரத்து இறைவன்
உய்த்த தீ நகை போலவே வல் விரைந்து ஓடி
முத்திறத்து இரு நேமியும் பின் பட முந்திச்
சுத்த நீர்க்கடல் புகுந்தது விண் உளோர் துதிப்ப.
194
   
5961.
செய்ய வேற்படை ஆயிடை புகுதலும் தெரிந்து
வெய்ய மாயவள் படைக்கலம் ஆற்றவும் வெருவி
மையல் வீரரை நீங்கியே தொலைந்து போய் மறிந்து
மொய் இழந்தது தன் செயல் இழந்தது முடிந்தே.
195
   
5962.
ஆய காலையில் எந்தை தன் படைக்கு எதிர் அடைந்து
தூய தெண் கடல் இறையவன் வெருவியே தொழுது
நேய நீர்மையான் மும்முறை வணங்கி முன் நின்று
காயம் உற்றவும் வியர்ப்பு எழ ஒரு மொழி கழறும்.
196
   
5963.
அந்தம் இல் வரம் அடைந்திடு சூரன்
மைந்தன் மாயவள் வயப்படை தூண்டி
நம்தம் வீரர் கண நாதரை எல்லாம்
புந்தி மேல் மயல் புணர்த்தினன் அம்மா.
197
   
5964.
முன்னு உணர்ச்சி முடிவோர் தமை மற்று என்று
தன் இடத்தில் இடு தன்மை புரிந்தான்
அன்னது அத்துணையில் அப்பணி ஆற்றி
என் இடத்தினில் இருந்து உளது அன்றே.
198
   
5965.
இருந்த மாயை படை எம் பெருமான் நீ
மருந்து போல் இவண் வழிப் படல் காணூஉ
அரந்தை எய்தி அடல் வீரரை நீங்கி
முரிந்து வீழ்ந்து இவண் முடிந்தது மன்னோ.
199
   
5966.
தொடையல் வாகை புனை சூரருள் மைந்தன்
விட வரும் படையின் வெவ்வலி சிந்தி
அடவும் வன்மையில் அனங்க அவராலே
இடர் படும் சிறியன் என் செய்வன் அம்மா.
200
   
5967.
வெந்திறல் பகைஞர் மேல் அமர் செய்ய
வந்த வீரரும் மறிந்து உணர்வு அற்றார்
எந்த வேலை எழுவார் இவர் என்றே
புந்தி நோய் கொடு புலம்பினன் யானும்.
201
   
5968.
முறுவலால் புரம் முடித்தவன் நல்கும்
அறு முகேசன் அசுரத் தொகை எல்லாம்
இறையின் மாற்றும் அமர் எண்ணியது ஆடல்
திறம் அது என்று நனி சிந்தனை செய்தேன்.
202
   
5969.
வள்ளல் ஆயிடை வதிந்து கணத்தின்
வெள்ளமோடு விடுவீரர்கள் தம்மை
நள்ளல் ஆன் மகன் நலிந்திடல் அன்னாற்கு
உள்ளமாம் கொல் என உன்னி அயர்ந்தேன்.
203
   
5970.
ஆதி மைந்தன் அசுரத் தொகை தன்னைக்
காதின் உய்குவன் எனக் கருது உற்ற
பேதையேன் புரி பிழைப்பு இவண் உண்டோ
ஏதும் இல்லை முனியேல் எனை என்றான்.
204
   
5971.
வாழு நேமி இறை மற்று இது கூறித்
தாழும் எல்லை தளரேல் இனி என்னா
ஊழியின் முதல்வன் உய்த்திடும் ஒள்வேல்
ஆழு நீரரை அடைந்தது நண்ணி.
205
   
5972.
அடைதருகின்ற முன்னர் அவருணர் உண்ட மாயப்
படையது நீங்கிற்று ஆகப் பதை பதைத்து உயிர்த்து                                      மெல்ல
மடிதுயில் அகன்று தொல்லை வால் அறி ஒருங்கு கூடக்
கடிதினில் எழுந்தார் அங்கண் உதித்திடு கதிர்கள் என்ன.
206
   
5973.
புழை உறும் எயிற்றுப் பாந்தள் பொள் எனச் செயிர்த்துக்                                  கான்ற
அழல் படுவிடமீச் செல்ல அலமந்து வியர்த்து மாழ்கிக்
கழி துயில் அடைந்தோர் வல்லோன் காட்சியால்                                  அதுமீண்டு ஏக
எழுவது போல அன்னோர் யாவரும் எழுதல் உற்றார்.
207
   
5974.
சாரதக் கணத்து உளோரும் தலைவரும் இலக்கத்தோரும்
யாரினும் வலியர் ஆன எண் மரும் எவர்க்கும் மேலாம்
வீரனும் எழுந்து வேலை மீமிசைப் பெயர்ந்து செவ்வேள்
சீரடி மனம் கொண்டு ஏத்தித் தொழுதனர் சிறந்த                                    அன்பால்.
208
   
5975.
வீடின அவுணன் மாயை விளிந்தன பவத்தின் ஈட்டம்
பாடின சுருதி முற்றும் படிமகள் உவகை பூத்தாள்
ஆடியது அறத்தின் தெய்வம் ஆர்த்தன புவனம் யாவும்
நாடிய முனிவர் தேவர் நறைமலர் மாரி தூர்த்தார்.
209
   
5976.
அன்னது ஓர் அமைதி தன்னில் ஆறுமா முகத்து வள்ளல்
மின்னிவர் குடுமிச் செவ்வேல் விண் இடை வருதல்                                     காணூஉப்
பன்னரும் உவகை பொங்கப் பன்முறை பணிந்து போற்றிச்
சென்னியில் தொழுத கையார் எதிர் கொடு சென்று                                     சூழ்ந்தார்.
210
   
5977.
சூழ்ந்திடுகின்ற காலைச் சூர்மகன் மாயை தன்னால்
தாழ்ந்து உணர்வு அழிந்த ஆறும் தடம் புனல் புணரி                                    உய்ப்ப
வீழ்ந்ததும் ஐயன் வேலால் மீண்டதும் பிறவும் எல்லாம்
ஆழ்ந்த தொல் அறிவால் தேறி அறிஞர்க்கும் அறிஞன்                                    சொல்வான்.
211
   
5978.
அந்தம் இல் ஒளியின் சீரால் அறுமுகம் படைத்த பண்பால்
எந்தை கண் நின்றும் வந்த இயற்கையால் சத்தியாம் பேர்
தந்திடும் பனுவல் பெற்ற தன்மையால் தனிவேல் பெம்மான்
கந்தனே என்ன நின்னைக் கண்டுளக் கவலை நீத்தேம்.
212
   
5979.
நண்ணலன் பிணித்த மாயம் நலிந்திட யாங்கள் எல்லாம்
துண் என அறிவு இன்று ஆகித் தொல் புனல் கடல் உள்                                       பட்டேம்
எண்ண அரும் படைகட்கு எல்லாம் இறைவ நீ போந்த                                       வாற்றால்
உள் நிகழ் உணர்ச்சி தோன்ற உய்ந்தனம் உயிரும்                                       பெற்றேம்.
213
   
5980.
குன்று இடை எம்மை வீட்டிக் கொடியவன் புணர்ப்புச்                                    செய்த
அன்றும் வந்து உணர்வு நல்கி அளித்தனை அதுவும்                                    அல்லால்
இன்றும் வந்து எம்மை ஆண்டாய் ஆதலின் யாங்கள்                                    உய்ந்தேம்
உன் தனக்கு உதவும் கைம்மாறு உண்டு கொல் உலகத்து                                    என்றான்.
214
   
5981.
தூயவன் இனைய மாற்றம் சொற்றலும் அயில் வேல் கேளா
நீயிர்கள் விளிந்த தன்மை நேடியே நிமலன் என்னை
ஏயினன் அதனால் வந்தேன் யான் வரும் தன்மை நாடி
மாயம் அது இறந்தது அங்கண் வருதிர் என்று உரைத்தது                                       அன்றே.
215
   
5982.
நன்று எனத் தொழுது வீரன் நகை ஒளி முகத்தன் ஆகிப்
பின் தொடர் துனையினோரும் பெருங் கணத்தவரும் சூழச்
சென்றனன் அனைய காலைச் சிறந்த வேல் படை முன் ஏகி
வென்றி கொள் குமரன் செங்கை மீமிசை அமர்ந்தது                                   அன்றே.
216