699கருமலர்க் கூந்தல் ஒருத்திதன்னைக்
      கடைக்கணித்து ஆங்கே ஒருத்திதன்பால்
மருவி மனம் வைத்து மற்றொருத்திக்கு
      உரைத்து ஒரு பேதைக்குப் பொய் குறித்து
புரிகுழல் மங்கை ஒருத்திதன்னைப்
      புணர்தி அவளுக்கும் மெய்யன் அல்லை
மருது இறுத்தாய் உன் வளர்த்தியூடே
      வளர்கின்றதால் உன்தன் மாயை தானே.             (3)