1240ஓடாத ஆள் அரியின் உருவம்-அது கொண்டு அன்று
      உலப்பில் மிகு பெரு வரத்த இரணியனைப் பற்றி
வாடாத வள் உகிரால் பிளந்து அவன்-தன் மகனுக்கு
      அருள்செய்தான் வாழும் இடம்-மல்லிகை செங்கழுநீர்
சேடு ஏறு மலர்ச் செருந்தி செழுங் கமுகம் பாளை
      செண்பகங்கள் மணம் நாறும் வண் பொழிலின் ஊடே
ஆடு ஏறு வயல் ஆலைப் புகை கமழும் நாங்கூர்
      அரிமேயவிண்ணகரம்-வணங்கு மட நெஞ்சே             (4)