நாலாயிர திவ்ய பிரபந்தம்

முதல் ஆயிரம்
பெரியாழ்வார்
பெரியாழ்வார் திருமொழி

கண்ணனைக் கன்றின்பின் போக்கிய அன்னை இரங்குதல்
233அஞ்சன வண்ணனை ஆயர் கோலக் கொழுந்தினை
மஞ்சனம் ஆட்டி மனைகள்தோறும் திரியாமே
கஞ்சனைக் காய்ந்த கழல் அடி நோவக் கன்றின்பின்
என்செயப் பிள்ளையைப் போக்கினேன்? எல்லே பாவமே (1)
   
234பற்றுமஞ்சள் பூசிப் பாவைமாரொடு பாடியிற்
சிற்றில் சிதைத்து எங்கும் தீமை செய்து திரியாமே
கற்றுத் தூளியுடை வேடர் கானிடைக் கன்றின் பின்
எற்றுக்கு என் பிள்ளையைப் போக்கினேன்? எல்லே பாவமே (2)
   
235நன்மணி மேகலை நங்கைமாரொடு நாள்தொறும்
பொன்மணி மேனி புழுதியாடித் திரியாமே
கல்மணி நின்று அதிர் கான்- அதரிடைக் கன்றின்பின்
என் மணிவண்ணனைப் போக்கினேன் எல்லே பாவமே (3)
   
236வண்ணக் கருங்குழல் மாதர் வந்து அலர் தூற்றிடப்
பண்ணிப் பல செய்து இப் பாடி எங்கும் திரியாமே
கண்ணுக்கு இனியானைக் கான் -அதரிடைக் கன்றின்பின்
எண்ணற்கு அரியானைப் போக்கினேன் எல்லே பாவமே (4)
   
237அவ்வவ் இடம் புக்கு அவ் ஆயர் பெண்டிர்க்கு அணுக்கனாய்க்
கொவ்வைக் கனிவாய் கொடுத்துக் கூழைமை செய்யாமே
எவ்வும் சிலை உடை வேடர் கானிடைக் கன்றின் பின்
தெய்வத் தலைவனைப் போக்கினேன் எல்லே பாவமே             (5)
   
238மிடறு மெழுமெழுத்து ஓட வெண்ணெய் விழுங்கிப் போய்ப்
படிறு பல செய்து இப் பாடி எங்கும் திரியாமே
கடிறு பல திரி கான் -அதரிடைக் கன்றின் பின்
இடற என்பிள்ளையைப் போக்கினேன் எல்லே பாவமே             (6)
   
239வள்ளி நுடங்கு-இடை மாதர் வந்து அலர் தூற்றிடத்
துள்ளி விளையாடித் தோழரோடு திரியாமே
கள்ளி உணங்கு வெங்கான் -அதரிடைக் கன்றின் பின்
புள்ளின் தலைவனைப் போக்கினேன் எல்லே பாவமே (7)
   
240பன்னிரு திங்கள் வயிற்றிற் கொண்ட அப் பாங்கினால்
என் இளங் கொங்கை அமுதம் ஊட்டி எடுத்து யான்
பொன்னடி நோவப் புலரியே கானிற் கன்றின் பின்
என் இளஞ் சிங்கத்தைப் போக்கினேன் எல்லே பாவமே (8)
   
241குடையும் செருப்பும் கொடாதே தாமோதரனை நான்
உடையும் கடியன ஊன்று வெம் பரற்கள் உடைக்
கடிய வெங் கானிடைக் கால்- அடி நோவக் கன்றின் பின்
கொடியென் என்பிள்ளையைப் போக்கினேன்:எல்லே பாவமே (9)
   
242என்றும் எனக்கு இனியானை என் மணிவண்ணனைக்
கன்றின் பின் போக்கினேன் என்று அசோதை கழறிய
பொன் திகழ் மாடப் புதுவையர்கோன் பட்டன் சொல்
இன் தமிழ் மாலைகள் வல்லவர்க்கு இடர் இல்லையே (10)