நாலாயிர திவ்ய பிரபந்தம்

முதல் ஆயிரம்
பெரியாழ்வார்
பெரியாழ்வார் திருமொழி

காது குத்தல்
138போய்ப்பாடு உடைய நின் தந்தையும் தாழ்த்தான்
      பொரு திறற் கஞ்சன் கடியன்
காப்பாரும் இல்லை கடல்வண்ணா உன்னை
      தனியே போய் எங்கும் திரிதி
பேய்ப்பால் முலை உண்ட பித்தனே கேசவ
      நம்பீ உன்னைக் காது குத்த
ஆய்ப் பாலர் பெண்டுகள் எல்லாரும் வந்தார்
      அடைக்காய் திருத்தி நான் வைத்தேன்            (1)
   
139வண்ணப் பவளம் மருங்கினிற் சாத்தி
      மலர்ப்பாதக் கிண்கிணி ஆர்ப்ப
நண்ணித் தொழும் அவர் சிந்தை பிரியாத
      நாராயணா இங்கே வாராய்
எண்ணற்கு அரிய பிரானே திரியை
      எரியாமே காதுக்கு இடுவன்
கண்ணுக்கு நன்றும் அழகும் உடைய
      கனகக் கடிப்பும் இவையாம்             (2)
   
140வையம் எல்லாம் பெறும் வார்கடல் வாழும்
      மகரக்குழை கொண்டுவைத்தேன்
வெய்யவே காதில் திரியை இடுவன் நீ
      வேண்டிய தெல்லாம் தருவன்
உய்ய இவ் ஆயர் குலத்தினில் தோன்றிய
      ஒண்சுடர் ஆயர்கொழுந்தே
மையன்மை செய்து இள ஆய்ச்சியர் உள்ளத்து
      மாதவனே இங்கே வாராய்            (3)
   
141வணம் நன்று உடைய வயிரக் கடிப்பு இட்டு
      வார்காது தாழப் பெருக்கிக்
குணம் நன்று உடையர் இக் கோபால பிள்ளைகள்
      கோவிந்தா நீ சொல்லுக் கொள்ளாய்
இணை நன்று அழகிய இக் கடிப்பு இட்டால்
      இனிய பலாப்பழம் தந்து
சுணம் நன்று அணி முலை உண்ணத் தருவன் நான்
      சோத்தம் பிரான் இங்கே வாராய்            (4)
   
142சோத்தம் பிரான் என்று இரந்தாலும் கொள்ளாய்
      சுரிகுழலாரொடு நீ போய்க்
கோத்துக் குரவை பிணைந்து இங்கு வந்தால்
      குணங்கொண்டு இடுவனோ? நம்பீ
பேர்த்தும் பெரியன அப்பம் தருவன்
      பிரானே திரியிட ஒட்டில்
வேய்த் தடந்தோளார் விரும்பும் கருங்குழல்
      விட்டுவே நீ இங்கே வாராய்             (5)
   
143விண்ணெல்லாம் கேட்க அழுதிட்டாய் உன்வாயில்
      விரும்பி அதனை நான் நோக்கி
மண்ணெல்லாம் கண்டு என் மனத்துள்ளே அஞ்சி
      மதுசூதனே என்று இருந்தேன்
புண் ஏதும் இல்லை உன்காது மறியும்
      பொறுத்து இறைப் போது இரு நம்பீ
கண்ணா என் கார்முகிலே கடல்வண்ணா
      காவலனே முலை உணாயே             (6)
   
144முலை ஏதும் வேண்டேன் என்று ஓடி நின்காதிற்
      கடிப்பைப் பறித்து எறிந்திட்டு
மலையை எடுத்து மகிழ்ந்து கல்-மாரி
      காத்துப் பசுநிரை மேய்த்தாய்
சிலை ஒன்று இறுத்தாய் திரிவிக்கிரமா
      திரு ஆயர்பாடிப் பிரானே
தலை நிலாப் போதே உன்காதைப் பெருக்காதே
      விட்டிட்டேன் குற்றமே அன்றே? (7)
   
145என் குற்றமே என்று சொல்லவும் வேண்டா காண்
      என்னை நான் மண் உண்டேனாக
அன்புற்று நோக்கி அடித்தும் பிடித்தும்
      அனைவர்க்கும் காட்டிற்றிலையே?
வன் புற்று அரவின் பகைக் கொடி வாமன
      நம்பீ உன்காதுகள் தூரும்
துன்புற்றன எல்லாம் தீர்ப்பாய் பிரானே
      திரியிட்டுச் சொல்லுகேன் மெய்யே             (8)
   
146மெய் என்று சொல்லுவார் சொல்லைக் கருதித்
      தொடுப்புண்டாய் வெண்ணெயை என்று
கையைப் பிடித்துக் கரை உரலோடு என்னைக்
      காணவே கட்டிற்றிலையே?
செய்தன சொல்லிச் சிரித்து அங்கு இருக்கில்
      சிரீதரா உன்காது தூரும்
கையிற் திரியை இடுகிடாய் இந்நின்ற
      காரிகையார் சிரியாமே             (9)
   
147காரிகையார்க்கும் உனக்கும் இழுக்கு உற்று என்
      காதுகள் வீங்கி எரியில்?
தாரியா தாகில் தலை நொந்திடும் என்று
      விட்டிட்டேன் குற்றமே அன்றே?
சேரியிற் பிள்ளைகள் எல்லாரும் காது
      பெருக்கித் திரியவும் காண்டி
ஏர் விடை செற்று இளங்கன்று எறிந்திட்ட
      இருடிகேசா என்தன் கண்ணே <10>
   
148கண்ணைக் குளிரக் கலந்து எங்கும் நோக்கிக்
      கடிகமழ் பூங்குழலார்கள்
எண்ணத்துள் என்றும் இருந்து தித்திக்கும்
      பெருமானே எங்கள் அமுதே
உண்ணக் கனிகள் தருவன் கடிப்பு ஒன்றும்
      நோவாமே காதுக்கு இடுவன்
பண்ணைக் கிழியச் சகடம் உதைத்திட்ட
      பற்பநாபா இங்கே வாராய்             (11)
   
149வா என்று சொல்லி என்கையைப் பிடித்து
      வலியவே காதிற் கடிப்பை
நோவத் திரிக்கில் உனக்கு இங்கு இழுக்குற்று என்?
      காதுகள் நொந்திடும் கில்லேன்
நாவற் பழம் கொண்டுவைத்தேன் இவை காணாய்
      நம்பீ முன் வஞ்ச மகளைச்
சாவப் பால் உண்டு சகடு இறப் பாய்ந்திட்ட
      தாமோதரா இங்கே வாராய்             (12)
   
150வார் காது தாழப் பெருக்கி அமைத்து
      மகரக்குழை இட வேண்டிச்
சீரால் அசோதை திருமாலைச் சொன்ன சொல்
      சிந்தையுள் நின்று திகழப்
பார் ஆர் தொல் புகழான் புதுவை மன்னன்
      பன்னிரு நாமத்தால் சொன்ன
ஆராத அந்தாதிப் பன்னிரண்டும் வல்லார்
      அச்சுதனுக்கு அடியாரே             (13)