உபதேசப் படலம்
 
8279.
மாயையின் வலியோன் ஆகி மான் முதலோரை வென்றே
ஆயிரத்து ஓர் எட்டு அண்டம் அரசு செய்து உக நூற்று                                         எட்டுக்
காயம் அது அழிவு இன்று ஆகிக் கடவுளர்க்கு அலக்கண்                                         செய்த
தீய சூர் முதலைச் செற்ற குமரன்தாள் சென்னி வைப்பாம்.
1
   
8280.
உலகினுள் மேலது ஆகி ஓங்கு பேர் ஒளியாய் வான்மேல்
தலைமையது ஆகி வைகும் சத்திய உலகம் தன்னில்
புலன் உணர் முனிவர் தேவர் புதல்வர்கள் புடையில்                                    போற்ற
மலர் அயன் தனது கோயில் மன்றில் வீற்று இருந்தான்                                    அன்றே.
2
   
8281.
இருந்திடும் காலை வேதா யாவையும் அளிப்ப மேல் நாள்
தெரிந்து அருள் பதின்மர் ஆகும் சீர்கெழு குமரர் தம்                                     உள்
பொருந்திய தக்கன் என்னும் புந்தியின் மேலோன் முன்                                     செய்
அரும் தவ நெறியால் ஈது ஒன்று அயனை வினவல்                                     உற்றான்.
3
   
8282.
தேவரின் முதல்வர் ஆகிச் சிற்குணத்து தலைவர் ஆகி
மூவரில் உயர்ந்தோர் ஆகி முடிவு இலா ஒருவர் ஆகி
ஓவற உயிர்கள் தோறும் உயிரென உறைவோர் ஆகி
மேவினர் தம்மைத் தேற விளம்புதி மேலோய் என்றான்.
4
   
8283.
என்று தன் மைந்தன் இவ்வாறு இயம்பலும் மலரோன்                                    கேளா
நன்று இது மொழிவான் கேட்டி நாரணன் தானும் யானும்
அன்று அமர் இயற்றும் எல்லை அழல் என எழுந்து                                    வானில்
சென்றது ஓர் சிவனே யார்க்கும் மேலவன் தெளிநீ                                    என்றான்.
5
   
8284.
தரு செயல் வல்லோன் ஈது சாற்றலும் செயலோர் மூன்றின்
இரு செயல் புரியும் நீவிர் ஏதிலர் ஆகப் பின்னர்
ஒரு செயல் புரியும் ஈசன் உங்களுக்கு இறைவன் ஆகி
வருசெயல் என்னே சிந்தை மயக்கு அற உரைத்தி                                  என்றான்.
6
   
8285.
தன் புகழ் கருத்தின் மிக்க தக்கன் ஈது உரைத்தலோடும்
சிற்பரன் நிலைமை அன்னான் அருளினால் தெரிந்த                                     வேதாச்
சொல் படு மறைகள் முன் நீ துகள் அறக் கற்றுத் தூய
நல் பொருள் தெரிந்தவாறு நன்று நன்று என்ன நக்கான்.
7
   
8286.
பின் உற முடிப்பான் தன்னைப் பிரான் எனத் தேற்றும்                                       தன்மை
என்னென உரைத்தி மைந்த எங்களைச் சுரரை ஏனைத்
துன்னிய உயிர்கள் தம்மைத் தொலைவு செய்திடுவன்                                       ஈற்றில்
அன்னவன் என்னில் முன்னம் அளித்தவன் அவனே                                       அன்றோ.
8
   
8287.
அந்த நாள் ஒருவன் ஆகி ஆர் உயிர்த் தொகையைத்                             தொல் நாள்
வந்தவாறு ஒடுங்கச் செய்து மன்னியே மீட்டும் அன்னை
தந்தை ஆய் உயிர்கட்கு ஏற்ற தனு முதல் அளிக்கும்                             முக்கண்
எந்தை தன் செய்கை முற்றும் இனையது என்று
                            இசைக்கற் பாற்றோ.
9
   
8288.
செம் கண் மால் தன்னை என்னைத் திண் திறல்                              மொய்ம்பின் நல்கி
அம் கண் மா ஞாலம் காப்பும் அளிப்பதும் உதவி யாமும்
உங்கள் பால் இருந்தும் என்று எம் உயிருள் நின்று                              இயற்றா நின்றான்
எங்களால் முடியும் செய்கை யாவதும் இல்லை கண்டாய்.
10
   
8289.
உயிர் உள் நின்று இயற்றல் அன்றி உற்ற நம் சிந்தை                                      உள்ளும்
இயல் முறை வழாது காப்போன் இருவிழி அகத்தும்                                      ஆனான்
மயல் உறு பொழுதும் எம்பால் வந்து அருள் செய்வன்                                      தான் ஓர்
செயல் புரி கின்றான் போல எம்மொடு செறிவன் அன்றே.
11
   
8290.
எள் உறும் எண்ணெய் என்ன எறிமணி அரவம் என்னக்
கள் உறு போது கான்ற கடி எனச் சலாகை தன்னில்
தள் உற அரிய சோதி தான் என உலகம் எங்கும்
உள்ளொடு புறமும் ஆகி ஒருமையால் பரவும் அன்றே.
12
   
8291.
வேதமே முதலா உள்ள வியன் கலை அனைத்தும் தொல்                                     நாள்
ஓதினான் அவனே எங்கட்கு உரைத்திட உணர்ந்தாம்                                     அன்றே
ஈது நீ அவற்றில் காண்டி யாரும் ஒன்றாகக் கொண்டாய்
பேதையோ பெரிதும் என்னப் பிதாமகன் இனைய                                     சொற்றான்.
13
   
8292.
அவன் இது புகறலோடும் அருள் மகன் இசைப்பான்                                     மேலாம்
சிவன் அருள் வேதம் பூதத்து திறத்தையும் உயிர்களோடும்
எவரையும் பிரமம் என்றே இசைப்பது என் எனது நெஞ்சம்
கவல் உறு கின்றது எந்தை கழறுதி கடிதின் என்றான்.
14
   
8293.
என்னலும் கமலத்து அண்ணல் யாவரும் தெரிதல் தேற்றா
உன் அரும் பெற்றி ஈது என்று உணர்தரக் கேட்டி                                    அன்னான்
சொன்னது ஓர் மறைகள் தம்மில் துணிபு கேள் இறுதி                                    இல்லா
முன் அவற்கு காதல் உண்மை ஒழிந்தன முகமன் ஆம்                                    ஆல்.
15
   
8294.
ஆதலால் ஈசன் அல்லால் அனைவர்க்கும் உயிர்க்கும்                                    ஐந்தாம்
பூதம் ஆனவைக்கும் ஏற்றம் புகலுதல் முகமன் ஆகும்
ஓதலாம் மேலது ஆக ஒரு பொருள் புகழ வேண்டின்
வேத பாரகரை அன்றோ யான் என விளம்புகின்றார்.
16
   
8295.
யாது ஒரு பொருளை யாவர் இறைஞ்சினும் அது போய்                                    முக்கண்
ஆதியை அடையும் அம்மா அங்குஅது போலத்
                                   தொல்லை
வேதம் அது உரைக்க நின்ற வியன் புகழ் அனைத்தும்                                    மேல் ஆம்
நாதனை அணுகும் எல்லா நதிகளும் கடல் சென்று என்ன.
17
   
8296.
கேள் இனி மைந்த வேதக் கிளை எலாம் இயம்பு கின்ற
சூள் உரை சிவனே எல்லாம் தோற்றுவித்து அளித்து                                      மாற்றி
மீளவும் தருகின்றானும் வியன் உயிர்க்கு அருளை நல்கி
ஆளும் நாயகனும் ஆதி அந்தம் இலோனும் என்னும்.
18
   
8297.
அத்தனும் பகவன் தானும் அருவமும் உருவும் ஆகும்
சுத்தனும் உணர்தற்கு ஒண்ணாச் சேதியும் யாண்டு மேவும்
சித்தனும் அநாதி தானும் தேவர்கள் தேவும் என்று
நித்தனும் உயிர்க்குள் நீங்கா நிருத்தனும் அவனே என்னும்.
19
   
8298.
மூன்று எனும் உலகம் தன்னில் முளைத்திடு பொருளை                                     எல்லாம்
ஈன்று அருள் புரியும் தாதை எனும் திரயம் பகனும்                                     யார்க்கும்
சான்று என நிற்கின் றோனும் தாணுவும் பரனும்
                                    தன்னைப்
போன்றவர் உயர்ந்தோர் இல்லாப் புங்கவன் தானும்                                     என்னும்.
20
   
8299.
அண்ணலும் ஏகன் தானும் அளப்பு அரும்
                            குணத்தினானும் உம்
கண்ணனும் அயனும் தம்மால் காணிய நில்லான் தானும்
பெண்ணொடு ஆண் அலியது என்னும் பெற்றி                             இல்லோனும் யாரும்
எண்ணிய எண்ணி யாங்கே ஈபவன் தானும் என்னும்.
21
   
8300.
விதிமுதல் உரைக்க நின்ற வியன் உயிர்த் தொகைகட்கு                                 எல்லாம்
பதி என அருளும் தொன்மைப் பசுபதி தானும்                                 அன்னோர்க்கு
அதிகன் என்று எவரும் தேற ஆங்கு அவர் துஞ்ச
                                வெந்த
பொதி தரு பலியும் என்பும் புனைபவன் தானும் என்னும்.
22
   
8301.
ஊன் புகும் எவரையும் உந்தன் ஒண் குணத்து ஒடுக்கித்                                       தானே
வான் புகல் ஆகி நின்று மற்று அவர் குணங்கள் ஊடு
தான் புகல் இல்லா தோனும் தன் இயல் இனையது என்றே
யான் புகல் அரிய தேவும் ஈசனும் அவனே என்னும்.
23
   
8302.
அன்றியும் ஒன்று கேண்மோ அம்புயன் ஆதி ஆகி
நின்றவர் தம்மை எல்லாம் நீக்கி அச் சிவன் என்று உள்ள
ஒன்று ஒரு முதல்வன் தானே உய்த்திடு முத்தி வேண்டின்
என்றும் அஃது இயம்பிற்று என்னின் யாவரே தேவர்                                       ஆவார்.
24
   
8303.
பர சிவன் உணர்ச்சி இன்றிப் பல் உயிர்த் தொகையும்                                  என்றும்
விரவியது உயர்க்கு ஈறு எய்தி வீடு பேறு அடைதும்                                  என்றல்
உருவம் இல் விசும்பின் தோலை உரித்து உடுப்பதற்கு                                  ஒப்பு என்றே
பெரு மறை இயம்பிற்று என்னில் பின்னும் ஓர் சான்றும்                                  உண்டோ.
25
   
8304.
இன்னமும் பல உண்டு தன்னால் இயம்பிய மறையின்                                    வாய்மை
அன்னதை எனக்கும் உன்னி அறை ஒணாது அறைவன்                                    என்னில்
பல் நெடும் காலம் தேயும் பகரினும் உலவாது என் பால்
முன்னம் ஈது உணர்ந்தாய் ஏனும் மோகம் உற்றாய் கொல்                                    ஐயா.
26
   
8305.
கார் எழில் புரையும் மேனிக் கண்ணனை என்னைப்                                   பின்னை
ஆரையும் புகழும் வேதம் அரன் தனைத் துதித்ததே                                   போல்
ஓர் உரை விளம்பிற்று உண்டோ உரைத்தது முகமன்                                   என்றே
பேர் உலகு அறிய முன்னும் பின்னரும் விலக்கிற்று                                   அன்றே.
27
   
8306.
நால் மறை தனில் ஓர் பாகம் நாரம் ஆர் கடவுள் சென்னி
மேன்மை அது இயம்பும் எம்மை விண்ணவர் தம்மை                                      ஏனைப்
பான்மை கொள் பூதம் தன்னைப் பல் பொருள் தனையும்                                      பாதி
தான் மொழிந்திடும் ஆல் ஈது தவறு அல உணர்தி                                      தக்கோய்.
28
   
8307.
நம்மையும் பரம் என்று உன்னி நாதனில் சிறப்புச் செய்யும்
வெம்மை கொள் நெஞ்சர் தீரா விழும வெம் நிரயம்                                    வீழ்வர்
தம்மை அஃது எடுத்தல் செய்யா சமம் எனப் புகல்கிற்                                    போர்கள்
எம்மையும் துயரம் என்னும் இரும் கடல் படுப்பர் அன்றே.
29
   
8308.
கான் உறு புலித் தோல் ஆடைக் கண் நுதல் கடவுட்கு                                       அன்பர்
ஆனவர் என்றும் அன்னாற்கு அடித் தொழில் புரிந்து                                       வாழும்
வானவர் என்றும் எம்மை வழுத்தினர்க்கு அருள்வோம்                                       அல்லா
ஏனையர் தம்மைத் தெவ் என்று எண்ணியே இருத்தும்                                       யாமே.
30
   
8309.
பதி அரன் பாசம் தன்னில் பட்டு உழல் பசு நாம் என்றே
விதியொடு மறைகள் கூறும் மெய்மையைத் தெளிய                                    வேண்டின்
இது என உரைப்பன் யாங்கள் இவ் அரசு இயற்ற ஈசன்
அதிர் கழல் அருச்சித்து ஏத்தும் ஆலயம் பலவும் காண்டி.
31
   
8310.
அவன் அருள் பெறாது முத்தி அடைந்தனர் இல்லை                                    அல்லால்
அவன் அருள் இன்றி வாழும் அமரரும் யாரும் இல்லை
அவன் அருள் எய்தின் எய்தா அரும் பொருள் இல்லை                                    ஆணை
அவன் அலது இறைவன் இல்லை அவனை நீ அடைதி                                    என்றான்.
32