1567சின இல் செங் கண் அரக்கர் உயிர் மாளச்
      செற்ற வில்லி என்று கற்றவர் தம்தம்
மனமுள் கொண்டு என்றும் எப்போதும் நின்று ஏத்தும்
      மா முனியை மரம் ஏழ் எய்த மைந்தனை
நனவில் சென்று ஆர்க்கும் நண்ணற்கு அரியானை
      நான் அடியேன் நறையூர் நின்ற நம்பியைக்
கனவில் கண்டேன் இன்று கண்டமையால் என்
      கண்-இணைகள் களிப்பக் களித்தேனே             (1)