நாலாயிர திவ்ய பிரபந்தம்

முதல் ஆயிரம்
பெரியாழ்வார்
பெரியாழ்வார் திருமொழி

கண்ணன் அப்பூச்சி காட்டுதல்
117மெச்சு ஊது சங்கம் இடத்தான் நல் வேய் ஊதி
பொய்ச் சூதிற் தோற்ற பொறை உடை மன்னர்க்காய்
பத்து ஊர் பெறாது அன்று பாரதம் கைசெய்த
அத் தூதன் அப்பூச்சி காட்டுகின்றான்
      அம்மனே அப்பூச்சி காட்டுகின்றான்            (1)
   
118மலை புரை தோள் மன்னவரும் மாரதரும் மற்றும்
பலர் குலைய நூற்றுவரும் பட்டழிய பார்த்தன்
சிலை வளையத் திண்தேர்மேல் முன்நின்ற செங்கண்
அலவலை வந்து அப்பூச்சி காட்டுகின்றான்
      அம்மனே அப்பூச்சி காட்டுகின்றான்            (2)
   
119காயும் நீர் புக்குக் கடம்பு ஏறி காளியன்
தீய பணத்திற் சிலம்பு ஆர்க்கப் பாய்ந்து ஆடி
வேயின் குழல் ஊதி வித்தகனாய் நின்ற
ஆயன் வந்து அப்பூச்சி காட்டுகின்றான்
      அம்மனே அப்பூச்சி காட்டுகின்றான் (3)
   
120இருட்டிற் பிறந்து போய் ஏழை வல் ஆயர்
மருட்டைத் தவிர்ப்பித்து வன் கஞ்சன் மாளப்
புரட்டி அந்நாள் எங்கள் பூம்பட்டுக் கொண்ட
அரட்டன் வந்து அப்பூச்சி காட்டுகின்றான்
      அம்மனே அப்பூச்சி காட்டுகின்றான்            (4)
   
121சேப் பூண்ட சாடு சிதறித் திருடி நெய்க்கு
ஆப்பூண்டு நந்தன் மனைவி கடை தாம்பால்
சோப்பூண்டு துள்ளித் துடிக்கத் துடிக்க அன்று
ஆப்பூண்டான் அப்பூச்சி காட்டுகின்றான்
      அம்மனே அப்பூச்சி காட்டுகின்றான்            (5)
   
122செப்பு இள மென்முலைத் தேவகி நங்கைக்குச்
சொப்படத் தோன்றி தொறுப்பாடியோம் வைத்த
துப்பமும் பாலும் தயிரும் விழுங்கிய
அப்பன் வந்து அப்பூச்சி காட்டுகின்றான்
      அம்மனே அப்பூச்சி காட்டுகின்றான் (6)
   
123தத்துக் கொண்டாள் கொலோ? தானே பெற்றாள் கொலோ?
சித்தம் அனையாள் அசோதை இளஞ்சிங்கம்
கொத்து ஆர் கருங்குழற் கோபால கோளரி
அத்தன் வந்து அப்பூச்சி காட்டுகின்றான்
      அம்மனே அப்பூச்சி காட்டுகின்றான் (7)
   
124கொங்கை வன் கூனிசொற் கொண்டு குவலயத்
துங்கக் கரியும் பரியும் இராச்சியமும்
எங்கும் பரதற்கு அருளி வன்கான் அடை
அங் கண்ணன் அப்பூச்சி காட்டுகின்றான்
      அம்மனே அப்பூச்சி காட்டுகின்றான்            (8)
   
125பதக முதலைவாய்ப் பட்ட களிறு
கதறிக் கைகூப்பி என் கண்ணா கண்ணா என்ன
உதவப் புள் ஊர்ந்து அங்கு உறுதுயர் தீர்த்த
அதகன் வந்து அப்பூச்சி காட்டுகின்றான்
      அம்மனே அப்பூச்சி காட்டுகின்றான் (9)
   
126வல்லாள் இலங்கை மலங்கச் சரந் துரந்த
வில்லாளனை விட்டுசித்தன் விரித்த
சொல் ஆர்ந்த அப்பூச்சிப் பாடல் இவை பத்தும்
வல்லார் போய் வைகுந்தம் மன்னி இருப்பரே             (10)