3455கங்குலும் பகலும் கண் துயில் அறியாள்
      கண்ண நீர் கைகளால் இறைக்கும்
சங்கு சக்கரங்கள் என்று கை கூப்பும்
      தாமரைக் கண் என்றே தளரும்
எங்ஙனே தரிக்கேன் உன்னைவிட்டு? என்னும்
      இரு நிலம் கை துழா இருக்கும்
செங்கயல் பாய் நீர்த் திருவரங்கத்தாய்
      இவள் திறத்து என் செய்கின்றாயே?            (1)