1985வெந் திறல் வாணன் வேள்வியிடம் எய்தி அங்கு
      ஓர் குறள் ஆகி மெய்ம்மை உணர
செந் தொழில் வேத நாவின் முனி ஆகி வையம்
      அடி மூன்று இரந்து பெறினும்
மந்தரமீது போகி மதி நின்று இறைஞ்ச
      மலரோன் வணங்க வளர் சேர்
அந்தரம் ஏழினூடு செல உய்த்த பாதம்-
      அது நம்மை ஆளும் அரசே 5