நாலாயிர திவ்ய பிரபந்தம்

முதல் ஆயிரம்
பெரியாழ்வார்
பெரியாழ்வார் திருமொழி

செங்கீரைப் பருவம்
63உய்ய உலகு படைத்து உண்ட மணிவயிறா
      ஊழிதொறு ஊழி பல ஆலின் இலையதன்மேல்
பைய உயோகு-துயில் கொண்ட பரம்பரனே
      பங்கய நீள் நயனத்து அஞ்சன மேனியனே
செய்யவள் நின் அகலம் சேமம் எனக் கருதி
      செல்வு பொலி மகரக் காது திகழ்ந்து இலக
ஐய எனக்கு ஒருகால் ஆடுக செங்கீரை
      ஆயர்கள் போரேறே ஆடுக ஆடுகவே             (1)
   
64கோளரியின் உருவங் கொண்டு அவுணன் உடலம்
      குருதி குழம்பி எழ கூர் உகிரால் குடைவாய்
மீள அவன்மகனை மெய்ம்மை கொளக் கருதி
      மேலை அமரர்பதி மிக்கு வெகுண்டு வரக்
காள நன் மேகமவை கல்லொடு கால் பொழியக்
      கருதி வரை குடையாக் காலிகள் காப்பவனே
ஆள எனக்கு ஒருகால் ஆடுக செங்கீரை
      ஆயர்கள் போரேறே ஆடுக ஆடுகவே             (2)
   
65நம்முடை நாயகனே நான்மறையின் பொருளே
      நாவியுள் நற்கமல நான்முகனுக்கு ஒருகால்
தம்மனை ஆனவனே தரணி தலமுழுதும்
      தாரகையின் உலகும் தடவி அதன் புறமும்
விம்ம வளர்ந்தவனே வேழமும் ஏழ் விடையும்
      விரவிய வேலைதனுள் வென்று வருமவனே
அம்ம எனக்கு ஒருகால் ஆடுக செங்கீரை
      ஆயர்கள் போரேறே ஆடுக ஆடுகவே             (3)
   
66வானவர்தாம் மகிழ வன் சகடம் உருள
      வஞ்ச முலைப்பேயின் நஞ்சம் அது உண்டவனே
கானக வல் விளவின் காய் உதிரக் கருதிக்
      கன்று அது கொண்டு எறியும் கருநிற என்கன்றே
தேனுகனும் முரனும் திண்திறல் வெந்நரகன்
      என்பவர் தாம் மடியச் செரு அதிரச் செல்லும்
ஆனை எனக்கு ஒருகால் ஆடுக செங்கீரை
      ஆயர்கள் போரேறே ஆடுக ஆடுகவே             (4)
   
67மத்து அளவுந் தயிரும் வார்குழல் நன்மடவார்
      வைத்தன நெய் களவால் வாரி விழுங்கி ஒருங்கு
ஒத்த இணைமருதம் உன்னிய வந்தவரை
      ஊரு கரத்தினொடும் உந்திய வெந்திறலோய்
முத்தின் இளமுறுவல் முற்ற வருவதன்முன்
      முன்ன முகத்து அணிஆர் மொய்குழல்கள் அலைய
அத்த எனக்கு ஒருகால் ஆடுக செங்கீரை
      ஆயர்கள் போரேறே ஆடுக ஆடுகவே             (5)
   
68காய மலர்நிறவா கருமுகில் போல் உருவா
      கானக மா மடுவிற் காளியன் உச்சியிலே
தூய நடம் பயிலும் சுந்தர என்சிறுவா
      துங்க மதக்கரியின் கொம்பு பறித்தவனே
ஆயம் அறிந்து பொருவான் எதிர்வந்த மல்லை
      அந்தரம் இன்றி அழித்து ஆடிய தாளிணையாய்
ஆய எனக்கு ஒருகால் ஆடுக செங்கீரை
      ஆயர்கள் போரேறே ஆடுக ஆடுகவே             (6)
   
69துப்பு உடை ஆயர்கள் தம் சொல் வழுவாது ஒருகால்
      தூய கருங்குழல் நற் தோகைமயில் அனைய
நப்பினைதன் திறமா நல் விடை ஏழ் அவிய
      நல்ல திறல் உடைய நாதனும் ஆனவனே
தப்பின பிள்ளைகளைத் தனமிகு சோதிபுகத்
      தனி ஒரு தேர் கடவித்தாயொடு கூட்டிய என்
அப்ப எனக்கு ஒருகால் ஆடுக செங்கீரை
      ஆயர்கள் போரேறே ஆடுக ஆடுகவே             (7)
   
70உன்னையும் ஒக்கலையிற் கொண்டு தம் இல் மருவி
      உன்னொடு தங்கள் கருத்து ஆயின செய்து வரும்
கன்னியரும் மகிழ கண்டவர் கண்குளிர
      கற்றவர் தெற்றிவர பெற்ற எனக்கு அருளி
மன்னு குறுங்குடியாய் வெள்ளறையாய் மதில் சூழ்
      சோலைமலைக்கு அரசே கண்ணபுரத்து அமுதே
என் அவலம் களைவாய் ஆடுக செங்கீரை
      ஏழ் உலகும் உடையாய் ஆடுக ஆடுகவே             (8)
   
71பாலொடு நெய் தயிர் ஒண் சாந்தொடு சண்பகமும்
      பங்கயம் நல்ல கருப்பூரமும் நாறி வர
கோல நறும்பவளச் செந்துவர் வாயினிடைக்
      கோமள வெள்ளிமுளை போல் சில பல் இலக
நீல நிறத்து அழகார் ஐம்படையின் நடுவே
      நின் கனிவாய் அமுதம் இற்று முறிந்து விழ
ஏலும் மறைப்பொருளே ஆடுக செங்கீரை
      ஏழ் உலகும் உடையாய் ஆடுக ஆடுகவே             (9)
   
72செங்கமலக் கழலிற் சிற்றிதழ் போல் விரலிற்
      சேர் திகழ் ஆழிகளும் கிண்கிணியும் அரையிற்
தங்கிய பொன்வடமும் தாள நன் மாதுளையின்
      பூவொடு பொன்மணியும் மோதிரமும் கிறியும்
மங்கல ஐம்படையும் தோள்வளையும் குழையும்
      மகரமும் வாளிகளும் சுட்டியும் ஒத்து இலக
எங்கள் குடிக்கு அரசே ஆடுக செங்கீரை
      ஏழ் உலகும் உடையாய் ஆடுக ஆடுகவே             (10)
   
73அன்னமும் மின் உருவும் ஆளரியும் குறளும்
      ஆமையும் ஆனவனே ஆயர்கள் நாயகனே
என் அவலம் களைவாய் ஆடுக செங்கீரை
      ஏழ் உலகும் உடையாய் ஆடுக ஆடுக என்று
அன்னநடை மடவாள் அசோதை உகந்த பரிசு
      ஆன புகழ்ப் புதுவைப் பட்டன் உரைத்த தமிழ்
இன்னிசை மாலைகள் இப் பத்தும் வல்லார் உலகில்
      எண்திசையும் புகழ் மிக்கு இன்பம் அது எய்துவரே            (11)