அடி முடி தேடு படலம்
 
9841.
இங்கு இது நிற்க முன் இறைவன் வந்துழி
அங்குற நின்றது ஓர் அமரர் தங்களுள்
செம் கமலத்து உறை தேவன் தக்கன் ஆம்
துங்கம் இல் மைந்தனை நோக்கிச் சொல்லுவான்.
1
   
9842.
யாது முன் உணர்ந்தனை யாது செய்தனை
யாது அவண் கருதினை யாரில் பெற்றனை
யாது பின் செய்தனை யாது பட்டனை
யாது இவண் பெற்றனை யாது உன் எண்ணமே.
2
   
9843.
பொன்றுதல் இல்லது ஓர் புலவர் யாவர்க்கும்
வன் திறல் முனிவரர் தமக்கும் வைய மேல்
துன்றிய அந்தணர் தொகைக்கும் துண் எனக்
கொன்று உயிர் உண்பது ஓர் கூற்றம் ஆயினாய்.
3
   
9844.
சீரையும் தொலைத்தனை சிறந்த தக்கன் ஆம்
பேரையும் தொலைத்தனை பேதை ஆகி நின்
ஏரையும் தொலைத்தனை ஏவல் போற்றுநர்
ஆரையும் தொலைத்தனை அலக்கண் எய்தினாய்.
4
   
9845.
நின் உணர்வு அல்லது நிகர் இல் மேலவர்
சொன்னதும் உணர்ந்திலை தொல்லை ஊழினால்
இந்நிலை ஆயினை இறையை எள்ளினாய்
முன்னவன் உயர் நிலை முழுதும் தேர்ந்த நீ.
5
   
9846.
இயல் படு வளம் பெறீஇ ஈசன் மேன்மைகள்
அயர்த்தனை நின் அளவு அன்று மை அறான்
உயித் தொகை தமக்கு எலாம் உள்ளது ஆதலான்
மயக்கினை அடைந்தனை மற்று என் செய்தீ நீ.
6
   
9847.
முற்று உணர்வு எய்தியே முழுது அளித்திடப்
பெற்ற வெம் கண்ணினும் பெரிதும் மா மயக்கு
உற்றன முன் பகல் உது கண்டு இன்று போல்
நெற்றி அம் கண்ணினான் அருளின் நீக்கினான்.
7
   
9848.
ஆதலின் அருள் உடை அமல நாயகன்
பாதம் அருச்சனை பரிவில் செய்குதி
பேது உறும் இப் பவப் பெற்றி நீக்கியே
போதம் ஒடு இன் அருள் புரிவன் என்றலும்.
8
   
9849.
மை திகழ் முகத்தினை மற்று அதற்கு இசைந்து
உய்திறம் உணர்த்தினை உங்கள் கண்ணு முன்
எய்திய மையலும் எம்பிரான் அருள்
செய்ததும் இயம்புதி தெளிதற்கு என்னவே.
9
   
9850.
பொன் இரும் சத தளப் போதின் மீ மிசை
மன்னிய திசை முகன் மதலை மா முகம்
முன் உற நோக்கியே முந்தும் கூறினம்
இன்னமும் அக் கதை இயம்பு வோம் எனா.
10
   
9851.
நாலு உள திசை முக நாதன் தொல்லை நாள்
மாலொடு பல் பகல் மலைவு செய்து நாம்
மேலது ஓர் பொருள் என விமலன் வந்து அருள்
கோலம் அது உன்னியே தொழுது கூறுவான்.
11
   
9852.
பத்தின் ஒடு நூறு எதிர் படுத்த யுக நான்மை
ஒத்த முடிவு எல்லை எனது ஓர் பகல் அது ஆகும்
அத்தகு பகல் பொழுதும் அந்தியொடு செல்ல
நத்தம் உறு நான் துயிலின் நண்ணுவன் அவ்வேலை.
12
   
9853.
வாளும் ஒடுங்கும் பரிதி மா மதி ஒடுங்கும்
நாளும் ஒடுங்கும் தமது நாளும் ஒடுங்கும் உற்றே
கோளும் ஒடுங்கும் குலிச பாணி முதல் வானோர்
கேளும் ஒடுங்கும் புவனி கேடு படும் அன்றே.
13
   
9854.
மண் உலகில் ஆர் உயிர் வறந்து இறுதி ஆகும்
விண் உறு பதங்களில் வியன் முனிவர் யாரும்
துண் என வெருக் கொடு துளங்கினர்கள் சூழா
எண்ணு சன லோகம் மிசை எய்துவர்கள் அந் நாள்.
14
   
9855.
வாரிதிகள் நால் திறமும் வல்லை இல் எழுந்தே
ஆரியை தவம் செய் பதி ஆதியன அல்லாப்
பார் இனையர் உந்தி ஒரு பாகம் அதன் மேலும்
ஓர் எழுபிலத்து உலகம் உண்டு உலவும் அன்றே.
15
   
9856.
ஒண் திகிரி மால் வரை உடுத்த நிலம் உற்றும்
குண்டு உறு பிலத்தினோடு கூடும் வகை வீட்டி
அண்டர் உலகு உண்டு நிமிர்ந்து அப்புறனும் ஆகி
மண்டு புனலே உலகை மாற்றி இடும் அனம் அன்றே.
16
   
9857.
ஆனது ஒரு வேலையில் ஒர் ஆல் இலையின் மீதே
மேல் நிலவு தண் மதி மிலைந்தவன் மலர்த்தாள்
தான் அகம் உறுத்தி ஒர் தனிக் குழவியே போல்
கான் உறு துழாய் மவுலி கண்துயிலும் மாதோ.
17
   
9858.
கண் துயிலுகின்ற படி கண்டு சன லோகத்து
அண்டு முனிவோர் புகழ ஆங்கனம் விழித்தே
பண்டை நிலன் நேட அது பாதலம் அது ஆகக்
கொண்டல் மணி மேனியின் ஒர் கோல உரு ஆனான்.
18
   
9859.
கோலம் எனும் ஓர் உருவு கொண்டு பிலம் ஏகி
ஞாலம் எவண் உற்றது என நாடியது தன்னை
வாலிய எயிற்றின் இடை வல்லை கொடு மீண்டு
மூலம் எனவே நிறுவி மொய்ம்பினொடு போனான்.
19
   
9860.
அல் பொழுது நால் உகம் ஒர் ஆயிரமும் ஏக
எல் பொழுது தோன்றியது யான் துயில் உணர்ந்தே
கற்பனை இயற்றிய கருத்தினினை போழ்தின்
நிற்புழி அடைந்தன நெடும் புணரி எல்லாம்.
20
   
9861.
அருத்தி எழு பால் கடல் அரா அணையின் மீதே
திருத் திகழும் மார்பு உடைய செம்மல் புவிதன்னை
இருத்தினம் எயிற்றினில் எடுத்து என நினைத்தே
கருத்தினில் அகந்தை கொடு கண்துயிலல் உற்றான்.
21
   
9862.
ஆன பொழுதத்தினில் அளப்பு இல் இமையோரைத்
தானவரை மானுடவர் தம்மொடு விலங்கை
ஏனைய உயிர்த் தொகையை யாவையும் அளித்தே
வானகமும் வையகமும் மல்கும் வகை வைத்தே.
22
   
9863.
மன்னியலும் இந்திரனை வான் அரசில் உய்த்தே
அன்னவன் ஒழிந்த திசையாளர் களை எல்லாம்
தன் நிலை நிறுத்தியது தன்னை நெடிது உன்னி
என்னை அலது ஓர் கடவுள் இன்று என எழுந்தேன்.
23
   
9864.
துஞ்சல் உறு காலை தனில் துஞ்சும் எழும் வேலை
எஞ்சலில் உயிர்த் தொகுதியாவும் எழும் யானே
தஞ்சம் எனை அன்றி ஒரு தாதை இலை யார்க்கும்
விஞ்சு பொருள் யான் என வியந்து எனை நடந்தே.
24
   
9865.
மல்லல் உறு மேல் உலகு மாதிரமும் ஏனைத்
தொல் உலகு மேரு ஒடு சுற்று கடல் ஏழும்
ஒல் என விரைத்து எழும் உயிர்த் தொகையும் அல்லா
எல்லை இல் பொருள் திறனும் யான் நெடிது நோக்கி.
25
   
9866.
இப் பொருள் அனைத்தும் முனம் யான் பயந்த என்றால்
ஒப்பு இலை எனக்கு என உளத்து இடை மதித்தேன்
அப் பொழுதில் ஆர் அமுத ஆழி இடை ஆழிக்
கைப் புயல் அகந்தையொடு கண் துயிலல் கண்டேன்.
26
   
9867.
அன்று அவனை மால் என அறிந்தனன் அறிந்தும்
சென்றனன் அகந்தை யொடு செய்ய திருவைகும்
மன்றல் மணி மார்பம் மிசை வண் கை கொடு தாக்கி
இன்துயில் உணர்ந்திடுதி என்றலும் எழுந்தான்.
27
   
9868.
ஏற்று எழு முராரி தனை யாரை உரை என்றே
சாற்றுதலும் யாம் உனது தாதை அறியாய் கொல்
நால் தலை கொள் மைந்த என நன்று என நகைத்துத்
தேற்றிடினும் நீ துயில் தெளிந்திலை கொல் என்றேன்.
28
   
9869.
தந்தை என வந்தவர்கள் தாம் உதவுகின்ற
மைந்தர்கள் தமக்கு உரை செய் வாசகம் அது என்ன
முந்து உற எமக்கு இது மொழிந்தது இயல்பு அன்றால்
எந்தை எனவே நினைதி யாம் பிரமமே காண்.
29
   
9870.
உந்தியில் இருந்து வரும் உண்மை உணராமே
மைந்தன் என நீ எமை மனத்தின் நினைகு உற்றாய்
இந்தனம் உதித்திடும் எரிக் கடவுளுக்குத்
தந்தை அதுவோ இது கழக்கு உரையது அன்றோ.
30
   
9871.
நின்னுடைய தாதை என நீ உனை வியந்தாய்
அன்னதை விடுக்குதி அரும் தவ வலத்தான்
முன்னம் ஒரு தூண் இடை முளைத்தனை அவற்றால்
உன்னில் அதுவே மிக உயர்ந்த பொருள் ஆமோ.
31
   
9872.
துய்ய மகன் ஆம் பிருகு சொற்ற சபதத்தால்
ஐ இரு பிறப்பினை அடிக்கடி எடுத்தாய்
மெய் அவை அனைத்தையும் விதித்தனம் விதித்து எம்
கை அது சிவந்து உளது கண்டிடுதி என்றேன்.
32
   
9873.
அன்று அவற்கு எதிர் புகுந்து அனைய சொல் புகறலும்
குன்று எடுத்திடு கரக் கொண்டல் போல் மேனியான்
நன்று எனச் சிரம் அசைஇ நகைசெயா வெகுளிஆல்
பொன் தளிர்க் கரதலம் புடை புடைத்து உரை செய்வான்.
33
   
9874.
நச்சு அராப் பூண்டிடும் நம்பன் உன் சென்னியில்
உச்சி அம் தலையினை உகிரினால் களைதலும்
அச்சம் ஆய் வீழ்ந்தனை அது படைத்து இன்னமும்
வைச்சிலாய் நன்று நீ மற்று எமை தருவதே.
34
   
9875.
நேயம் ஆய் முன்னரே நின்னை ஈன்று உதவிய
தாயும் யாம் அன்றியும் தந்தையும் யாம் உனக்கு
ஆயது ஓர் கடவுள் யாம் அடிகள் யாம் மைந்த நம்
மாயை ஆல் இன்று இவண் மதி மயக்கு உறுதி காண்.
35
   
9876.
பொன் அலாது ஆம் கொலோ பூண் எலாம் இறைபுரி
மன் அலாது ஆம் கொலோ மா நிலம் மா நிலம்
தன் அலாது ஆம் கொலோ தகுவது ஓர் வளம் அதில்
என் அலாது ஆம் கொலோ எச் சரா சரமுமே.
36
   
9877.
எண்ணு விப் போனும் நான் எண்ணு கின்றோனும் நான்
கண் நுதல் பொருளும் நான் காண் தகும் புலனும் நான்
நண்ணுதற்கு அரியன் நான் நாரணக் கடவுள் நான்
விண்ணகத் தலைவன் நான் வேதமும் பொருளும் நான்.
37
   
9878.
ஆதி நான் உருவு நான் அருவு நான் இருளும் நான்
சோதி நான் அத்தன் நான் தூயன் நான் மாயன் நான்
யாது நான் பூதன் நான் யாரு நான் சங்கரன்
பாதி நான் அவனும் நான் பரம் எனும் பொருளும் நான்.
38
   
9879.
என்று பல பல உரைத் திடுதலும் யான் எதிர்
சென்று உருத்து இருவரும் செருவினைப் புரிது மேல்
வென்றி உற்றவர் அவரோ மேலை யோர் எழுக என
வன்திறல் போர் செய்வான் வந்தனன் மாலுமே.
39
   
9880.
ஏற்று எழுந்தோர் சிலை ஏந்தியே வாங்கி மால்
கூற்று இரும் படை முதல் கொடிய வெம் படை எலாம்
மாற்ற அரும் தன்மையால் வல்லை உய்த்திடுதல் கண்டு
ஆற்றினன் குசைகளால் அனைய வெம் படை தொடா.
40
   
9881.
ஆங்கு அவை அழிவு உற அரியும் தன் படை
வாங்கினன் விடுத்தலும் வருதல் கண்டு யான்
பாங்கரின் நின்ற என் படையை அம் கையில்
தாங்கி நின்று உய்த்தனன் தடுத்து மீண்டதே.
41
   
9882.
அப்படை மீண்ட பின் ஆதி ஆகிய
ஒப்ப அரும் சிவன் அளித்து உளது புங்கவர்
எப் பெரும் படைக்கும் ஓர் இறைவன் ஆயது
மைப் புயல் மேனி மால் வழுத்தி வாங்கினான்.
42
   
9883.
மஞ்சனம் முதலிய மறு இல் பூசனை
நெஞ்சு உறு புலன்களின் நிரப்பி ஓச்சலும்
எஞ்சல் இல் அமரர்கள் இரிய மேல் செலும்
நஞ்சினும் கொடிது என நடந்த வேலையே.
43
   
9884.
முன்னமே எனக்கும் அம் முக் கண் நாயகன்
அன்னது ஓர் படை அளித்து அருளினான் அதை
உன்னியே வழிபடீஇ ஒல்லை உய்த்தனன்
வன்னி மேல் வன்னி செல் வண்ணம் என்னவே.
44
   
9885.
ஒரு திறத்து இருவரும் உஞற்றி ஏவிய
அரன் அருள் பெரும் படை தம்மில் ஆடல் செய்
தெரி கனல் கற்றைகள் யாண்டும் சிந்தியே
திரிதல் உற்று உலகு எலாம் செற்று உலாயவே.
45
   
9886.
அப்படை திரிதலும் அவைகள் வீசிய
துப்பு உறழ் கொழும் கனல் தொல்லை வானினும்
இப்புவி மருங்கினும் ஈண்ட வானவர்
வெப்பு உற விரிந்தனர் விதிர்ப்பு உற்று ஏங்குவார்.
46
   
9887.
வீண்டனர் ஒரு சிலர் வெதும்பி விம்மியே
மாண்டனர் ஒரு சிலர் வந்த நஞ்சம் உண்டு
ஆண்டவர் கழலிணை அடைதும் யாம் எனாக்
காண்தகு கயிலையின் கண் உற்றார் சிலர்.
47
   
9888.
கார் எலாம் கரிந்தன ககனம் தன்னொடு
பார் எலாம் எரிந்தன பௌவப் பால் படு
நீர் எலாம் வறந்தன நிரந்த பல் உயிர்ப்
பேர் எலாம் தொலைந்தன பின்னும் போர் செய்தேம்.
48
   
9889.
இந்த வாறு அமர் புரிந்திட்ட காலையில்
தந்தையார் அருளினால் தமியன் மா முகம்
வந்து நாரதன் எனும் மறு இல் மா முனி
சிந்தை செய்து எமக்கு இவை செப்பல் மேயினான்.
49
   
9890.
நீர் முதல் நாம் என நினைந்து கூறியே
போர் முதலே சில புரிகின்றீர் கொல் ஆம்
ஓர் முதல் அன்றியே இல்லை உங்களில்
ஆர் முதல் இருவரும் அன்ன பண்பினீர்.
50
   
9891.
பொருசமர் கருதியே புகுந்த போழ்தினும்
உரியது ஓர் படை அலது உலகம் தீப்பது ஓர்
வெருவரும் பெரும் படை விடுத்திர் அப்படை
அருளிய கடவுளை அயர்த்திர் போலும் ஆல்.
51
   
9892.
கடவுளை மறந்திரேல் கருதி நீர் பெறும்
அடுபடை நாமமும் அயர்த்திரோ அது
நெடிது நும் மனத்தினில் நினைந்து தேற்றுமின்
விடும் இனி அமர் என விளம்பி மேலுமே.
52
   
9893.
வாதியா இன்னும் நீர் மலைதிரே எனின்
ஆதியாய் அருஉரு ஆனது ஓர் பொருள்
சோதியாய் நடு உறத் தோன்றும் காண்டிர் என்று
ஓதி ஆல் எமக்கு இவை உணர்த்திப் போயினான்.
53
   
9894.
போயினன் உரைத்த சொல் புந்தி கொண்டு இலம்
தீ என உருத்து இகல் செருக்கு நீங்கலம்
ஆயிரம் ஆண்டு காற் அமர் இயற்றினம்
மா இரும் புவனமும் உயிரும் மாயவே.
54
   
9895.
இங்கு இவை யாவையும் இறுதி ஊழியின்
அங்கியின் நடம்புரி அண்ணல் நோக்கியே
தங்களில் இருவரும் சமர்செய் கின்றனர்
புங்கவர் தாம் எனும் புகழை வெஃகினார்.
55
   
9896.
அறிவு அறை போயினர் அகந்தை உற்றனர்
உறுவது ஒன்று உணர்கிலர் உண்மை ஓர்கிலர்
சிறுவரில் இருவரும் சீற்றப் போர் செயா
இறுதி செய்கின்றனர் உலகம் யாவையும்.
56
   
9897.
ஈங்கு இவர் செயலினை இன்னும் காண்டும் ஏல்
தீங்கு உறும் உலகு உயிர் சிதைந்து வீடும் ஆல்
ஓங்கிய நம் நிலை உணர்த்தின் ஆய் இடைத்
தாங்க அரும் வெம் சமர் தணிந்து நிற்பர் ஆல்.
57
   
9898.
தம்மையே பொருள் எனச் சாற்று கின்றதும்
வெம்மை சேர் வெகுளியும் வெறுத்து வீட்டியே
செம்மை சேர் மனத்தர் ஆய்த் திகழ்வர் தாம் எனா
எம்மை ஆள் உடையவன் எண்ணினான் அரோ.
58
   
9899.
ஆன்றது ஓர் அளவை தன்னில் அடைந்தது மாகம்
                                  தன்னில்
வான் திகழ் பானாட் கங்குல் மதி பகல் தழுவு நென்னல்
ஞான்றது தனில் யாம் கண்டு நடுக்கு உற நடுவண் ஆகத்
தோன்றினன் கனல் குன்றே போல் சொல் அரும்
                                  பரத்தின் சோதி.
59
   
9900.
தோற்றிய செய்ய சோதி தொல் அமர் உழந்தி ஆம்கண்
மாற்ற அரும் படைகள் ஆக வழங்கிய இரண்டும் வௌவி
ஆற்ற அரும் தன்மைத்து ஆக அணுகு உறாது அகன்று                                         போகிச்
சீற்றமும் சமரும் நீங்கிச் சேண் உற நோக்கி நின்றேம்.
60
   
9901.
நிற்றலும் யாங்கள் கேட்ப நெடும் விசும்பு இடை ஓர்                                   வார்த்தை
தெற்றென எழுந்தது அம்மா சிறுவிர் காள் நுமது
                                  வன்மை
பற்று அலர் புரம் மூன்று அட்ட பரமனே காண்பான்                                   சோதி
மற்று இதன் அடியும் ஈறும் வரன் முறை தேரும் என்றே.
61
   
9902.
கேட்டனம் அதனை நெஞ்சில் கிளர்ந்து எழு சீற்றம்                               யாவும்
வீட்டினம் எனினும் பின்னும் விட்டிலம் அகந்தை                               தன்னைக்
காட்டிய எமது முன்னோன் காண்பனும் வலியை என்ன
வீட்டு உடன் விசும்பில் சொற்றார் யார்கொல் என்று                               எண்ணிப் பின்னும்.
62
   
9903.
ஏண் உற எதிர்ந்தி யாம் செய் இகலினுக்கு இடையூறு ஆக
நீள் நிலம் அதனைக் கீண்டு நிமிர்ந்து வான் புகுந்து நீடு
மாண் உறு சோதி தானும் மறை முனி உரைத்த வாறு
காணிய வந்தது எம்மில் கடந்த வான் பொருள் கொல்                                        என்றேம்.
63
   
9904.
தீது அறு காலின் வந்த செம் தழல் அன்று ஆல் ஈது
யாதும் ஒன்று அறிதல் தேற்றாம் இருவரும் இதனை                                     இன்னே
ஆதியும் முடியும் நாடி அன்னது காண்டும் என்னா
மாதவன் தானும் யானும் வம் சினம் இசைத்து மன்னோ.
64
   
9905.
நீடு வான் உருவிச் சென்று நிலன் உற விடந்து புக்கும்
ஓடி நாம் ஒல்லை தன்னில் உற்று இதற்கு அடியும் ஈறும்
நாடினால் அவற்றில் ஒன்றும் நலம் பெற முன்னம்                                      கண்டோர்
பீடு உயர் தலைவர் ஈதே துணிவு எனப் பேசி நின்றேம்.
65
   
9906.
முடியினைக் காண்பன் என்றே மொழிந்தனன் தமியன்                                      ஏனை
அடியினைக் காண்பன் என்றே அரியும் அங்கு இசையா                                      நின்றான்
நடை பயில் மழலை ஓவா நாகு இளம் சிறுவர் வானில்
சுடர் மலி கதிரைக் கையால் தீண்டுவான் துணியும் மா                                      போல்.
66
   
9907.
எரி உறழ் தறுகண் செம் கண் இமில் உடை எருத்தம்                                    யாரும்
உரு கெழு துழனி கூர்வாய் ஒள் எயிறு இலங்கு தந்தம்
கருவரை அனைய மேனிக் கடு நடைக் குறும்தாள்                                    வெள்ளைக்
குரம் ஒடு கண்ணன் அன்று ஓர் கோலம் ஆம் கோலம்                                    கொண்டான்.
67
   
9908.
ஒருபது நூறு அது ஆகும் யோசனை உகப்பின் ஓடு
பருமையும் ஆகும் அந்தப் பகட்டு உருவு ஆகி முன்னம்
தரணியை இடந்து கீழ் போய்த் தடவியே துருவிச் சென்று
நிறை படு புவனம் யாவும் நீந்தியே போயினான் ஆல்.
68
   
9909.
பாதலம் நாடி அன்னான் படர்தலும் யானும் ஆங்கு ஓர்
ஓதிமரம் வடிவம் ஆகி ஒல்லையில் எழுந்து மீப் போய்
மேதகு விசும்பின் மேல் ஆம் வியன் புவனங்கள் நாடிப்
போதலும் சோதி முன்னம் போல மேல் போயிற்று அம்மா.
69
   
9910.
முன்னம் ஓர் ஏனம் ஆகி முரண் ஒடு புவனி கீண்டு
வன்னியாய் எழுந்த சோதி வந்தது ஓர் மூலம் காண்பான்
உன்னியே போன மாலோன் ஊக்கியே செல்லச் செல்லப்
பல் நெடும் காலம் சென்ற பாதமும் காணான் மாதோ.
70
   
9911.
நொந்தன எயிறு மேனி நுடங்கின நோன்மை யாவும்
சிந்தின புனல் உண் வேட்கை சேர்ந்தன உயிர்ப்பின்
                                       ஓடும்
வந்தன துயரம் போன வஞ்சினம் அகந்தை வீந்த
முந்தையில் உணர்வு மால் பால் முழுது ஒருங்கு உற்றது                                        அன்றே.
71
   
9912.
தொல்லையில் உணர்ச்சி தோன்றத் துண் எனத் தெளிந்த                                       கண்ணன்
அல் உறழ் புயலின் தோற்றத்து அண்ணல் அம் களிற்றின்                                       யாக்கை
மெல்லவே தரிக்கல் ஆற்றான் வீட்டவும் இல்லான் மீண்டு
செல்லவும் ஊற்றம் இல்லான் சிவன் அடி சிந்தை
                                      செய்தான்.
72
   
9913.
என்றும் உணர்வு அரிய எம் பெருமான் உன் திருத்தாள்
அன்றி அரண் இல்லை அவற்றை அருச்சித் திடவும்
பொன்றியது என் வன்மை பொறுத்தி குறை அடியேன்
ஒன்றும் உணரேன் என்று உளம் நொந்து போற்றினனே.
73
   
9914.
ஆன பொழுதில் அமலன் திரு அருளால்
தேன் உலவு தண் தார்த் திருமால் மிடல் உடைத்தாய்
ஏன வடிவோடு எழுந்து புவிப் பால் எய்தி
வான் உறு சோதிக்கு அணித்தா வந்து வணங்கி நின்றான்.
74
   
9915.
நின்றான் ஒருபால் நெடுமால் அது நிற்க யான் முன்
பின்றா வகையால் பெரும் சூள் இவை பேசி வானில்
சென்று ஆயிரம் ஆண்டு திரிந்து திரிந்து நாடிக்
குன்றாத சோதிக் கொழுந்தின் தலை கூடலேன் யான்.
75
   
9916.
மீளும் படியும் நினையேன் வினையேனும் மீளில்
சூளும் பழுதாம் அது அன்றித் துணிந்து முன்னம்
மூளும் சுடரின் முதல் கண்ட அரிமூர்த்தி ஆவான்
ஆள் என்பர் என்னை அழிவு எய்தும் இவ் ஆற்றல்                                     மன்னோ.
76
   
9917.
எந்நாள் வரை செல்லினும் செல்லுக இன்னும் விண்                                       போய்ப்
பொன் ஆர் முடி கண்ட பின் அல்லது போகேல் என்று
உன்னா அது காணிய போதலும் உள்ளம் வெம்பி
மன்னா உயிரும் உலைந்து ஆற்றலும் மாண்டது அன்றே.
77
   
9918.
கண்ணும் சுழன்ற சிறை நொந்தன காலும் ஓய்ந்த
எண்ணும் திரிந்தது அது போதில் எழுந்த சோதி
உள் நின்ற சித்தர் எனவே பலர் ஒல்லை மேவி
விண்ணின் தலை போய் இது ஒன்று விளம்பல் உற்றார்.
78
   
9919.
வான் ஆர் பரம் சோதியின் ஈற்றினை வாரி தன்னுள்
மீன் ஆர் தரவே திரிகின்றது ஒர் வெள்ளை அன்னம்
தானாம் உணரும் சிறை போகித் தளர்ந்து வன்மை
போனாலும் நாட வருகின்றது போலும் அம்மா.
79
   
9920.
அன்னம் தனக்கு ஈது அறிவு இன்மையது ஆகும்                                   அல்லால்
பின் ஒன்று உளதோ துணிவு உற்றது ஓர் பெற்றி                                   நோக்கின்
இன்னும் சிறிது பொழுது ஏகின் இறக்கும் இந்த
மன்னும் சுடரைச் சிவன் என்று மனம் கொளாதோ.
80
   
9921.
மால் என்பவனும் நிலம் கீண்டனன் வல்லை ஏகி
மூலம் தெரிவான் உணராமல் முரணும் நீங்கிச்
சீலம் குறுகச் சிவனே சரண் என்று பைய
ஞாலம் தனில் வந்து அனல் வெற்பினை நண்ணி
                                 நின்றான்.
81
   
9922.
முந்து உற்று இதனை அருள் செய்திடும் மூர்த்தி தானே
சிந்தைக்குள் மாசு தனைத் தீர்த்து அருள் செய்யின்                                       உய்யும்
இந்தப் பறவை என யானும் இதனை நாடிப்
புந்திக்குள் மையல் ஒழிந்தே அவர்ப் போற்றி செய்தேன்.
82
   
9923.
ஈசன் அருளால் இவை கூறினர் ஏகல் ஓடும்
ஆசின் வழி ஆம் அகந்தைத் திறன் ஆதி ஆய
பாசங்களை வீட்டி அரன் புகழ் பன்னி ஏத்தி
நேசம் கொடு பூசனை செய்ய நினைந்து மீண்டேன்.
83
   
9924.
வந்து கண்ணன் தனை அணுகி வான் பொருள் யாம்                               என்று அறிகலி
முந்து உறு வெம்சமர் இயற்றி முனிமொழியும்
                              உணர்ந்திலம் ஆல்
தந்தை வரவு அறியாமல் தாள் முடியும் தேடல் உற்றேம்
அந்தம் உறும் வேலைதனில் அவன் அருளால் அவன்                               புகழ்ந்தேம்.
84
   
9925.
கீண்டு நிலன் இரு விசும்பில் கிளர்ந்தும் அடி முடி                             உணரேம்
மீண்டும் அவன் தன் அருளால் மிடல்பெற்று வந்தனம்                             ஆல்
ஈண்டு சிவன் தனை வழி பட்டு இருவரும் அன்னவன்                             தோற்றம்
காண்டும் எனயான் உரைப்பக் கண்ணனும் அங்கு
                            அதற்கு இசைந்தான்.
85
   
9926.
இருவரும் அச் சிவன் உருவை இயல் முறையால் தாபித்து
விரைமலர் மஞ்சனம் சாந்தம் விளக்கு அழல் ஆதி                                      அமைத்துப்
பொருவரு பூசனைபுரிந்து போற்றி செய்து வணங்குதலும்
எரிகெழு சோதிக்கு அணித்தா எந்தை அவண் வந்தனனே.
86
   
9927.
மைக் களமும் மான் மழுவும் வரதம் உடன் அபயம் உறும்
மெய்க்கரமும் நால்புயமும் விளங்கு பணிக் கொடும் பூணும்
செக்கர் உறு மதிச் சடையும் சேயிழையோர் பாகமும் ஆய்
முக்கண் இறை யாம் காண முன் நின்றே அருள் புரிந்தான்.
87
   
9928.
அவ்விடை ஆம் இருவர்களும் அமலன் தன் அடி                                 வணங்கிச்
செவ்விதின் நின்று அவன் அருளில் திளைத்து இதனைச்                                 செப்பினம் ஆல்
மெய்வகை ஆம் அன்பு இன்றி விளங்கா நின் இயல்                                 மறையும்
இவ்வகை என்று உணராதே யாம் காணற்கு எளிவருமோ.
88
   
9929.
புந்தி மயங்கிப் பொரும் காலை எம் முன்னில்
செம் தழலின் மேனி கொடு சென்று அருளித் தொல்                                       அறிவு
தந்து நினை உணர்த்தித் தாக்கம் அரும் நீக்கினை ஆல்
எம் திரம் யாம் உள் நின்று இயற்று கின்றாய் நீ அன்றோ.
89
   
9930.
உன்னை உணரும் உணர்வு புரிந்தால் உன்னைப்
பின்னை உணர்வேம் பெரும சிறியேம் செய்த
புன் நெறியை எல்லாம் பொறுத்தி ஆல் தம் சிறுவர்
என்ன செயினும் இனிது அன்றோ ஈன்றவர்க்கே.
90
   
9931.
இன்னாத் தகை சேர் இரும்பினை வல்லோன் இலங்கும்
பொன் ஆக்கிய பரிசு போலே எமை அருளி
மன்னன் ஆக்கினை அயர்த்தோம் மற்று உனையும்                             யாங்களும் உயிர்
தொல் நாள் பிணித்த தொடர் அற்ற வல்லோமோ.
91
   
9932.
என்று இயம்பி யாம் ஏத்தலும் எதிர் உற நோக்கிக்
குன்ற வில் உடை ஒருவன் நீர் செய்தன குறியா
ஒன்றும் எண்ணலீர் நும் பெரும் பூசனை உவந்தாம்
அன்று உமக்கு அருள் பதந் தனை இன்னும் யாம்                                 அளித்தோம்.
92
   
9933.
வேண்டு நல் வரம் கேண்மின் நீர் என்றலும் விசும்பில்
தாண்டவம் புரி பகவ நின் சரணமே அரணாப்
பூண்டிடும் தலை அன்பருள் என்றலும் புரிந்து
காண் தகும் தழல் சோதியுள் இமைப்பினில் கலந்தான்.
93
   
9934.
கலந்த காலையில் யாங்கள் முன் தொழுது எழும் காலைச்
சலம் கொள் பான்மையின் முன் உறத் தேடுவான் தழலாய்
மலர்ந்த பேர் ஒளிமீமிசை சுருங்கியே வந்தோர்
விலங்கல் ஆகியது உலகு எலாம் பரவியே வியப்ப.
94
   
9935.
அன்னது ஆம் சிவலிங்க ரூபம் தனை அணுகி
முன்னம் ஆகியே மும்முறை வலம் செய்து முறையால்
சென்னியால் தொழுது ஏத்தி எம்பதங்களில் சென்றேம்
பின்னர் எந்தையை மறந்திலம் போற்றுதும் பெரிதும்.
95
   
9936.
அரியும் யானும் முன் தேடும் அவ் அனல் கிரி அனல
கிரி எனும் படி நின்றது ஆல் அவ் ஒளி கிளர்ந்த
இரவு அதே சிவராத்திரி ஆயின இறைவர்
பரவி உய்ந்தனர் அன்னது ஓர் வைகலில் பலரும்.
96
   
9937.
ஆதலால் அவன் அருள் பெறின் அவன் இயல் அறியும்
ஓதி ஆகுவர் அல்லரேல் பல கலை உணர்ந்து என்
வேத நாடி என் இறையும் அன்னவன் நிலை விளங்கார்
பேதை நீரரும் ஆங்கு அவர் அல்லது பிறர் ஆர்.
97
   
9938.
மோக வல் வினை ஆற்றியே பவத்து இடை மூழ்கும்
பாகர் அல்லவர்க்கு எய்திடாது அவன் அருள் பவமும்
போக மாற்றிடும் தருமமும் நிகர்வரு புனிதர்க்கு
ஆகும் மற்று அவன் அருள் நிலை பாகர் ஆம் அவரே.
98
   
9939.
நீயும் தொல்வினை நீங்கலின் எம்பிரான் நிலைமை
ஆயும் தொல் உணர்வு இன்று வந்து எய்தியது அவனே
தாயும் தந்தையும் குரவனும் கடவுளும் தவமும்
ஏயும் செல்வமும் அனையவர் சார்தியால் என்றான்.
99