உமை வரு படலம்
 
9544.
பேசும் இவ் வேள்வி பிதா மகன் மைந்தன்
நாசம் விளைந்திட நாடி இயற்ற
மாசு அறு நாரத மா முனி உற்றே
காசினி மேல் இது கண்டனன் அன்றே.
1
   
9545.
கண்டனன் ஆல் அமர் கண்டனை நீக்கிப்
புண்டரிகம் திகழ் புங்கவன் மைந்தன்
அண்டருடன் மகம் ஆற்றினன் அன்னான்
திண்திறல் கொல் இது செய்திடல் என்னா.
2
   
9546.
எண்ணிய நாரதன் எவ் உலகும் செய்
புண்ணியம் அன்னது ஒர் பூம் கயிலாயம்
நண்ணி முன் நின்றிடு நந்திகள் உய்ப்பக்
கண் நுதல் சேவடி கை தொழுது உற்றான்.
3
   
9547.
கை தொழுது ஏத்திய காலை அன்னானை
மை திகழ் கந்தர வள்ளல் கண் உற்றே
எய்தியது என் இவண் இவ் உலகத்தில்
செய்தி அது என் அது செப்புதி என்றான்.
4
   
9548.
எங்கணும் ஆகி இருந்து அருள்கின்ற
சங்கரன் இம்மொழி சாற்றுதல் ஓடும்
அங்கு அது வேலையில் அம் முனி முக்கண்
புங்கவ கேட்டி எனப் புகல்கின்றான்.
5
   
9549.
அதிர் தரு கங்கை அதன் புடை மாயோன்
விதி முதலோர் ஒடு மேதகு தக்கன்
மதி இலியாய் ஒர் மகம் புரிகின்றான்
புதுமை இது என்று புகன்றனன் அம்மா.
6
   
9550.
ஈங்கு அது கூறலும் எம்பெருமான் தன்
பாங்கரின் மேவு பராபரை கேளா
ஆங்கு அவன் மாமகம் அன்பொடு காண்பான்
ஓங்கு மகிழ்ச்சி உளத்து இடை கொண்டாள்.
7
   
9551.
அம் கணன் நல் அருளால் அனையான் தன்
பங்கு உறைகின்றனள் பாங்கரின் நீங்கி
எங்கள் பிரானை எழுந்து வணங்கிச்
செம் கை குவித்து இது செப்புதல் உற்றாள்.
8
   
9552.
தந்தை எனப்படு தக்கன் இயற்றும்
அந்த மகம் தனை அன்பொடு நோக்கி
வந்திடு கின்றனன் வல்லையில் இன்னே
எந்தை பிரான் விடை ஈகுதி என்றாள்.
9
   
9553.
என்றலும் நாயகன் ஏந்திழை தக்கன்
உன்தனை எண்ணலன் உம்பர்களோடும்
வன் திறல் எய்தி மயங்கு உறு கின்றான்
இன்று அவன் வேள்வியில் ஏகலை என்றான்.
10
   
9554.
இறை இது பேசலும் ஏந்திழை வேதாச்
சிறுவன் எனப்படும் தீயது ஒர் தக்கன்
அறிவு இலன் ஆகும் அவன் பிழை தன்னைப்
பொறு மதி என்று அடி பூண்டனள் மாதோ.
11
   
9555.
பூண்டனள் வேள்வி பொருக்கு என நண்ணி
மீண்டு இவண் மேவுவல் வீடு அருள் செய்யும்
தாண்டவ நீ விடை தந்து அருள் என்றாள்
மாண்தகு பேர் அருள் வாரிதி போல் வாள்.
12
   
9556.
மாது இவை கூறலும் வன்மை கொள் தக்கன்
மே தகு வேள்வி வியப்பினை நோக்கும்
காதலை ஏல் அது கண்டனை வல்லே
போதுதி என்று புகன்றனன் மேலோன்.
13
   
9557.
அரன் விடை புரிதலும் அம்மை ஆங்கு அவன்
திருவடி மலர் மிசைச் சென்னி தாழ்ந்து எழா
விரைவுடன் நீங்கி ஓர் விமானத்து ஏறினாள்
மரகத வல்லி பொன் வரை உற்றால் என.
14
   
9558.
ஐயை தன் பேர் அருள் அனைத்தும் ஆங்கு அவள்
செய்ய பொன் முடி மிசை நிழற்றிச் சென்று எனத்
துய்யது ஒர் கவுரிபால் சுமாலி மாலினித்
தையலார் மதிக் குடை தாங்கி நண்ணினார்.
15
   
9559.
துவர் இதழ் மங்கலை சுமனை ஆதியோர்
கவரிகள் இரட்டினர் கவுரி பாங்கரில்
இவர் தரும் ஒதிமம் எண் இலாத ஓர்
அவிர் சுடர் மஞ்ஞை பால் அடைவது ஆம் என.
16
   
9560.
கால் செயும் வட்டமும் கவின் கொள் பீலியும்
மால் செயும் நறு விரை மல்க வீசியே
நீல் செயும் வடிவு உடை நிமலை பால் சிலர்
வேல் செயும் விழியினர் மெல்ல ஏகினார்.
17
   
9561.
கோடிகம் அடைப்பை வாள் குலவு கண்ணடி
ஏடு உறு பூம் தொடை ஏந்தி அம்மை தன்
மாடு உற அணுகியே மானத்து ஏகினார்
தோடு உறு வரிவிழித் தோகை மார் பலர்.
18
   
9562.
நாதனது அருள் பெறு நந்தி தேவி ஆம்
சூது உறழ் பணை முலைச் சுகேசை என்பவள்
மாது உமை திருவடி மலர்கள் தீண்டிய
பாதுகை கொண்டு பின் படர்தல் மேயினாள்.
19
   
9563.
கமலினி அனிந்திதை என்னும் கன்னியர்
அமலை தன் சுரி குழற்கு ஆன பூம் தொடை
விமலமொடு ஏந்தியே விரைந்து செல்கின்றார்
திமில் இடுகின்ற தொல் சேடி மாருடன்.
20
   
9564.
அடுத்திடும் உலகு எலாம் அளித்த அம்மை சீர்
படித்தனர் ஏகினர் சிலவர் பாட்டு இசை
எடுத்தனர் ஏகினர் சிலவர் ஏர் தக
நடித்தனர் ஏகினர் சிலவர் நாரி மார்.
21
   
9565.
பாங்கியர் சிலதியர் பலரும் எண் இலா
வீங்கிய பேர் ஒளி விமானத்து ஏறியே
ஆங்கு அவள் புடையது ஆய் அணுகிச் சென்றனர்
ஓங்கிய நிலவு சூழ் உடுக்கள் போன்று உளார்.
22
   
9566.
தண் உறு நானமும் சாந்தும் சந்தமும்
சுண்ணமும் களபமும் சுடரும் பூண்களும்
எண் அரும் துகில்களும் இட்ட மஞ்சிகை
ஒண் நுதலார் பரித்து உமைபின் போயினார்.
23
   
9567.
குயில்களும் கிள்ளையும் குறிக் கொள் பூவையும்
மயில்களும் அஞ்சமும் மற்றும் உள்ளவும்
பயில் உற ஏந்தியே பரை முன் சென்றனர்
அயில் விழி அணங்கினர் அளப்பு இல்லார் களே.
24
   
9568.
விடை உறு துவசமும் வியப்பின் மே தகு
குடைகளும் ஏந்தியும் கோடி கோடி ஆம்
இடி உறழ் பல் இயம் இசைத்தும் அம்மை தன்
புடைதனில் வந்தனர் பூதர் எண் இலார்.
25
   
9569.
அன்னவள் அடி தொழுது அருள் பெற்று ஒல்லைஇல்
பன்னிரு கோடி பார் இடங்கள் பால் பட
முன் உற ஏகினன் மூரி ஏற்றின் மேல்
தொல் நெறி அமைச்சியல் சோம நந்தியே.
26
   
9570.
இவர் இவர் இத் திறம் ஈண்ட எல்லை தீர்
புவனமும் உயிர்களும் புரிந்து நல்கிய
கவுரி அம் மான் மேல் கடிது சென்ற அரோ
தவல் உறுவோன் மகச் சாலை நண்ணினாள்.
27
   
9571.
ஏல் உறு மானம் நின்று இழிந்து வேள்வி அம்
சாலை உள் ஏகியே தக்கன் முன் உறும்
வேலையில் உமைதனை வெகுண்டு நோக்கியே
சீலம் இலாதவன் இனைய செப்பினான்.
28
   
9572.
தந்தை தன்னொடும் தாய் இலாதவன்
சிந்தை அன்பு உறும் தேவி ஆன நீ
இந்த வேள்வி யான் இயற்றும் வேலையில்
வந்தது என் கொலோ மகளிர் போலவே.
29
   
9573.
மல்லல் சேரும் இம் மா மகம் தனக்கு
எல்லை வா என உரைத்து விட்டதும்
இல்லை ஈண்டு நீ ஏகல் ஆகுமோ
செல்லும் ஈண்டு நின் சிலம்பில் என்னவே.
30
   
9574.
மங்கை கூறுவாள் மருகர் யார்க்கும் என்
தங்கை மார்க்கும் நீ தக்க தக்க சீர்
உங்கு நல்கியே உறவு செய்து உளாய்
எங்கள் தம்மை ஓர் இறையும் எண்ணலாய்.
31
   
9575.
அன்றியும் இவண் ஆற்றும் வேள்வியில்
சென்ற என்னையும் செயிர்த்து நோக்குவாய்
நன்றதோ இது ஓர் நவை அது ஆகும் ஆல்
உன்தன் எண்ணம் யாது உரைத்தி என்னவே.
32
   
9576.
ஏய முக் குணத்து இயலும் செய்கையுள்
தீய தொல் குணச் செய்கை ஆற்றியே
பேயொடு ஆடல் செய் பித்தன் தேவியாய்
நீயும் அங்கு அவன் நிலைமை எய்தினாய்.
33
   
9577.
அன்னவன் தன்னோடு அகந்தை மேவலால்
உன்னை எள்ளினன் உனது பின் உளோர்
மன்னு கின்ற என் மருகர் யாவரும்
என்னினும் எனக்கு இனியர் சாலவும்.
34
   
9578.
ஆதலால் யான் அவர்கள் பாங்கரே
காதல் ஆகியே கருது தொல் வளன்
யாது நல்கினன் இந்த வேள்வியில்
ஓது நல் அவியுள் அது நல்கினேன்.
35
   
9579.
புவனி உண்ட மால் புதல்வன் ஆதி ஆம்
எவரும் வந்து எனை ஏத்து கின்றனர்
சிவனும் நீயும் ஓர் சிறிதும் எண்ணலீர்
உவகை இன்று எனக்கு உங்கள் பாங்கரில்.
36
   
9580.
ஏற்றின் மேவும் நின் இறைவனுக்கு யான்
ஆற்றும் வேள்வியுள் அவியும் ஈகலன்
சாற்று கின்ற வேதத்தின் வாய்மையும்
மாற்று கின்றனன் மற்று என் வன்மையால்.
37
   
9581.
அனையது அன்றி ஈண்டு அடுத்த நிற்கும் யான்
தினையின் காறும் ஓர் சிறப்பும் செய்கலன்
என இயம்பலும் எம் பிராட்டி பால்
துனைய வந்தது ஆல் தோம் இல் சீற்றமே.
38
   
9582.

சீற்றம் ஆய தீச் செறியும் உயிர்ப்பொடே
காற்றினோடு அழல் கலந்தது ஆம் எனத்
தோற்றி அண்டமும் தொலை இல் ஆவியும்
மாற்றுவான் எழீஇ மல்கி ஓங்கவே.

39
   
9583.
பாரும் உட்கின பரவு பௌவமும்
நீரும் உட்கின நெருப்பும் உட்கின
காரும் உட்கின கரிகள் உட்கின
ஆரும் உட்கினர் அமரர் ஆய் உளார்.
40
   
9584.
பங்கய ஆசனப் பகவன் தானும் அச்
செம் கண் மாயனும் சிந்தை துண் என
அங்கண் உட்கினார் என்னின் ஆங்கு அவள்
பொங்கு சீற்றம் யார் புகல வல்லரே.
41
   
9585.
வேலை அன்னதில் விமலை என்பவள்
பாலின் நின்றது ஓர் பாங்கி தாழ்ந்து முன்
ஞாலம் யாவையும் நல்கும் உன் தனக்கு
ஏலுகின்றதோ இனைய சீற்றமே.
42
   
9586.
மைந்தர் யாரையும் வளங்கள் தம்மொடும்
தந்து நல்கிய தாய் சினம் கொளா
அந்தம் ஆற்றுவான் அமைந்து உளாய் எனின்
உய்ந்திடும் திறம் உண்டு போலும் ஆல்.
43
   
9587.
அறத்தை ஈங்கு இவன் அகன்று உளான் எனச்
செறுத்தி அன்னது ஓர் சீற்றம் யாரையும்
இறைக்கு முன்னரே ஈறு செய்யும் ஆல்
பொறுத்தி ஈது எனப் போற்றல் மேயினாள்.
44
   
9588.
போற்றி நிற்றலும் புனிதை தன் பெரும்
சீற்றமாய் எழும் தீயை உள் உற
மாற்றி வேள்வி செய்வானை நோக்கியே
சாற்றுகின்றனள் இனைய தன்மையே.
45
   
9589.
என்னை நீ இவண் இகழ்ந்த தன்மையை
உன்னலேன் எனை உடைய நாயகன்
தன்னை எள்ளினாய் தரிக்கிலேன் அது என்
அன்னம் ஊடு செல் கடுவும் போலும் ஆல்.
46
   
9590.
நிர்க் குணத்தனே நிமலன் அன்னவன்
சில் குணத்தன் ஆய்த் திகழுவான் ஒரு
சொல் குணத்தனோ தொலைக்கும் நாள் அடு
முன் குணத்தினை முன்னும் மாறலால்.
47
   
9591.
துன்று தொல் உயிர் தொலைவு செய்திடும்
அன்று தாமதத்து அடுவது அன்றியே
நன்று நன்று அது ஞான நாயகற்கு
என்றும் உள்ளது ஓர் இயற்கை ஆகுமோ.
48
   
9592.
தீ அது அன்று அடும் செயலும் நல் அருள்
ஆ இல் ஆவிகள் அழிந்தும் தோன்றியும்
ஓய்வு இலாது உழன்று உலை உறாமலே
மாய்வு செய்து இறை வருத்தம் ஆற்றலால்.
49
   
9593.
ஆன அச் செயல் அழிவு இலாதது ஓர்
ஞான நாயகற்கு அன்றி நாம் எனும்
ஏனையோர்களால் இயற்றல் ஆகுமோ
மேன காவலும் விதியும் என்னவே.
50
   
9594.
முன்னரே எலாம் முடித்த நாதனே
பின்னும் அத்திறம் அளிக்கும் பெற்றியான்
அன்னவன் கணே அனைத்தும் ஆகும் ஆல்
இன்ன பான்மை தான் இறைவன் வாய்மையே.
51
   
9595.
தோம் இல் ஆகமம் சுருதி செப்பியே
ஏம விஞ்சை கட்கு இறைவன் ஆகியே
நாம் அறும் பொருள் நல்கும் எந்தையைத்
தாமதன் எனச் சாற்றல் ஆகுமோ.
52
   
9596.
ஆதலால் அவன் அனைவருக்கும் ஓர்
நாதன் ஆம் அரோ அவற்கு நல் அவி
ஈதல் செய்திடாது இகழ்தி அஞ்சியே
வேதம் யாவையும் வியந்து போற்றவே.
53
   
9597.
சிவன் எனும் துணைச் சீர் எழுத்தினை
நுவலுவோர் கதி நொய்தில் எய்துவார்
அவனை எள்ளினாய் ஆர் இது ஆற்றுவார்
எவனை உய்குதி இழுதை நீரை நீ.
54
   
9598.
முண்டக மிசையினோன் முகுந்தன் நாடியே
பண்டு உணர் அரியது ஓர் பரனை ஆதியாக்
கொண்டு இலர் எள்ளிய கொடுமை யோர்க்கு எலாம்
தண்டம் வந்திடும் என மறைகள் சாற்றும் ஆல்.
55
   
9599.
ஈது கேள் சிறுவிதி இங்ஙன் ஓர் மகம்
வேத நாயகன் தனை விலக்கிச் செய்தனை
ஆதலால் உனக்கும் வந்து அடை தண்டகம் என்று
ஓதினாள் உலகு எலாம் உதவும் தொன்மையாள்.
56
   
9600.
இன்னன கொடு மொழி இயம்பி வேள்வி செய்
அந் நிலம் ஒருவி இவ் அகிலம் ஈன்று உளாள்
முன் உள பரிசன முறையின் மொய்த்திடப்
பொன் எழின் மான மேல் புகுந்து போந்தனள்.
57
   
9601.
அகன் தலை உலகு அருள் அயன் தன் காதலன்
புகன்றன உன்னி உள் புழுங்கி ஐந்து மா
முகன் திரு மலை இடை முடுகிச் சென்றனள்
குகன் தனை மேல் அருள் கொடி நுசுப்பினாள்.
58
   
9602.
ஒருவினள் ஊர்தியை உமை தன் நாயகன்
திருவடி வணங்கினள் சிறிய தொல் விதி
பெரிது உனை இகழ்ந்தனன் பெரும அன்னவன்
அரிது செய் வேள்வியை அழித்தி என்னவே.
59
   
9603.
எவ்வம் இல் பேர் அருட்கு இறைவன் ஆகியோன்
நவ்வி ஐம் கரம் உடை நாதன் ஆதலின்
அவ் உரை கொண்டிலன் ஆக அம்பிகை
கவ்வையொடு இனையன கழறல் மேயினாள்.
60
   
9604.
மேயின காதலும் வெறுப்பும் நிற்கு இலை
ஆயினும் அன்பினேற்கு ஆக அன்னவன்
தீயது ஓர் மகத்தினைச் சிதைத்தல் வேண்டும் என்
நாயகனே என நவின்று போற்றினாள்.
61