1161கோ மங்க வங்கக் கடல் வையம் உய்ய
      குல மன்னர் அங்கம் மழுவில் துணிய
தாம் அங்கு அமருள் படை தொட்ட வென்றித்
      தவ மா முனியைத் தமக்கு ஆக்ககிற்பீர்
பூ-மங்கை தங்கி புல-மங்கை மன்னி
      புகழ்-மங்கை எங்கும் திகழ புகழ் சேர்
சேமம் கொள் பைம் பூம் பொழில் சூழ்ந்த தில்லைத்
      திருச்சித்ரகூடம் சென்று சேர்மின்களே (5)