நாலாயிர திவ்ய பிரபந்தம்

முதல் ஆயிரம்
பெரியாழ்வார்
பெரியாழ்வார் திருமொழி

ஆயர்மங்கையர் முறையீடு
212ஆற்றில் இருந்து விளையாடுவோங்களைச்
சேற்றால் எறிந்து வளை துகிற் கைக்கொண்டு
காற்றிற் கடியனாய் ஓடி அகம் புக்கு
மாற்றமும் தாரானால் இன்று முற்றும்
      வளைத் திறம் பேசானால் இன்று முற்றும் (1)
   
213குண்டலம் தாழ குழல் தாழ நாண் தாழ
எண் திசையோரும் இறைஞ்சித் தொழுது ஏத்த
வண்டு அமர் பூங்குழலார் துகிற் கைக்கொண்டு
விண் தோய் மரத்தானால் இன்று முற்றும்
      வேண்டவும் தாரானால் இன்று முற்றும் (2)
   
214தடம் படு தாமரைப் பொய்கை கலக்கி
விடம் படு நாகத்தை வால் பற்றி ஈர்த்து
படம் படு பைந்தலை மேல் எழப் பாய்ந்திட்டு
உடம்பை அசைத்தானால் இன்று முற்றும்
      உச்சியில் நின்றானால் இன்று முற்றும் (3)
   
215தேனுகன் ஆவி செகுத்துப் பனங்கனி
தான் எறிந்திட்ட தடம் பெருந்தோளினால்
வானவர் கோன் விட வந்த மழை தடுத்து
ஆனிரை காத்தானால் இன்று முற்றும்
      அவை உய்யக் கொண்டானால் இன்று முற்றும் (4)
   
216ஆய்ச்சியர் சேரி அளை தயிர் பால் உண்டு
பேர்த்து அவர் கண்டு பிடிக்கப் பிடியுண்டு
வேய்த் தடந்தோளினார் வெண்ணெய் கோள் மாட்டாது அங்கு
ஆப்புண்டு இருந்தானால் இன்று முற்றும்
      அடியுண்டு அழுதானால் இன்று முற்றும் (5)
   
217தள்ளித் தளர் நடை யிட்டு இளம் பிள்ளையாய்
உள்ளத்தின் உள்ளே அவளை உற நோக்கிக
கள்ளத்தினால் வந்த பேய்ச்சி முலை உயிர்
துள்ளச் சுவைத்தானால் இன்று முற்றும்
      துவக்கு அற உண்டானால் இன்று முற்றும் (6)
   
218மாவலி வேள்வியில் மாண் உருவாய்ச் சென்று  
மூவடி தா என்று இரந்த இம் மண்ணினை
ஒரடி இட்டு இரண்டாம் அடிதன்னிலே
தாவடி இட்டானால் இன்று முற்றும்
      தரணி அளந்தானால் இன்று முற்றும்            (7)
   
219தாழை தண்-ஆம்பற் தடம் பெரும் பொய்கைவாய்
வாழும் முதலை வலைப்பட்டு வாதிப்பு உண்
வேழம் துயர் கெட விண்ணோர் பெருமானாய்
ஆழி பணி கொண்டானால் இன்று முற்றும்
      அதற்கு அருள் செய்தானால் இன்று முற்றும் (8)
   
220வானத்து எழுந்த மழை முகில் போல் எங்கும்
கானத்து மேய்ந்து களித்து விளையாடி
ஏனத்து உருவாய் இடந்த இம் மண்ணினைத்
தானத்தே வைத்தானால் இன்று முற்றும்
      தரணி இடந்தானால் இன்று முற்றும் (9)
   
221அங் கமலக் கண்ணன்தன்னை அசோதைக்கு
மங்கை நல்லார்கள் தாம் வந்து முறைப்பட்ட
அங்கு அவர் சொல்லைப் புதுவைக்கோன் பட்டன் சொல்
      இங்கு இவை வல்லவர்க்கு ஏதம் ஒன்று இல்லையே             (10)