விண் குடியேற்று படலம்
 
8161.
ஆன சிற்சில வைகல் சென்றிடுதலும் அணங்கும்
தானும் உற்றிடும் உறையுளை ஒரு பகல் தணந்து
வானவர்க்கு இறை வினைக் குறை நிரப்புதல் வலித்துக்
கோன் நகர்ப் பெரும் புதவினில் வந்தனன் குமரன்.
1
   
8162.
உவாவின் மாதுடன் உவாவினுக்கு இளையவன் உவாவில்
திவாகரன் மதியாம் என வருதலும் தெரிந்து
தவாத அன்புடை வயவரும் சாரதர் எவரும்
அவாவொடு அன்னவர் அடி முறை வணங்கி நின்று                                     ஆர்த்தார்.
2
   
8163.
அனிகம் ஆர்த்திடல் செவிப்புலம் படர்தலும் அடல்
                                      வேல்
புனித நாயகன் போந்தனன் போந்தனன் என்று
வனச மேலவன் மாலவன் மகபதி வானோர்
முனிவர் யாவரும் எழுந்தனர் விரை செலல் முன்னி.
3
   
8164.
எழுதரு கின்றவர் யாரும் ஓர் இமைப்
பொழுது உறும் அளவையில் போந்து மன்னுயிர்
முழுது அருள் புரிதரு முதல்வன் சேவடி
தொழுதனர் இறைஞ்சினர் சூழ்ந்து போற்றலும்.
4
   
8165.
கொந்து அவிழ் அலங்கலங் குவவுத் தோளினான்
வந்து வந்தனை புரிவதனை நோக்கியே
நந்தனி ஊர்தியை நடாத்திச் செல்க எனச்
சிந்தையில் விரைதரு தேர் கொண்டு ஏகினான்.
5
   
8166.
ஆசுகன் உய்த்திடும் அம் பொன் தேர் மிசை
வாசவன் அருள்புரி மடந்தை தன்னுடன்
தேசுடை அறுமுகச் செம்மல் கண்ணுதல்
ஈசனும் கவுரியும் என்ன எய்தினான்.
6
   
8167.
சூரி னோடு துனை பரித் தேர் மிசைச்
சூரினோடு துணைவன்வந்து எய்தலும்
வாரி வீசினர் மாமலர் பன்முறை
வாரி வீசினர் வானவர் யாருமே.
7
   
8168.
பூத வீரரும் போர்ப்படை மள்ளரும்
மூது உணர்ந்த முனிவன் சிறார்களும்
கோதை வேல் உடைக் கொற்றவற்காம் பணி
ஏதும் ஆற்றி இனிது அயல் சுற்றினார்.
8
   
8169.
மாகர் யாரும் வணங்க அவரவர்
சேகரத்தினில் சேவடி சூட்டியே
தோகை மாமயில் தோன்றல் முன் நின்றதால்
ஆகையால் தவம் ஆற்றலதே அன்றோ.
9
   
8170.
பூவினன் முதல் புங்கவர் யாரையும்
மூவிரண்டு முகத்தவன் கண் உறீஇ
நீவிர் எல்லிரும் நேர்ந்த நும் ஊர்தியின்
மேவி எம்மொடு செல்லுமின் விண் என்றான்.
10
   
8171.
என்னலோடும் இனிது என நான்முகன்
அன்ன மீதினும் அச்சுதப் பண்ணவன்
பன்ன கேசன் பகைஞன் தன் மீதினும்
முன்னர் ஏறி முதல்வனை எய்தினார்.
11
   
8172.
மாறு இல் வெள்ளி மலைப்படு தெண் கயத்து
ஊறு நீத்தது ஓழுக்கு என மும் மதத்து
ஆறு பாயும் அடல் அயிரா வதத்து
ஏறி வந்தனன் இந்திரன் என்பவன்.
12
   
8173.
மற்று நின்று உள வானவர் யாவரும்
முற்று உணர்ந்த முனிவரும் தத் தமக்கு
உற்ற ஊர்திகள் ஊர்ந்து எம் இறைவனைச்
சுற்றி நின்று துதித்து உடன் மேயினார்.
13
   
8174.
வள்ளல் இத் துணை வான் உலகத்து இடைப்
பொள் எனப் புகப் போதுகின்றான் எனாக்
கொள்ளையில் பலர் கூறலும் கூளியின்
வெள்ளம் முற்றும் விரைந்து எழுந்திட்டவே.
14
   
8175.
குட முழாப் பணை கொக்கரை தண்ணுமை
படகம் ஆதிய பல்லியம் ஆற்றியே
புடை நெருங்கிய பூதரில் எண்ணிலார்
இடி முழங்கியது என்ன இயம்பினார்.
15
   
8176.
ஈங்கு இத் தன்மையின் ஈண்டு பரிசனம்
பாங்கு உற்று ஏகப் பரஞ்சுடர் பண்ணவன்
ஓங்கல் கொண்ட ஒரு தனிக் கோ நகர்
நீங்கிச் சேணின் நெடு நெறிப் போயினான்.
16
   
8177.
அந்தரத்தில் அமர் உலகம் தனைக்
கந்தன் அங்கு ஒரு கன்னலின் நீங்கியே
இந்திரப் பெயர் எய்திய மாதுலன்
முந்தி இருந்த முது நகர் மேவினான்.
17
   
8178.
விண் தொடர் பொன் நகர் மேலைச் சூர் மகன்
நுண் துகள் செய்திட நொய்தின் உற்றதும்
அண்டர்கள் இறையவன் அகம் கொள் வேட்கையும்
கண்டனன் குமரவேள் கருணை ஆழியான்.
18
   
8179.
வீக்கு உறு கனை கழல் விமல நாயகன்
ஆக்கம் இல் விண் உலகு அளிக்கும் பெற்றியால்
தேக்கிய விஞ்சையின் தெய்வத் தச்சனை
நோக்கினன் இனையன நுவறன் மேயினான்.
19
   
8180.
செல்லலை அகன்றிடு தேவர் மன்னவன்
எல்லை இல் வளனொடும் இருக்கும் பான்மையால்
தொல்லை அதாம் எனத் துறக்க நல்குதி
வல்லையில் என்றலும் வணங்கிப் போயினான்.
20
   
8181.
நூறு எரிந்திடு நோன்மையோன், மாறு இல் பொன் நகர்                                     மாடு உற
வீறு மா மதில் விண் உலாம், ஆறு பாய அமைத்தனன்.
21
   
8182.
ஆயிரம் மலர் அம் புயன், சேய வாய்கள் திறந்து என
ஞாயில் மா மதில் நள்ளுற, வாயில் நான்கு வகுத்தனன்.
22
   
8183.
நால் திசைக் கண நாதரும், ஆற்றவே அரிதாம் என
ஏற்ற கோபுரம் ஏழ்நிலை, வீற்று வீற்று விதித்தனன்.
23
   
8184.
வண்ண மா மதில் வைப்பினுள் அண்ணல் அங்கிரி ஆழி                                 சூழ்
கண்ணகன் புவிக் காட்சி போல், எண் இல் வீதி                                 இயற்றினான்.
24
   
8185.
பூவின் மேல் வரு புங்கவத், தேவு நாண் உறு செய்கையில்
காவல் மா நகரத்து இடைக், கோவில் ஒன்று குயிற்றினான்.
25
   
8186.
தேவு காமுறு செய்வரை, காவி மல்கு கயத்தொடு
வாவி பொய்கை வரம்பு இல, ஓவில் பான்மையின்                                உதவினான்.
26
   
8187.
மாட மாளிகை மண்டபம், ஈடு சேர் அரி ஏற்றணை
பாடு சேர் தரு பாழிகள், நாடி ஏர்தக நல்கினான்.
27
   
8188.
ஏறு சீர் இந்திரன் இருக்கும் கோயிலும்
ஆறு மா முகப் பிரான் அமரும் கோட்டமும்
மாறு இலா மால் அயன் மந்திரங்களும்
வேறு உளார் இருக்கையும் விதித்திட்டான் அரோ.
28
   
8189.
கூன் முக வால் வளைக் குரிசில் ஊரினும்
நான் முகன் ஊரினும் நலத்தது என்றிட
வான் முக வியன் நகர் வளமை சான்றிட
நூன் முக நாடியே நுனித்து நல்கினான்.
29
   
8190.
பொன்னினுக்குப் புகல் இடம் ஆக வான்
மன்னினுக்குச் செய் மா நகர் வண்மையை
என்னினுக்கும் இயம்ப வற்றோ கலை
மின்னினுக்கும் விதிப்பரும் தன்மையே.
30
   
8191.
இனைத்தி யாவும் இமைப்பு இடைச் சிந்தையின்
நினைப்பில் செய்த நிலைமையை நோக்கியே
நனைத் துழாய் முடி நாரணன் நான்முகன்
மனத்தின் ஊடு மகிழ்ச்சியை மேவினார்.
31
   
8192.
வல்லை வேதன் வகுப்பது மற்று உனக்கு
இல்லை நேர் என்று இனிது புகழ்ந்திட
அல்லர் தீர் அமரர்க்கு இறை காண்குறீஇப்
புல்லினான் அப் புனைவனை என்பவே.
32
   
8193.
அணங்கு சால்புரம் அவ்வகை நல்கியே
நுணங்கு நூலவன் சண்முகன் நோன் கழல்
வணங்கி நிற்ப அருள் செய்து மாடு உறு
கணங்களோடு கதும் எனப் போயினான்.
33
   
8194.
அன்ன காலை அரம்பை யாரோடு ஒரு
பொன்னின் மானம் புகுந்து புலோமசை
கன்னல் ஒன்றினில் காமரு பொன்னகர்
மன்னன் மந்திரம் வந்து அடைந்தாள் அரோ.
34
   
8195.
அடையும் எல்லை அறுமுகப் பண்ணவன்
இடை நிலைப் படும் இந்திரன் கோ நகர்க்
கடை முதல் செலக் கஞ்சனை ஆதியோர்
உடைய தத் தமது ஊர்தியின் நீங்கினார்.
35
   
8196.
அக் கணம் தனில் அண்டர்கள் யாவரும்
தொக்கு உடன் வரத் தோகை அன்னாள் உடன்
செக்கர் மாமணித் தேரினும் தீர்ந்து ஓராய்ப்
புக்கு மேயினன் பொன் புனை மன்றமே.
36
   
8197.
தன் துணை மஞ்ஞை ஆகித் தாங்குதல் தெரிந்து
                             இயானும்
இன்று இவன் பரிப்பன் என்னா இளவலும் அமைந்தது                              என்ன
மன்று இடை இருந்த தெய்வ மடங்கல் அம் தவிசின்                              உம்பர்
வென்றியந் தனிவேல் அண்ணல் வீற்று இருந்து                              அருளினானே.
37
   
8198.
அன்னது ஓர் அளவை தன்னில் அறுமுகன்                            அலரிப்புத்தேள்
முன்னவர் தம்மை எல்லாம் முழுது அருள் புரிந்து
                           நோக்கி
இந் நகர் அரசு போற்ற இமையவர் இறைவற்கு இன்னே
பொன் அணி மவுலி தன்னைப் பொள் எனப் புனைதிர்                            என்றான்.
38
   
8199.
என்று இவை குமரன் கூற இனிது என இசைவு கொள்ளா
அன்று ஒரு கணத்தின் முன்னர் அட்ட மங்கலமும் தந்து
மன்றல் கொள் கவரி ஒள் வாள் மணிமுடி கவிகையோடு
நின்று உள உறுப்பும் ஏனைப் பொருள்களும் நெறியின்                                       உய்த்தார்.
39
   
8200.
அரசியல் உரிமைத்து எல்லாம் ஆங்கு அவர் அழைத்துக்                                   கங்கைத்
திரை செறி தெண்ணீர் ஆட்டிச் செழுந்துகில் கலன்கள்                                   சாந்தம்
விரை செய்தார் புனைந்து சீய வியன் பெரும் தவிசின்                                   ற்றி
வரிசையோடு இந்திரற்கு மணி முடி சூட்டினார் ஆல்.
40
   
8201.
சுடர்த் தனி மவுலி தன்னைச் சூட்டலும் துறக்கத்து                                  அண்ணல்
அடித்துணை பணிந்தார் வானோர் அனைவரும் ஆசி                                  தன்னை
எடுத்து எடுத்து இயம்பல் உற்றார் இருடிகள் அரம்பை                                  மாதர்
நடித்தனர் விஞ்சை வேந்தர் நல்லி யாழ் நவின்று                                  இசைத்தார்.
41
   
8202.
இந்திரன் அனைய காலை எம்பிரான் முன்னர் ஏகி
வந்தனை புரிந்து போற்றி வளம் மலி துறக்க நாடு
முந்து உள அரசும் சீரும் முழுது ஒருங்கு அளித்தி                                    எந்தாய்
உய்ந்தனன் இதன் மேல் உண்டோ ஊதியம் ஒருவர்க்கு                                    என்றான்.
42
   
8203.
என்றலும் அருள் செய்து அண்ணல் இந் நகர் அரசு                                    போற்றி
நன்று இவண் இருத்தி என்னா நாகர் கோன் தன்னை                                    வைத்து
நின்று உள அமரர் தம்மை நிலைப்படும் இருக்கைக்கு                                    ஏவித்
தன் துணை அணங்கு தானும் தன் பெரும் கோயில்                                    போந்தான்.
43
   
8204.
குறில் நெடில் அளவு சான்ற கூளியும் வயவர் யாரும்
வறியது ஓர் அணுவும் செல்லா மரபினால் வாயில்
                                  போற்ற
உறையுளின் இருக்கை நண்ணி ஒரு பெரும் தலைவி                                   யோடும்
அறுமுக வள்ளல் பல்வேறு ஆடல் செய்து இருந்தான்                                   அன்றே.
44
   
8205.
தூவி அம் தோகை மேலோன் துணைவியோடு இருந்த                                       காலைப்
பூவினன் முதலோர் தத்தம் புக்கிடம் அமர்ந்தார் அன்றே
தேவர்கள் இறைவன் தானும் சேயிழை சசியும் ஆக
மேவினன் இன்பம் துய்த்து விண் உலகு அரசு செய்தான்.
45
   
8206.
இனைத்து இயல் கின்ற எல்லை இந்திர வளனே அன்றி
அனைத்து உலகத்தும் உள்ள ஆக்கமும் தாம் பெற்ற                                      என்ன
மனத்து இடை உவகை கொண்டு மா நகர் இருக்கை                                      புக்குத்
தனித் தனி அமரர் எல்லாம் சாறு அயர்ந்து அமர்தல்                                      உற்றார்.
46