271வன் பேய்முலை உண்டது ஓர் வாய் உடையன்
      வன் தூண் என நின்றது ஓர் வன் பரத்தை
தன் பேர் இட்டுக் கொண்டு தரணி தன்னிற்
      தாமோதரன் தாங்கு தடவரை தான்
முன்பே வழி காட்ட முசுக் கணங்கள்
      முதுகிற் பெய்து தம் உடைக் குட்டன்களைக்
கொம்பு ஏற்றி இருந்து குதி பயிற்றும்
      கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடையே             (9)