85தொடர் சங்கிலிகை சலார்-பிலார் என்னத்
      தூங்கு பொன்மணி ஒலிப்பப்
படு மும்மதப் புனல் சோர வாரணம்
      பைய நின்று ஊர்வது போல்
உடன் கூடிக் கிண்கிணி ஆரவாரிப்ப
      உடை மணி பறை கறங்க
தடந் தாளிணை கொண்டு சார்ங்கபாணி
      தளர்நடை நடவானோ             (1)