மூவாயிரர் வதைப் படலம்
 
6436.
ஆயது ஓர் காலை மூவாயிரத் தொகை
மேயின மைந்தர்கள் வினவி ஈது எலாம்
மா இரு விசும்பினை அளாவு மன்னவன்
கோயிலை அடைந்தனர் குழுவொடு ஏகினார்.
1
   
6437.
துன் உறு பழி எனும் சூறை எற்றிட
இன்னல் அம் தெண் திரை எறிய வைகிய
மன் இயல் நோக்கியே வணக்கம் செய்து எழீஇ
முன்னர் நின்று இனையன மொழிதல் மேயினார்.
2
   
6438.
உரம் மிகும் இலக்கரும் ஒழிந்த எண்மரும்
பெரு விறல் மொய்ம்பனும் பிறரும் உற்றுழி
எரி முகன் ஒருவனை ஏவினாய் அவன்
செருவினை அவரொடு செய்ய வல்லனோ.
3
   
6439.
வலியவர் தம்மையும் வரம்பின் மிக்கு உறின்
மெலியவர் ஆயினும் வென்று போவர் ஆல்
உலகினில் வழக்கம் ஈது உணர்ந்திலாய் கொலோ
கலை பயில் கற்பு உடைக் காவல் மன்னனே.
4
   
6440.
ஒட்டலர் குழுவினுள் ஒரு மகன் தனை
விட்டனை மேல் வரும் வினையம் ஓர்ந்திலை
அட்டு உறு தாரினாய் அமரில் அங்கு அவன்
பட்டனன் என்றிடில் பரிதல் பாலையோ.
5
   
6441.
தீ முகன் ஒருவனுக்கு இரங்கித் தேம்பலை
யாம் உளம் இரணியன் இன்னும் உற்று உளன்
தாமரை மகிழ்நனைத் தளை படுத்திய
கோமகன் உளன் ஒரு குறை உண்டாகுமோ.
6
   
6442.
நண்ணலர் ஆயினோர் நலிந்து செற்றிடக்
கண் அகல் தேர் பரி களிறு தானவர்
எண் இல மாய்ந்த வென்று இறையும் ஆகுலம்
பண்ணலை ஐய அப் பரிசு கேட்டி நீ.
7
   
6443.
ஏழ் எனும் கடல் வறந் திடினும் நின் அடி
சூழ் தரு படைக்கு ஒரு தொலைவும் இல்லையால்
ஊழியும் அழிகுறா ஒருவ நீ இவண்
பீழையின் உறுவதும் பெருமைப் பாலதோ.
8
   
6444.
நின்று வான் அளவு எலாம் நிவந்த மேருவாம்
குன்றினோர் தினைத் துணை குறைந்தது அன்னது ஆல்
துன்று நம் தானை உள் துன்னலார் பொர
இன்று காறாகவே இறந்த சேனையே.
9
   
6445.
சிறந்திடும் தலைமையும் திறலும் ஆக்கமும்
மறந்தனை ஆகியே வலியன் ஆகு நீ
இறந்தவர் தமை நினைந்து இரங்கல் பாலையோ
புறம் தருகின்றது ஓர் அமரர் போலவே.
10
   
6446.
அண்டர் தம் முதல்வனை அயனை மாயனைச்
சண்டனைப் பவனனைத் தழலை யாரையும்
விண் தொடர் செலவினில் விரைந்து பற்றியே
கொண்டு அணை கின்றனம் குறிப்பது ஆகும் மேல்.
11
   
6447.
விண்ணினை அலைக்கவும் மேரு வெற்பு ஒடு
மண்ணினை மறிக்கவும் வடவை மாற்றவும்
எண்ணினை என்னினும் யாங்கள் எந்தை நின்
உண்ணினைவின் படி முடித்தும் ஒல்லையில்.
12
   
6448.
பன்னுவது என் பல பணித்தி யாங்கள் போய்
முன் உறு பூதரை முரண் கொள் வீரரைப்
பின் உறு கந்தனைப் பிறரை ஈண்டு ஒரு
கன்னலின் வென்று நின் கழல்கள் காண்டும் ஆல்.
13
   
6449.
என்று இவை புகறலும் இடுக்கண் நீங்கியே
நன்று இது மைந்தர் காள் நடமின் போர்க்கு என
வன் திறல் முதல்வனை வணங்கிக் கை தொழா
நின்றவர் ஏவரும் நீங்கினார் அரோ.
14
   
6450.
வன்னச் சிலை கொண்டனர் வான் கவசம்
துன் உற்றிடு வித்தனர் தூணியினை
வென்னில் செறிவித்தனர் வெவ் விரலிற்
பொன் உற்றிடும் புட்டில் புனைந்தனர் ஆல்.
15
   
6451.
சீர் புக்கு உறு கைப் படை செங்கைக் கொளாத்
தார்புக்கு அமர் தும்பை தனைத் தரியா
மார்புக்கு அலமாக் கலன் வர்க்கம் இடாத்
தேர் புக்கனர் வந்தன சேனைகளே.
16
   
6452.
சங்கங்கள் முழங்கின தண்ணுமை கோடு
எங்கும் எங்கும் இயம்பின வெண் படகம்
துங்கம் கெழு பேர் இது வைத்தனவால்
அங்கு அங்கு உரும் உற்றனவாம் எனவே.
17
   
6453.
அவுணப் படை எண் இல ஆற்றல் மிகும்
கவளக் கரி எண்ணில் காமரு சீர்
இவுளித் தொகை எண்ணில ஈட்டம் உறா
உவண் உற்றிடும் தேரும் உலப்பு இலவே.
18
   
6454.
முழங்கு உற்றன பல்லியமும் மத மாத்
தழங்கு உற்றன தேர் ஒலி தந்தனவால்
அழுங்கு உற்றனவாம் பரி ஆங்கு அவைகள்
விழுங்கு உற்றன பாரொடு விண்ணினையே.
19
   
6455.
நீடு உற்றிடும் தேர்களின் நீள் துவசம்
ஆடு உற்றன தாரில் அளித் தொகுதி
பாடு உற்றன வெங்கொடி பாறு மிசை
கூடு உற்றன கூளி குனித்தனவே.
20
   
6456.
தொகை யானை கடம் ஒடு சூழ் கரியின்
தகை ஆயின தானவர் தம் உருவம்
சிகையார் அழல் ஆயின சென்னி எழும்
புகை ஆனது பொன் எழும் பூழியதே.
21
   
6457.
இப்பான்மை அது ஆகி எழுந்து படை
அப்பால் விரவு உற்றுழி அன்னது கண்டு
ஒப்பாரும் இல் சூரன் உகந்து அருள் கூர்
மெய்ப் பாலகர் சென்றனர் வெய்து எனவே.
22
   
6458.
மூ ஆயிரர் தானைகள் முந்து செல
ஏவாம் என வெம்மை கொடு ஏகுதலும்
தே வானவர் கண்டனர் சிந்தை வெரீஇ
யாவா என அஞ்சி அழுங்கினரே.
23
   
6459.
அக் காலையின் மூ வகை ஆயிரரும்
மெய்க் கார் புவி சென்று விரைந்தன போல்
தொக்க ஆடல் புரிந்திடு தொல் நில மேல்
புக்கார் அது கண்டனர் பூதர்களே.
24
   
6460.
எதிர்கின்றனர் பூதர்கள் ஏற்றனர் ஆல்
முதிர்கின்ற சினம் கெழு மொய் அவுணர்
அதிர்கின்றன பேரிகள் அண்டம் எலாம்
பிதிர் கின்றன நேமி பிளந்ததுவே.
25
   
6461.
வாள் கொண்டு எறிகின்றனர் வல் எழுவுத்
தோள் கொண்டிடு வெங் கதை தூண்டினரால்
தாள் கொண்ட சிலைக் கணைதாம் சொரிவார்
நீள் கொண்ட அலை அன்ன நிசாசர் அரே.
26
   
6462.
சூலப் படை விட்டனர் தொல் பரிதிக்
கோலப் படை விட்டனர் குந்தம் உடன்
ஆலப் படை விட்டனர் ஆடு குறள்
சாலப் படை நின்று தளர்ந்திடவே.
27
   
6463.
அடு குற்றிடும் சூல மடல் கதைகள்
தொடு குற்றனர் நேமிகள் தூண்டிடுவார்
விடு குற்றனர் வெற்பினை வெவ் வசுரர்
படு குற்றனர் ஆர்த்தனர் பாரிடரே.
28
   
6464.
வீழ்கின்றன பட்டிடும் வீரர் உடல்
தாழ்கின்றன செம் புனல் சாய்ந்தனவால்
ஆழ் கின்றனவேலையில் அங்கு அதன்வாய்
மூழ்கின்றன பேய் கொடி மொய்த்தனவே.
29
   
6465.
மறக் குஞ்சரம் ஆயினவாம் பரி தேர்
சிறக்கின்றன பட்டன தீ அவுணர்
துறக்கின்றனர் ஆவி தொலைந்திடுவார்
இறக்கின்ற கணங்களும் எண் இலவே.
30
   
6466.
காணாவது மூவாயிரர் கனல் வெஞ்சினம் திருகிக்
கோண் ஆகமது எனவே அடும் கொடும் பூதரைக் குறுகி
நீண் ஆகமது என விண் தொட நிமிர் வெஞ்சிலை குனியா
வேணார் குணத்து ஒலி கொண்டனர் இது கொல் உரும்                                         எனவே.
31
   
6467.
வாங்கு உற்றிடும் சிலை தன் இடை வில்லே சர மாரி
தூங்கு உற்றிடும் புயல் ஆம் எனச் சொரிந்தார்                              சொரிந்திடலும்
ஏங்கு உற்றன பூதப்படை இரிகின்றன அது கண்டு
ஆங்கு உற்றிடும் கண வீரர்கள் அவுணர்க்கு                              எதிர்புகுந்தார்.
32
   
6468.
தண்டத்தவர் தடந்தேரினைத் தகர்ப்பார் சிலர் தருவின்
துண்டத்தவர் பரிமான் தொகை தொலைப்பார் சிலர் பாகன்
கண்டத் தலை உருளும்படி உதைப்பார் சிலர் கரத்தால்
அண்டத்தினில் அவர் தேர் எடுத்து எறிவர் சிலர் அம்மா.
33
   
6469.
எழுக் கொண்டவர் தடமார்பினில் எறிவார் சிலர் எரிவாய்
மழுக் கொண்டவர் சிலை இற்றிட எறிவார் சிலர் வரையின்
குழுக் கொண்டவர் அனிகம் தனைக் கொல்வார் சிலர்                                     வார் வில்
பழுக் கொண்டிடு கவடாம் எனப் பறிப்பார் சிலர்                                     முறிப்பார்.
34
   
6470.
தாவா துயர் கண வீரர்கள் சமர் இவ்வகை புரிய
மூவாயிரர் எனும் மைந்தர்கள் முனியாச் சிலை குனியா
ஓவாது உக முடிவு எல்லையில் உருமுச் செறிவன போல்
தீ வாய் உமிழ் கனல் வாளிகள் சொரிகின்றனர் தெரிந்தே.
35
   
6471.
நேர்பு உற்று அமர் புரிகின்றவர் நெடும் தீ வடிக்                                     கணைகள்
மார்பு உற்றிடத் தடந்தோள் எனும் வரை உற்றிட                                     முகத்தின்
சார்பு உற்றிடக் கரம் உற்றிடத் தாள் உற்றிடச் செந்நீர்
சோர்பு உற்றிடத் தளர்ந்தே மனம் துயர் உற்றிட நின்றார்.
36
   
6472.
கலக்கித் தடமலர் சிந்திடும் களிறு ஆம் என அடல் செய்
விலக்கற்கு அரு மூவாயிரர் வில் ஆண்மையும் வல்லார்
அலக்கண் படு கணவீரர்கள் அழிகின்றது நோக்கி
இலக்கத்தரில் ஓர் ஆயிரர் எரி ஆம் எனச் செயிர்த்தார்.
37
   
6473.
குன்றே என மிசை போகிய கொற்றப் புயத்தவன் முன்
சென்றே தொழுது இப் போரினைச் சிறியேங்களுக்கு                                  அருண்மோ
என்றே உரைத்தனர் வேண்டலும் இளையோன் அதற்கு                                  இசையா
நன்றே அமர் செய நீவிர்கள் நடமின் என அகன்றார்.
38
   
6474.
விசயன் சயன் இடபன் கரவீரன் அதிகோரன்
அசலன் அதிகுணன் வாமனன் அனந்தன் அகளங்கன்
வசை இல் புகழ் அனகன் சதவலி மாருதன் வருணன்
சசி கண்டகன் முதல் ஆயிரர் சமரின் தலை புகுந்தார்.
39
   
6475.
முந்து உற்றிடும் அவர் யாவரும் மூவாயிரர் எதிர் போய்க்
கந்தக் கடவுளை அன்பொடு கருத்தில் தொழுது ஏத்தி
மைந்து உற்றிடு தம் கார் முகம் வளையாவடி வாளி
அந்தத்தினின் முகிலாம் என அவர் மேல் சொரிந்து                                    ஆர்த்தார்.
40
   
6476.
ஆர்க்கின்றது ஒர் பொழுதத்தினில் அவர் வில்                                    வலிதன்னை
மூர்க்கன் தரு மறமைந்தர்கள் மூவாயிரர் காணாக்
கூர்க்கின்றது ஒர் நெடுவாளிகள் குணிப்பு இல்லன பூட்டிச்
சூர்க் கொண்டல்கள் தம்மோடு அமர் புரிந்தால் எனச்                                    சொரிந்தார்.
41
   
6477.
மூவாயிரர் விடும் வாளிகள் முடுகிக் கடிது ஏகித்
தாவா விறலோர் ஆயிரர் தம் வாளியை அடுமால்
மேவார் புகழ் விறல் மைந்தர்கள் வெவ் வாளிகள்                                  அவுணர்
ஏவானவை துணியும் படி எதிர் சிந்திடும் விரைவில்.
42
   
6478.
இவ்வாறு அமர் புரிகின்று உழி இலக்கத்தவர் தேரைத்
தெவ்வாகிய மூ ஆயிரவர் சிதைவித்தனர் சரத்தால்
அவ்வாறு தெரிந்தே எமர் அவுணன் தரு மைந்தர்
கைவார் சிலையொடு தேரினை அழித்தார் கணை தூண்டி.
43
   
6479.
இலக்கத்தவர் எதிர் கின்றவர் ஏமப்படு தேரைச்
சிலைக் கண் படு நெடு வெங்கணை சிந்திச் சிதைவித்தே
நிலக்கண் பட மூவாயிரர் தொகை தன்னையும் நிறுவி
மலைக்கண் படும் அரிபோல் புடை வரு தேர் இடைப்                                      புகுந்தார்.
44
   
6480.
சிலை போய்க் கடவிச் சென்றிடு தேர் போய் அடல்                                  செய்யும்
கொலை போய் அனிகம் போய் உளம் கொள்ளும்                                  பெருமிதத்தின்
நிலை போய் வெகுள் உற்றே புவி நின்றோர் தமைப்                                  பிணித்த
வலை போகிய மானே என வளைத்தார் வய மைந்தர்.
45
   
6481.
பொலம் படு தேரொடு பொன்ற வன்மை போய்த்
தலம் படும் அவுணர்கள் தளர்தல் மேயினார்
இலம் படை வந்துழி ஈதல் சான்றவர்
குலம் படு துயரொடு குறையும் தன்மை போல்.
46
   
6482.
பறித்தனர் வரைகளைப் பழுமரம் பல
முறித்தனர் வியர்ப்பு உறு மொய்ம்பர் தம் இசைச்
செறித்தனர் அண்டமும் திசையும் ஞாலமும்
மறைத்தனர் அமரரும் மருட்கை எய்தினார்.
47
   
6483.
தெவ்வரை ஆகிய சிறார்கள் தொன் மரம்
கைவரை வீசலும் கணைகள் தூண்டியே
இவ்வரை எனும் கணத்து இறுத்து வீட்டினார்
ஐவரை வென்றி கொள் அனிக வீரரே.
48
   
6484.
அட்டு அடல் கொண்டிடும் அவுணர் இவ்வகை
விட்டன கிரி எலாம் கணையின் வீட்டியே
நெட்டு அழல் பகழிகள் நிறத்தின் மூழ்குறத்
தொட்டனர் உறுப்பு எலாம் துளைத்தல் மேயினார்.
49
   
6485.
துளைத்திடு கின்றுழிச் சோரி சாய்ந்திட
விளைத்தனர் ஒரு சிலர் இரிந்திட்டார் சிலர்
களைத்தனர் ஒருசிலர் கனன்று நின்று போர்
விளைத்தனர் ஒருசிலர் பிறங்கல் வீசுவார்.
50
   
6486.
தேவரை வென்றுளார் சிலவர் மால் வரைக்
காவலர் தேரினைக் கரங்களால் எடா
மேவரும் புணரி உள் வீசி ஆர்த்தனர்
ஓ என அமரர்கள் புலம்பி ஓடவே.
51
   
6487.
நீசர்கள் ஒரு சிலர் நேமி சென்றிட
வீசிய தேரினும் விரைவின் நீங்கு உறாக்
காசினிப் பாலர் ஆய்க் கார்முகம் வளைஇ
ஆசுக மழை சொரிந்து ஆர்த்துப் பொங்கினார்.
52
   
6488.
மீண்டிடும் பொருநர்கள் விசிக மாமழை
தூண்டிட அவுணர்கள் தொகையில் பற்பலர்
காண்டலும் வடவையின் கணத்தில் சீறியே
ஆண்டு எதிர் புகுந்தனர் அசனி ஆர்ப்பினார்.
53
   
6489.
மறத்தொடு மருத்தின மரம் கொள் கொம்பரை
இறுத்திடும் தன்மை போல் எந்தை பின் வரு
திறத்தவர் சிலைகளைச் செங்கை வன்மை ஆல்
பறித்தனர் முறித்தனர் படியில் வீசினார்.
54
   
6490.
பற்றலர் கொடு மரம் பறித்துச் சிந்து உழிச்
செற்றம் ஒடு எம்பிரான் சேனை வீரர்கள்
மற்றவரும் பதை பதைப்ப மாண் கையால்
எற்றினர் அனையரும் இடியில் தாக்கினார்.
55
   
6491.
பரவிய உவரியும் பாலின் வேலையும்
திரைகளை எதிர் எதிர் சிதறி ஆர்த்து எழீஇப்
பொரு திறமே எனப் பொருவில் மற்றொழில்
இருதிற வயவரும் மிகலி ஆற்றினார்.
56
   
6492.
கொடும் தொழிலாளர் ஒடு கொற்ற வீரர்கள்
அடைந்தனர் இவ்வகை ஆண்மைப் போரினைத்
தொடர்ந்து நின்று இயற்றியே தொல்லை வன்மை போய்
உடைந்தனர் விசயன் அங்கு ஒருவன் அன்றியே.
57
   
6493.
இசை உறு தமர் எலாம் இரிந்து போதலும்
விசயனே எனப்படும் வீரன் சீறியே
வசை உறும் அவுணர் கோன் மகாரைக் கூற்றுவன்
திசை உறு நகர் இடைச் செலுத்துவேன் என்றான்.
58
   
6494.
வேணியின் மதி உடை விமலன் நல்கிய
வேண் உறு வரி சிலை ஈறு இலாதது
தூணியின் இடை உறத் துன்னிற்று அன்னதைப்
பாணியில் எடுத்தனன் சமரில் பாணியான்.
59
   
6495.
கரதலத்து எடுத்திடும் கார் முகம் தனை
விரைவு ஒடு கோட்டியே விசயன் என்பவன்
ஒரு தனி மாருதத்து ஓடிச் சூழ் உறாச்
சர மழை பொழிந்தனன் அவுணர் தங்கள் மேல்.
60
   
6496.
கரங்களை அறுத்தனன் கழல்கள் ஈர்ந்தனன்
உரங்களை அறுத்தனன் உயர்திண் தோளொடு
சிரங்களை அறுத்தனன் சிலரைக் கான் இடை
மரங்களை அறுத்திடும் வண்ணம் என்னவே.
61
   
6497.
அற்றன உறுப்பு எலாம் அணுகித் தம்மில் வந்து
உற்றன கூடிய வுணர்வும் ஆவியும்
மற்றவர் எழுந்தனர் வாகை வீரன் மேல்
பொற்றைகள் ஆயின பொழிந்து போர் செய்தார்.
62
   
6498.
தலையொடு கரங்களும் தாளும் தோள்களும்
மெலிவொடு துணிந்தவர் மீட்டும் கூடினார்
அலர் தரு பங்கயத்து அண்ணல் தன் இடை
வலிது அவர் பெற்றிடு வரத்தின் தன்மையால்.
63
   
6499.
கண்டமும் மொய்ம்பரும் கழலும் வாளியால்
துண்டம் அது ஆயினர் தொக்கு மேயினார்
சண்ட வெங்கால் பொரத் தணந்து சிந்திய
தெண் திரை நெடும்புனல் மீட்டும் சேர்தல் போல்.
64
   
6500.
பன்னரும் திறலினான் பகழி பாய் தொறும்
மன்னவன் மைந்தர்கள் மாண்டு தோன்றுவார்
மின்னது வந்து உழி விளிந்து வெவ்விருள்
தொல் நிலை எய்தியே தொடர்ந்து தோன்றல் போல்.
65
   
6501.
கையொடு சென்னியும் கழலும் மார்பமும்
கொய்யும் முன் தொன்மை போல் கூட மைந்தர்கள்
ஒய் என எழுந்தனர் உலகில் தேர்வுறில்
செய்யுறு தவத்தினும் சிறப்பு உண்டாம் கொலோ.
66
   
6502.
கண்டனன் விசயனாம் காளை ஆவி போய்த்
துண்டம் அது ஆகியே துஞ்சினார் எழீஇ
மண்டு அமர் புரிவது மனத்தின் விம்மிதம்
கொண்டனன் பொருதிறல் குறைந்து நின்றனன்.
67
   
6503.
அகத்து இடை விம்மிதம் அடைந்து நின்று உளான்
திகைத்தனன் வரம் கொல் இச்செய்கை என்றனன்
புகைத்து என உயிர்த்தனன் பொங்கு கின்றனன்
நகைத்தனன் இவர் செயல் நன்று நன்று எனா.
68
   
6504.
தொட்டிடும் பகழியால் துணிந்து போர் இடைப்
பட்டவர் எழுந்தனர் பகழி பின்னரும்
விட்டிடின் ஆவது என் மேவலார் தமை
அட்டிடல் இன்று எனக்கு அரிது போலும் ஆல்.
69
   
6505.
அன்னவர் தமை அடல் அரியதாம் எனில்
ஒன்னலர் படையொடும் ஒன்றிச் சுற்றியே
பன் னெடு நாள் அமர் பயின்று நிற்பினும்
என் உயிர் கொள்வதும் எளிது அன்றால் அரோ.
70
   
6506.
வென்றிலன் இவர் தமை வென்றிலேன் எனில்
சென்று எதிர் மாற்றலர் செருவில் வன்மை போய்ப்
பொன்றுதல் பெற்றிலன் பொதுவன் ஓர் மகன்
கொன்றிடும் உலவையின் கொள்கை ஆயினேன்.
71
   
6507.
பற்று அலர் தங்களைப் படுப்பன் யான் எனா
வெற்றி கொள்வான் என விளம்பி வந்த யான்
செற்றிலன் ஆகியே சிலையும் கையுமாய்க்
கொற்றவனோடு போய்க் கூடல் ஆகுமோ.
72
   
6508.
மாற்றலர் வரத்தினர் மாயப் பான்மையர்
ஆற்றவும் வலியர் என்று அறைந்து மீள்வனேல்
தோற்றனன் என்று எமர் துறப்பர் அன்றியும்
போற்றலர் விடுவர் கொல் புறம் தந்து ஏகவும்.
73
   
6509.
பித்தரின் மயங்கிலன் உணர்வும் பெற்று உளேன்
எய்த்திலன் வலியொடும் இன்னும் நின்றனன்
வைத்து இலன் புகழினை வசை ஒன்று எய்துவேன்
செத்திலன் இருந்தனன் செயல் அற்றேன் என்றான்.
74
   
6510.
விண்டினை மாறு கொள் விசயன் இவ்வகை
அண்டரும் துன்பு கொண்டு அகத்தில் உன்னுழி
உண்டு ஒரு செய்கையான் உய்யும் ஆறு எனக்
கண்டனன் துயர்க் கடல் கடக்கும் பெற்றியான்.
75
   
6511.
ஆறு மாமுகப் பிரான் அன்றி இவ்விடை
வேறு ஒரு துணை இலை மெய்மை ஈது எனத்
தேறினன் அவன் அடி சிந்தை செய்தனன்
மாறு இழி அருவி நீர் வழியும் கண்ணினான்.
76
   
6512.
அண்ணல் அம் குமரனை அகத்துள் கொண்டுழி
எண்ணிய எண்ணியாங்கு எவர்க்கும் நல்குவோன்
விண் இடை ஒல்லையின் விசயன் என்பவன்
கண் இடைத் தோன்றியே கழறல் மேயினான்.
77
   
6513.
கேள் இது விசய ஒன்னார் கிளையினை முடிப்பான்                                  உன்னித்
தாளொடு முடியும் கையும் தடிந்தனை தடிந்தது எல்லாம்
மீளவும் தோன்றிற்று அன்றே மேலவர் பெற்றது ஓராய்
நீள் அமர் வயம் இன்றாகி நின்றனை தளரேல் நெஞ்சம்.
78
   
6514.
ஏற்ற பல் படைகள் தம்மால் இவர் தமைப் பன்னாள்                                    நின்று
வீற்று வீற்று அடுவை யேனும் விளிகிலர் ஒருங்கு வல்லே
ஆற்றல் சேர் படை ஒன்று உய்க்கின் அனைவரும்                                    முடிவர் ஈது
நாற்றலை உடையோன் தொல்நாள் நல்கிய வரம் அது                                    என்றான்.
79
   
6515.
என்று இவை உரைத்து வள்ளல் இம்பரை அளித்தோன்                                     சென்னி
ஒன்றினை வாங்கி ஏனோர் உளமயல் அகற்றும் எந்தை
வென்றி கொள் படையை நல்கி விசயனுக்கு அளித்து                                     மேவார்
பொன்றிட இதனை இன்னே விடுக எனப் புகன்று                                     போனான்.
80
   
6516.
தேர்ந்தனன் முருகன் வாய்மை சிறந்தனன் மகிழ்ச்சி                                    உள்ளம்
கூர்ந்தனன் ஞமலி ஊர்தி கொற்ற வெம் படையை வாங்கி
ஆர்ந்த நல் அன்பில் பூசை ஆற்றினன் அதனை எல்லாம்
ஓர்ந்தனன் அவுணர் தம்முள் ஒருவன் உன்மத்தன்                                    என்போன்.
81
   
6517.
ஈண்டு இவன் நமர்கள் எல்லாம் இசைவரப் படையது                                     ஒன்றால்
மாண்டிட அடுவான் போலும் மற்று அதன் முன்னர் மாயம்
பூண்டிடு படையால் இன்னேற்கு இறுதியைப் புரிவன்                                     என்னா
ஆண்டு தன் உளத்தில் உன்னி அவுணன் அப்படையை                                     விட்டான்.
82
   
6518.
மாயவள் படையை முன்னம் விடுதலும் வள்ளல் நோக்கித்
தீ உமிழ் கின்ற காரி திண் படை செலுத்தச் சென்று
பாயிருள் பரந்து நேரும் படையினைத் தடிந்து முப்பால்
ஆயிரர் தமையும் சுற்றி அடல் செய்து மீண்டது அன்றே.
83
   
6519.
ஒரு கணப் பொழுதின் முன்னர் ஓர் ஆயிர                               முப்பாலோரும்
செரு நிலத்து அவிந்தார் அன்ன செய்கையை விசயன்                               காணா
முருகனைப் பரவி நின்றான் முழுமதி தன்னைக் கண்ட
பொரு திரைப் புணரி என்ன ஆர்த்தனர் பூதர் எல்லாம்.
84
   
6520.
ஏமுறும் அவுணர் தானை இறந்திடாது எஞ்சிற்று எல்லாம்
காமரு திசைகள் முற்றும் கதும் என விரிந்து போன
மா மலர் பொழிந்தார் விண்ணோர் மற்று இவை                         அனைத்தும் நாடிக்
கோமகன் முன்பு சென்றார் குரை கழல் அவுணர் தூதர்.
85
   
6521.
வெய்யவன் பகைவன் தாதை வியன் கழல் பணிந்து தூதர்
ஐய நின் மைந்தர் முப்பால் ஆயிரர் தம்மை எல்லாம்
ஒய் என இலக்கர் தம்முள் ஒருவனே முடித்தான் ஈது
பொய்யல சரதம் என்னப் பொருக்கெனப் புலம்பி                                   வீழ்ந்தான்.
86
   
6522.
வீழ்ந்தனன் பதைத்துச் சோர்ந்து வெய்து உயிர்த்து                            அசைந்து விம்மிப்
போழ்ந்திட நிலத்தைக் கையால் புடைத்தனன் புரண்டு                            வெற்பில்
தாழ்ந்திடும் அருவி யென்ன இழி புனல் தாரை பொங்கச்
சூழ்ந்தவர் அரற்ற மன்னன் துன்பமேல் துன்பம்                            வைத்தான்.
87
   
6523.
அன்னது ஓர் எல்லை மைந்தர் அனைவரும் முடிந்தது                                     ஓரா
மன்னவன் இசைமை நீங்கி மாயிரும் தவிசில் தப்பி
இன்னலின் மறிந்தது என்ன இரவியங் கடவுள் மேல் பால்
பொன் நெடும் கிரியின் எய்தி ஒளி இலன் புணரி                                     வீழ்ந்தான்.
88