நாலாயிர திவ்ய பிரபந்தம்

முதல் ஆயிரம்
பெரியாழ்வார்
பெரியாழ்வார் திருமொழி

கண்ணன் மீண்டுவருங் கோலம் கண்டு அன்னை மகிழ்தல்
243சீலைக் குதம்பை ஒருகாது ஒருகாது
      செந்நிற மேற் தோன்றிப்பூ
கோலப் பணைக் கச்சும் கூறை- உடையும்
      குளிர் முத்தின் கோடாலமும்
காலிப் பின்னே வருகின்ற கடல்வண்ணன்
      வேடத்தை வந்து காணீர்
ஞாலத்துப் புத்திரனைப் பெற்றார் நங்கைமீர்
      நானே மற்று ஆரும் இல்லை (1)
   
244கன்னி நன் மா மதில் சூழ்தரு பூம்பொழிற்
      காவிரித் தென்னரங்கம்
மன்னிய சீர் மதுசூதனா கேசவா
      பாவியேன் வாழ்வு உகந்து
உன்னை இளங்கன்று மேய்க்கச் சிறுகாலே
      ஊட்டி ஒருப்படுத்தேன்
என்னின் மனம் வலியாள் ஒரு பெண் இல்லை
      என்குட்டனே முத்தம் தா (2)
   
245காடுகள் ஊடு போய்க் கன்றுகள் மேய்த்து
      மறியோடிக் கார்க்கோடற்பூச்
சூடி வருகின்ற தாமோதரா கற்றுத்
      தூளி காண் உன் உடம்பு
பேடை மயிற் சாயற் பின்னை மணாளா
      நீராட்டு அமைத்து வைத்தேன்
ஆடி அமுதுசெய் அப்பனும் உண்டிலன்
      உன்னோடு உடனே உண்பான் (3)
   
246கடி ஆர் பொழில் அணி வேங்கடவா கரும்
      போரேறே நீ உகக்கும்
குடையும் செருப்பும் குழலும் தருவிக்கக்
      கொள்ளாதே போனாய் மாலே
கடிய வெங் கானிடைக் கன்றின் பின் போன
      சிறுக்குட்டச் செங் கமல-
அடியும் வெதும்பி உன்கண்கள் சிவந்தாய்
      அசைந்திட்டாய் நீ எம்பிரான் (4)
   
247பற்றார் நடுங்க முன் பாஞ்சசன்னியத்தை
      வாய்வைத்த போரேறே என்
சிற்றாயர் சிங்கமே சீதை மணாளா
      சிறுக்குட்டச் செங்கண் மாலே
சிற்றாடையும் சிறுப்பத்திரமும் இவை
      கட்டிலின் மேல் வைத்துப் போய்
கற்றாயரோடு நீ கன்றுகள் மேய்த்துக்
      கலந்து உடன் வந்தாய் போலும் (5)
   
248அஞ்சுடர் ஆழி உன் கையகத்து ஏந்தும்
      அழகா நீ பொய்கை புக்கு
நஞ்சு உமிழ் நாகத்தினோடு பிணங்கவும்
      நான் உயிர் வாழ்ந்திருந்தேன்
என் செய்ய என்னை வயிறு மறுக்கினாய்?
      ஏதும் ஓர் அச்சம் இல்லை
கஞ்சன் மனத்துக்கு உகப்பனவே செய்தாய்
      காயாம்பூ வண்ணம் கொண்டாய்            (6)
   
249பன்றியும் ஆமையும் மீனமும் ஆகிய
      பாற்கடல் வண்ணா உன்மேல்
கன்றின் உருவாகி மேய்புலத்தே வந்த
      கள்ள அசுரர் தம்மைச்
சென்று பிடித்துச் சிறுக்கைகளாலே
      விளங்காய் எறிந்தாய் போலும்
என்றும் என்பிள்ளைக்குத் தீமைகள் செய்வார்கள்
      அங்ஙனம் ஆவர்களே (7)
   
250கேட்டு அறியாதன கேட்கின்றேன் கேசவா
      கோவலர் இந்திரற்குக்
காட்டிய சோறும் கறியும் தயிரும்
      கலந்து உடன் உண்டாய் போலும்
ஊட்ட முதல் இலேன் உன்தன்னைக் கொண்டு
      ஒருபோதும் எனக்கு அரிது
வாட்டம் இலாப் புகழ் வாசுதேவா உன்னை
      அஞ்சுவன் இன்று தொட்டும்             (8)
   
251திண் ஆர் வெண்சங்கு உடையாய் திருநாள் திரு
      வோணம் இன்று எழு நாள்;முன்
பண்நேர் மொழியாரைக் கூவி முளை அட்டிப்
      பல்லாண்டு கூறுவித்தேன்
கண்ணாலம் செய்யக் கறியும் கலத்தது
      அரிசியும் ஆக்கி வைத்தேன்
கண்ணா நீ நாளைத்தொட்டுக் கன்றின் பின் போகேல்
      கோலம் செய்து இங்கே இரு (9)
   
252புற்றரவு அல்குல் அசோதை நல் ஆய்ச்சி தன்
      புத்திரன் கோவிந்தனைக்
கற்றினம் மேய்த்து வரக் கண்டு உகந்து அவள்
      கற்பித்த மாற்றம் எல்லாம்
செற்றம் இலாதவர் வாழ்தரு தென்புது
      வை விட்டுசித்தன் சொல்
கற்று இவை பாட வல்லார் கடல்வண்ணன்
      கழலிணை காண்பர்களே             (10)