208கேசவனே இங்கே போதராயே
      கில்லேன் என்னாது இங்கே போதராயே
நேசம் இலாதார் அகத்து இருந்து
      நீ விளையாடாதே போதராயே
தூசனம் சொல்லும் தொழுத்தைமாரும்
      தொண்டரும் நின்ற இடத்தில் நின்று
தாய்சொல்லுக் கொள்வது தன்மம் கண்டாய்
      தாமோதரா இங்கே போதராயே (8)