யாக சங்காரப் படலம்
 
9665.
ஆர்த்தலும் இறைவி தன்னோடு ஆண் தகை வீரன்
                                  வாசத்
தார்த் தொகை தூங்கும் யாக சாலையுள் ஏகலோடும்
தீர்த்தனைத் தலைவி தன்னைத் திசைமுகன் முதலோர்                                   யாரும்
பார்த்தனர் உளம் துண் என்று பதை பதைத்து அச்சம்                                   கொண்டார்.
1
   
9666.
மங்கலின் வரவு கண்ட மான் இனம் போன்றும் வானத்து
அடங்கிய உரும் ஏறு உற்ற அரவு இனம் போன்றும்                                     யாக்கை
நடுங்கினர் ஆற்றல் சிந்தி நகை ஒரீஇ முகனும் வாடி
ஒடுங்கினர் உயிர் இலார் போல் இவை சில உரைக்கல்                                     உற்றார்.
2
   
9667.
ஈசனும் உமையுமே வந்து எய்தினர் என்பார் அன்னார்
காய் சினம் உதவ வந்த காட்சியர் காணும் என்பார்
பேச அரிது அந்தோ அந்தோ பெரிது இவர் சீற்றம்                                      என்பார்
நாசம் வந்திட்டது இன்றே நம் உயிர்க்கு எல்லாம்
                                     என்பார்.
3
   
9668.
தக்கனுக்கு ஈறும் இன்றே சார்ந்தது போலும் என்பார்
மிக்கது ஓர் விதியை யாரே விலக்க வல்லார்கள் என்பார்
முக்கண் எம் பெருமான் தன்னை முனிந்து இகழ்கின்ற                                          நீரார்
அக்கணம் முடிவர் என்றல் ஐயமும் உண்டோ என்பார்.
4
   
9669.
விமலனை இகழுகின்றான் வேள்வி ஏன் புரிந்தான்                               என்பார்
நமை எலாம் பொருள் என்று உன்னி நடத்தினன்
                              காணும் என்பார்
இமையவர் குழுவுக்கு எல்லாம் இறுதி இன்று ஆமோ                               என்பார்
உமையவள் பொருட்டால் அன்றோ உற்ற தீங்கு இது                               எலாம் என்பார்.
5
   
9670.
ஈடு உறு பூதர் யாரும் எங்கணும் வளைந்தார் என்பார்
ஓடவும் அரிது இங்கு என்பார் ஒளித்திடற்கு இடம் ஏது                                      என்பார்
வீடினம் காணும் என்பார் மேல் இனிச் செயல் என்                                      என்பார்
பாடு சூழ் அங்கி நாப்பண் பட்ட பல் களிறு போன்றார்.
6
   
9671.
அஞ்சினர் இனைய கூறி அமரர்கள் அரந்தை கூரச்
செம் சரண் அதனை நீங்காச் சில பெரும் பூதர் சூழப்
பஞ்சு உறழ் பதுமச் செம்தாள் பத்திரை யோடு சென்று
வெம்சின வீரன் வெய்யோன் வேள்வி செய்வதனைக்                                     கண்டான்.
7
   
9672.
இடித்து என நக்குப் பொங்கி எரி விழித்து இகலி                                     ஆர்த்துப்
பிடித்தனன் வயக்கொம்பு ஓதை பிளந்தது செம் பொன்                                     மேரு
வெடித்தது மல்லல் ஞாலம் விண்டன அண்டம் யாவும்
துடித்தன உயிர்கள் முற்றும் துளங்கினர் சுரர்கள்
                                    எல்லாம்.
8
   
9673.
எழுகின்ற ஓசை கேளா இடியுண்ட அரவில் சோரா
விழுகின்றார் பதைக்கின்றார் வாய் வெருவு கின்றார்கள்                                       ஏங்கி
அழுகின்றார் ஓடுகின்றார் அழிந்ததோ வேள்வி என்று
மொழிகின்றார் மீளுகின்றார் முனிவரும் இமையோர்                                       தாமும்.
9
   
9674.
வானவர் பிறர் இவ்வாறு வருந்தினர் என்னின் அம்கண்
ஏனையர் பட்ட தன்மை இயம்ப அரிது எவர்க்கும்                                       என்றால்
நான் அது புகல அற்றோ நளிர்புனல் வறந்த காலத்து
ஆனது ஓர் உரும் ஏறு உற்ற அசுணமாத் தன்மை                                       பெற்றார்.
10
   
9675.
வேலை அங்கு அதனின் மேல் ஆம் வீரருள் வீரன்
                                       ஏகி
மால் அயன் தானும் உட்க மகத்தின் முன் அடைத                                        லோடும்
சீலம் அது அகன்ற கொள்கைச் சிறுவிதி அவண் கண்டு                                        ஏங்கிச்
சாலவும் நடுக்கு உற்று உள்ளம் தளர்ந்தனன் தலைமை                                        நீங்கி.
11
   
9676.
சாரதர் வளைந்த வாறும் சாலையது உடையும் மாறும்
ஆரும் அங்கு உற்ற வானோர் அயர் உறு மாறு நோக்கிப்
பேர் அஞர் உழந்து தேறிப் பெரும் திறலாளன் போல
வீரப்பத்திரனை நோக்கி விளம்பினன் இனையது ஒன்றே.
12
   
9677.
இங்கு வந்து அடைந்தது என் கொல் யாரை நீ                                   என்னலோடும்
சங்கரன் தனது சேய் யான் தக்க நின் வேள்வி தன்னின்
அங்கு அவற்கு உதவும் பாகம் அருளுதி அதற்கா
                                  அந்தப்
புங்கவன் அருளினாலே போந்தனன் ஈண்டை என்றான்.
13
   
9678.
இத்திறம் வீரன் கூற இருந்த அத் தக்கன் உங்கள்
அத்தனுக்கு உலகம் வேள்வி அதன் இடை அவியின்                                      பாகம்
உய்த்திடாது என்ன அம் கண் உறைதரு மறைகள்                                      நான்கும்
சுத்தமார் குடிலை தானும் துண் என எழுந்து சொல்லும்.
14
   
9679.
ஈறு இலா உயிர்கட்கு எல்லாம் இறையவன் ஒருதான்                                    ஆகும்
மாறு இலா அரனே அல்லால் மகத்தினுக்கு இறையாய்                                    உள்ளோன்
வேறு ஒர் வானவனும் உண்டோ வேள்வியில் அவற்கு                                    நல்கும்
கூறு நீ பணி யாது கொடுத்தியால் என்ற அன்றே.
15
   
9680.
தேற்றம் இல் சிதடன் ஆகும் சிறு விதி கேட்ப இன்ன
கூற்றினால் மறைகள் நான்கும் குடிலையும் ஒருங்கு கூடிச்
சாற்றலும் அன்னான் நல்காத் தலைமை கண்டு இறைவன்                                        தொல்சீர்
போற்றி அங்கு அகன்று தம் தம் புகல் இடம் போய                                        அன்றே.
16
   
9681.
போதலும் தக்கன் தன்னைப் பொலம் கழல் வீரன் பாரா
வேதமும் பிறவும் கூறும் விழுப் பொருள் கேட்டி அன்றே
ஈது எம் பெருமாற்கு உள்ள இன்னவி எனலும் கானில்
பேதை யோடு ஆடல் செய்யும் பித்தனுக்கு ஈயேன்                                       என்றான்.
17
   
9682.
ஆங்கு அது கேளா அண்ணல் அம் புயன் ஆதி ஆகிப்
பாங்கு உற விரவும் வானோர் பல் குழு அதனை நோக்கி
நீங்களும் இவன் பால் ஆனீர் நிமலனுக்கு அவி நல்காமல்
ஈங்கு இவன் இகழும் தன்மை இசைவு கொல் உமக்கும்                                        என்றான்.
18
   
9683.
என்றலும் அனையர் தொல் ஊழ் இசைவினால் அது                                  கேளார் போல்
ஒன்றும் அங்கு உரையார் ஆகி ஊமரின் இருத்த
                                 லோடும்
நின்றது ஓர் வீரன் வல்லே நெருப்பு எழ விழித்துச் சீறி
நன்று இவர் வன்மை என்னா நகை எயிறு இலங்க                                  நக்கான்.
19
   
9684.
கடித்தனன் எயிறு செம்தீக் கான்றனன் கனன்று கையில்
பிடித்திடும் மேரு அன்ன பெரும் திறல் கதையது
                                     ஒன்றால்
தடித்திடும் அகல மார்பத் தடவரை அகடு சாய
அடித்தனன் தக்கன் உள்ளம் வெருவர அரிமுன்                                      வீழ்ந்தான்.
20
   
9685.
விட்டு முன் வீழ்தலோடும் வீரருள் வீரத்து அண்ணல்
மட்டு உறு கமலப் போதில் வான் பெரும் தவிசில் வைகும்
சிட்டனை நோக்கி அன்னான் சிரத்து இடை உரும் உற்று                                          என்னக்
குட்டினன் ஒருதன் கையால் மேல் வரும் குமரனே போல்.
21
   
9686.
தாக்குதலோடும் ஐயன் சரண் இடைப் பணிவான் போல
மேக்கு உறு சென்னி சோர விரிஞ்சனும் வீழ அன்னான்
வாக்கு உறு தேவி தன்னை மற்று அவர் தம்மை வாளால்
மூக்கு ஒடு குயமும் கொய்தான் இறுதி நாள் முதல்வன்                                      போல்வான்.
22
   
9687.
ஏடு உலாம் தொடையல் வீரன் இத் திறம் இவரை
                                     முன்னம்
சாடினான் அது கண்டு அம்கண் சார்தரும் இமையோர்                                      யாரும்
ஓடினார் உலந்தார் வீழ்ந்தார் ஒளித்திடற்கு இடம் ஏது                                      என்று
தேடினார் ஒருவர் இன்றிச் சிதறினார் கதறு கின்றார்.
23
   
9688.
இன்னது ஓர் காலையில் இரிந்து போவது ஓர்
மெய்ந் நிறை மதியினை வீரன் காண் உறாத்
தன் ஒரு பதம் கொடே தள்ளி மெல் எனச்
சின்னம் அது உற உடல் தேய்த்திட்டான் அரோ.
24
   
9689.
அடித்தலம் கொடு மதி அதனைத் தேய்த்தபின்
விடுத்தனன் கதிரவன் வெருவி ஓடலும்
இடித்து எனக் கவுள் இடை எற்றினான் அவன்
உடுத்திரள் உதிர்ந்து என உகுப்பத் தந்தமே.
25
   
9690.
எறித்தரு கதிரவன் எயிறு பார் மிசைத்
தெறித்திட உயிர் ஒரீஇச் சிதைந்து வீழ்தலும்
வெறித்தரு பகன் எனும் வெய்யவன் விழி
பறித்தனன் தகுவது ஓர் பரிசு நல்குவான்.
26
   
9691.
தொட்டலும் பகன் விழித் துணையை இத்திறம்
பட்டது தெரிந்து உயிர் பலவும் பைப் பைய
அட்டிடும் கூற்றுவன் அலமந்து ஓடலும்
வெட்டினன் அவன் தலை வீர வீரனே.
27
   
9692.
மடிந்தனன் கூற்றுவன் ஆக வாசவன்
உடைந்தனன் குயில் என உருக் கொண்டு உம்பரில்
அடைந்தனன் அது பொழுது அண்ணல் கண் உறீஇத்
தடிந்தனன் வீட்டினன் தடக்கை வாளினால்.
28
   
9693.
அண்டர் கோன் வீழ்தலும் அலமந்து ஓடிய
திண்திறல் அங்கியைத் திறல் கொள் சேவகன்
கண்டனன் அங்கு அவன் கரத்தை ஒல்லையில்
துண்டம் அது ஆகவே துணித்து வீட்டினான்.
29
   
9694.
கறுத்திடு மிடறு உடைக் கடவுள் தேவனை
மறுத்து அவன் நல்கிய வரம்பு இல் உண்டியும்
வெறுத்திலை உண்டியால் என்று வீரனும்
அறுத்தனன் எழுதிறத்து அழலின் நாக்களே.
30
   
9695.
துள்ளிய நாவொடும் துணிந்த கையொடும்
தள் உற வீழ்ந்திடும் தழலின் தேவியை
வள் உகிரைக் கொடு வலம் கொள் நாசியைக்
கிள்ளினன் வாகையால் கிளர் பொன் தோளினான்.
31
   
9696.
அரி துணைக்கு இன்னது ஓர் ஆணை செய்திடும்
ஒரு தனித் திறலினான் உம்பர் மேல் எழு
நிருதியைக் கண்டனன் நிற்றி ஆல் எனாப்
பொரு திறல் தண்டினால் புடைத்திட்டான் அரோ.
32
   
9697.
வீட்டினன் நிருதியை வீரன் தன் பெரும்
தாள் துணை வீழ்தலும் தடிதல் ஓம்பினான்
ஓட்டினன் போதிர் என்று உரைத்துச் செல் நெறி
காட்டினன் உருத்திர கணத்தர்க்கு என்பவே.
33
   
9698.
ஒழுக்குடன் உருத்திரர் ஒருங்கு போதலும்
எழுக்கொடு வருணனை எற்றிச் செம் கையின்
மழுக்கொடு காலினை மாய்த்து முத்தலைக்
கழுக்கொடு தனதனைக் கடவுள் காதினான்.
34
   
9699.
எட்டு எனும் திசையினோன் ஏங்கி வெள்கியே
அட்டிடும் கொல் என அஞ்சிப் போற்றலும்
கிட்டினன் வைதனன் கேடு செய்திலன்
விட்டனன் உருத்திரர் மேவும் தொல் நெறி.
35
   
9700.
தாணுவின் உருக்கொடு தருக்கு பேரினான்
நாண் ஒடு போதலும் நடு நடுங்கியே
சோணித புரத்து இறை துண் என்று ஓடுழி
வேணுவின் அவன் தலை வீரன் வீட்டினான்.
36
   
9701.
மணன் அயர் சாலையின் மகத்தின் தெய்வதம்
பிணை என வெருக் கொடு பெயர்ந்து போதலும்
குண மிகு வரிசிலை குனித்து வீரன் ஓர்
கணைத் தொடுத்து அவன் தலை களத்தில் வீட்டினான்.
37
   
9702.
இரிந்திடு கின்றது ஓர் எச்சன் என்பவன்
சிரம் துணி படுதலும் செய்கை இவ் எலாம்
அரந்தை யோடே தெரிந்து அயன் தன் காதலன்
விரைந்து அவண் எழுந்தனன் வெருக் கொள்
                                 சிந்தையான்.
38
   
9703.
விட்டனன் திண்மையை வெய்யது ஓர் வலைப்
பட்டது ஒர் பிணை எனப் பதைக்கும் சிந்தையான்
மட்டிட அரிய இம் மகமும் என் முனம்
கெட்டிடுமோ எனா இவை கிளத்தினான்.
39
   
9704.
ஊறகல் நால் முகத்து ஒருவன் வாய்மையால்
கூறிய உணர்வினைக் குறித்து நோற்று யான்
ஆறு அணி செம் சடை அமலன் தந்திட
வீறு அகல் வளம் பல எய்தினேன் அரோ.
40
   
9705.
பெரு வளம் நல்கிய பிரானைச் சிந்தையில்
கருதுதல் செய்திலன் கசிந்து போற்றிலன்
திருவிடை மயங்கினன் சிவையை நல்கியே
மருகன் என்று அவனை யான் மன்ற எள்ளினேன்.
41
   
9706.
வேத நூல் விதிமுறை விமலற்கு ஈந்திடும்
ஆதி அம் அவிதனை அளிக் கொணாது எனத்
தாதையோன் வேள்வியில் தடுத்தி யானும் மிவ்
வேதம் ஆம் மகம் தனை இயற்றினேன் அரோ.
42
   
9707.
தந்தை சொல் ஆம் எனும் ததீசி வாய்மையை
நிந்தனை செய்தனன் நீடு வேள்வியில்
வந்த என் மகள் தனை மறுத்துக் கண் நுதல்
முந்தையை இகழ்ந்தனன் முடிவு அது ஓர்கிலேன்.
43
   
9708.
அன்றியும் வீரன் நின்று அவியை ஈதிஆல்
என்றலும் அவன் தனது எண்ணம் நோக்கியும்
நன்று என ஈந்திலன் மறையும் நாடிலேன்
பொன்றிட வந்த கொல் இனைய புந்தியே.
44
   
9709.
அல்லி அம் கமல மேல் அண்ணல் ஆதியாச்
சொல்லிய வானவர் தொகைக்கு நோற்றிட
வல்ல பண்ணவர்க்கும் வேதியர்க்கும் மற்று அவர்
எல்லவர் தமக்கும் ஓர் இறுதி தேடினேன்.
45
   
9710.
துதி தரு மறைப் பொருள் துணிபு நாடியும்
நதி முடி அமலனை நன்று நிந்தியா
இது பொழுது இறப்பதற்கு ஏது ஆயினேன்
விதி வழி புந்தியும் மேவுமே கொலாம்.
46
   
9711.
எனத் தகு பரிசு எலாம் இனைந்து தன்னுடை
மனத்தொடு கூறியே மாளும் எல்லை இல்
நினைத்து அறிவு இன்மையை நிகழ்த்தின் ஆவது என்
இனிச் செயல் என் என எண்ணி நாடினான்.
47
   
9712.
பாடு உறு சாரதர் பரப்பும் வேள்வியின்
ஊடு உறு வீரனது உரமும் சீற்றமும்
சாடு உறு பத்திரை தகவும் கண் உறீஇ
ஓடுவது அரிது என உன்னி உன்னி மேல்.
48
   
9713.
சென்றது ஓர் உயிரொடு சிதைந்த தேவர்போல்
பின்றுவன் என்னினும் பிழைப்பது இல்லை ஆல்
வன் திறல் வீரன் முன் வன்மையாளர் போல்
நின்றிடல் துணிபு எனத் தக்கன் நிற்பவே.
49
   
9714.
கண்டு மற்று அது வீர பத்திரன் எனும் கடவுள்
கொண்ட சீற்றம் ஓடு ஏகியே தக்கனைக் குறுகி
அண்டரோடு நீ ஈசனை இகழ்ந்தனை அதனால்
தண்டம் ஈது என வாள் கொடே அவன் தலை
                               தடிந்தான்.
50
   
9715.
அற்றது ஓர் சென்னி வீழும் முன் இறைவன் அம்                                   கையினால்
பற்றி ஆயிடை அலமரும் பாவகல் பாராத்
இற்றி ஈது எனக் கொடுத்தனன் கொடுத்தலும் செம்தீ
மற்றோர் மாத்திரை அல் போதினில் மிசைந்தது
                                  மன்னோ.
51
   
9716.
மெல்லவே எரியத் தலை நுகர்தலும் வேத
வல்லி ஆதி ஆம் துணைவியர் தக்கன் மா மகளிர்
சில் இரும் குழல் தாழ்வரச் செம் கரம் குலைத்தே
ஒல்லை அத்திறம் கண்டனர் புலம்பி வந்து உற்றார்.
52
   
9717.
அந்த வேலையின் மறைக்கொடி தன்னை முன் அணுகி
முந்தி வார்குழை இறுத்தனன் ஏனையர் முடியும்
தந்த நங்கையர் சென்னியும் வாள்கொடு தடிந்து
கந்துகங்கள் போல் அடித்தனள் பத்திரகாளி.
53
   
9718.
காளிஆம் பெயர்த் தலைவியும் கருதலர் தொகைக்கு ஓர்
ஆளி ஆகிய வீரனும் ஏனை அண்டர்களைக்
கேளிர் ஆகிய முனிவரைத் தனித்தனி கிடைத்துத்
தாளில் ஆர்ப்பினில் தடக்கையில் படைகளில் தடிந்தார்.
54
   
9719.
மருத்தும் ஊழியில் அங்கியும் உற்று என மாதும்
உருத்திரப் பெரு மூர்த்தியும் வந்து என உயர் சீர்
            தரித்த வீரனும் பத்திரகாளியும் தக்கன்
திருத்தும் வேள்வியைத் தொலைத்தனர் தனித்தனி             திரிந்தே.
55
   
9720.
அண்ணல் தன்மையும் தேவிதன் நிலைமையும் அயரும்
விண் உளோர் சிலர் நோக்கியே யாங்கணும் விரவி
அண்ணு கின்றனர் யாரையும் தொலைக்குநர் அம்மா
எண் இலார் கொலாம் வீரனும் இறைவியும் என்றார்.
56
   
9721.
இற்று எலாம் நிகழ் வேலையில் வீரனது இசையால்
சுற்று தானையர் இத்திறம் நோக்கியே சூழ்ந்த
பொற்றை போல் உயர் காப்பினை வீட்டி உள் புகுந்து
செற்றமோடு சென்று ஆர்த்தனர் வான் உளோர் தியங்க.
57
   
9722.
சூர்த்த நோக்கு உடைப் பூதரும் காளிகள் தொகையும்
ஆர்த்த காலையின் முனிவரும் தேவரும் அயர்ந்து
பார்த்த பார்த்தது ஓர் திசை தொறும் இரிதலும் படியைப்
போர்த்த வார் கடல் ஆம் என வளைந்து அடல்புரிய.
58
   
9723.
தியக்கு உற்றனர் வெருள் உற்றனர் திடுக்கிட்டனர்
                               தெருள் போய்த்
துயக்கு உற்றனர் பிறக்கு உற்றனர் தொலை உற்றனர்                                மெலியா
மயக்கு உற்றனர் கலக்கு உற்றனர் மறுக்கு உற்றனர்                                மனமேல்
உயக்கு உற்றனர் இமையோர்களும் உயர் மா
                               முனிவரரும்.
59
   
9724.
அளிக்கின்றனர் தமைத் தம் முனை அருள் மக்களை                                 மனையைக்
களிக்கின்றது ஒர் இளையோர் தமைச் சுற்றம் தனைக்                                 கருதி
விளிக்கின்றனர் பதைக்கின்றனர் வெருக் கொண்டனர்                                 பிணத்து ஊடு
ஒளிக்கின்றனர் அவன் வேள்வியில் உறைகு உற்றது ஓர்                                 மறையோர்.
60
   
9725.
அலக்கண் படும் இமையோர்களும் அருமா முனிவரரும்
நிலக்கண் படும் மறையோர்களும் நெடு நீர்க் கடல்
                                    ஆகக்
கலக்கு உற்றனர் வரை ஆம் எனக் கரத்தால் புடைத்து                                     உதிர்த்தார்
உலகில் திரளாகச் சினத்து உயர் மால் கரி ஒத்தே.
61
   
9726.
முடிக்கும் திறல் பெரும் கோளரி முழங்கிற்று என                                      முரணால்
இடிக்கின்றனர் கலைமான் என இமையோர்கள் தமை                                      விரைவில்
பிடிக்கின்றனர் அடிக்கின்றனர் பிறழ் பல் கொடு
                                     சிரத்தைக்
கடிக்கின்றனர் ஒடிக்கின்றனர் களத்தைப் பொரு
                                     களத்தில்.
62
   
9727.
முறிக்கின்றனர் தடம் தோள்களை முழு என்புடன் உடலம்
கறிக்கின்றனர் அடி நாவினைக் களைகின்றனர் விழியைப்
பறிக்கின்றனர் மிதிக்கின்றனர் படுக்கின்றனர் சங்கம்
குறிக்கின்றனர் குடிக்கின்றனர் குருதிப் புனல் தனையே.
63
   
9728.
எடுக்கின்றனர் பிளக்கின்றனர் எறிகின்றனர் எதிர் போய்த்
தடுக்கின்றனர் உதைக்கின்றனர் தடம் தாள் கொடு                                      துகைத்துப்
படுக்கின்றனர் தலைசிந்திடப் படையாவையும் தொடையா
விடுக்கின்றனர் மடுக்கின்றனர் மிகும் ஊனினைப் பகுவாய்.
64
   
9729.
நெரிக்கின்றனர் சிலர் சென்னியை நெடும் தாள் கொடு                                        மிதியா
உரிக்கின்றனர் சிலர் யாக்கையை ஒருசில் சிலர் மெய்யை
எரிக்கின்றனர் மகத் தீ இடை இழுதார் கடத் திட்டே
பொரிக்கின்றனர் கரிக்கின்றனர் புகைக்கின்றனர் அம்மா.
65
   
9730.
அகழ்கின்றனர் சிலர் மார்பினை அவர் தம் குடர் சூடி
மகிழ்கின்றனர் நகைக்கின்றனர் மதர்க்கின்றனர் சிவனைப்
புகழ்கின்றனர் படுகின்றது ஒர் புலவோர் தமைக் காணா
இகழ்கின்றனர் எறிந்தே படை ஏற்கின்றனர் அன்றே.
66
   
9731.
கரக்கின்றனர் முனிவோர்களைக் கண்டே தொடர்ந்து                                      ஓடித்
துரக்கின்றனர் பிடிக்கின்றனர் துடிக்கும்படி படிமேல்
திரக் குன்று கொடர் அரைக்கின்றனர் தெழிக்கின்றனர்                                      சில ஊன்
இரக்கின்றது ஒர் கழுகின் தொகைக்கு ஈகின்றனர் மாதோ.
67
   
9732.
நெய் உண்டனர் ததி உண்டனர் பால் உண்டனர் நீடும்
துய் உண்டனர் இமையோ கடந் தொகைக்கு ஆம் என                                      உய்க்கும்
ஐ உண்டது ஒர் அவி உண்டனர் மக வேள்வியில்
                                     வந்தே
நை உண்டவர் உயிர் கொண்டிடும் நாள் உண்டவர்                                      எல்லாம்.
68
   
9733.
உகத்துக் கடை அனலைக் கடல் உவர் நீர் தணித்து                                    எனவே
மகத்தில் திரி வித வேதியில் வைகும் கனல் அதனை
மிகத் துப்புர உளது என்றுகொல் வியப்பார் தமது
                                   உயிரின்
அகத்துப் புனல் விடுத்தே விரைந்து அவித்தார் மகம்                                    அழித்தார்.
69
   
9734.
தடைக் கொண்டது ஒர் சிறை தோறும் உள சாலைக்
                                கதவு எல்லாம்
அடைக்கின்றனர் தழல் இட்டனர் அவண் உற்றவர்                                 தம்மைத்
துடைக்கின்றனர் கலசத்தொடு தொடர் கும்பமும்
                                விரைவு ஆல்
உடைக்கின்றனர் தகர்க்கின்றனர் உதிர்க்கின்றனர்
                                உடுவை.
70
   
9735.
தவக் கண்டகத் தொகையார்த்திடத் தனி மா மகத்
                                   தறியில்
துவக்கு உண்ட அயரணி மேதகு துகள் தீர் பசு
                                   நிரையை
அவிழ்க்கின்றனர் சிலர் கங்கையின் அலையில் செல                                    விடுவார்
திவக்கும் படி வான் ஓச்சினர் சில வெற்றினர் படையின்.
71
   
9736.
பங்கங்கள் படச் செய்திடு பதகன் மகம்தனில் போய்க்
கங்கங்களை முறிக்கின்றனர் கவின் சேர் அர மகளிர்
அங்கங்களைக் கறிக்கின்றனர் அறுக்கின்றனர் அதனை
எங்கு எங்கணும் உமிழ்கின்றனர் எறிகின்றனர் எவரும்.
72
   
9737.
படுகின்றவர் வரும் ஊர்தியும் படர் மானமும் தேரும்
சுடுகின்றனர் அவர் கொண்டிடும் தொலைவு இல் படைக்                                       கலமும்
இடு குண்டல முடி கண்டிகை எவையும் தழல் இட்டே
கடுகின்று களாகப் பொடி கண்டார் திறல் கொண்டார்.
73
   
9738.
அடிக் கொண்டது ஒர் மகச் சாலையுள் அமர் வேதியை                                     அடியால்
இடிக்கின்றனர் பொடிக்கின்றனர் இரும் தோரணத்                                     தொகையை
ஒடிக்கின்றனர் பெரும் தீயினை உமிழ்கின்றனர்
                                    களிப்பால்
நடிக்கின்றனர் இசைக்கின்றனர் நமன் அச்சுறும்                                     திறத்தோர்.
74
   
9739.
தருமத்தினை அடுக்கின்றது ஒர் தக்கன் தனக்கு உறவா
மருமக்களைப் பிடிக்கின்றனர் வாயால் புகல் ஒண்ணாக்
கருமத்தினைப் புரிகின்றனர் கரத்தால் அவர் உரத்தே
உரும் உற்று எனப் புடைக்கின்றனர் உமிழ்வித்தனர்                                      அவியே.
75
   
9740.
தறிக்கின்றனர் சில தேவரைத் தலை மா மயிர் முழுதும்
பறிக்கின்றனர் சில தேவரைப் பாசம் கொடு தறியில்
செறிக் கின்றனர் சில தேவரைச் செம் தீ இடை வதக்கிக்
கொறிக்கின்றனர் சில தேவரைக் கொலை செய்திடும்                                   கொடியோர்.
76
   
9741.
நால் திக்கினும் எறிகின்றனர் சிலர் தங்களை நல் ஊன்
சேற்றுத் தலைப் புதைக்கின்றனர் சிலர் தங்களைச் செந்நீர்
ஆற்றுக்கு இடை விடுக்கின்றனர் சிலர் தங்களை அண்டப்
பாற்றுக்கு இரை இடுகின்றனர் சிலர் தங்களைப் பலரும்.
77
   
9742.
இடைந்தாரையும் விழுந்தாரையும் எழுந்தாரையும்
                                   எதிரே
நடந்தாரையும் இரிந்தாரையும் நகை உற்றிட இறந்தே
கிடந்தாரையும் இருந்தாரையும் கிளர்ந்தாரையும்
                                   விண்மேல்
படர்ந்தாரையும் அவர்க்கு ஏற்றது ஒர் பல தண்டமும்                                    புரிந்தார்.
78
   
9743.
உலக்கு உற்றிடு மகம் கண்டு அழுது உளம் நொந்தனர்                                     தளரா
மலக்கு உற்றிடும் அணங் கோர் தமை வலிதே பிடித்து                                     ஈர்த்துத்
தலக் கண் படு மலர்ப் பொய்கையைத் தனிமால் கரி                                     முனிவால்
கலக்கிற்று எனப் புணர்கின்றனர் கண நாதரில் சிலரே.
79
   
9744.
குட்டு என்பதும் பிள என்பதும் கொல் என்பதும் கடிதே
வெட்டு என்பதும் குத்து என்பதும் உரி என்பதும்                                        விரைவில்
கட்டு என்பதும் அடி என்பதும் உதை என்பதும் களத்தே
எட்டு என்பது ஒர் திசை எங்கணும் எவரும் புகல்வனவே.
80
   
9745.
கை அற்றனர் செவி அற்றனர் கால் அற்றனர் காமர்
மெய் அற்றனர் நா அற்றனர் விழி அற்றனர் மிகவும்
மை உற்றிடும் களம் அற்றனர் அல்லான் மலர் அயன்                                      சேய்
செய் உற்றிடும் மகத்தோர்களில் சிதைவு அற்றவர்                                      இலையே.
81
   
9746.
இத் திறம் யாரையும் ஏந்தல் தானையும்
பத்திரை சேனையும் பரவித் தண்டியாம்
எத்துறும் அளைகெழு வேலையில் பல
மத்து உறுகின்றென மகத்தை வீட்டவே.
82
   
9747.
செழும் திரு உரத்திடை தெருமந்து உற்றிடத்
தொழும் திறல் பரிசனம் தொலைய மாயவன்
அழுந்திடு கவல் ஒடும் அயர் உயிர்த்து அவண்
எழுந்தனன் மகம்படும் இறப்பு நோக்கினான்.
83
   
9748.
திருத்தகும் வேள்வியைச் சிதைவு இன்று ஆக யான்
அருத்தியில் காத்ததும் அழகு இதால் எனாக்
கருத்து இடை உன்னினன் கண்ணன் வெள்கியே
உருத்தனன் மானநின்று உளத்தை ஈரவே.
84
   
9749.
பரமனை இகழ்ந்திடு பான்மை யோர்க்கு இது
வருவது முறை என மனத்துள் கொண்டிலன்
தெருமரும் உணர்வினன் திறல் கொள் வீரன் மேல்
பொருவது கருதினன் பொருவில் ஆழியான்.
85
   
9750.
உன்னினன் கருடனை உடைந்தது ஆதலும்
தன் உறு சீற்றம் ஆம் தழலை ஆங்கு ஒரு
பொன் இரும் சிறைய புள் அரசன் ஆக்கலும்
அன்னது வணங்கியே அரி முன் நின்றதே.
86
   
9751.
நிற்றலும் அதன் கையின் நீல மேனியான்
பொன் தடம் தாள் வையாப் பொருக்கு என்று ஏறியே
பற்றினன் ஐம்பெரும் படையும் வேள்வியுள்
முற்று உறு பூதர் மேல் முனிவு உற்று ஏகினான்.
87
   
9752.
எடுத்தனன் சங்கினை இலங்கு செம் துவர்
அடுத்திடும் பவளவாய் ஆரச் சேர்த்தியே
படுத்தனன் பேர் ஒலி பரவைத் தெண்திரைத்
தடக் கடல் உடைந்திடும் தன்மை போலவே.
88
   
9753.
மீச் செலும் அமரர்கள் புரிந்த வேள்வி அம்
தீச் சிகை உதவிய சிலையை வாங்கியே
தாச்செலும் வசி கெழு சரங்கள் எண்ணில
ஓச்சினன் வீரன் உரவுத் தானை மேல்.
89
   
9754.
காளிகள் தொகைகளும் கழுதின் ஈட்டமும்
கூளிகள் தொகைகளும் குழுமி ஏற்று எழீஇ
வாளிகள் தொகை சொரீஇ மாயல் சூழ் உறா
நீளிகல் புரிந்தனர் நிகர் இல் வன்மையார்.
90
   
9755.
தண் துளவ அலங்கல் அம் தடம் பொன் தோள் உடை
அண்டனும் தன் படை அனைத்து நேர் கொடு
மண்டு அமர் புரிதலை மற்ற எல்லையில்
கண்டனன் நகைத்தனன் கடவுள் வீரனே.
91
   
9756.
வெருவரும் பெரும் திறல் வீரன் தண் துழாய்
அரியொடு போர் செய ஆதி நாயகன்
திரைகடல் உலகமும் சிறிது தான் என
ஒரு பெரும் தேரினை உய்த்திட்டான் அரோ.
92
   
9757.
பாய் இரந்தான் எனப் பகரும் வேதம் ஆம்
ஆயிரம் புரவிகள் அளப்பு இல் கேதனம்
ஆய் இரும் படைகள் மீக் கலந்தது ஆகிய
மா இரும் தேர் அவண் வல்லை வந்ததே.
93
   
9758.
தேர் அவண் வருதலும் திறல் கொள் வீரனால்
பார் இடை வீழ்ந்து அயர் பங்கய ஆசனன்
ஆர் உயிர் பெற்று என அறிவு பெற்று எழீஇ
நேர் அறு மகம் படு நிகழ்ச்சி நோக்கினான்.
94
   
9759.
அரி பொரு நிலைமையும் ஆடல் வீரன் அது
உரு கெழு செற்றமும் உம்பர் தன் இடை
இரதம் வந்து இட்டதும் யாவும் நோக்கியே
கருதினன் யான் உம் காலம் ஈது எனா.
95
   
9760.
விண் இழி தேர் இடை விரைவில் நான் முகன்
நண்ணினன் வலவனின் நகை உட்கோல் கொடு
துண் என நடத்தியே தொழுது வீரன் ஆம்
புண்ணியன் தனக்கு இது புகறல் மேயினான்.
96
   
9761.
நீறு அணி பவள மெய் நிமலன் நிற்கு இதோர்
வீறு அணி தேர் தனை விரைவில் உய்த்தனன்
தேறலர் தமை அடும் திறல் கொள் வீர நீ
ஏறுதி துணைவியோடு என்று போற்றினான்.
97
   
9762.
போற்றினன் இரத்தலும் பொருவில் வேதன் மேல்
சீற்றம் உள்ளது அதில் ஒரு சிறிது நீங்கியே
ஆற்றல் கொள் வீரன் எம் அன்னை தன்னுடன்
ஏற்றம் ஒடு அதன் மிசை இமைப்பின் மேவினான்.
98
   
9763.
மேவிய காலையில் வெலற்கு அரும் திறல்
சேவக அடியனேன் திறத்தைக் காண்க எனத்
தாவு அகல் தேரினைத் தண் துழாய் முடிக்
காவலன் முன் உறக் கடாவி உய்ப்பவே.
99
   
9764.
வரன் உறு நான் முக வலவன் உய்த்திடு
திரு மணித் தேர்மிசைத் திகழ்ந்த வீரன் முன்
ஒருதனி வையம் மேல் உம்பர்க்கு ஆகவே
புரம் அட வருவது ஓர் புராரி போன்றனன்.
100
   
9765.
எல்லை இல் பெரும் திறல் இறைவன் ஏறு தேர்
அல்லி அம் கமல மேல் அண்ணல் உய்த்திடச்
சொல் அரும் தானையின் தொகையை நீக்கியே
வல்லை சென்று நிறுத்த தம் மாயன் முன்னரே.
101
   
9766.
பார் உலகு அளவினும் பரந்த பைம் பொன்
தேர் அவண் எதிர்தலும் திரு உலாவிய
கார் உறழ் மேனி அம் கண்ணன் கண் நுதல்
வீரனை நோக்கி ஓர் மொழி விளம்பினான்.
102
   
9767.
தெழித்த வார் புனல் கங்கை அம் சடைமுடிச் சிவனைப்
பழித்த தக்கனை அடுவது அலால் அவன் பால் இல்
இழுக்கு இல் தேவரை அடுவது என் வேள்வியை எல்லாம்
அழித்தது என்னை நீ புகலுதி ஆல் என அறைந்தான்.
103
   
9768.
பாடல் சான்றிடும் மால் இது புகறலும் பலரும்
நாடு தொல் புகழ் வீரன் நன்று இது என நகையா
ஈடு சேர் இமில் ஏற்றுடன் வயப்புலி ஏறு ஒன்று
ஆடல் செய்தல் போல் ஒரு மொழி உரைத்தனன்
                                  அன்றே.
104
   
9769.
எல்லை இல்லது ஓர் பரமனை இகழ்ந்தவன் இயற்றும்
மல்லல் வேள்வியில் அவி நுகர்ந்தோர்க்கு எலாம்                                 மறைமுன்
சொல்லும் தண்டமே புரிந்தனன் நின்னையும்                                 தொலைப்பாம்
வல்லையேல் அது காத்தி என்றனன் உமை மைந்தன்.
105
   
9770.
வீரன் இங்கு இது புகறலும் செம் கண் மால் வெகுண்டு
பார வெம் சிலை குனித்தனன் நாண் ஒலி படுத்தி
யாரும் விண் முகில் ஒன்று தன் வில்லொடும் அப்பு
மாரி பெய்து எனப் பகழியால் பூதரை மறைத்தான்.
106
   
9771.
கணங்கள் தம்மிசை மால் சரம் பொழிதலும் காணூஉ
அணங்கு தன்னொடு நகை செய்து வீரன் ஆம் அமலன்
பணம் கொள் பல்தலைப் பன்னகக்கு இறைவன் ஆல்                                   படைத்த
குணம் கொள் மேருவே அன்னது ஓர் பெரும் சிலை                                   குனித்தான்.
107
   
9772.
செற்றம் மீக் கொள ஐயன்வில் வாங்கினன் சிறிதே
பற்றி நாண் ஒலி எடுத்தலும் ஒடுங்கின பரவை
பொற்றை யாவையும் கீண்டன துளங்கின புவனம்
இற்றை வைகலோ இறுதி என்று அயர்ந்தனர் எவரும்.
108
   
9773.
கோளில் ஆகிய புற்று இடை ஓர் அராக் குறுகி
மீளில் வெம் சினக் குழவி கொண்டு ஏகலின் வீரன்
தோளில் வாங்கிய சிலையினில் தூணியில் துதைந்த
வாளி வாங்கி உய்த்து ஒரு தனி மாயனை மறைத்தான்.
109
   
9774.
செம் கணான் தனை மறைத்த பின் மற்று அவன்                                    செலுத்தும்
துங்க வெம் கணை யாவையும் பொடி படத் தொலைப்ப
அங்கு ஒர் ஆயிரம் பகழியை ஐது எனப் பூட்டி
எங்கள் நாயகன் திரு மணிப் புயத்தின் நேர் எய்தான்.
110
   
9775.
எய்யும் வெம் கணை யாவையும் வீரருள் இறை ஆம்
ஐயன் ஆசுகம் ஆயிரம் ஓச்சினன் அகற்றி
ஒய் எனக் கரியோன் நுதல் மீ மிசை ஒரு தன்
வெய்ய பொத்திரம் ஏவினன் அவன் உளம் வெருவ.
111
   
9776.
ஏவு தொல் கணை மாயவன் நுதல் இடை இமைப்பின்
மேவு கின்றுழி அனையவன் தளர்தலும் வீரன்
வாவு தேர் மிசை ஊன்றினன் சிலையை வார் கணையும்
தூவுகின்றிலன் மால் இடர் நீங்கு உறும் துணையும்.
112
   
9777.
இன்னல் அத்துணை அகன்று மால் எதிர்தலும் எமது
மன்னும் நேர்ந்தனன் இருவரும் வரிசிலை வளையாப்
பொன்னின் வாளிகள் பொழிந்தனர் முறை முறை                                    பொருதார்
அன்ன பான்மையர் செய்த போர் யாவரே அறைவார்.
113
   
9778.
மாறு கொண்ட போர் இவ்வகை புரிதலும் வயத்தால்
வீறு கொண்டு உயர் முக்கணான் வெய்ய தீ வடவைக்
கூறு கொண்டது ஓர் படையினை ஓச்சலும் குவட்டில்
ஏறு கொண்டு அலை அனையவன் உரத்தில் எய்தியதே.
114
   
9779.
எய்து காலையில் உளம் பதை பதைத்திட இரங்கி
வெய்து உயிர்ப்புடன் உணர் ஒரீஇ உளம் நனி மெலிந்து
நொய்தின் மையலை நீங்கலும் முகுந்தனை நோக்கிச்
செய்தி போர் என உரைத்தனன் சரபம் ஆம் திறலோன்.
115
   
9780.
மெய் வதத்தினை யாவர்க்கும் விரைவினில் இழைக்கும்
தெய்வதப் படை முழுவதும் செம் கண் மால் செலுத்த
அவ் அனைத்தையும் அனைய அப் படைகளால் அகற்றிக்
கவ்வை முற்றினன் நுதல் விழி அளித்திடும் கடவுள்.
116
   
9781.
தேன் திகழ் பங்கயத் திருவின் நாயகத்
தோன்றல் தன் படைக் கலம் தூண்ட எங்கணும்
சான்று என நின்றவன் தனயன் வீரம் ஆம்
வான் திகழ் படை தொடா வல்லை மாற்றவே.
117
   
9782.
அரி அதன் பின் உற ஆதி வீரன் மேல்
பொரு கணை அளப்பு இல பொழிய மாற்றி ஓர்
சரம் அது செலுத்தி மால் சார்ங்கம் ஒன்றையும்
இரு துணி படுத்தினன் இறைவன் மைந்தனே.
118
   
9783.
பின்னும் அத் துணை தனில் பெரும் திறல் பெயர்
முன்னவன் இரு கணை முறையின் ஓச்சியே
பன்னகம் மிசைத் துயில் பகவன் ஊர்தி தன்
பொன் இரும் சிறையினைப் புவியில் வீட்டினான்.
119
   
9784.
ஆயது ஓர் அமைதில் இல் ஆழி அம் கையான்
மாயவன் ஆதலின் வரம்பு இல் கண்ணரை
மேயின காதலின் விதிப்ப வீரன் முன்
பாய் இருள் முகில் எனப் பரம்பினார் அரோ.
120
   
9785.
அங்கு அவர் யாரையும் அமலன் வெய்ய கண்
பொங்கு அழல் கொளுவி நுண் பொடியது ஆக்கலும்
பங்கய விழியினான் பரமன் அன்று அருள்
செம் கையில் ஆழியைச் செல்க என்று ஏவினான்.
121
   
9786.
விடுத்தது ஓர் திகிரியை வீரன் அம் கையால்
பிடித்து அவண் விழுங்கினன் பெயர்த்து மாயவன்
எடுத்திடும் கதையினை எறிய அன்னது
தடுத்தனன் தனது கைத் தடம் பொன் தண்டினால்.
122
   
9787.
சங்கார் செம் கைப் புங்கவன் ஏவும் தண்டம் போய்
மங்கா அம் கண் வீழ்வது காணா வாள் வாங்கிப்
பொங்கா நின்றே உய்த்திட எய்தும் பொழுதின் கண்
உங்காரம் செய்து இட்டனன் அம்மா உமை மைந்தன்.
123
   
9788.
ஒய் என்று ஐயன் சீற்றம் ஒடு அங்கண் உங்காரம்
செய்யும் காலத்து ஓவியம் என்னச் செயல் நீங்கிக்
கையும் வாளும் ஆய் அவண் நின்றான் கடல் ஊடே
வையம் உண்டு கண் துயில்கின்ற மா மாயன்.
124
   
9789.
சான்று அகல் மாயன் அச்சுறவு எய்தித் தளர் காலை
மூன்று கண் வீரன் யாது நினைந்தோ முனிவு எய்த
ஆன்றது ஒர் செற்றம் நீங்குதி என்னா அண்டத்தே
தோன்றியது அம்மா கண் நுதல் ஈசன் சொல் ஒன்றே.
125
   
9790.
அந்தரம் மீதே வந்திடும் சொல் அங்கு அது கேளா
எந்தை மனம் கொள் வெம் சினம் நீங்கி இடு போழ்தில்
அந்தின் மணித் தேர் உய்த்திடு பாகன் அது நோக்கி
வந்தனை செய்தே போற்றி ஓர் மாற்றம் வகுப்பான் ஆல்.
126
   
9791.
அறத்தினை ஒருவிச் செல்லும் அழிதகன் உலகம்
                             எல்லாம்
இறத்தலை எய்த இங்ஙன் இயற்றிய மகத்தின் மேவிப்
பெறத்தகும் அவியை நுங்கும் பேதையேன் பிழையை                              எல்லாம்
பொறுத்தனை கொண்மோ என்னாப் பொன் அடிக்
                             கமலம் பூண்டான்.
127
   
9792.
பூண்டிடும் உலகம் தந்த புங்கவன் தன்னை நோக்கி
ஆண் தகை வீரன் அஃதே ஆக என்று அருளலோடும்
நீண்டது ஓர் மாயன் அன்னான் நீடு அருள் நிலைமை                                       காணூஉ
ஈண்டு இது காலம் என்னா ஏத்தினன் இயம்பல் உற்றான்.
128
   
9793.
பார வெம் சிலையும் வீட்டிப் பல்படைக் கலமும் சிந்திச்
சேரலர் உயிர்கள் உண்ட திகிரியும் செல்ல நுங்கிப்
போர் இடை எனையும் வென்று புகழ் புனைந்து இடுதி                                       என்றால்
வீர நின் தகைமை யாரே முடிவு உற விளம்ப வல்லார்.
129
   
9794.
ஆசு அறு நெறியின் நீங்கும் அயன் மகன் இயற்று
                                  கின்ற
பூசனை விரும்பி வேள்வி புகுந்தனன் புந்தி இல்லேன்
மாசு அறு புகழாய் நின்னால் மற்று இது பெற்றேன்                                   அந்தோ
ஈசனை இகழ்ந்தோர் தம்பால் இருப்பரோ எண்ணம்                                   மிக்கோர்.
130
   
9795.
ஆதி நாயகனை ஒல்லார் அனையவர்ச் சேர்ந்தார்க்கு                                       எல்லாம்
வேதமே இசையா நிற்கும் வியன் பெரும் தண்டம்                                       அன்றோ
ஈது எலாம் எம்மனோர் பால் இயற்றிய இனைய தன்மை
நீதியால் எம் பால் அன்றி நின் கணோர் குறையும்                                       உண்டோ.
131
   
9796.
விழி தனில் முறுவல் தன்னில் வெய்து உயிர்ப்பு
                          அதனில் ஆர்ப்பின்
மொழி தனில் புவனம் எல்லாம் முதலொடு முடிக்க                           வல்லோய்
பழி படு வேள்வி தன்னில் பலரையும் படையினோடும்
அழிவு செய்து இட்டது அம்மா அடிகளுக்கு ஆடல்                           அன்றோ.
132
   
9797.
உறுநர் தம் தொகைக்கு வேண்டிற்று உதவிய முதல்வன்                                      ஏவும்
முறை அதை உன்னி வேள்வி முடிப்பது ஓர் ஆடல்                                      ஆகச்
சிறிது எனும் அளவை தன்னில் சிதைத்தனை அன்றி                                      எந்தாய்
இறுதி செய்திட நீ உன்னின் யார் கொலோ எதிர்க்கும்                                      நீரார்.
133
   
9798.
இறுதி செய்து இடலே சீற்றம் இன்பமே ஆண்மை என்னா
அறை தரு சத்தி நான்கு ஆம் அரன் தனக்கு ஐயை காளி
முறை தரு கவுரி இன்னோர் மும்மையும் பெற்றோர்
                                         ஏனைப்
பெறல் அரும் சத்தியான் இப் பெற்றியும் மறைகள் பேசும்.
134
   
9799.
அன்னது ஓர் பரிசால் ஈசன் அரும் பெரும் சத்தி
                                 என்னில்
பின்னம் அன்று அவற்கு யானும் பெரிது மன் புடையேன்                                  முக்கண்
முன்னவன் தன் பால் ஈண்டு என் மொய்ம்புடன் இழந்த                                  நேமி
இன்னும் அங்கு அவன் தாள் அர்ச்சித்துத் இமைப்பினில்                                  எய்துகின்றேன்.
135
   
9800.
முனிவுடன் அடிகள் ஈண்டு முறை புரிந்து அதனுக்கு                                    இன்னல்
மன்னிடை கொள்ளேன் இன்னான் மற்று இது                                    பெறுதலாலே
புனிதம் ஆக் கொள்வன் தண்டம் புரிந்தனை பொறுத்தி                                    குற்றம்
இனி அருள் புரிதி என்னா இணை அடி இறைஞ்ச                                    லோடும்.
136
   
9801.
வீரருள் வீரன் மாலோன் விளம்பிய மாற்றம் கேளா
நாரணற்கு அன்பு செய்து நண்ணியது ஓர் காலை தன்னில்
பார் இடம் சூழ நந்தி பரவிட உமையா ளோடு
மூரி மால் விடை மேல் கொண்டு தோன்றினன் முடிவு                                       இலாதான்.
137
   
9802.
தேங்கிய கங்கை சூடும் செம் சடைக் கடவுள் தோன்ற
ஆங்கு அது தெரிந்த வீரன் அச்சமோடு அம் கை
                                      கூப்பிப்
பாங்கு உற நிற்ப மாலும் பங்கயத்து அயனும் தாழா
நீங்கிய தாயை நேரும் குழவியின் நிலையர் ஆனார்.
138
   
9803.
கண்டனள் கவுரி வேள்விக் களத்து இடைக் கழலும்                                         கையும்
துண்டமும் தலையும் மார்பும் தோள்களும் துணிந்து வீழ
அண்டரும் தக்கன் தானும் ஆவிபோய்க் கிடந்த தன்மை
கொண்டது ஓர் சீற்றம் நீங்கி அருள் வரக் கூறுகின்றாள்.
139
   
9804.
பொன்னார் சடை எம் புனிதன் தனை நோக்கி
முன் ஆகிய பொருட்கு முன்னோனே வேள்விக்கு
மன் ஆனவற்கும் இமையோர்க்கும் மற்று எவர்க்கும்
என்னால் முடிவு எய்திற்று என்று உரைக்கும் இவ்
                                     உலகே.
140
   
9805.
மற்று அவர்கள் புந்தி மயக்கு உற்று உனது தொல்சீர்
சற்றும் உணராது தவறு செய்த தன்மையினால்
செற்றம் மிகு வீரத் திருமகனால் இஞ்ஞான்று
பெற்றனரே அன்றோ பெறத் தக்கது ஓர் பரிசே.
141
   
9806.
முந்தும் இவரை முடித்தி என வெஃகியதும்
தந்து முடித்தாய் தனி வீரனால் அனையர்
உய்ந்து குறை போய் உயிர் பெற்று எழும் வண்ணம்
இந்த வரமும் எனக்கு அருளாய் எம் கோவே.
142
   
9807.
என்று தொழுது ஆங்கு எமை உடையாள் கூறுதலும்
நன்று உன் அருள் என்று நகை செய்து தன் பாங்கர்
நின்ற திறலோனை நேர் நோக்கி இம் மாற்றம்
ஒன்று பகர்ந்தான் உயிர்க்கு உயிராய் உற்றபிரான்.
143
   
9808.
ஈண்டை மகத்தில் எமை இகழ்ந்து நின் சினத்தான்
மாண்டு சிதைவு உற்ற வலியில் ஓர் தம் உயிரை
மீண்டும் அளித்து உருவு மேல் நாள் எனப் புரிதி
ஆண் தகை நீ என்றே அரன் அருளிச் செய்தலுமே.
144
   
9809.
வீரன் அதற்கு இசைந்து மேல் நாள் என இறந்தீர்
யாரும் எழுதிர் என உரைப்ப வானவர்கள்
சோரும் முனிவர் மறையோர் துயில் உணர்ந்த
நீரர் என உயிர் வந்து எய்த நிலத்து எழுந்தார்.
145
   
9810.
தண்டம் இயற்றும் தனி வீரனால் சிதைந்த
பிண்டம் முழுது உருவும் பெற்றார் மகம் புக்கு
விண்ட செயலும் உயிர் மீண்டதுவும் கங்குல் இடைக்
கண்ட புதிய கனவு நிலை போல் உணர்ந்தார்.
146
   
9811.
அம் தண் முனிவோர் அனைவோரும் வானவரும்
இந்திரனே ஆதி இமையோர்களும் வெருவிச்
சிந்தை மருண்டு சிவனை இகழ்ந்தது அதனால்
வந்த பழி உன்னி வருந்தி மிக வெள்கினர் ஆல்.
147
   
9812.
பாண் ஆர் அளி முரலும் பைம் தார் புனை வீரன்
மாண் ஆகத்து அன்னோர் மருங்கு ஆகத் தேவியுடன்
பூண் ஆர் அரவப் புரி சடை எம் புண்ணியனைச்
சேண் ஆர் ககனம் திகழும் செயல் கண்டார்.
148
   
9813.
துஞ்சல் அகன்ற சுரரும் முனிவரரும்
நஞ்ச மணிமிடற்று நாயகனைக் கண் உற்றே
அஞ்சி நடுங்க அது கண்டு எவர் இவர்க்குத்
தஞ்சம் எமை அல்லால் என்று தளரேல் என்றான்.
149
   
9814.
என்று ஆங்கு இசைத்த இறைவன் அருள் நாடி
நன்றால் இது என்று நனி மகிழ்ந்து முன் அணித்தாய்ச்
சென்றார் தொழுதார் திசை முகன் மால் ஆதியராய்
நின்றார் எவரும் நெறியால் இவை உரைப்பார்.
150
   
9815.
சிந்தை அயர் உற்றுச் சிறுவிதி தன் வேள்வி தனில்
எந்தை நினை அன்றி இருந்தேங்கள் கண் முன்னும்
வந்து கருணை புரிந்தனை ஆல் மைந்தர்க்குத்
தந்தை அலது பிறிது ஒருவர் சார்பு உண்டோ.
151
   
9816.
அற்றம் இல் அன்பு இல்லா அடியேங்கள் பால் அடிகள்
செற்றம் அது புரியின் செய்கை முதல் ஆன செயல்
பற்றி முறை செய் பதம் உளதோ அஞ்சல் என
மற்று ஒர் புகல் உளதோ மன் உயிரும் தான் உளதோ.
152
   
9817.
வேதத் திறம் கடந்த வேள்விப் பலி அருந்தும்
பேதைச் சிறியேம் பெரும் பகலும் தீ வினையில்
ஏதப் படாமே இமைப்பில் அது தொலைத்த
ஆதிக்கு எவன் கொல் அளிக்கின்ற கைம்மாறே.
153
   
9818.
இங்கு உன் அடிப் பிழைத்தோம் எல்லோமும் வீரன்                                       எனும்
சிங்கந்தன் கையால் சிதை பட்டவாறு எல்லாம்
பங்கங்கள் அன்றே பவித்திரமாய் மற்று எங்கள்
அங்கம் கட்கு எல்லாம் அணிந்த அணி அன்றோ.
154
   
9819.
கங்கை முடித்ததுவும் காய் கனலை ஏந்தியதும்
வெம் கண் மிகு விடத்தை மேல் நாள் அருந்தியதும்
நங்கை உமை காண நடித்ததுவும் முன் பகலும்
எம் கண் மிசை வைத்த அருள் அன்றோ எம் பெருமான்.
155
   
9820.
ஐய பல உண்டு அறிவிலேம் நின் தனக்குச்
செய்ய வருபிழைகள் சிந்தை மிசைக் கொள்ளாமல்
உய்யும் வகை பொறுத்தி உன் அடியேம் என்றலுமே
தையல் ஒரு பங்கன் தணிந்தனம் ஆல் அஃது என்றான்.
156
   
9821.
ஏற்றுத் தலைவன் இயம்பும் திருவருளைப்
போற்றித் தொழுது தம் புந்தி தளிர்ப்பு எய்திக்
கூற்றைத் தடிந்த குரை கழல் தாள் முன் இறைஞ்சித்
தேற்றத் துடன் பாடி ஆடிச் சிறந்தனரே.
157
   
9822.
அன்ன பொழுதத்து அயன் முதல் ஆம் தேவர்கள் மேல்
உன்ன அரிய ஒருவன் அருள் கண் வைத்து
நும் நும் அரசும் நுமக்கே அளித்தனம் ஆல்
முன்னர் எனவே முறை புரிதிர் என்று உரைத்தான்.
158
   
9823.
மால் அயனே ஆதியர் ஆம் வானவர்கள் எல்லோரும்
ஆல மிடற்று அண்ணல் அருளின் திறம் போற்றி
ஏல மகிழ்வு எய்த இறந்து எழுந்தோர் தம் குழுவில்
சீலம் இலாத் தன் மகனைக் காணான் திசை முகனே.
159
   
9824.
மாண்டது ஒரு தக்கன் வய வீரன் தன் அருளால்
ஈண்டு சனம் தன்னோடு எழா அச் செயல் நோக்கிக்
காண் தகைய நாதன் கழல் இணை முன் வீழ்ந்து
                                   இறைஞ்சி
ஆண்டு கமலத்து அயன் நின்று உரைக்கின்றான்.
160
   
9825.
ஐய நின் வாய்மை எள்ளி அழல் கெழும் மகத்தை                                   ஆற்றும்
கையனது அகந்தை நீங்கக் கடிதினில் தண்டம் செய்து
மையுறு நிரயப் பேறு மாற்றினை அவனும் எம்போல்
உய்யவே அருளுக என்ன உமாபதி கருணை செய்தான்.
161
   
9826.
இறை அருள் கண்டு வீரன் எல்லை அங்கு அதனில்                                    எந்தை
அறை கழல் கண்டு போற்றி அவற்று இயல் வினவித்                                    தாழாப்
பொறி உளது என்று தக்கன் புன்தலை புகுத்த உன்னாக்
குறை உடல் அதனைப் பானு கம்பனைக் கொணர்தி                                    என்றான்.
162
   
9827.
வித்தக வலி கொள் பூதன் வீரபத்திரன் தன் முன்னர்
உய்த்தலும் அதன் மேல் வேள்விக்கு உண்டிஆம் பசு
                                   உள் வீந்த
மைத்தலை கண்டு சேர்த்தி எழுக என்றான் மறைகள்                                    போற்றும்
அத்தனை இகழும் நீரர் ஆவர் இப் பரிசே என்னா.
163
   
9828.
என்றலும் உயிர் பெற்று அங்கண் எழுந்த அத் தக்கன்                                       முன்னம்
நின்றது ஓர் வீரன் கண்டு நெஞ்சு துண் என்ன அஞ்சித்
தன் தகவு இழந்து பெற்ற தலை கொடு வணங்கி நாணி
அன்று செய் நிலைமை நாடி அரந்தை அம் கடலுள்                                       பட்டான்.
164
   
9829.
அல்லல் கூர்ந்து இரங்குகின்ற அச முகன் அடல் வெள்                                    ஏற்றின்
மெல்லிய லோடும் உற்ற விமலனது உருவம் காணூஉ
ஒல்லென வெருக் கொண்டு ஆற்ற உற்றனன் அச்சம்                                    அற்று அவ்
எல்லையில் இறைவன் தக்கா அஞ்சலை இனி நீ
                                   என்றான்.
165
   
9830.
அஞ்சல் என்று அருள லோடும் அசமுகத் தக்கன்                                  எம்கோன்
செம்சரண் முன்னர்த் தாழ்ந்து தீயனேன் புரிந்த தீமை
நெஞ்சினும் அளக்க ஒண்ணாது ஆல் நினை தொறும்                                  சுடுவது ஐயா
உஞ்சனன் அவற்றை நீக்கி உனது அருள் புரிந்த                                  பண்பால்.
166
   
9831.
அடியனேன் பிழைத்ததே போல் ஆர் செய்தார்
                            எனினும் என்போல்
படுவதே சரதம் அன்றோ பங்கயத்து அயனை நல்கும்
நெடியவன் துணை என்று உன்னி நின்பெரு மாயை
                            யாலே
அடிகளை இகழ்ந்தேன் யாதும் அறிகிலேன் சிறியேன்                             என்றான்.
167
   
9832.
காலை அங்கு அதனில் அம்மை காளி தன்னோடு                                     போற்றிப்
பாலுற நின்ற வீர பத்திரன் தனை வம் என்றே
வேலவன் தேவி என்ன வெரி புறம் நீவி அன்னார்க்கு
ஏல நல் வரங்கள் ஈந்தாள் ஈசனுக்கு அன்பு மிக்காள்.
168
   
9833.
மீத் தகு விண் உளோரும் வேள்வி அம் தேவும் மாலும்
பூத் திகழ் கமலத் தோனும் புதல்வனும் முனிவர் தாமும்
ஏத்தினர் வணங்கி நிற்ப எம்மை ஆளுடைய முக்கண்
ஆத்தன் அங்கு அவரை நோக்கி இவைசில அருளிச்                                    செய்வான்.
169
   
9834.
வம்மினோ பிரமன் ஆதி வானவர் மகம் செய் போழ்தில்
நம்மை நீர் இகழ்ந்தி யாரும் நவை பெறக் கிடந்தது                                   எல்லாம்
உம்மையில் விதி ஆம் தண்டம் உமக்கு இது
                                  புரிந்தவாறும்
இம்மையின் முறையே நாண் உற்று இரங்கலீர் இதனுக்கு                                   என்றான்.
170
   
9835.
இனைத்து அருள் புரிதலும் எண்ண லாரையும்
நினைத்து அருள் புரிதரு நிமலன் தாள் தொழாச்
சினத்தொடு மகத்தை முன் சிதைத்து உளோனையும்
மனத் தகும் அன்பினால் வணங்கிப் போற்றவே.
171
   
9836.
வீரரில் வீரனும் விசய மேதகு
நாரியும் அயல் வர நந்தி முன் செலப்
பார் இடம் எங்கணும் பரவ மாதொடே
போர் அடல் விடையினான் பொருக்கு என்று ஏகினான்.
172
   
9837.
கயிலையில் ஏகியே கவுரியோடு அரன்
வியன் நகர் மன்றிடை வீற்று இருந்துழி
வய மிகு வீரற்கு வான மேக்கு உற
இயலும் ஓர் பதம் அளித்து இருத்தி ஆங்குஎன.
173
   
9838.
இருவர் தம் தாளையும் இறைஞ்சி அன்னவர்
தருவிடை பெற்றனன் ஆகித் தக்கன
துரியது ஓர் மகம் அடும் உலப்பு இல் பூதர்கள்
திரை கடல் ஆம் எனத் திசைதொறு தீண்டவே.
174
   
9839.
தந்தை முன் விடுத்த ஓர் தடம் பொன் தோயல்
வந்தது அங்கதன் மிசை வயம் கொள் ஆடலான்
பைந்தொடி யொடும் புகாப் பானு கம்பன் அது
உந்திட அரன் அருள் உலகில் போயினான்.
175
   
9840.
போயினன் அதன் இடைப் பொருவில் தொல்பெருங்
கோயிலின் எய்தியே குழுக் கொள் சாரதர்
மேயினர் சூழ்தர வீரபத்திரன்
ஏயது ஓர் துணைவியோடு இனிது மேவினான்.
176