440நம்பனே நவின்று ஏத்த வல்லார்கள்
      நாதனே நரசிங்கமது ஆனாய்
உம்பர்கோன் உலகு ஏழும் அளந்தாய்
      ஊழி ஆயினாய் ஆழி முன் ஏந்திக்
கம்ப மா கரி கோள் விடுத்தானே
      காரணா கடலைக் கடைந்தானே
எம்பிரான் என்னை ஆள் உடைத் தேனே
      ஏழையேன் இடரைக் களையாயே            (9)