1626ஊடு ஏறு கஞ்சனொடு மல்லும் வில்லும்
      ஒண் கரியும் உருள் சகடும் உடையச் செற்ற
நீடு ஏறு பெரு வலித் தோள் உடைய வென்றி
      நிலவு புகழ் நேமி அங்கை நெடியோன் காண்மின்-
சேடு ஏறு பொழில் தழுவும் எழில் கொள் வீதி
      திருவிழவில் மணி அணிந்த திண்ணைதோறும்
ஆடு ஏறு மலர்க் குழலார் பயிலும் செல்வத்து
      அணி அழுந்தூர் நின்று உகந்த அமரர்-கோவே             (9)