1826வண்டு அமர் சாரல் மாலிருஞ்சோலை
      மா மணி வண்ணரை வணங்கும்
தொண்டரைப் பரவும் சுடர் ஒளி நெடு வேல்
      சூழ் வயல் ஆலி நல் நாடன்
கண்டல் நல் வேலி மங்கையர் தலைவன்
      கலியன் வாய் ஒலிசெய்த பனுவல்
கொண்டு இவை பாடும் தவம் உடையார்கள்
      ஆள்வர்-இக் குரை கடல் உலகே            (10)