பானுகோபன் வதைப் படலம்
 
6604.
எள்ளல் செய்து எனைப்பற்றியே சிறை அகத்து இட்ட
கள்வன் இப்பகல் முடிந்திடும் அன்னது காண்பான்
பொள் எனப் படர்வேன் எனப் புந்தி கொண்டவன் போல்
ஒள் அழல் கதிர் வீசியே இரவி வந்து உதித்தான்.
1
   
6605.
சுருதி நீங்கிய அவுணர் கோன் இத்திறம் துயரம்
பெரிதும் எய்தியே இருந்துழிக் கண்டனர் பெயர்ந்து
குருதி நோக்கு உடை ஓற்றரில் ஒருசிலர் குறுகிப்
பரிதி தன் பகை அடி பணிந்து இனையன பகர்வார்.
2
   
6606.
முன்ன மாயமாப் படைக்கலம் தூண்டியே மெய்ம்பு
பன்னிரண்டு உளான் தூதனைப் படையொடும் படுத்துத்
தொல் நெடுங்கடல் இட்டனை இட்டதைச் சுரர்கள்
அன்ன காலையே விளம்பினர் அறுமுகத் தவற்கே.
3
   
6607.
வெங்கண் மால் கரிக்கு இளையவன் ஆங்கது வினவிச்
செங்கை வேலினை ஆயிடை இருந்தனன் செலுத்த
அங்கு அது ஒல்லையின் மூவிரு புணரிகள் அகன்று
பொங்கு தூயநீர் அளக்கரின் நடுவு புக்கதுவே.
4
   
6608.
புக்க வேலையின் மாயமாப் பெரும் படை புறந்தக்
தக்கணம் தொலைவு எய்தியது அயர் உயிர்த்து அறிந்து
தொக்க பாரிடர் யாவரும் வீரர் தம் தொகையும்
மிக்க திண் திறல் வாகுவும் எழுந்து இவண் மீண்டார்.
5
   
6609.
ஆண்ட அவ்வெல்லை வந்து இறுத்திடும் வேல் படை                                       அருளி
மீண்டு கந்த வேள் இருந்துழிப் போந்தது விரைவால்
ஈண்டு இம் மாநகர் சுற்றியே செறுநர்கள் இகலின்
மூண்டு போர் செய்வான் புரிசையுள் புகுந்தனர் முரணால்.
6
   
6610.
அரண முற்றுளார் இந்நகர் அலைத்தலும் அவற்றைத்
தரணி காவலன் வினவியே தன் அயல் நின்ற
இரணியன் தனைக் கனல் முகத்து அண்ணலை ஏனை
முரணில் மக்களை அமைச்சனை விடுத்தனன் முறையால்.
7
   
6611.
ஆன காலையில் வந்து வந்து அடு சமர் ஆற்றி
மான வேல் படைப் பண்ணவன் தூதனால் மற்றை
ஏனையோர்களால் முத்திற வீரர்கள் இறந்தார்
மீனமாய்க் கடல் புகுந்தனன் இரணியன் வெருவி.
8
   
6612.
மன்னர் மன்னவன் இவை எலாம் வினவியே மனத்தில்
உன் அரும் துயர் வேலை புக்கு ஆற்றலாது உழந்தான்
இந் நகர்ப் படை யாவையும் வறந்தன இன்னும்
துன்னலார் இவண் நின்றனர் என்று இவை சொற்றார்.
9
   
6613.
சொற்ற வாசகம் வினவலும் சூரியன் பகைஞன்
இற்றவே கொலாம் நம் பெரும் வாழ்க்கை என்று இரங்கிச்
செற்றமோடு துன்பு எதிர் எதிர் மலைந்திடச் செங்கேழ்ப்
பொற்றை அன்னதன் இருக்கையை ஒருவினன் போந்தான்.
10
   
6614.
போந்து கோ நகர் அணுகியே துன்பொடு புணர்ந்த
வேந்தன் மாமலர் அடிகளை உச்சியின் மிலைச்சி
ஆந்தரங்கமாம் அளியொடு முந்து நின்று அவுணர்
ஏந்தல் இம்மொழி கேண்மியா நன்கென இசைப்பான்.
11
   
6615.
மாயை தந்த தொல் படையினால் செறுநரை மயக்கித்
தூய நீர்க்கடல் இட்டனன் சுரரது புகல
ஆய காலையில் வேல் விடுத்தவர் தமைமீட்ட
சேயை வெல்வது கனவினும் இல்லையால் தெரியின்.
12
   
6616.
தெரிந்த மற்று உனக்கு உரைப்பது என் முற்பகல்                                  செவ்வேல்
பொருந்து கைத்தலத்து ஆறுமா முகனொடு பொருது
வருந்தி வன்படை ஆற்றலும் இழந்தனை வறிதாய்
இரிந்து மற்று இவண் வருதலால் உய்ந்தனை எந்தாய்.
13
   
6617.
ஏற்றது ஓர் சிலை இழந்தனை மானமும் இன்றித்
தோற்று வந்தனை தொல் வரத்து இயற்கையும்                             தொலைந்தாய்
சீற்றம் உற்றிலன் முருகவேள் அவன் சினம் செய்யின்
ஆற்றுமோ வெலா அண்டமும் புவனங்கள் அனைத்தும்.
14
   
6618.
ஆரணன் தனை உலகொடும் உண்டு முன் அளித்த
காரணன் தனி ஆழியைக் களத்திடை அணிந்த
தாரகன் தனை நெடிய மால் வரையொடு தடிந்த
வீர வீரனை யாவரே வன்மையால் வெல்வார்.
15
   
6619.
புல்லிது ஆகிய விலங்கினைப் படுப்பவர் புதலுள்
வல்லியம் தனக்கு உண்டியாய் மாய்ந்திடும் கதைபோல்
எல்லையில் பகல் அமரரை அலைத்திடும் யாமும்
தொல்லை நாள் வலி சிந்தியே குமரனால் தொலைந்தோம்.
16
   
6620.
கோடலும் சுனைக் குவளையும் குளவியும் குரவும்
ஏடு அலர்ந்திடு நீபமும் புனைந்திடும் இளையோன்
பாடல் அம்திறல் உரைப்பது என் ஆங்கு அவன் பணித்த
ஆடல் அம் புயத்து அண்ணலை வெல்வதும் அரிதால்.
17
   
6621.
நெடிது பற்பகல் செல்லினும் நிரம்புவது ஒன்றை
இடை விடாமலே முயன்று பெற்றிடுகின்றது இயற்கை
உடல் வருந்தியும் தங்களால் முடிவுறா ஒன்றை
முடியும் ஈது எனக் கொள்வது கயவர் தம் முறையே.
18
   
6622.
ஆற்றல் மைந்தரை இழந்தனை நால் வகை அனிகத்து
ஏற்றம் அற்றனை என்னுடன் ஒருவன் நீ இருந்தாய்
மேல் திகழ்ந்த நின் குலத்தினை வேரொடு வீட்டக்
கூற்றம் வந்ததும் உணர்கிலை இகலை மேற்கொண்டாய்.
19
   
6623.
வெஞ்சமம் செய வல்லவர் கிடைத்திடின் மிகவும்
நெஞ்சகம் தளிர்ப்பு எய்துவன் நேரலர் சமருக்கு
அஞ்சினேன் என்று கருதலை அரச நீ இன்னும்
உஞ்சு வைகுதியோ எனும் ஆசையால் உரைத்தேன்.
20
   
6624.
உறுதி ஒன்று இனி மொழிகுவன் பொன் நகர் உள்ளார்
சிறை விடுக்குதி நம்மிடைச் செற்றம் அது அகற்றி
அறு முகத்தவன் வந்துழி மீண்டிடும் அதன் பின்
இறுதியில் பகல் நிலைக்கும் நின் பெருவளம் என்றான்.
21
   
6625.
வெம்பு தொல் கதிர் வெகுண்டவன் உரைத்த சொல்                                      வினவித்
தும்பை அம் தொடை மிலைச்சிய மணி முடி துளக்கி
மொய்ம்பும் ஆகமும் குலுங்கிட முறுவலித்து உயிர்த்து
நம்பி மந்திரச் சூழ்ச்சி நன்றால் என நவில்வான்.
22
   
6626.
என் இவை உரைத்தாய் மைந்த இன்று யான் எளியன்                                      ஆகிப்
பொன் உலகு உள்ள தேவர் புலம்பு கொள் சிறையை                                      நீக்கின்
மன்னவர் மன்னன் என்றே யார் எனை மதிக்கற் பாலார்
அன்னதும் அன்றி நீங்கா வசையும் ஒன்று அடையும்                                      மாதோ.
23
   
6627.
கூனொடு வெதிரே பங்கு குருடு பேர் ஊமை ஆனோர்
ஊனம் அது அடைந்த புன்மை யாக்கையோடு ஒழியும்                                       அம்மா
மானம் அது அழிந்து தொல்லை வலி இழந்து உலகில்                                       வைகும்
ஏனையர் வசையின் மாற்றம் எழுமையும் அகல்வது                                       உண்டோ.
24
   
6628.
தேவரும் மலர் மேலோனும் செங்கண் மால் முதலா உள்ள
ஏவரும் ஆணை போற்ற இருந்து அரசியல் உற்றேன்
மூவரின் முதலா முக்கண் மூர்த்தி தன் வரம் கொண்டு                                      உள்ளேன்
மேவலர் சிறையை இன்று விடுவனோ விறல் இலார் போல்.
25
   
6629.
பேர் எழில் இளமை ஆற்றல் பெறல் அரும் வெறுக்கை                                      வீரம்
நேர் அறு சுற்றம் யாக்கை யாவையும் நிலைய வன்றே
சீர் எனப் பட்டது அன்றோ நிற்பது செறுநர் போரில்
ஆருயிர் விடினும் வானோர் அரும் சிறை விடுவது                                      உண்டோ.
26
   
6630.
இறந்திட வரினும் அல்லால் இடுக்கண் ஒன்று உறினும்                                    தம்பால்
பிறந்திடும் மானம் தன்னை விடுவரோ பெரியர் ஆனோர்
சிறந்திடும் இரண்டு நாளைச் செல்வத்தை விரும்பி யானும்
துறந்திடேன் பிடித்த கொள்கை சூரன் என்று ஒரு பேர்                                    பெற்றேன்.
27
   
6631.
இன்னும் ஓர் ஊழி காலம் இருக்கினும் இறப்பது அல்லால்
பின்னும் இங்கு அமர்வது உண்டோ பிறந்தவர் இறக்கை                                   திண்ணம்
மின் எனும் வாழ்க்கை வேண்டி விண்ணவர்க்கு அஞ்சி                                   இந்த
மன் உயிர் சுமக்கிலேன் யான் மாயவன் தனையும்                                   வென்றேன்.
28
   
6632.
அஞ்சினை போலும் மைந்த அளிய நின் இருக்கை                                   போகித்
துஞ்சுதி துஞ்சல் இல்லா வரத்தினேன் தொலைவது இல்லை
நெஞ்சிடை இரங்கி யாதும் நினையலை நேரலார் மேல்
வெஞ்சமர் புரியப் போவேன் என்றனன் வெகுளி மேலான்.
29
   
6633.
இவ்வகை தாதை கூற இரவி தன் பகைஞன் கேளா
உய்வகை இல்லை போலும் உணர்ந்திலன் உரைத்தது                                    ஒன்று
மெய் வகை விதியை யாரே வென்றவர் வினையிற்கு ஏற்ற
செய்வகை செய்வேன் என்னாச் சிந்தை செய்து இனைய                                    சொல்வான்.
30
   
6634.
அறிவு ஒரு சிறிதும் இல்லேன் அடியனேன் மொழிந்த                                    தீமை
இறையதும் உள்ளம் கொள்ளாது எந்தை நீ பொறுத்தி                                    கண்டாய்
சிறயது ஓர் பருவப் பாலர் தீ மொழி புகன்றாரேனும்
முறுவல் செய்திடுவது அன்றி முனிவரோ மூப்பின்                                    மேலோர்.
31
   
6635.
அத்த நீ வெகுளல் நம் ஊர் அலைத்திடும் கணங்கள்                                    தம்மை
வித்தக வன்மை சான்ற விறல் புயனோடும் அட்டு உன்
சித்தமும் மகிழுமாறு செய்குவன் விடுத்தி என்னாக்
கைத்தலம் முகிழ்த்துத் தீயோன் கழல் இணை பணிதல்                                    செய்தான்.
32
   
6636.
பணிந்திடு கின்ற காலைப் பதுமை தன் கேள்வன் செற்றம்
தணிந்தனன் உவகை பெற்றான் தனய நின் உள்ளம்                                  போர்மேல்
துணிந்தது போலும் நன்றால் துன்னலார் தம்மை                                  வெல்வான்
அணிந்திடு தானை யோடும் அகலுதி ஐய என்றான்.
33
   
6637.
தொடை அசை காமர் பொன் தோள் சூர் இது புகல                                     மைந்தன்
விடையது பெற்று மீண்டு மேதகு துயரினோடு
கடிது தன் கோயில் புக்குக் கடவுளர் பலரும் தந்த
அடல் நெடும் படைகள் எல்லாம் ஆய்ந்தனன் எடுத்தான்                                     அன்றே.
34
   
6638.
மை உறு தடங்கண் மாதர் வன முலை திளைக்கு மார்பின்
மெய்யுறை ஒன்று வீக்கி விரல் மிசைப் புட்டில் சேர்த்திக்
கையுற ஒரு வில் ஏந்தி கைப்புடை கட்டி வாளி
பொய்யுறும் ஆவ நாழி பின்னுற வீக்கி யாத்தான்.
35
   
6639.
சேமமாய் உள்ள எண் இல் படைகளும் தேரும் சுற்றத்
தாம நீள் கவிகை வேந்தன் தனி மகன் கடையில் சென்று
காமர் சூழ் கனக வையம் ஒன்றின் மேல் கடிது புக்கான்
ஏமமால் வரையின் உம்பர் எழிலியேறு அணைந்ததே                                       போல்.
36
   
6640.
மற்றது காலை தன்னில் வாம் பரி நிரையும் தேரும்
கொற்ற வெங் களிறும் வீரர் குழாங்களும் குணிப்பில்                                    வெள்ளம்
சுற்றின இயங்கள் முற்றும் துவைத்தன துவச கோடி
செற்றின இரவி செல்லும் தேயம் அது அடைத்தது                                    அன்றே.
37
   
6641.
தேரிடைப் புகுந்து நின்றோன் இப்பெரும் சேனை                                   வெள்ளம்
பாரிடைக் கொண்டு நின்ற புணரியில் பாங்கர் சூழச்
சூர் இடைக் கொண்ட அன்பும் துயரமும் உளத்தை                                   உண்ணப்
போருடைத் திசையை நோக்கிப் பொள்ளெனப் போதல்                                   உற்றான்.
38
   
6642.
மாவாழ் தெருவு பல கோடிகள் வல்லை நீங்கி
மேவார் பொருத களத்து எல்லை விரைந்து நண்ணி
மூவாயிரரும் பிறரும் முடிவான நோக்கி
யாவா எனவே இரங்கிக் கலுழ்ந்து அல்லல் செய்வான்.
39
   
6643.
தாளாண்மை மிக்க அசுரன் மகன் தாங்கல் செல்லா
நீள் ஆகுலத்தின் அழிகின்ற தன் நெஞ்சு தேற்றிக்
கேளார் தொகை மேல் பெரும் சீற்றம் கிளர்ந்து செல்லக்
சூளால் இனைய ஒரு வாசகம் சொல்லல் உற்றான்.
40
   
6644.
மாசாத்தர் அன்ன வயப் பூதரை மாய வாட்டித்
தேசார்க்கும் வேலோற்கு இளையோனைச்                             செகுத்திடேனேல்
காசால் பொலியும் அகல் அல்குலின் காமம் வெஃகி
வேசாக்கள் பின் செல் வறியானில் விளங்க யானே.
41
   
6645.
என்னா ஒரு சூள் இசையா அவன் ஏகலோடும்
அன்னான் வரவு தனை நோக்கி அவுணர் தங்கள்
மன்னாகும் நின்ற மகனாகும் மலைவதற்குப்
பின்னார் வருவார் எனப் பூதர்கள் பேசலுற்றார்.
42
   
6646.
பேசுற்ற காலை அவுணப் படை போந்து சென்றாங்கு
காசற்ற பூதப் படை தம் எதிர் ஆர்த்து நேரப்
பூசல் பறைகள் இயம்பு உற்றன பூமி பொங்கி
மாசற்ற வானைத் திசையோடு மறைந்தது அன்றே.
43
   
6647.
ஆர்த்தார் கிடைத்தார் அடல் பூதர் அடுக்கல் மாரி
தூர்த்தார் படைகள் சொரிந்தார் மரம் தூவல் உற்றார்
பார்த்தார் அவுணர் எழு நாஞ்சில் பரசு தண்டம்
சீர்த்தாகிய வில் உமிழ் வாளி செலுத்தி விட்டார்.
44
   
6648.
பொங்கு வன்மை கொள் பூதரும்
வெங் கொடும் தொழில் வினையரும்
இங்கு இவ்வாறு எதிர் ஏற்றிடா
அங்கண் வெஞ்சமர் ஆற்றினார்.
45
   
6649.
அரிய ஒண் பகல் அல்லொடே
பொருது பார்மிசை புக்கபோல்
இரு திறத்தரும் இகலியே
விரவு பூசல் விளைத்தனர்.
46
   
6650.
உரம் கொள் பாரிடர் உய்த்திடு
மரங்கள் குன்றுகள் மாண்டிட
நெருங்கி நேர்ந்த நிசாசரர்
சரங்கள் கொண்டு தடிந்தனர்.
47
   
6651.
வில் கொள் அம்பினை வேலினை,
எற் கொள் நாஞ்சில் எழுக்கதை
வர்க்கம் ஆனதை வன் கணர்,
கற்களால் துகள் கண்டனர்.
48
   
6652.
சிவந்த பங்கிகொள் சென்னிகள்
நிவந்த மொய்ம்பு நிலத்து உகக்
கவிழ்ந்து உருண்டு களத்திடை
அவிந்த பூதம் அனந்தமே.
49
   
6653.
நெஞ்சம் மொய்ம்பும் நெடும்பதம்
செஞ் செவித்தலை சிந்தியே
எஞ்சு தானவர் எண் இலார்,
துஞ்சினார் பழி துஞ்சவே.
50
   
6654.
பாய்ந்த வாசிகள் பாரிடம்,
காய்ந்த யானைகள் காசினி
ஏய்ந்த தேர்கள் யாவையும்,
மாய்ந்து பாரின் மறிந்தவே.
51
   
6655.
சோரி தூங்கிய தொல் பிணம்,
மேரு விண்ணை விழுங்கின
காரி யூர்தி கருங்கொடி,
ஓரி கங்கம் உலாயவே.
52
   
6656.
இந்தவாறு இரு பாலரும்,
வந்து நேர்ந்து மலைந்திடப்
புந்தி நோவறு பூதர் தம்,
முந்து தூசி முரிந்ததே.
53
   
6657.
தாழும் ஒன்னலர் தாக்கலால்
நீள் கொடிப் படை நெக்கிடக்
கூழை நின்றிடு கூளிகள்,
ஆழி என்ன அடுத்தவே.
54
   
6658.
புடை நிரம்பிய பூதர்வந்,
திரைவிடாது எதிர் ஏற்றிடா
அடலின் மேதகும் அவுணமாக்,
கடலை நின்று கலக்கினார்.
55
   
6659.
ஒடிந்த தேர்கள் உலந்து பார்,
கிடந்த யானை கிளர்ந்த மா
மடிந்த தானவர் மாப்படை,
தடிந்து உலாயினர் சாரதர்.
56
   
6660.
அதிரும் கழல் சேர் அவுணப் படைகள்
முதிரும் குறள் எற்ற முடிந்திடலும்
எதிரும் சமரத்து இடை எய்தியது ஓர்
கதிரின் பகை அங்கு அது கண்டனனே.
57
   
6661.
சிந்தாய் வரும் இச் சில சாரதரே
நம் தானை எலாம் நலிகின்றனரோ
அந்தா இனிதென்று அடுதேர் கடவா
வந்தான் விரைவால் இமையோர் மறுக.
58
   
6662.
கடிதாய் வரு காலொடு கார் எழிலி
படிமேல் உறவே படர்கின்றது போல்
கொடிது ஆகிய வில்குனியா முனியா
வடி வாளிகள் தூய் அவுணன் வரலும்.
59
   
6663.
வண்டார் தெரியல் வலியோன் வரவைத்
தண்டாது அமர் செய்திடு சாரதர்கள்
கண்டார் எதிரே கடிதே நடவா
அண்டார் தொகை அச்சுற ஆர்த்தனரே.
60
   
6664.
தருவும் கதையும் தரு சூலமுமால்
வரையும் கொழுவும் மழுவும் எழுவும்
சொரிகின்றனர் பல் வளனும் தொலையா
எரியின் மிசையே இடும் அந்தணர் போல்.
61
   
6665.
தொடுகின்ற கழல் தொகு சாரதர்கள்
விடுகின்ற எலாம் மிசை வந்திடலும்
அடுகின்ற சினத்து அவுணன் தழலில்
படுகின்ற சரம் பல தூண்டினனே.
62
   
6666.
பணி பட்ட கனல் படை தூண்டுதலும்
திணி பட்ட கணத் திறலோர் வரைகள்
அணி பட்ட தருக்குலம் ஆதி எலாம்
துணி பட்டனவே துகள் பட்டனவே.
63
   
6667.
கல்லும் தருவும் கதையும் பிறவும்
சொல்லும் திறலும் துகள் பட்டிடலும்
வெல்லும் தகுவன் மிகு சாரதர் மேல்
செல்லும் படி வெங்கணை சிந்தினனே.
64
   
6668.
சிந்து உற்றிடு செங்கனல் வெங்கணைகள்
பொந்து உற்றிடுகின்ற புயங்கம் என
வந்து உற்று உடன் முற்றும் வருத்துதலால்
நொந்து உற்றனர் அற்றனர் நோன்மை எலாம்.
65
   
6669.
விடுகின்ற கனல் கணை வெந்திறலோர்
உடலம் புழை செய்திட வுற்றனரால்
படரும் குறியோன் கதை பஃறுளையா
அடு தொல் கிரவுஞ்சம் அதாம் எனவே.
66
   
6670.
தெரிகுற்ற கனல் கணை சென்று புகப்
பொரு கொற்றம் அகற்றிய பூதர் மிசைப்
பெருகு உற்றது சோரி பெரும் கருவிண்டு
உரு உற்றிடு செம் பொழுகும் படிபோல்.
67
   
6671.
கதிரும் கனல் வெங்கணை சாரதர் மெய்
புதைகின்றுழி செம்புனல் வந்து எழுவ
உதிரம் பிற உற்றிடு தீ யுறவால்
எதிர் வந்தவை தன் இடன் உய்ப்பது போல்.
68
   
6672.
விட மெய்க் கணை மாரிகள் தம் மிசையே
பட வெய்த்தனர் சிந்தை பதைத்திடுவார்
கடவுள் கதிரைக் கனலும் கொடியோற்கு
உடை உற்றனரால் உறு பூதர் எலாம்.
69
   
6673.
நிலை அழிந்து நெடுங்கடல் பாரிடம்
தொலைய முன்னம் தொலைந்திடு தானவர்
வலிதெரிந்து வயம் புனை தானவர்
தலைவன் முன் வந்து சார்ந்தனர் என்பவே.
70
   
6674.
ஆய காலை அழிந்து வெம் பூதர்கள்
போய வாறும் புரை அறு சூர்தரு
சேயவன் திறல் செய்கையும் நோக்கினான்
காயும் வெவ்வெரி கான்றிடு கண்ணினான்.
71
   
6675.
மலைக் குலக் கொடி வாமத்தன் மைந்தராம்
இலக்க வீரருள் ஏனைய மைந்தருள்
தலைக்கண் நின்ற சயங்கெழு மொய்ம்பினான்
விலக்கில் தேரொடும் வெய்து என ஏகினான்.
72
   
6676.
ஆதி தந்த அறுமுகத்து எம்பிரான்
பாதம் உன்னிப் பரவிக் கடிதுபோய்
மேதகும் கதிர் வெம் பகை தானை ஆம்
ஓதம் உட்கக் குனித்தனன் ஓர் சிலை.
73
   
6677.
காமர் மொய்ம்பினன் கைத்தனுக் கோட்டலும்
தாமுனிந்து தகுவர் தம் தானைகள்
தோமரம் கதை சூலம் வை வாளிவேல்
நேமி ஆதி நெருக்கு உற வீசினார்.
74
   
6678.
வீசு கின்ற வியன் படை மாய்ந்து உகத்
தேசு உலாவு திறல் உடை மொய்ம்பினான்
ஓசை கொண்ட தன் சாபம் உமிழ்ந்து என
ஆசுகங்கள் அளப்பு இல தூண்டினான்.
75
   
6679.
தூண்டும் வாளி துணிபடச் செய்தலும்
மாண்டு போயின மற்றவர் வெம்படை
ஈண்டு தானவர் யாரும் மறைந்திட
மீண்டும் வார்கணை வீசினன் வீரனே.
76
   
6680.
கற்றை வார் சடைக் கண் நுதலோன் சுதன்
கொற்ற வில் உமிழ் கூர்ங்கணை விட்டன
பற்றலார் மெய் படுதலும் அன்னவர்க்கு
இற்ற தாள் முடி தோள் புயம் யாவுமே.
77
   
6681.
ஆர் அழிந்தன ஆழி அழிந்தன
தேர் அழிந்தன திண்பரி கைமுகக்
கார் அழிந்த கடும் தொழில் தானவர்
போர் அழிந்த புகுந்தன சோரியே.
78
   
6682.
மற்ற எல்லை வலிய நம் தானைகள்
இற்றவே கொல் இவன் சிலையால் எனாச்
செற்ற நீரொடு செங்கதிர் மாற்றலன்
ஒற்று தேர் வலவற்கு இவை ஓதுவான்.
79
   
6683.
அடுத்து நம் படை அட்டவன் முன் உற
விடுத்தி தேரை வலவனை வெய்து என
வடித்த விஞ்சையன் வன்மையின் அன்னதேர்
நடத்தி ஆர்த்தனன் நாகர் நடுங்கவே.
80
   
6684.
மாண்ட கொள்கை அவுணன் வலவன்முன்
தூண்டு தேர் மிசைத் துண் என நண்ணியே
பூண்ட தன் சிலை கோட்டிப் பொருஞ்சினம்
மூண்டு மேலவன் முன் இது கூறுவான்.
81
   
6685.
எஞ்சல் இன்றிய என் பெரும் தானைகள்
துஞ்சும் வண்ணம் தொலைத்தன நீ இனி
உஞ்சு போகரிது உன் தனை அட்டிட
வஞ்சினம் கொடு வந்தனன் யான் என்றான்.
82
   
6686.
என்றலோடும் இருந்திறன் மொய்ம்பினான்
பொன்று வோரையும் போர்த்தொழில் செய்துபின்
வென்று ளோரையும் விண்ணவர் காண்குவர்
நின்று தாழ்க்கலை நேருதி போர்க்கு என்றான்.
83
   
6687.
விளைத்த சீற்றத்து வெந் திறல் சூர் மகன்
வளைத்த வில்லிடை வார்கணை ஆயிரம்
தளைத்த பூந்தொடை வாகையன் தன்னுரம்
துளைத்திடும்படி பூட்டுபு தூண்டினான்.
84
   
6688.
ஆக மூழ்கி அடற்கணை போழ்ந்து பின்
ஏக வென்றும் இளையவன் பின்னவன்
சோக மோடு தன் தொல் சிலை வாங்கியே
நாகர் போற்றிட நாண் ஒலிக் கொண்டனன்.
85
   
6689.
நாண் ஒலிக் கொடு நஞ்சு அழல் கான்று எனத்
தூணி உற்ற சுடு சரம் ஆயிரம்
வேணு உய்த்து விரைவினில் தூண்டினான்
ஏண் உடைக் கொடியோன் புயத்து எய்தவே.
86
   
6690.
ஆயிரம் கணை அம்புயம் மூழ்கலும்
நோய் உழந்து உள நொந்து நொடிப்பினில்
தீயவன் மகன் செஞ்சரம் நூற்றினால்
தூயவன் வில் துணிபடுத்தான் அரோ.
87
   
6691.
திண் திறல் புயன் செஞ்சிலை இற்றிட
அண்டர் அஞ்சினர் அன்னவன் ஓர் அயில்
கொண்டு உருத்துக் கொடும் தொழில் சூர் மகன்
முண்ட நெற்றியின் மொய்ம்புடன் வீசினான்.
88
   
6692.
வீசு வெம்படை வெய்யவன் சீறிய
நீசன் மாண்தகு நெற்றி உள் சேறலும்
மாசு இல் வான்மிசை வந்து எழு செக்கர் போல்
ஆசில் செம்புனல் ஆறு எனச் சென்றதே.
89
   
6693.
சென்ற காலையில் தீயவன் ஓர் இறை
நின்று தேரின் நினைவிலன் ஆகியே
பின்றை முன் உணர்வு எய்தப் பெருந்தகை
ஒன்று ஒர் வெஞ்சிலை ஒல்லையில் வாங்கினான்.
90
   
6694.
வாங்கி வாயுவின் மாப்படை தூண்டலும்
ஆங்கு அவ் வெய்யனும் அப்படை ஏவியே
தாங்கி வன்மை தணித்தலும் தாவிலோன்
தீங்கனல் படை உய்த்தனன் சீறியே.
91
   
6695.
மாரி அன்ன கை மன்னவர் கோமகன்
ஆர் அழல் படை அவ்வழி தூண்டலும்
வீரவாகு விடுத்திடும் தீப்படை
போர் இயற்றிப் பொருக்கு என மீண்டதே.
92
   
6696.
சுடு கனல் படை போந்திடச் சூர் மகன்
கடிது பின்னும் கதிர்ப் படை தான் எடா
அடுதி அன்னவன் ஆவியை நீ எனா
விடுதலோடும் விரைந்தது சென்றதே.
93
   
6697.
விரைந்து சென்றதை வீர மொய்ம்பு உள்ளவன்
தெரிந்து சேணிடைச் செங்கதிரோன் படை
துரந்து நீக்கலும் சூர் மகன் பங்கயத்து
இருந்த வன்படை ஏவினன் என்பவே.
94
   
6698.
தேன் முகத்துத் திருமலரோன் படை
வான் முகத்து வருதலும் ஆங்கு அவன்
ஊன் முகப் படை ஒய் எனத் தூண்டினான்
நான் முகத்தன் அடல் கண நாயகன்.
95
   
6699.
தூண்டு வேதன் படைக்கலம் சூர் மகன்
ஆண்டு தொட்ட படையை அகற்றியே
மீண்டு வந்திட வெய்யவன் வீரன் மேல்
நீண்டமாயன் நெடும் படை வீசினான்.
96
   
6700.
வீசும் அப்படை தன்னை விலக்கினான்
கேசவன் படையால் கிளர் மொய்ம்பு உடை
மாசில் கேள்வியன் மற்று அது நோக்கியே
நீசன் மா மகன் உள்ளம் நினை குவான்.
97
   
6701.
தொட்ட தொட்ட படைகள் தொலை உற
விட்டனன் படை மேலினி யாவையும்
அட்டு நல்கும் அரன் படை தூண்டுறின்
ஒட்டலன் கரத்து உண்டது கண்டதே.
98
   
6702.
ஆதலால் யான் அப்படை தூண்டிடில்
ஊதியத்தை உடைத்தன்று மாயையால்
ஏதிலானை இனி அடல் செய்வதே
நீதி என்று நினைந்தனன் நேரலன்.
99
   
6703.
விஞ்சை மாய வியன் முது மந்திரம்
நெஞ்ச மீது நெறிப்பட எண்ணியே
செஞ்சுடர்க் கதிரைச் சிறை செய்திடு
வஞ்ச மைந்தன் மறைந்தனன் தேரொடும்.
100
   
6704.
பாங்கு முன்னரும் பின்னரும் பாய்கதிர்
தூங்கு தேரொடு துன்னலன் ஏகுறா
வீங்கும் ஆற்றல் விறல் உடை மொய்ம்பன் மேல்
வாங்கு வில் கணை மாரி வழங்கினான்.
101
   
6705.
சூறை என்னத் திரிபவன் தூண்டிய
மாறு இல் வாளி படப்பட வள்ளல் மெய்
ஊறதாகி உலப்பறு செம்புனல்
ஆறது என்ன வழிக் கொண்டதால் அரோ.
102
   
6706.
அண்டர் நோக்கி அழிந்தனர் பாரிடர்
தண்டமோடு தளர்ந்தனர் சார்பினோர்
விண்டு விண்டு வெருவினர் அச்செயல்
கண்டு வீரன் கனல் எனச் சீறினான்.
103
   
6707.
ஒன்று ஒரு மாயை தன்னால் உய்ந்து முன் வென்று                                    போனான்
இன்று உமது உன்னினானோ இனியது முடிக்க அற்றோ
நன்று இது நன்று இது அம்மா நான் இவன் தன்னை                                    இன்னே
கொன்றிடு கிற்பேன் என்னாக் குறித்தனன் குமரன்                                    பின்னோன்.
104
   
6708.
ஈது தன் புந்தி தேற்றி ஈங்குஇவன் சூழ்ச்சி மாய்ந்து
போதருகின்ற வாறு புரிகுவன் விரைவின் என்னாச்
சேதனம் கொண்ட துப்பின் தெய்வதப் படையைப் போற்றி
மேதகு வழிபாடு ஆற்றி அவுணனைக் குறித்து விட்டான்.
105
   
6709.
பொருவரும் திறலோன் விட்ட போதகப் படையே பானாள்
இருளினை இரியல் செய்யும் இரவிபோல் சேறலோடும்
விரைவொடு விஞ்சை மாயம் விளிந்தது வேந்தன் மைந்தன்
ஒரு பெரும் தேரும் தானும் ஆகியே உம்பர் நின்றான்.
106
   
6710.
தோன்றியே விண்ணின் நின்ற சூர் மகன் தொலைவில்                                      ஆற்றல்
சான்றதன் மாயம் போன தன்மையும் தடந்தோள் வீரன்
ஆன்ற நல் வலியும் நோக்கி அயர்ந்தனன் அயர்ந்து                                      முன்னம்
மான்றிடும் அமரர் யாரும் மனம் மகிழ் சிறந்து நின்றார்.
107
   
6711.
அவ்வழி வீர மொய்ம்பன் அந்தர வழிக்கண் நின்ற
மைவழி சிந்தை மைந்தன் மாண்பினை நோக்கி வஞ்ச
வெவ்வழி இனி நீ போதி யான் இவண் அடுவன் என்னாக்
கைவழி வரிவில் வாங்கித் தேரொடும் ககனம் சென்றான்.
108
   
6712.
விண்ணிடைப் புகுந்த வீரன் வெலற்கு அரும் சூரன்                                      மைந்தன்
கண் உற முன்பு நேர்ந்து கணை பல கோடி தூர்த்தான்
நண்ணலன் அவனும் சீறி நவின்றது ஓர் சாபம் வாங்கித்
துண் என விசிக மாரி சொரிந்தனன் சுரர்கள் அஞ்ச.
109
   
6713.
நீரொடு கனலும் மாறாய் நெடுஞ்சினம் திருகி நின்று
போரினை இழைப்பது என்ன இருவரும் பொருது நின்றார்
ஓர் இறை அளவை தன்னில் ஓர் ஆயிரம் நூறு கோடி
சாரிகை திரிந்த அம்மா அனையவர் தடம் பொன்                                    தேர்கள்.
110
   
6714.
ஏற்று இகல் புரியும் வீரர் எதிர் எதிர் துரக்கும் வாளி
நால் திசை கொண்ட அண்டப் பித்திகை காறும் நண்ணி
மேல் திகழ் பரிதிப் புத்தேள் வியன் கதிர் வரவு தன்னை
மாற்றி எவ் உலகு உளோர்க்கு மலிதுயர் விளைத்த                                   அன்றே.
111
   
6715.
செற்றமொடு இவர்கள் வீசும் திருநெடுங் கணைகள்                                   யாண்டும்
முற்றிடுகின்ற காலத்து உகுவன கவன மான் தேர்
அற்றன புரவி மாலை அவிந்தன களிற்றின் ஈட்டம்
இற்றன அவுணர் சென்னி இறுவன பூதர் யாக்கை.
112
   
6716.
கிட்டுவ சேணில் செல்வ கிளருவ கிடைத்துப் பின்னும்
முட்டுவ ஒன்றை ஒன்றை இடம் வலம் முறையில் சூழ்ந்து
வட்டணை புரிவ வானோர் மதிக்கவும் அரிய வல்லே
எட்டு உள திசையும் விண்ணும் திரிவன இருவர் தேரும்.
113
   
6717.
இகழுவர் முனிவர் வெஞ்சூள் இயம்புவர் வன்மை                                   நோக்கிப்
புகழுவர் உரப்பி வீரம் புகன்று எடுத்து அழைப்பர் பூசல்
மகிழுவர் நகைப்பர் வெற்றி வால் வளை முழக்கம் செய்து
திகழுவர் கணையின் மாரி சிந்துவர் தெழித்துச் செல்வர்.
114
   
6718.
புரந்தனை அட்ட செல்வன் புதல்வனும் அவுணன் சேயும்
விரைந்து எதிர் மலைந்த காலை முறை முறை வெகுண்டு                                          விட்ட
வரம் தெறு பகழி மாரி அகிலமும் விரவிச் செல்லக்
கரந்தனன் இரவி திங்கள் கலைகளும் குறைந்தது அன்றே.
115
   
6719.
கால் ஒப்பன கூற்று ஒப்பன கனல் ஒப்பன கடுவின்
பால் ஒப்பன உரும் ஒப்பன பணியார் புரம் பொடித்த
கோல் ஒப்பன கதிர் ஒப்பன குன்றந்தனைக் கொன்ற
வேல் ஒப்பன இருவீரரும் விடல் உற்றிடு விசிகம்.
116
   
6720.
வரை புக்கன புயல் புக்கன வான் புக்கன மறிதெண்
திரை புக்கன கடல்புக்கன திசைபுக்கன திசை சூழ்
தரை புக்கன அண்டத்து உழைதனில் புக்கன பிலத்தின்
நிரை புக்கன இளையோனுடன் அவுணன் விடு                                   நெடுங்கோல்.
117
   
6721.
திரிகின்றன இருவோர் விடு தீ வாளியும் அவை பட்டு
எரிகின்றன புயலின் குலம் இரு நால் திசைக் கரியும்
கரிகின்றன புவி விண்டன கடல் வற்றின உடுமீன்
பொரிகின்றன உலகு எங்கணும் புகை விம்மியது அன்றே.
118
   
6722.
பொடி ஓங்கிய திறன் மொய்ம்பு உடைப் புலவன் விடு                                     சரத்தை
வடியோங்கிய கணை மாரியின் அருக்கன் பகை மாற்றும்
கொடியோன் மகன் விடு வாளியைக் குதை வெங்கணை                                     மழையால்
நெடியோன் தனித் துணை ஆனவன் அறுத்தே உடன்                                     நீக்கும்.
119
   
6723.
போர் இவ்வகை இரு வீரரும் பொரல் உற்றிடு பொழுதில்
பாரின் தலை நின்றோர்களும் இமையோர்களும் பார்த்தார்
ஆர் இங்கு உளர் இவரே என அமர் செய்தவர் அடுபோர்
வீரர் தனில் எவரே இவர்க்கு இணை என்று வியந்தார்.
120
   
6724.
அவ் வேலையின் நூறு ஆயிரம் அடுவெங்கணை அதனால்
மை வேலையில் வருபானுவைத் தளை பூட்டிய மைந்தன்
செவ் வேலவன் திருத் தூதுவன் தேரைப் பொடி படுத்தி
எவ்வேலையும் வெருக் கொண்டிட இடி ஏறு என                                  ஆர்த்தான்.
121
   
6725.
ஆர்க்கின்றுழி விறல் மொய்ம்பு உடை அறிவன் சினந்து                                    இருகிச்
சீர்க்கின்ற விண்மிசை நின்று தன் சிலை கால் உற                                    வாங்கிக்
கூர்க்கும் கணை ஓர் ஆயிரம் கொளுவித் துரந்திட்டுக்
கார்க்கின்ற மெய் அவுணர்க்கு இறை கடுந் தேர் துகள்                                    கண்டான்.
122
   
6726.
வையம் துகளாய் இற்றிட வானத்து இடை நின்ற
வெய்யன் பெருஞ் சினம் செய்து வில் வீரன் தனது                                   உரத்தின்
ஐ அஞ்சு நஞ்சு அயில் வாளி புக்கு அழுந்தும் படி                                   தூண்டிச்
சையந் தனைக் கடந்தேவளர் தடந்தோள் புடைத்து                                   ஆர்த்தான்.
123
   
6727.
உரத்தில் புகு நெடு வாளியின் உள நொந்திடும் உரவோன்
கரத்தில் சிலை தனில் ஏழ் இரு கணை பூட்டினன்                                  செலுத்தி
வரத்தில் தனக்கு இணை இல்லது ஒர் மன்னன் மகன்                                  தனது
சிரத்தில் பொலி மகுடம் தனைச் சிந்தித் துகள் செய்தான்.
124
   
6728.
மாண் கொண்டிடு முடி சிந்திட வறியான் எனத் திகழும்
ஏண் கொண்டிடு சூரன் மகன் ஏழ் ஏழ் கணை தூண்டித்
தூண் கொண்டிடு திறல் மொய்ம்புடைத் தொல்லோன்                                  உரம் பிணித்த
நாண் கொண்டிடு கவசம் தனை நடுவே துணித்திட்டான்.
125
   
6729.
ஆகம் படு நெடுஞ்சாலிகை அழிவெய்தலும் அழல் கால்
நாகம் படு சடையோன் சுதன் நன்று ஈது என நகையாப்
பாகம் படு பிறைபோல் எழு பகுவாய்க் கணை செலுத்தி
மேகம் படு மணி மேனியன் வில்லைத் துணி படுத்தான்.
126
   
6730.
வில் ஒன்று இரு துணி ஆதலும் வெங்கூற்றினும் வெகுளா
அல் ஒன்றிய மனத் தீயவன் அயன் முன் கொடுத்துள்ள
எல் ஒன்றிய தனி வேலினை எடுத்து ஈங்கு இவன்                               தன்னைக்
கொல் என்று உரைத்து உரவோன் மிசை குறித்துச்                               செலவிடுத்தான்.
127
   
6731.
விடுத்த காலையின் இத்திறம் தெரிந்திடும் விறலோன்
அடல் பெரும் கணை ஆயிரம் கோடிகள் அதனைத்
தடுத்திடும் படி செலுத்தினன் அவை எலாம் தடிந்து
வடித்த வேல் படை வான் வழிக் கொண்டு வந்ததுவே.
128
   
6732.
வந்த காலையில் அதன் வலி நோக்கியே வள்ளல்
இந்து சேகரன் உதவிய நாந்தகம் எடுத்துக்
கந்த வேள் அடி வழுத்தியே கருதலன் விடுத்த
குந்த வெம்படை இருதுணி பட்டிடக் குறைத்தான்.
129
   
6733.
குறைத்த காலையில் அமரர்கள் ஆடினர் கொடியோன்
திறத்தர் ஆகிய அவுணர்கள் ஏங்கியே திகைத்தார்
அறத்தை ஆற்றிடும் இளையவன் அங்கு அது நோக்கி
எறித்தரும் சுடர் வாளினை உறை அகத்து இட்டான்.
130
   
6734.
அள் இலைத் தனி வேல் படை இறுதலும் அதனைக்
கள்ள விஞ்சைகள் பயின்றிடு சூர் மகன் காணாத்
தெள்ளிது அம்மவோ என்படை வலி எனச் செப்பிப்
பொள் எனக் கரவாளம் ஒன்று எடுத்தனன் பொருவான்.
131
   
6735.
கரு முகில் புரை மேனியன் கரத்தில் வாள் பற்றி
விரவு மின்னுவின் கொடி என விதிர்த்து முன் வீசி
உரும் இடிக்குலத் தாவலங் கொட்டி ஆர்த்து உருத்துச்
செரு முயற்சியால் சீர் இளங் கோவின் முன் சென்றான்.
132
   
6736.
சென்ற காலையில் இளையவன் தன் பெருஞ் சிலை கால்
ஒன்ற வாங்கியே பகழி பல்லாயிரம் உய்த்து
வென்றி வாள் படையான் உரம் கிழித்திட விடர்செய்
குன்றில் வீழ்தரும் அருவி போல் வீழ்ந்தது குருதி.
133
   
6737.
பரிதி மாற்றலன் மிசைவரு பகழியும் பாரான்
குருதி வீழ்வதும் உரம் பகிர் உற்றதும் குறியான்
ஒரு தன் மானமும் தானுமாய் ஓடினன் குறுகிச்
சுருதி அன்னவன் சிலையினை வாளினால் துணித்தான்.
134
   
6738.
வில் இறுத்திடு விறலினோன் மிசைபடக் கிளர்ந்து
செல் எனத் தெழித்து ஒரு தன் வாள் வீசினன் திரிய
அல்லல் உற்றிடும் இமையவர் அங்கு அது நோக்கி
இல்லை மற்று இவன் இறந்த பின் அமர் என்பது என்றார்.
135
   
6739.
அங்க வெல்லையில் வீரவாகுப் பெயர் அறிஞன்
திங்கள் சூடிய உலகு அடும் தாதையில் சீறித்
துங்க மிக்க தன் வாளுரீஇக் கறங்கெனச் சுற்றி
எங்கண் ஏகுதி என்று போய் அவுணனை எதிர்த்தான்.
136
   
6740.
ஏற்று எதிர்ந்திடும் எல்லையின் இரவி அம் பகைவன்
காற்று எனச் சென்று நேர்ந்தனன் இருவரும் கலந்து
சீற்ற நீர்மையால் வாள் அமர் உழந்தனர் செங்கண்
கூற்றும் அங்கியும் சமர் புரிகின்ற கோட்பு என்ன.
137
   
6741.
மாறு மாறு சென்று அடிமுதல் உறுப்பினை வாளால்
வேறு செய்திட எறிகுவர் அன்னது விலக்கி
ஊறு செய்திற நாடுவர் இடை தெரிந்து உறாமல்
சூறையாம் எனச் சுற்றுவர் வட்டணை சூழ்வார்.
138
   
6742.
இன்ன தன்மையில் இருவரும் வாள் அமர் இயற்றி
மன்னு காலையில் சூர்மகன் விஞ்சையின் வலியால்
தன்னை நேர் இலா இளையவன் தடக்கை வாள் அகற்றி
அன்னவன் திருத் தோள்மிசை எறிந்தனன் அன்றே.
139
   
6743.
மாற்றலன் கர வாளினால் எறிதலும் வள்ளல்
ஆற்றல் மொய்ம்பு இடைக் குருதியாறு இழிதர அது கண்டு
ஏற்றம் எய்தினன் சூர் மகன் இவன் தனக்கு இளையோன்
தோற்றிடும் கொல் என்று இரங்கினர் வானவர் துளங்கி.
140
   
6744.
அன்ன காலையில் இளையவன் அறுமுகத்து அமலன்
பொன்னின் சேவடி புந்தியில் உன்னியே புகழ்ந்து
மின்னு வானதன் வாள் படை வீசியே விரைந்து
துன்னலன் வலத் தோளினை வலியொடு துணித்தான்.
141
   
6745.
துணித்த காலையில் வலதுகை தன்னொடு தொடர்ந்த
பணித்தன் இச்சுடர் வாளினை இடக்கையால் பறித்து
மணித் தசும்பு கொள் மொய்ம்புடை அவுணர் கோன்                                       மற்றும்
தணிப்புருஞ் சினம் தன்னொடு முயன்றனன் சமரே.
142
   
6746.
தீயவன் தனி முயற்சியை நோக்கியே திறலோன்
தூய வாள் கொடே அன்னவன் இடக்கையைத் துணிப்ப
மாயை தொல் படை விடுத்திடுவேன் என மதித்தான்
ஆய காலையில் அறிஞனும் அவன் தலை அறுத்தான்.
143
   
6747.
வாளில் அங்கு அவன் அடுதலும் சென்னியும் வரை நேர்
தோளும் யாக்கையும் வீழ்ந்தன சூரியன் பகைஞன்
நாள் உலந்தனன் அவன் உயிர் வௌவியே நடுவன்
ஆளி மொய்ம்பனை வழுத்தியே தென் புலத்து                                 அடைந்தான்.
144
   
6748.
சூரன் மாமகன் முடிந்தது முனிவரும் சுரரும்
ஆரும் நோக்கியே ஆடினர் பாடினர் ஆர்த்தார்
வீர வீரன் நீ யாம் என இளவலை வியந்து
மாரியாம் என அவன் மிசை பொழிந்தனர் மலர்கள்.
145
   
6749.
நுவல் அரும் திறல் சூர் மகன் பட்டது நோக்கி
அவலம் எய்தியே அழிந்திடு பூதர்கள் ஆர்த்துத்
தவலரும் திறல் வீரனை வழுத்தினர் தனது
கவலை நீங்கியே களித்தனன் செங்கதிர்க் கடவுள்.
146
   
6750.
அன்ன காலையில் வீரவாகுப் பெயர் அறிஞன்
தன் உளம் சிறந்து அகல் இரு விசும்பினைத் தணவா
இந் நிலத்திடை வந்து தன் துணைவர் தம் இனத்தைத்
துன்னி ஆங்கு அவர் புகழ்ந்திட இனையன சொல்வான்.
147
   
6751.
ஆன தொல் பெரு மாயையால் நம்மை முன் அலைத்த
பானு கோபனை அட்டனம் பகர்ந்த சூளுறவு
தானு முற்றியதால் இனி எம்பிரான் தன் முன்
சேனை தன்னொடு மேவுதும் செல்லுதிர் என்றான்.
148
   
6752.
மிக்க வீரன் இத்தன்மையை உரைத்தலும் வினவி
முக்கண் நாயகன் குமரவேள் இணை அடி முன்னம்
புக்கு நென்னலும் தொழுதில நன்று நீ புகன்றாய்
தக்கதே இது என்றனர் துணைவராம் தலைவர்.
149
   
6753.
ஆங்கு அவ் வெல்லையின் நம்பிதன் இளைஞரும்                                அடுபோர்
தாங்கு பூதரும் தானையம் தலைவரும் தழுவிப்
பாங்கர் வந்திடப் பொருகளம் ஒருவியே படர்ந்து
பூங் கிடங்கு சூழ் பாசறை இருக்கையுள் புகுந்தான்.
150
   
6754.
சோதி நீடிய பாசறை புகுந்திடு தூயோன்
பூதர் தம்மொடும் துணைவர்கள் தம்மொடும் போந்து
காதலாகியே அறுமுகத்து ஐயனைக் கண்டு
பாத பங்கயம் தன்னிடைப் பன் முறை பணிந்தான்.
151
   
6755.
பரிந்து பன் முறை வணங்கியே எழுதலும் பகவன்
தெரிந்து நோக்கி நீ சூர் மகனொடுபோர் செய்து
வருந்தி ஆங்கவற் செற்றனை ஆதலின் மகிழந்தாம்
விரைந்து கேண் மதி நல்குதும் வேண்டுவது என்றான்.
152
   
6756.
என்று மூவிரு முகம் உடைப் பண்ணவன் இயம்ப
நின்று போற்றிடும் இளையவன் எம்பிரான் நின்னை
அன்றி யான் செய்த செயல் இலை ஆயினும் அடியேன்
கொன்று மற்று இவண் அருளிய வேண்டும் என்று                                 உரைப்பான்.
153
   
6757.
கோல நீடிய நிதிபதி வாழ்க்கையும் குறியேன்
மேலை இந்திரன் அரசினைக் கனவினும் வெஃகேன்
மால் அயன் பெறு பதத்தையும் பொருள் என மதியேன்
சால நின்பதத்து அன்பையே வேண்டுவன் தமியேன்.
154
   
6758.
அந்த நல்வரம் முத்தியின் அரியது ஒன்று அதனைச்
சிந்தை செய்திடு தவத்தரும் பெறுகிலர் சிறியேன்
உய்ந்திடும் வகை அருள் செய வேண்டும் என்று உரைப்ப
எந்தை கந்தவேள் உனக்கு அது புரிந்தனம் என்றான்.
155
   
6759.
உடைய தொல் விறல் வாகுவுக்கு இவ்வரம் உதவிப்
புடையினில் தொழு துணைவர்க்கு நல்லருள் புரியா
அடைய மற்றவர் இருக்கைகள் வைகுவான் அருளி
விடை புரிந்தனன் யாவர்க்கும் மேலதாம் விமலன்.
156
   
6760.
செங்கதிர்ப் பகை அட்டவன் முதலிய திறலோர்
புங்கவன் தனைத் தொழுது தம் இருக்கையில் போனார்
இங்கு மற்று இது நின்றிட அவுணர் தம் இறைவற்கு
அங்கண் உற்றிடு செய்கையை மேல் இனி அறைவாம்.
157
   
6761.
ஈது இவர் புரிந்ததேல் இறைவன் தன்னையும்
காதுவர் என்பது கருத்துள் கொண்டு எழா
வாதுவர் கவனமா வழிக் கொண்டால் எனத்
தூதுவர் ஓடினர் துளங்கு நெஞ்சினார்.
158
   
6762.
மதி தொடு கடிமதில் மகேந்திரப் புரத்து
அதிர் தரு முரசொலி அவிந்து துன்பினான்
முதிர் உறும் அழுகுரல் முழங்கும் வீதி போய்க்
கதும் என அரசவைக் களத்துள் ஏகினார்.
159
   
6763.
துன்னிய பெரும் புனல் தூண்டு கண்ணினர்
உன்ன அரும் துயரினர் உயிர்க்கு நாசியர்
மன்னவன் இணை அடி வணங்கி உன் மகன்
முன் உறு தூதனால் முடிவு உற்றான் என்றார்.
160
   
6764.
தாழ்ந்தவர் மொழிந்திடு தன்மை கேட்டலும்
சூழ்ந்திடு திருவுடைச் சூரன் என்பவன்
ஆழ்ந்திடு துயர்க் கடல் அழுந்தி ஓ எனா
வீழ்ந்தனன் புரண்டனன் உயிர்ப்பு வீங்கினான்.
161
   
6765.
நக்கு உறு சுடர் என நடுகம் உள்ளுற
மிக்கு எழு குருதி நீர் விழிகள் கான்றிடத்
தொக்குடல் வியர்பொடு துளக்கம் கொண்டிட
அக்கணம் மயங்கினன் அறிவு சோர்ந்துளான்.
162
   
6766.
தளர்ந்து உடல் வெதும்புறத் தன் கண் சோர்வுற
உளந்திரிவு உற உயிர் ஊசல் ஆடிட
விளிந்தவராம் என வீழ்ந்து மான்றவன்
தெளிந்தனன் இரங்கினன் இனைய செப்பினான்.
163
   
6767.
மைந்தவோ என்றன் மதகளிறோ வல் வினையேன்
சிந்தையோ சிந்தை தெவிட்டாத தெள் அமுதோ
தந்தையோ தந்தைக்குத் தந்தை இலான் கொன்றனனோ
எந்தையோ நின்னை இதற்கோ வளர்த்தனனே.
164
   
6768.
வன்னச் சிறுவர் பலர் மாய்ந்தார் அவர் மாய்ந்து
முன்னைத் துணை என்று உளம் கொண்டு இருந்தனன்                                         ஆல்
என்னைத் தனியே வைத்து எந்தையுமே குற்றனையேல்
பின்னைத் தமியேன் பிழைக்கும் படி உண்டோ.
165
   
6769.
ஒன்னார் சிறையைவிடின் உய்வுண்டாம் என்றுமுனஞ்
சொன்னாய் அதுவும்இகழ்ந் துன்னைத் தோற்றனனால்
என்னாம் இனி அதனை எண்ணுவது இயாவருக்குந்
தன்னால் வராத வினை உளதோ தக்கோனே.
166
   
6770.
நன்று ஈது அல சமர்க்கு நண்ணுவது நண்ணலர் மேல்
என்றீர அமாக இசைத்தாயான் ஏகாமல்
சென்றீ எனவே செலுத்தி உனைப் போக்கினனால்
ஒன்று ஈங்கு உளதோ பிழை உன் மிசை ஐயா.
167
   
6771.
கைப் போது கொண்டு கடவுளர்கள் எல்லோரும்
முப்போதும் வந்து முறையால் வழிபடுவார்
ஒப்போதல் இல்லா உனது மேல் உள்ள பகை
இப்போது உடன் நீங்கியே முற்று இருந்தாரோ.
168
   
6772.
உன் ஆணைக்கு அஞ்சி உறங்காது உழன்றிடுமால்
இந் நாள் தனில் நீ இறந்தாய் என மகிழ்ந்து
பன்னாகப் பாயல் படுத்து இருவர் கால் வருடத்
தொல் நாள் எனவே கவலை இன்றித் துஞ்சானோ.
169
   
6773.
நம் தானவர் குலத்து நாயகமே நண்ணினர்க்கு ஓர்
சிந்தா மணியே திருவே என் தெள் அமுதே
எந்தாய் தனியே போய் எங்கிருந்தாய் அங்கே யான்
வந்தாலும் உன் தன் மதுர மொழி கேட்பேனோ.
170
   
6774.
சோராத சூழ்ச்சித் துணைவர் சிறார் எல்லாரும்
சேரார் பொருது அலைப்பச் சென்று ஒழிந்து போயினரால்
ஆராய்ந்து எனது துயர் ஆற்றுவதற்கு ஆருமிலை
வாராய் புதல்வா கடிது ஓடி வாராயே.
171
   
6775.
நீடித் திகழ் கதிரால் தீண்டி நினது சிறை
வீடிச் சதுர் முகத்தோன் வேண்டிட நீ விட்ட பின்னர்
வாடித் தளர்ந்து வசை படைத்த வெய்யவனார்
ஓடிக் ககனத்து உள மகிழ்ந்து செல்லாரோ.
172
   
6776.
பற்றார் அடித் தொண்டு பேணிப் பரந்து உழலும்
ஒற்று ஆனவனோ உனைத்தான் அட வல்லான்
அற்றார் தமது உடலுக்கு ஆவியாய்ச் சென்றிடவே
கற்றாயேல் என்னை மறந்திடவும் கற்றாயோ.
173
   
6777.
மா கொற்ற மைந்தன் மடிந்தான் எனக் கேட்டும்
ஏகிற்று இலையால் இருக்கின்றது இன்னும் உயிர்
வேகுற்றது உள்ளம் மிகு துயரம் வந்த வழிச்
சாகு உற்றதோர் வரமும் சங்கரன் பால் பெற்றிலனே.
174
   
6778.
வெற்றி உள மதலை வீந்தால் விளியாமல்
மற்றும் எனது உயிரும் வைகும் வலிதாகச்
செற்றிடலும் ஆகாது என் செய்கேன் அழியாமல்
பெற்ற வரமும் பிழையாய் முடிந்ததுவே.
175
   
6779.
ஆவியே கண்ணே அரசே உனைச் சமருக்கு
ஏவியே இவ்வாறு இரங்குதற்கோ இங்கு இருந்தேன்
கூவியே கொண்டு செலும் கூற்றுவன் ஒற்றோ அறியேன்
பாவியேன் இந்தப் பதி புகுந்த தூதுவனே.
176
   
6780.
கூற்றோன் நகரில் குறுகினையோ அன்னது அன்றேல்
வேற்றோர் இடம் தன்னில் மேவினையோ யான் ஒன்றும்
தேற்றேன் தனியே தியங்குகின்றேன் இத்துயரம்
ஆற்றேன் அரசே என் ஆருயிரே வாராயோ.
177
   
6781.
என்னா இரங்கி இறைவன் வருந்துதலும்
அன்னான் உழையில் அவுணர் சிலர் ஓடித்
துன்னார் களத்தில் துணிவுற்ற சீர் மதலை
பொன்னார் உடலம் கொடு புலம்பிப் போந்தனரால்.
178
   
6782.
சேந்த குஞ்சித் சிலதர் செஞ் ஞாயிறு
பாய்ந்த அண்ணல் படிவ மிசைக் கொளா
வேந்தன் முன் உற உய்த்து விரைந்தவன்
பூந்தண் சேவடி பூண்டு புலம்பினார்.
179
   
6783.
அண்டர் தம்மை அருஞ்சிறை வீட்டியே
தண்டகம் செய் தனிக் குடை மன்னவன்
துண்டம் ஆகிய தோன்றல் தன் யாக்கையைக்
கண்டு அரற்றிக் கலுழ்ந்து கலங்கினான்.
180
   
6784.
அற்ற மைந்தன் சிரத்தினை யாங்கையால்
பற்று நல் எழில் பார்த்திடும் கண்களில்
ஒற்றும் முத்தம் உதவும் உரன் இலாப்
புற்று அராவில் உயிர்க்கும் புரளுமால்.
181
   
6785.
துஞ்சல் ஆகித் துணிவுற்றும் தெவ்வர் மேல்
நெஞ்சு கொண்ட நெடுஞ்சினம் தீர்கிலை
விஞ்சு மானமும் வீரமும் வன்மையும்
எஞ்சுமே கொல் இனி உன்னொடு என்னுமால்.
182
   
6786.
கையில் ஒன்றைக் கதும் எனப் பற்றிடாச்
செய்ய கண்படு செம்புனல் ஆட்டியே
வெய்யவன் கொடு விண்ணினும் தந்தகை
ஐய ஈது கொலோ என்று அரற்றுமே.
183
   
6787.
வாள் அரம் படு வாளிகள் மூழ்கலில்
சாளரங்கள் எனப் புழை தாங்கிய
தோளை மார்பினை நோக்கும் தொலைவு இலா
ஆளை நீ அலது ஆர் உளரே எனும்.
184
   
6788.
பாறு உலாய பறந்தலை தன் இடை
வேறு வேறு அது நின் மெய்யினைக்
கூறு செய்து அவன் ஆவி குடித்தலால்
ஆறுமோ என் அகத்துயர் என்றிடும்.
185
   
6789.
மூண்ட போர்த்தொழில் முற்றிய என் மகன்
ஈண்டு வந்தது ஒர் தூதுவன் எற்றிட
மாண்டு உளான் என்று உரைத்திடின் மற்றியான்
ஆண்ட பேர் அரசு ஆற்றல் நன்றே எனும்.
186
   
6790.
சிரத்தை மார்பினைச் செங்கையைத் தொன்மை போல்
பொருத்தி நோக்கிப் புரளும் என் புந்தியை
வருத்தும் ஆகுலம் மற்று அது கண்டு நீ
இருத்தியோ உயிரே இன்னும் என்றிடும்.
187
   
6791.
மருளும் அங்கை மறிக்கும் மதலையை
அருளின் நோக்கி அழும் விழும் சோர்வுறும்
புரளும் வாயில் புடைக்கும் புவியிடை
உருளும் நீட உயிர்க்கும் வியர்க்குமே.
188
   
6792.
மன்னர் மன்னவன் மற்று இது பான்மையால்
இன்னல் எய்தி இரங்கலும் அச்செயல்
கன்னி மா நகர்க் காப்பினுள் வைகிய
அன்னை கேட்டனள் ஆகும் எய்தினாள்.
189
   
6793.
நிலத்தில் வீழ்ந்து சரிந்து நெடு மயிர்
குலைத்த கையள் குருதிபெய் கண்ணினள்
அலைத்த உந்தியுள் ஆற்ற அரும் துன்பினள்
வலைத் தலைப் படு மஞ்ஞையின் ஏங்கினாள்.
190
   
6794.
அல்லல் கூர்ந்த அவுணன் தன் காதலி
தொல்லை வைகிய சூழலை நீங்கியே
இல்லை ஆகிய என் மகன் காண்பன் என்று
ஒல்லை ஆவலித்து ஓடினள் ஏகினாள்.
191
   
6795.
மா வலிக்கு மடங்கல் ஒப்பான் தனிக்
காவலிக்குத் துயர் வந்த கன்னிமீர்
நாவல் இக்கணம் நண்ணுதிர் என்று கூய்
ஆவலித்தனர் ஆயிழைமார் எலாம்.
192
   
6796.
வாங்கு பூ நுதல் மன்னவன் தேவி தன்
பாங்கர் மங்கையர் பற்பலரும் குழீஇக்
கோங்கம் அன்ன முலை முகம் கொட்டியே
ஏங்கியே துயர் எய்தி இரங்கினார்.
193
   
6797.
இந்திரைக்கு நிகர் வரும் ஏந்திழை
அந்தம் இல்லது ஒர் ஆயிழை மாரொடு
முந்தி யேகி முடிந்து துணிந்திடு
மைந்தன் மீமிசை வீழ்ந்து மயங்கினாள்.
194
   
6798.
மயங்கினாள் பின் மனம் தெளிவு எய்தினாள்
உயங்கினாள் மிக ஓ என்று அரற்றினாள்
தியங்கினாள் உரும் ஏறு திளைத்திடு
புயங்கம் என்னப் புரண்டு புலம்பினாள்.
195
   
6799.
வெய்யோன் என்று ஊழ் தீண்டுதலோடும் விண்ணில்                                    போய்
கையோடு அன்னாற் பற்றினை வந்து என் கண் முன்னம்
மொய்யோடு அன்று வெஞ்சிறை செய்த முருகாவோ
ஐயோ கூற்றுக்கு இன்று இரையாவது அறியேனே.
196
   
6800.
பண்டே வானம் செந்தழல் மூட்டிப் பகை முற்றும்
கொண்டே சென்றாய் அப்பகல் உன்றன் கோலத்தைக்
கண்டேன் இன்றே இக்கிடை தானும் காண்பேனோ
விண்டேன் அல்லேன் இவ்வுயிர் தன்னை வினையேனே.
197
   
6801.
செந்தேன் மல்கும் பூமகள் செங்கைக் கிளி ஒன்று
முந்தே நின்னை வேண்டிட மொய்ம்பால் அது வாங்கித்
தந்தாய் நொந்தேற்கு இன்று ஒரு மாற்றம் தருகில்லாய்
அந்தோ அந்தோ செய்வகை ஒன்றும் அறியேனே.
198
   
6802.
பாபத்தாலோ விண்ணவர் ஆனோர் பலர் கூறும்
சாபத்தாலோ யாரினும் மேலாம் தனிமூவர்
கோபத்தாலோ எவ்வகையாலோ குறியேன் யான்
சோபத் தீயால் வாடினன் நின்னைத் தோற்றேனே.
199
   
6803.
பொன்போல் மேனிக் கந்தனை இவ்வூர் புகுவித்துக்
கொன் போர் மூட்டி மைந்தரை எல்லாம் கொல்வித்துத்
துன்போடு இந்நாள் நீயும் இறப்பச் சூழ்ந்தாரே
என் போல் ஆக வானவர் மாதர் எல்லோரும்.
200
   
6804.
வான்றா வுற்ற வச்சிர மொய்ம்பன் வடவைத் தீக்
கான்று ஆலிக்கும் வன்னி முகத்துக் கழல் வீரன்
மூன்றா நூற்றுப் பத்தினர் யார்க்கும் முதல் வந்த
தோன்றால் என்றே நின்னை இறைஞ்சிச் சூழ்ந்தாரோ.
201
   
6805.
துன்றேர் பெற்ற மெய்யொடு புந்தி துணிவாகச்
சென்றே வானில் புக்கனை நின் பால் செலும் வண்ணம்
ஒன்றே உள்ளம் தான் துணியாதால் உலைவு எய்தும்
நன்றே நன்றே சிந்தையும் யானும் நண்பம்மா.
202
   
6806.
கருந்தேன் மொய்த்த வண்டு என மின்னார் கட்கெல்லாம்
விருந்தே ஆகும் நின் நடை காணும் விதியற்றேன்
மருந்தே அன்னாய் நின்னை இழந்தேன் மற்று இங்ஙன்
இருந்தேன் அல்லேன் துஞ்சினன் அன்றோ இனியானே.
203
   
6807.
நையா நிற்கும் தேவர் தமக்கு நனி துன்பம்
செய்யா நிற்றல் நன்று அல என்றேன் அது தேராது
ஐயா நின்னைத் தோற்றனன் மன்னன் அவனும் தான்
உய்வான் கொல்லோ தன் உயிர் தானும் ஒழியாதே.
204
   
6808.
என்று இவை பன்னித் தேவி இரங்கினள் இரங்கலோடு
நின்றிடு துணைவி மாரும் நீடு தொல் கிளைஞர் யாரும்
கன்று ஒழி புனிற்றா என்னக் கதறினர் காமர் மூதூர்
வென்றியை நீங்கி அந்நாள் விழும நோய் மிக்கது                                    அன்றே.
205
   
6809.
அன்னது காலை தன்னில் அவுணர் கோன் இரக்கம்                                     நீங்கிப்
பன்னரும் சிறப்பின் மிக்க பதுமையே முதலோர் தம்மைத்
தொன்னிலை இருக்கை உய்த்துத் துண் எனச் சீற்றம்                                     கொண்டு
தன்னுழைத் தொழுது நின்ற தானவர்க்கு இதனைச்                                     சொல்வான்.
206
   
6810.
மாற்றலர் தொகையை எல்லாம் வல்லையில் இன்றே                                     செற்றுச்
சீற்றமாய்ச் குருதி வீட்டித் தீமகம் ஒன்றை ஆற்றி
ஈற்றுறு மைந்தன் தன்னை எழுப்புவன் இந்த மெய்யை
வீற்றொரு சாரின் இட்டு விடாது போற்றிடுதிர் என்றான்.
207
   
6811.
அன்னது பலரும் கேளா அழகிது என்று எடுத்து மைந்தன்
பொன் உடல் ஒரு சார் உய்த்துப் போற்றினர்                             போற்றலோடும்
மன்னவன் வெகுண்டு நம்தம் மாற்றலர் தொகையை                             எல்லாம்
என் இளையோனுக்கு ஊணா அளிப்பன் என்று எண்ணம்                             கொண்டான்.
208
   
6812.
தும்பை அஞ்சுழியல் வேய்ந்த சூர் முதல் இவ்வாறு                                   உன்னிச்
செம்புனல் ஒழுகு பைங்கண் தூதரில் சிலரை நோக்கி
அம்புதி வடாது பாங்கர் ஆசுரத்து அரசு செய்யும்
எம்பியை வல்லை ஓடிக் கொண்ருதிர் ஈண்டை என்றான்.
209