இரணியன் யுத்தப் படலம்
 
6056.

ஒற்றரை நோக்கியே உணர்வின் மன்னவன்
சொற்றது கேட்டலும் துளங்கி ஏங்கினான்
மற்று அவன் அளித்திடும் மதலை மாரி நாள்
புற்று உறை அரவு எனப் புழுங்கும் நெஞ்சினான்.

1
   
6057.
ஆயிரம் மறை உணர்ந்து ஆன்ற கேள்வியான்
தூய நல் அறத்தொடு முறையும் தூக்கினோன்
மாயமும் வஞ்சமும் மரபில் கற்றனன்
தீயது ஓர் அவுணருள் திறலும் பெற்று உளான்.
2
   
6058.
தரணியின் கீழ் உறை அரக்கர் தங்கள் மேல்
விரணம் அது ஆகி முன் வென்று மீண்டனன்
முரண் உறு சென்னி ஓர் மூன்று கொண்டு உளான்
இரணியன் என்பது ஓர் இயற்கைப் பேரினான்.
3
   
6059.
இருந்தனன் ஒரு புடை எழுந்து தாதை தன்
திருந்து அடி இணையினைச் சென்னி சேர்த்திடாப்
பொருந்துவது ஒன்று உள புகல்வன் கேள் எனாப்
பரிந்து நின்று இனையன பகர்தல் மேயினான்.
4
   
6060.
தேவரை நாம் சிறை செய்த தன்மையால்
ஆவது பாவமே ஆக்கம் வேறில்லை
யாவையும் உணர்ந்திடும் இறைவ திண்ணமே
போவது நம் உயிர் திருவும் பொன்றும் ஆல்.
5
   
6061.
சூர் உடைக் கானகம் தோற்றும் புன்மை போய்ப்
பார் இடைப் புவனம் ஓர் பலவும் போற்றியே
சீர் உடைத்து ஆகி இத்திருவின் வைகுதல்
ஆர் இடைப் பெற்றனை அதனைத் தேர்தி நீ.
6
   
6062.
மாலை முன் வென்றதும் மலர் அயன் தனை
ஏல் உறு முனிவரை ஏவல் கொண்டதும்
மேல் உயர் அமரரை விழுமம் செய்ததும்
ஆல் அமர் கடவுள் தன் ஆற்றலால் அன்றோ.
7
   
6063.
அரி பொர வருவனேல் அமரர் கோனொடும்
பிரமன் வந்து ஏற்கு மேல் பிறர்கள் நேர்வரேல்
பொருவதும் வெல்வதும் புறத்தைக் கண்டு பின்
வருவதும் எளிதரோ கடனும் மற்று அதே.
8
   
6064.
நோற்றிடு தவத்தினை நோக்கி எண் இலாப்
பேற்றினை உதவிய பிரான் ஒர் தீமையான்
மாற்றிட உன்னுமேல் வணங்கி மாறு ஒரீஇப்
போற்றுதல் அன்றியே பொரவும் செய்யுமோ.
9
   
6065.
ஒன்று ஒரு பயன் தனை உதவினோர் மனம்
கன்றிட ஒருவினைக் கருதிச் செய்வரேல்
புன் தொழில் அவர்க்கு முன் புரிந்த நன்றியே
கொன்றிடும் அல்லது கூற்றும் வேண்டுமோ.
10
   
6066.
கந்தனை அருள் புரி கடவுள் ஆணையைச்
சிந்தையின் மாறு கொள் சிறியர் யாவரும்
அந்தம் அடைந்தனர் அன்றி வன்மையால்
உய்ந்தனர் இவர் என உரைக்க வல்லமோ.
11
   
6067.
கட்டு செஞ் சடைமுடிக் கடவுள் காமனைப்
பட்டிட விழித்ததும் பண்டு மூஎயில்
சுட்டதும் அந்தகன் சுழலச் சூலமேல்
இட்டதும் கேட்டிலை போலும் எந்தை நீ.
12
   
6068.
காலனை உதைத்ததும் கங்கை என்பவன்
மேல் வரும் அகந்தையை வீட்டிக் கொண்டதும்
மால் அயன் அமரர்கள் இரிய வந்தது ஓர்
ஆலம் அது உண்டதும் அறிகிலாய் கொலோ.
13
   
6069.
அண்டரை ஓர் அரி அலைப்ப அன்னது
கண்ட நஞ்சு உடையவன் கருதி வீரனால்
தண்டம் அது இழைத்தும் தக்கன் வேள்வியை
விண்டிடு வித்ததும் வினவிலாய் கொலோ.
14
   
6070.
கடி மலர் மேலவன் இகழக் கண் நுதல்
விடுகனை ஏவி அவன் வள்ளுகிரின் அன்னவன்
முடி களைவித்து முகுந்தன் தன் இடை
அடை தரு வித்ததும் அறிகிலாய் கொலோ.
15
   
6071.
முந்து ஒரு மகபதி மொய்ம்பை அட்டதும்
ஐந்தியல் அரக்கரை அழித்த செய்கையும்
தந்தியை உழுவையை உரித்த தன்மையும்
எந்தை நிற் குணத்தினர் இல்லை போலும் ஆல்.
16
   
6072.
ஏமுற உலகு அடும் ஏனக் கொம்பினை
ஆமையின் ஓட்டினை அணிந்த தன்மையும்
பூ மலர் மிசை அவன் முதல புங்கவர்
மாமுடி அணிந்ததும் மதிக்கிலாய் கொலோ.
17
   
6073.
கதித்திடு முனவரர் கடிய வேள்வியில்
உதித்திடு முயலகன் ஓல் என்று ஆர்த்து எழப்
பதத்தினில் உதைத்தவன் பதை பதைத்திட
மிதித்தும் பிறவும் நீ வினவிற்று இல்லையோ.
18
   
6074.
ஒன்னலர் தன்மை பூண்டு உற்று உளோர் தமைத்
தன்னிகர் இல்லவன் தண்டம் செய்தன
இன்னம் ஓர் கோடி உண்டு இருந்து யான் இவண்
பன்னினும் உலப்பு உறா செல்லும் பல் உகம்.
19
   
6075.
ஆதலால் ஈசன் தன்னை அடைந்தவர் உய்வர் அல்லாப்
பேதையர் யாவரேனும் பிழைக்கலர் இனைய வாய்மை
வேதநூல் பிறவும் கூறும் விழுப் பொருள் ஆகும் நீயும்
ஏதமா நெறியின் நீங்கி இப்பொருள் உணர்தி எந்தாய்.
20
   
6076.
இன்னம் ஒன்று உரைப்பன் நீ முன் இருந்தவம் இயற்ற                                          இந்த
மன்னிலை புரிந்த மேலோன் மாற்றவும் வல்லனாம் ஆல்
அன்னவன் குமரன் தன்னோடு அமர் செய்வது இயல்போ                                          ஐய
தன்னினும் உயர்ந்தாரோடு பொருதிடல் சயம் உண்டாமோ.
21
   
6077.
பூதல வரைப்பும் வானும் திசைகளும் புணரி வைப்பும்
மேதகு வரையும் தொல் நாள் வேறுபாடு உற்ற நோக்கி
ஈது என மாயம் கொல் என்று எண்ணினம் அனைய                                     எல்லாம்
ஆதி தன் குமரன் செய்த ஆடல் என்று உரைத்தார்                                     அன்றே.
22
   
6078.
அண்ணலங் குமரன் ஆடல் அறிகிலர் மருளும் காலைக்
கண் இடை அன்னான் மற்று ஓர் வடிவினைக் காட்டி                                       நிற்ப
விண்ணவர் பலரும் சூழ்ந்து வெகுண்டனர் வெம்போர்                                       ஆற்றத்
துண் என அவரை அட்டு ஆங்கு எழுப்பினன் தூயோன்                                       என்பர்.
23
   
6079.
எண் தொகை பெற்ற அண்டம் யாவையும் புவன வைப்பும்
மண்டு பல்வளனும் ஏனை மன் உயிர்த் தொகுதி முற்றும்
அண்டரும் மூவர் தாமும் அனைத்தும் ஆகிய தன் மேனி
கண்டிட இமையோர்க்கு எல்லாம் காட்டினன் கந்தன்                                       என்பர்.
24
   
6080.
மறை முதலவனை முன்னோர் வைகலின் வல்லி பூட்டிச்
சிறை இடை வைத்துத் தானே திண் புவி அளித்து                                   முக்கண்
இறையவன் வேண்ட விட்டான் என்பர் ஆல் இனைய                                   வாற்றால்
அறுமுகன் செய்கை கேட்கின் அற்புதம் ஆகும் மன்னோ.
25
   
6081.
அங்கண் மா ஞாலம் தன்னை மேல் இனி அகழு                               மோட்டுச்
செங்கண் மால் ஏன யாக்கை எயிற்றை ஓர் சிறுகை பற்றி
மங்குல் வான் உலகில் சுற்றி மருப்பு ஒன்று வழுத்த                               வாங்கித்
தங்கள் நாயகற்குச் சாத்தச் சண்முகன் அளிக்கும் என்பர்.
26
   
6082.
நேர் அலர் புரம் மூன்று அட்ட நிருமலக் கடவுள்                                    மைந்தன்
ஆரினும் வலியோன் என்கை அடைந்திட வேண்டும்                                    கொல்லோ
பாரினை அளந்தோன் உய்த்த பரிதியை அணியாக்                                    கொண்ட
தாரகன் தன்னை வெற்பைத் தடிந்தது சான்றே அன்றோ.
27
   
6083.
அறுமுகத்து ஒருவன் ஆகும் அமலனை அரன் பால் வந்த
சிறுவன் என்று இகழல் மன்னா செய்கையால் பெரியன்                                      கண்டாய்
இறுதி சேர் கற்பம் ஒன்றின் ஈறு இலாதவன் பால்                                      தோன்றும்
முறுவலின் அழலு மன்னோ உலகு எலாம் முடிப்பது                                      அம்மா.
28
   
6084.
வாசவன் குறையும் அந்தண் மலர் அயன் குறையும்                                   மற்றைக்
கேசவன் குறையும் நீக்கிக் கேடு இலா வெறுக்கை நல்க
வாசில் ஓர் குழவி போலாய் அறுமுகம் கொண்டான்                                   எண்தோள்
ஈசனே என்பது அல்லால் பிறிது ஒன்றை இசைக்கல்                                   ஆமோ.
29
   
6085.
கங்கை தன் புதல்வன் என்றும் கார்த்திகை மைந்தன்                                    என்றும்
செங்கண் மால் மருகன் என்றும் சேனையின் செல்வன்                                    என்றும்
பங்கயன் முதலோர் தேறாப் பரஞ்சுடர் முதல்வன் தன்னை
இங்கு இவை பலவும் சொல்வது ஏழைமை பாலது                                    அன்றோ.
30
   
6086.
பன்னிரு தடந்தோள் வள்ளல் பரிதியம் பகைவன் சூழ்வால்
தன் உறு படைஞர் மாய்ந்த தன்மையை வினவித் தாழா
தன்னவர் மீளும் ஆற்றால் அளக்கர் மேல் விடுத்த                                     வேலை
இந்நகர் தன்னில் தூண்டின் யார் இவண் இருத்தல் பாலார்.
31
   
6087.
தாரகற் செற்றது என்றால் தடவரை பொடித்தது என்றால்
வார் புனல் கடலுள் உய்த்த வலியரை மீட்டது என்றால்
கூர் உடைத் தனிவேல் போற்றிக் குமரன் தாள் பணிவது                                        அல்லால்
போரினைப் புரிதும் என்கை புலமையோர் கடன் அது                                        ஆமோ.
32
   
6088.
அரன் இடைப் பிறந்த அண்ணல் ஆணையால் வந்த                                        தூதன்
திருநகர் அழித்தான் முன்னம் சேனையும் தானும் ஏகி
ஒரு பகல் பானுகோபன் உலைவு அறப் பொருது வென்று
கருதரும் அவுணர் தானைக் கடலையும் கடந்து போனான்.
33
   
6089.
இப்பகல் வந்து வீரன் இருஞ்சமர் இயற்ற எம்முன்
தப்பினன் மறைந்து மாயைப் படை தொடா உணர்ச்சி                                     தள்ளி
அப்புனல் அளக்கர் உய்ப்ப அறுமுகன் வேலான் மீண்டு                                     உன்
மெய்ப்பதி அடுவான் என்றால் அவனை யார் வெல்லல்                                     பாலார்.
34
   
6090.
இறுதியும் எய்தான் என்னின் ஏற்ற தொல் உணர்ச்சி                                 மாய்ந்து
மறியினும் எழுவன் என்னின் மாயையும் தொலையும்                                 என்னின்
செறியும் விண் முதல்வர் தந்த படைக்கு நேர் செலுத்தும்                                 என்னின்
அறிஞர்கள் அவன் மேல் பின்னும் அமர் செயக்                                 கருதுவாரோ.
35
   
6091.
தூது என முன்னர் வந்தோன் ஒருவனால் தொலையும்                                  இந்த
மூது எயில் நகர முற்றும் அவுணரும் முடிவர் என்னின்
ஆதியும் முடிவும் இல்லா அறுமுகன் அடுபோர் உன்னிப்
போது மேல் இமைப்பின் எல்லாப் புவனமும்                                  பொன்றிடாவோ.
36
   
6092.
கரங்கள் பன்னிரண்டு கொண்ட கடவுள் வந்து எதிர்க்கின்                                         நம்தம்
வரங்களும் படைகள் யாவும் மாயையும் திறலும் சீரும்
உரங்களும் திருவும் எல்லாம் ஊழி நாயகன் முன் உற்ற
புரங்களும் அவுணரும் போல் பூழி பட்டு அழிந்திடாவோ.
37
   
6093.
ஒற்றனை விடுத்து நாடி உம்பரை விடாமை நோக்கி
மற்று இவண் போந்து நம் மேல் வைகலும் வந்திடாது
சுற்று தன் தானையோடும் தூதனைத் தூண்டி அங்கண்
இற்றையின் அளவும் நம் பால் கருணை செய்து இருந்தான்                                          ஐயன்.
38
   
6094.
கருணை கொண்டு இருந்த வள்ளல் கருத்து இடைத்                           தொலைவு இல் சீற்றம்
வருவதன் முன்னம் இன்னே வானவர் சிறையை மாற்றி
உரிய நம் தமரும் யாமும் ஒல்லையின் ஏகி ஐயன்
திருவடி பணிந்து தீயேம் செய்தன பொறுத்தி என்று.
39
   
6095.
பணிந்து உழி அமல மூர்த்தி பலவும் நாம் புரிந்த தீமை
தணிந்து அருள் செய்து தானும் தணப்பு இலா வரங்கள்                                   நல்கி
அணிந்த தன் தானை யோடும் அகலுமால் உய்தும் யாமும்
துணிந்து இது புகன்றேன் ஈதே துணிவு என மதலை                                   சொற்றான்.
40
   
6096.
பரிந்து தனக்கு உறுதி இவை தெருட்டுதலும் அது கேளாப்                      பகுவாய் கால
விரிந்த புகைப் படலிகை போய்த் திசை அனைத்தும்                      விழுங்கி இட வெகுளி மூளக்
கரிந்த தனது உடல் வியர்ப்ப உயிர்ப்பு வர இதழ் துடிப்பக்                      கண்கள் சேப்ப
எரிந்து மனம் பதை பதைப்ப உரும் எனக் கை எறிந்து                      நகைத்து இனைய சொல்வான்.
41
   
6097.
தூ உடைய நெடும் சுடர் வேல் ஒரு சிறுவன் ஆற்றலையும்                  தூதாய் வந்த
மேவலன் தன் வலியினையும் யான் செய்யப் படுவனவும்                  விளம்பா நின்றாய்
ஏவர் உனக்கு இது புகன்றார் புகன்றாரை உணர்வேனேல்                  இன்னே அன்னோர்
ஆவி தனைக் களைந்திடுவேன் ஆங்கு அவர் தொல்                  குலங்கள் எலாம் அடுவன் யானே.
42
   
6098.
ஞாலம் எலாம் முன் படைத்த நான்முகன் ஐந்து இயல்                      அங்கம் நவின்று போவான்
ஆலமிசைத் துயில் கூர்வான் என் இளவல் தனக்கு                      உடைந்தான் அமரர் கோமான்
வேலை தனின் மீன் முழுதும் என் பணியில் தந்தனனால்                      வெள்ளி வெற்பின்
நீல மிடற்று அவன் மகனோ தொலைவு அறும் என் பேர்                      ஆற்றல் நீக்கு கின்றான்.
43
   
6099.
அரி அயனும் புரந்தரனும் விண்ணவர்கள் எல்லோரும்                       அகிலம் தன்னின்
விரவு கணத்தவர் எவரும் யார்க்கும் முதல் ஆகும்                       முக்கண் விமலன் தானும்
பொரு சமரின் ஏற்றிடினும் எனக்கு அழிவது அன்றி                       வென்று போவது உண்டோ
ஒரு சிறிதும் புந்தி இலா மைந்தா யான் பெற்ற வரம்                       உணர்கிலாயோ.
44
   
6100.
ஆற்றல் விட்டனை குலமுறை பிழைத்தனை அரசின்
ஏற்றம் நீங்கினை ஒன்னலர்க்கு அஞ்சினை இசைத்தாய்
மாற்றம் ஒன்று இனி உரைத்தியேல் உன் தனை வல்லே
கூற்றுவன் புரத்து ஏற்றுவன் யான் எனக் கொதித்தான்.
45
   
6101.
கொதித்த வேலையின் மைந்தனும் நம் உரை கொடியோன்
மதித்திலன் இவன் மாய்வது சரதமே வான் மேல்
உதித்த செங்கதிர்ப் பரிதி அம் கடவுள் சூழ் உலகில்
விதித்து இறந்தனை யாவரே வன்மையால் வென்றோர்.
46
   
6102.
இறுதி ஆகிய பருவம் வந்து அணுகியது இவனுக்கு
உறுதி ஆம் பல கூறின் என் பயன் என உன்னா
அறிவன் நீ சில அறிந்தனன் போல நிற்கு அறைந்தேன்
சிறுவன் ஆதலில் பொறுத்தி என்று ஆற்றினன் சீற்றம்.
47
   
6103.
வெஞ்சினம் தனை ஆற்றி இத்தாதை தான் விரைவில்
துஞ்சும் முன்னர் யான் இறப்பது நன்று எனத் துணியா
எஞ்சல் இல்லவன் தாளிணை வணங்கி நீ இசைத்த
வஞ்சினம் தனை முடிப்பன் யான் என்றனன் மைந்தன்.
48
   
6104.
அனைய வேலையில் ஐய நீ மாற்றலர்க்கு அஞ்சி
வினையம் யாவும் முன் உரைத்தனை அவர்கள்பால் வீரம்
புனைய உன்னியது என் கொலோ என்றலும் பொன்னோன்
உனது மைந்தன் யான் அஞ்சுவனே என உரைத்தான்.
49
   
6105.
தாதை அன்னது ஓர் வேலையின் மைந்தனைத் தழீஇக்                                       கொண்டு
ஈது நன்று நன்று உன் பெரும் தானையோடு எழுந்து
போதி என்றலும் விடை கொடு புரம் தனில் போந்து
மாதிரம் புகழ்கின்ற தன் உறையுளில் வந்தான்.
50
   
6106.
நிறம் கொள் மேருவை நிலாக் கதிர் உண்ட நீர்மையைப்                                     போல்
மறம் கொள் சூர் மகன் ஆடக மெய்யில் வச்சிரத்தின்
திறம் கொள் சாலிகை கட்டினன் தூணி பின் செறித்தான்
பிறங்கு கோதையும் புட்டிலும் கைவிரல் பெய்தான்.
51
   
6107.
அடங்கலர்க்கு வெங்கூற்று எனும் ஆடல் வில் ஒன்றை
இடங்கை பற்றினன் வலங்கையில் பல படை எடுத்தான்
தடங்கொள் மோலியில் தும்பையஞ் சிகழிகை தரித்தான்
மடங்கல் ஆயிரம் பூண்டதேர் புக்கனன் வந்தான்.
52
   
6108.
ஆற்றல் மிக்கு உறு துணைவர் ஆயிரவரும் அனிகம்
போற்று மன்னர் ஆயிரவரும் போர் அணி புனைந்து
காற்று எனப் படர் கவன மான் தேர் இடைக் கலந்து
நாற்றிறல் படை தன்னொடு புடை தனில் நடப்ப.
53
   
6109.
நூறு ஒடே எழு நூறு வெள்ளம் நொறில் உடைத்தேர்
சீறும் யானையும் அத்தொகை அவுணர் தம் சேனை
ஆறு நூற்று இரு வெள்ளத்த பரிகளும் அனைத்தே
சூறை மாருதமாம் என அவன் புடை சூழ்ந்த.
54
   
6110.
துடி கறங்கின கறங்கின பேரி துந்துபிப் பேர்
இடி கறங்கின வலம்புரி கறங்கின எடுக்கும்
கொடி கறங்கின தானைகள் கறங்கின குனித்துக்
கடி கறங்கின கறங்கின கழுகொடு காகம்.
55
   
6111.
வசலை மென்கொடி வாடியது அன்ன நுண் மருங்கில்
கிசலை அம்புரை சீறடிக் கிஞ்சுச் செவ்வாய்ப்
பசலை சேர் முலை மங்கையர் விழிக்கணை பாய
வசலை மங்கைதன் மெய்த்தனு வளைந்திட அகன்றான்.
56
   
6112.
அறம் தலைப்படும் இரணியன் அனிக நால் வகையும்
புறம் தலைப் படத் துயரமும் தலைப்படப் போந்து
மறம் தலைப்படு பூதர்கள் ஆர்ப்பு ஒலி வழங்கும்
பறம் தலைக் களம் புக்கனன் அமரர் மெய் பனிப்ப.
57
   
6113.
விண் உளோர்களும் பிறரும் அவ்வியன் நகர் நோக்கித்
துண் எனத் துளங்கு உறுவதும் கண்டனன் தொல் நாள்
மண்ணின் உள்ள பார் இடம் எலாம் வல்லை வந்து                                        அழித்து
நண்ணுகின்றதும் கண்டனன் நன்று என நக்கான்.
58
   
6114.
தனது மாநகர் அழிந்தது கண்டனன் தணியா
முனிவு கொண்டனன் வெய்து உயிர்த்தனன் உடல் முற்றும்
நனி வியர்ப்பு உளது ஆயினன் மருங்கு உற நணுகும்
அனிக வேந்தரைத் துணைவரை நோக்கி ஈது அறைவான்.
59
   
6115.
ஆயிரம் வெள்ளம் ஓர் ஒரு திசையினில் ஆக்கி
நீயிர் யாவரும் நால் வகைத்து ஆகியே நீங்கி
மா இருந் திறல் சாரதன் வீரரை வளைந்து
போய் எதிர்ந்து வெஞ்சமர் புரிவீர் எனப் புகன்றான்.
60
   
6116.
அக் கணம் தனில் துணைவரும் அனிக மன்னவரும்
தக்கதே என இரணியன் மொழிதலைத் தாங்கித்
திக்கில் ஆயிரம் வெள்ளமாச் சேனையைக் கொண்டு
தொக்க பாரிட வெள்ளம் மேல் போயினார் சூழ.
61
   
6117.
தானை மன்னரும் துணைவரும் திசை தோறும் தழுவிப்
போன காலையில் ஆடகன் குடபுலம் புகுதும்
சேனை முன் கொடு சென்றனன் இன்னது ஓர் செய்கை
மான வேல் படைக் காவலன் கண்டனன் மன்னோ.
62
   
6118.
வீர மொய்ம்பினன் அது கண்டு வெஞ்சமர்க் குறுவான்
சூரன் மைந்தருள் ஒருவனோ சுற்றம் ஆயினனோ
ஆர் இவன் கொல் என்று ஐயுறு காலையின் அயலே
நாரதன் எனும் முனிவரன் வந்து இவை நவில்வான்.
63
   
6119.
இரணியன் எனும் மைந்தனைச் சூரன் இங்கு ஏவ
அருணன் என்ன வந்து அடைந்தனன் அம்படை அலைப்ப
வருணன் இந்திரன் மந்திரி மறலி மாதிரத்தின்
முரண் உறும் படை நான்கையும் முன் உறச் செலுத்தி.
64
   
6120.
மாயை வல்லவன் படை பல பரித்தவன் வஞ்ச
மாய சூழ்ச்சிகள் பற்பல தெரிந்தவன் அவனை
நீ அலாது வெல்கின்றவர் இல்லையால் நினக்கு இங்கு
ஏய தன்மையின் அமர் தனைப் புரிதியால் என்றான்.
65
   
6121.
என்று கூறியே நாரதன் விண் மிசை ஏக
நன்று நன்று என அன்னதை வினவியே நகைத்துத்
துன்று பார் இடத் தலைவரைச் சுற்றமாய் உளரை
வென்றி மொய்ம்பு உடை ஆண்தகை நோக்கியே                                 விளம்பும்.
66
   
6122.
ஏற்ற தானையை நமை எலாம் சூழ்ந்திட ஏவி
மாற்றலன் மகன் குறுகுவான் நீவிரும் வல்லே
நால் திசைக் கணும் சாரதப் படையொடு நடந்து
வீற்று வீற்று நின்று அமர் புரிவீர் என விளம்பி.
67
   
6123.
வீரர் எண்மரை இலக்கரை வியன் கணத்தவரைப்
பார் இடங்களை நால்வகைப் படும் வகை பகுத்தே
ஈர் இரண்டு மாதிரத்தினும் சென்றிட ஏவிச்
சூரன் மாமகன் வருதிசைப் படர்ந்தனன் தோன்றல்.
68
   
6124.
காலை ஆங்கு அதின் அவுண மாப் பெரும் படை கடிதின்
நாலு மாதிரம் தன்னினும் நரலை சூழ்ந்து என்ன
ஓலமோடு வந்து அணுகலும் உருத்து வெம் பூத
சாலம் யாவையும் ஏற்றன சமரினைப் புரிய.
69
   
6125.
மற்ற வேலையில் அவுணர்கள் முழுப்படை நாஞ்சில்
கற்றை அஞ்சுடர்ப் பரிதி வார் சிலை உமிழ் கணைகள்
கொற்றம் மிக்கு உறு தோமரம் தண்டு எழுக் குலிசம்
ஒற்றை முத்தலை வேல் முதல் படை எலாம் உய்த்தார்.
70
   
6126.
தோடு சிந்திய தேன் அறா மரா மரத் தொகையின்
காடு சிந்தினர் கதைகளும் சிந்தினர் கணிச்சி
நீடு சிந்துரப் பருவரை சிந்தினர் நேமி
மாடு சிந்தினர் சிந்தினர் பூதரில் வலியோர்.
71
   
6127.
தலை இழந்தனர் கரங்களும் இழந்தனர் தாளின்
நிலை இழந்தனர் சாரதர் அவுணரும் நெடுங்கை
மலை இழந்தனர் தேர் பரி இழந்தனர் மற வெம்
கொலை இழந்தனர் மடிந்தனர் குருதியுள் குளித்தார்.
72
   
6128.
வசையில் பூதரும் அவுணரும் இவ்வகை மயங்கித்
திசை தொறும் பொருகின்று உழித் தனித் தனி சேர்ந்து
விசைய மொய்ம்பினான் விடுத்திடும் வீரரும் விறல் சேர்
அசுர வேந்தரும் வெஞ்சமர் விளைத்தனர் அன்றே.
73
   
6129.
அனைய எல்லையின் வீரவாகுப் பெயர் அறிஞன்
கனகன் முன்வரும் சேனை மாப் பெரும் கடல் கண்டு
முனிவு கொண்டு தன் பாணியின் மூரி வெஞ் சிலையைக்
குனிவு செய்தனன் அறத்தனிக் கடவுளும் குனிப்ப.
74
   
6130.
மலை வளைத்திடும் தன்மை போல் வானுற நிமிர்ந்த
சிலை வளைத்தனன் நாண் ஒலி எடுத்தனன் தெழித்தான்
அலை வளைத்திடும் கடல் எலாம் நடுங்கிய அனந்தன்
தலை வளைத்தனன் எண் திசை நாகமும் சலித்த.
75
   
6131.
காலை அங்கதின் வீர மொய்ம்பு உடையது ஓர் காளை
கோல் ஒர் ஆயிரப் பத்தினைக் குனிசிலைக் கொளுவி
மேலது ஆகிய கான் இடைப் பொழி தரும் மேக
சாலமாம் எனப் பொழிந்தனன் அவுணர் தானையின் மேல்.
76
   
6132.
பிடி குறைந்தன களிற்றினம் குறைந்தன பிடிக்கும்
கொடி குறைந்தன கொய் உளைப் புரவி தேர் குறைந்த
அடி குறைந்தன தலைகளும் குறைந்தன அம்பொன்
தொடி குறைந்தன குறைந்தன அவுணர் தம் தோள்கள்.
77
   
6133.
எறிதல் உற்றிடும் சூறையால் பல் கவடு இற்று
முறிதல் உற்று வீழ் பொதும்பர் போல் மொய்ம்பன்                                 வாளியினால்
செறிதல் உற்ற தம் வடிவு எலாம் சிதைந்து வேறு ஆகி
மறிதல் உற்றன நால்வகைப் படைகளும் மயங்கி.
78
   
6134.
ஆரியன் விட்ட அயில் கணை பாய
மூரி மதக் கரி முற்று உயர் யாக்கை
சோரி உகுப்பன தொல் பகலின் கண்
மாருதம் உய்த்திடு வன்னியை ஒப்ப.
79
   
6135.
விறல் கெழு மொய்ம்பன் விடுத்திடுகின்ற
பிறை முகவாளி பெருங்கரியின் கை
அறை புரிகின்ற அராத் தொகை தன்னைக்
குறை மதி சென்று குறைப்பன போலாம்.
80
   
6136.
வித்தக வீரன் விடுங்கணை வேழ
மத்தகம் உற்றிட மற்று அவை போழ்ந்தே
முத்தம் உகுப்ப முகந்திடும் கும்பம்
உய்த்திடும் நல் அமுதச் சுதை ஒக்கும்.
81
   
6137.
கரம் படரும் கவிகைத் தொகை தேரின்
உரம் படு கால்கள் உலம் புரை தோளான்
சரம் பட விற்ற தலைத்தலை உற்ற
வரம்பின் மதிக் குறை மல்கிய என்ன.
82
   
6138.
மேக்கு உயர் மொய்ம்பன் விடும் கணையால் பாய்
மாக்கள் துணிந்து மறிந்து கிடந்த
தேக்கிய தெண் கடலில் திரை முற்றும்
தாக்கிய சூறை தனக்கு அழிந்து என்ன?.
83
   
6139.
பெருந்தகை விட்ட பிறைத் தலை வாளி
திருந்தலர் தோல் உறு செங்கை துணிப்ப
வருந்திட மா மதி வௌவும் அராவைத்
துரந்திடுகின்ற தன் சுற்றம் அது என்ன.
84
   
6140.
தக்க வன்மையால் சிறந்து உளோர் தமது மாற்றலர் மேல்
மிக்க வெஞ்சினத்து ஏகல் போல் அனிக வெள்ளத்தில்
தொக்கு வந்து வந்து இழிந்த செஞ் சோரியின் வெள்ளம்
மைக் கருங்கடல் வெள்ளத்தின் ஊடு போய் மடுத்த.
85
   
6141.
குரைத்திடும் பெரு ஞாளியும் குறு நரிக் குழாமும்
நிருத்த மேயின கவந்தமும் நிணன் உண்டு செருக்கி
உருத் தகும் திறல் காளியும் கூளியும் ஒருசார்க்
கிருத்திமங்களும் தலைத்தலை மயங்கின கெழுமி.
86
   
6142.
சிலையின் வல்லவன் இவ்வகை கணை மழை சிதறி
நிலைய எல்லையின் மலைந்திடும் தானவர் நீத்தம்
உலைபடும் கனல் முன் உறும் இழுது என உடைத்து
குலை குலைந்துதம் உயிருடன் யாக்கையும் குறைந்த.
87
   
6143.
ஆளி ஆயிரம் பூண்டதேர் மிசை வரும் அவுணர்
மீளி ஆயது கண்டனன் எடுத்தது ஓர் வில்லின்
வாளி ஆயிரம் ஒரு தொடை தூண்டியே மற வெங்
கூளி ஆயிரம் கோடி ஓர் இமைப்பினில் கொன்றான்.
88
   
6144.
கொன்ற காலையில் பூதவெம் படைகளும் குலைந்து
சென்ற மாதிரம் தெரிந்திலது அழல் விடம் தெறக் கண்டு
அன்று போகிய தேவரே ஆயினர் அதனை
நின்ற தானை அம் தலைவரில் கண்டனன் நீலன்.
89
   
6145.
கண்ட நீலனும் இறுதி நாள் அழல் எனக் கனன்று
திண் திறல் கெழு மன்னவன் மதலை முன் சென்றே
அண்டமும் தலை பனித்திட உரும் என ஆர்த்தான்
உண்டு போர் இனி என்றனர் அமரராய் உள்ளோர்.
90
   
6146.
காலை அன்னதில் அவுணர் தம் இறை மகன் கனன்று
வேல் அது ஒன்றினை ஆக மூழ்கு உற்றிட விடுப்ப
நீலன் வன்மை போய் நின்றிலன் சென்றனன் நெடிய
சாலம் ஒன்று கொண்டவன் தடம் தேரினைத் தடிந்தான்.
91
   
6147.
வையம் அங்கு அழிவு எய்தலும் அவுணர் கோன் மற்றோர்
செய்ய தேர் இடை வல்லையில் தாவி நாண் செறித்துக்
கையில் வாங்கிய சரா சனத்து இடை உறக் கடை நாள்
பொய்யின் மா முகிலாம் எனச் சுடுசரம் பொழிந்தான்.
92
   
6148.
பொழிந்த வார் கணை முழுவதும் அவன் உரம் புகலும்
அழிந்திலன் சிறிது அஞ்சிலன் குல கிரி அன்றி
ஒழிந்த குன்று எலாம் பறித்தனன் வீசியே உடலத்து
இழிந்த சோரி நீர் சொரி தர நின்றனன் இமையான்.
93
   
6149.
நிருபன் ஆகிய ஆடகன் தன் எதிர் நீலன்
மரபின் நூக்கிய வரை எலாம் சரங்களால் மாற்ற
விரவினோடு போய் அவன் தடம் தேரினை வெகுளா
ஒருகையால் எடுத்து எறிந்தனன் அமரரும் உலைய.
94
   
6150.
ஆற்றல் அம் தடம் தேரினை வீசிட அதுவும்
காற்று உலாய் நிமிர் விண் உறப் போயது காளை
மாற்று ஒர் வையம் மேல் பாய்ந்திட உன்னினன் வரலும்
ஏற்று எழுந்து எதிர் புக்கனன் நீலனாம் இகலோன்.
95
   
6151.
நிற்றி நிற்றி நீ என்று கொண்டு ஏகியே நீலன்
எற்றினான் அவன் உரத்து இடை அவுணனும் இவனைப்
பற்றி வீசினன் பூதனும் மீண்டு தன் பதத்தால்
செற்ற மோடு உதைத்து உருட்டி வான் உரும் எனத்                                   தெழித்தான்.
96
   
6152.
நெறிந்த பங்கி சேர் நீலன் அங்கு உதைத்திட நிருதர்
முறிந்து நீங்கிய களத்து இடை வழுக்கி முகல் போல்
மறிந்து வீழ்தரும் அவுணன் மேல் பாய்ந்தனன் மகவான்
எறிந்த வச்சிரப் பெரும் படை இது கொல் என்று இசைப்ப.
97
   
6153.
வீழ்ந்த காளையைத் தன் பெரும் தாள்களால் மிதிப்பக்
கீழ்ந்து போயது மாநிலம் அவன் முடி கிழிந்த
போழ்ந்த தாகமும் வாய் வழி குருதி நீர் பொழிய
வாழ்ந்து வெந்துயர் உழந்தனன் செய்வது ஒன்று அறியான்.
98
   
6154.
திறல் அழிந்தனன் சீற்றமும் அழிந்தனன் செங்கோல்
மறலி கொள்வதற்கு அணியனே ஆதலும் மனத்தில்
இறுதி எய்தியது ஈங்கு இனிச் செய்வது என் எமக்கு ஓர்
உறுதி யாது என உன்னினன் பின்னர் ஒன்று உணர்ந்தான்.
99
   
6155.
மாயம் ஒன்றினைப் புரிகுதும் யாம் என வல்லே
ஆய மந்திரம் புகன்றனன் பூசனை அனைத்தும்
தூய சிந்தையால் நிரப்பினன் வேண்டிய துணியா
ஆய தெய்வதம் உன்னினன் அன்னது ஓர் எல்லை.
100
   
6156.
தன் போல் ஒரு வடிவு அன்னது ஒர் சமரின் தலை                                      அணுகா
மின் போல் ஒளிர் தரும் பல் படை விரவும் படி பரியா
என் போல் எவர் பொருகின்றவர் என வீரம் அது                                      உரையா
வன் போரது புரியும்படி வலிகொண்டு முன் வரலும்.
101
   
6157.
கண்டான் அது வருகின்றது கடிதே எதிர் நடவா
எண்டானவர் அமரின் தலை இட்டு ஏகியது ஒரு பொன்
தண்டானது கொண்டே அதன் தலை மோதினன்                                இமையோர்
விண்டான் இவன் கழிந்தான் என நீலன் தனை வியந்தார்.
102
   
6158.
வியக்கும் பொழுதினில் அன்னவன் விடுமாயமும்                                 விசையால்
உயக்கு உற்றவர் என விண் மிசை உயர்கின்றது காணாத்
துயக்கு உற்றிடும் நீலன் அது தொடர்ந்தான் கரந்திடலும்
மயக்கு உற்றனன் நெடிது உன்னினன் மண் மீது உறக்                                 கண்டான்.
103
   
6159.
காணா வல மருவான் இது கரவாம் என உணரான்
நாணால் மிகு சீற்றத்தொடு நணுகு உற்றனன் அதுவும்
தூண் ஆர் தடம் தோள் கொண்டு அமர் தொங்கு உற்றது                                     தொடங்கிச்
சேண் ஆகிய தணித்தாயது திசை எங்கணும் திரியும்.
104
   
6160.
பாரில் புகும் விண்ணில் புகும் பரிதிச் சுடர் எனவே
தேரில் புகும் மாவில் புகும் சிலையில் புகும் திரை முந்
நீரில் புகும் வடவா முக நெருப்பில் புகும் நீலக்
காரில் புகும் நிரயத்து இடை கடிதில் புகும் எழுமே.
105
   
6161.
முன்னே வரும் இடத் தேவரும் முதுவெம் பிடர் தழுவிப்
பின்னே வரும் வலத் தேவரும் பெரும் போரினைப்                                      புரியும்
பொன்னே கருதிய மங்கையர் புலனாம் எனத் திரியும்
என்னே அதன் இயல் யாவையும் யாரே புகல்வாரே.
106
   
6162.
மாலும் திறம் இது பெற்றியின் வருகின்றது ஒர் மாயக்
கோலம் தனி தொடரா வலி குறைந்தான் திரிந்து                                  உலைந்தான்
காலும் தளர்கின்றான் அவன் கல்வித்திறம் புகழா
மேல் என் செயல் என உன்னி வெகுண்டான் அடல்                                  வீரன்.
107
   
6163.
வென்றார் புகழ் தருவீரனும் வினையம் தனை உன்னி
நின்றான் அது காலம் தனில் நிருதன் தனது உருவம்
ஒன்றாயது பலவாய் உலகு எல்லாம் ஒருங்கு உறலால்
நன்றாம் இது மாயம் என நாணத்தொடு நவின்றான்.
108
   
6164.
திண் தோள் உடை நீலன் இது தெளிகின்று உழி                                 அவனால்
புண்தோய் தரு குருதிப் புனல் புடைப் போதரப் புவிமேல்
விண்டோன் என மறிகின்றவன் மிடல் பெற்று எழுந்து                                 இதனைக்
கண்டோர் தடம் தேர் ஏறினன் மாயத்தொடு கலந்தான்.
109
   
6165.
கலந்தான் ஒரு சிலை வாங்கினன் கனல் வாளிகள் தெரியா
உலந்தான் உறழ் தரு மெய் இடை உய்த்தான் உவன்                                       பொங்கர்
மலர்ந்தால் என உரம் புண்பட வடிவாளிகள் படநின்று
அலந்தான் மனம் மெலிந்தான் பொருது அலுத்தான் மிகச்                                       சலித்தான்.
110
   
6166.
ஈண்டு சீர்த்தி இரணியன் மாயமும்
ஆண்டு நீலன் அயர்வது நோக்கு உறாப்
பூண்ட வாகைப் புயத்தவன் சீறியே
தூண்டு தேரொடு துண் என நண்ணினான்.
111
   
6167.
தாங்குகின்ற தன் தாழ்சிலை தோள் கொடே
வாங்கி நாணியின் வல் இசைக் கோடலும்
வீங்கு மொய்ம்பின் விறல் கெழு தானவர்
ஏங்கி யாரும் இரிந்தனர் போயினார்.
112
   
6168.
சோதி நெற்றிச் சுடர்த்தனி வேலினான்
பாத மெய்த்துணை பன்முறை போற்றிடா
ஆதரத்தின் அருச்சனை ஆற்றியே
சேதனப் படை செங்கையின் வாங்கினான்.
113
   
6169.
தூய போதகத் தொல் படை அன்னவன்
மாயை மேல் விட மற்று அதன் பட்டிமை
ஆயிரம் கதிர் ஆதவன் நேர் புறப்
போய கங்குல் நிசி எனப் போந்ததே.
114
   
6170.
போந்த காலைப் புலம்பு உறு தானவர்
ஏந்தல் ஏதம் இயாக எரி எனக்
காந்தி நின்றவன் காமர் வில் வாங்கியே
ஆய்ந்து தீங்கணை ஆயிரம் தூண்டினான்.
115
   
6171.
தூண்டு கின்ற சுடுகணை வீரமார்த்
தாண்டன் முன்னவன் தன் வரை மார்பு உறா
மீண்டு நுண்டுகள் ஆதலும் மேல் அது
காண்டலும் சுரர் கை எடுத்து ஆர்த்தனர்.
116
   
6172.
பொறுத்த வாகைப் புயன் வலி வெவ்விடம்
நிறுத்த நூறு நெடும் கணை தூண்டியே
எறித்த சீர்த்தி இரணியன் கேதனம்
அறுத்து வில்லொடு அரணமும் சிந்தினான்.
117
   
6173.
பொருவில் சாலிகை போதலும் சூர் தரும்
திருவில் கோமகன் செங்கரம் தன்னில் வேறு
ஒரு வில் கொள்ள ஓர் ஆயிரம் வெங்கணை
விரைவில் தூண்டினன் ஆல் விறல் மொய்ம்பினான்.
118
   
6174.
விடுத்த வாளிகள் வெவ்விறல் ஆடகன்
எடுத்த வாளி இருஞ்சிலை பின் உறத்
தொடுத் தூணி முன் தூண்டிய பாகு தேர்
படுத்து மார்பகம் பஃறுளை செய்தவே.
119
   
6175.
செய்ய வேறு ஒரு தேர் மிசைச் சூரர் உள்
வெய்யன் வாவலும் வீரருள் வீரனாம்
ஐயன் வாளி கொண்டு அன்னது மட்டிட
மையல் எய்தி இழந்தனன் வன்மையே.
120
   
6176.
வேறு பின்னரும் மேதகு சூர் மகன்
ஏறு தேர்கள் யாவையும் செல்லும் முன்
நூறு நூறு கணைகளின் நூறியே
ஈறு செய்தலும் ஏங்கி இது எண்ணினான்.
121
   
6177.
இந்த வேலை இடப்படும் என் தனக்கு
அந்தம் எய்தியது அன்னவனால் உயிர்
சிந்தும் என்னொடு தீர்வதுவோ இனித்
தந்தையாரும் இறத்தல் சரதமே.
122
   
6178.
இற்ற காலை இருங்கடன் செய்திட
மற்று யாவரும் இல்லை இம் மா நகர்ச்
சுற்றம் ஆனவரும் தொலைந்தார் இனி
உற்று உளோரும் இறப்பர் இது உண்மையே.
123
   
6179.
உறுதி ஆவது உரைக்கவும் ஆங்கு அது
வறிது ஓர் கிலா மன்னவன் மாயும் முன்
இறுவதே கடன் இற்று இலனே எனின்
அறுவதோ என் அகத்து இடர் ஆயினும்.
124
   
6180.
ஒய் எனச் சுரர் ஓட வென் கண்ட என்
ஐயன் மற்று இனித் துஞ்சின் அருங்கடன்
செய்வதற்கு ஒரு சேயும் இன்றால் எனின்
வையகத்தில் வசை அது உண்டாகுமே.
125
   
6181.
மைந்தனைப் பெறுகின்றது மாசு இலாப்
புந்தி அன்பொடு போற்றி வளர்ப்பதும்
தந்தை மாண்டுழித் தம் முறைக்கு ஏற்றிட
அந்தம் இல் கடன் ஆற்றுதற்கே அன்றோ.
126
   
6182.
அசைவு இலாத அமர் இடைத் துஞ்சிடின்
இசையது ஆகும் இறந்திலனே எனில்
தசை உலாம் உடல் தாங்கி உய்ந்தான் எனா
வசை அது ஆகும் என் வன்மையும் துஞ்சுமே.
127
   
6183.
என்னை எய்தும் இசை அதுவே எனின்
மன்னை எய்தும் வசை உரை ஆங்கு அதன்று
என்னை எய்தினும் எய்துக தந்தை பால்
அன்னது ஆதல் அழகு இது அன்றால் என.
128
   
6184.
ஆவது உன்னி என் ஆர் உயிர் போற்றியே
போவதே கடன் என்று பொருக்கு எனத்
தாவி வான் முகில் தன் இடைப் போய் ஒரு
தேவு மந்திரம் சிந்தையில் உன்னினான்.
129
   
6185.
உன்னலோடும் உரு அரு ஆதலும்
தன்னை யாரும் தெரிவரும் தன்மையால்
பொன் உலாய புணரி உள் போயினான்
மின்னு தண் சுடர் மீன் உரு ஆகியே.
130
   
6186.
ஆண்டு போன அவுணன் அம் மாநகர்
மீண்டு செல்கிலன் மேல் விளைகின்றன
காண்டும் நம் தம் கடன் முடிக்கும் துணை
ஈண்டு வைகுதும் என்று அவண் மேவினான்.
131
   
6187.
ஆய காலையில் ஆடகன் செய்திடும்
மாயையாம் எனக் கங்குலும் மாய்ந்திடத்
தூய போதகத் தொல் படை தோன்றல் போல்
சேய் இருங் கதிர்ச் செல்வன் வந்து எய்தினான்.
132
   
6188.
ஆங்கு வெய்யவன் அப்படை போல் எழ
நீங்கு மாயையின் நீள் நிலவு அற்றிட
ஏங்கி ஓடும் இரணியன் ஆம் என
ஓங்கு திங்கள் உததியில் போயினான்.
133
   
6189.
நீங்கும் சூர் மகன் நீர்மையை நோக்கியே
வீங்கு தோள் உடை வீரன் நம் மாற்றலன்
ஓங்கும் ஆழி உள் ஓடினன் தோற்று எனா
ஏங்கு சங்கம் எடுத்து இசைத்தான் அரோ.
134
   
6190.
சங்கம் வாய் இடைக் கொண்டு தன் சீர்த்தியை
எங்கு உளோரும் தெளிய இசைத்து உழிப்
பொங்கு பூதர் புகழ்ந்தனர் வாழி என்று
அங்கண் வானவர் ஆசி செய்து ஆர்க்கவே.
135
   
6191.
நின்ற வீரர்கள் நேர் அலர் சேனையைப்
பொன்று வித்தனர் போர் இடைத் தூதுவர்
சென்று காலொடு சிந்தையும் பிற்பட
மன்றன் மா நகர் மந்திரம் எய்தினார்.
136
   
6192.
மந்திரத்து உறை மன்னை வணங்கி நீ
தந்த அக்குமரன் சமர்க்கு ஆற்றலன்
உய்ந்திடக் கொல் உவரை ஒர் சூழ்ச்சியால்
சிந்திடக் கொல் அகன்றனன் சிந்துவில்.
137
   
6193.
என்று தூதர் இசைத்தலும் மன்னவன்
குன்றி வெள்கிக் கொடுஞ்சினம் கொண்டிடா
ஒன்று மாற்றம் உரைத்திலன் அவ்வழிச்
சென்றனன் கனல் மாமுகச் செம்மலே.
138