1692ஏழு மா மரம் துளைபட சிலை வளைத்து
      இலங்கையை மலங்குவித்த
ஆழியான் நமக்கு அருளிய அருளொடும்
      பகல் எல்லை கழிகின்றதால்
தோழி நாம் இதற்கு என் செய்தும்? துணை இல்லை
      சுடர் படு முதுநீரில்
ஆழ வாழ்கின்ற ஆவியை அடுவது ஓர்
      அந்தி வந்து அடைகின்றதே            (5)