503தை ஒரு திங்களும் தரை விளக்கித்
      தண் மண்டலம் இட்டு மாசி முன்னாள்
ஐய நுண் மணல் கொண்டு தெரு அணிந்து
      அழகினுக்கு அலங்கரித்து அனங்கதேவா
உய்யவும் ஆம்கொலோ? என்று சொல்லி
      உன்னையும் உம்பியையும் தொழுதேன்
வெய்யது ஓர் தழல் உமிழ் சக்கரக் கை
      வேங்கடவற்கு என்னை விதிக்கிற்றியே             (1)