நாலாயிர திவ்ய பிரபந்தம்

முதல் ஆயிரம்
பெரியாழ்வார்
பெரியாழ்வார் திருமொழி

கண்ணன் மீண்டுவருங் கோலம் கண்டு கன்னியர் காமுறல்
253தழைகளும் தொங்கலும் ததும்பி எங்கும்
      தண்ணுமை எக்கம் மத்தளி தாழ்பீலி
குழல்களும் கீதமும் ஆகி எங்கும்
      கோவிந்தன் வருகின்ற கூட்டம் கண்டு
மழைகொலோ வருகின்றது என்று சொல்லி
      மங்கைமார் சாலக வாசல் பற்றி
நுழைவனர் நிற்பனர் ஆகி எங்கும்
      உள்ளம் விட்டு ஊண் மறந்து ஒழிந்தனரே (1)
   
254வல்லி நுண் இதழ் அன்ன ஆடை கொண்டு
      வசை அறத் திருவரை விரித்து உடுத்து
பல்லி நுண் பற்றாக உடைவாள் சாத்தி
      பணைக்கச்சு உந்தி பல தழை நடுவே
முல்லை நல் நறுமலர் வேங்கை மலர்
      அணிந்து பல் ஆயர் குழாம் நடுவே
எல்லியம் போதாகப் பிள்ளை வரும்
      எதிர்நின்று அங்கு இனவளை இழவேன்மினே            (2)
   
255சுரிகையும் தெறி-வில்லும் செண்டு-கோலும்
      மேலாடையும் தோழன்மார் கொண்டு ஓட
ஒரு கையால் ஒருவன்தன் தோளை ஊன்றி
      ஆநிரையினம் மீளக் குறித்த சங்கம்
வருகையில் வாடிய பிள்ளை கண்ணன்
      மஞ்சளும் மேனியும் வடிவும் கண்டாள்
அருகே நின்றாள் என்பெண் நோக்கிக் கண்டாள்
      அது கண்டு இவ் ஊர் ஒன்று புணர்க்கின்றதே (3)
   
256குன்று எடுத்து ஆநிரை காத்த பிரான்
      கோவலனாய்க் குழல் ஊதி ஊதிக்
கன்றுகள் மேய்த்துத் தன் தோழரோடு
      கலந்து உடன் வருவானைத் தெருவிற் கண்டு
என்றும் இவனை ஒப்பாரை நங்காய்
      கண்டறியேன் ஏடி வந்து காணாய்
ஒன்றும்நில்லா வளை கழன்று துகில்
      ஏந்து இள முலையும் என் வசம் அலவே             (4)
   
257சுற்றி நின்று ஆயர் தழைகள் இடச்
      சுருள்பங்கி நேத்திரத்தால் அணிந்து
பற்றி நின்று ஆயர் கடைத்தலையே
      பாடவும் ஆடக் கண்டேன் அன்றிப் பின்
மற்று ஒருவர்க்கு என்னைப் பேசலொட்டேன்
      மாலிருஞ்சோலை எம் மாயற்கு அல்லால்
கொற்றவனுக்கு இவள் ஆம் என்று எண்ணிக்
      கொடுமின்கள் கொடீராகிற் கோழம்பமே             (5)
   
258சிந்துரம் இலங்கத் தன் திருநெற்றிமேல்
      திருத்திய கோறம்பும் திருக்குழலும்
அந்தரம் முழவத் தண் தழைக் காவின்கீழ்
      வரும் ஆயரோடு உடன் வளைகோல் வீச
அந்தம் ஒன்று இல்லாத ஆயப் பிள்ளை
      அறிந்து அறிந்து இவ் வீதி போதுமாகில்
பந்து கொண்டான் என்று வளைத்து வைத்துப்
      பவளவாய் முறுவலும் காண்போம் தோழீ (6)
   
259சாலப் பல் நிரைப் பின்னே தழைக் காவின்கீழ்த்
      தன் திருமேனிநின்று ஒளி திகழ
நீல நல் நறுங்குஞ்சி நேத்திரத்தால்
      அணிந்து பல் ஆயர் குழாம் நடுவே
கோலச் செந்தாமரைக் கண் மிளிரக்
      குழல் ஊதி இசைப் பாடிக் குனித்து ஆயரோடு
ஆலித்து வருகின்ற ஆயப் பிள்ளை
      அழகு கண்டு என்மகள் அயர்க்கின்றதே             (7)
   
260சிந்துரப்-பொடி கொண்டு சென்னி அப்பித்
      திருநாமம் இட்டு அங்கு ஓர் இலையந்தன்னால்
அந்தரம் இன்றித் தன் நெறி பங்கியை
      அழகிய நேத்திரத்தால் அணிந்து
இந்திரன் போல் வரும் ஆயப்பிள்ளை
      எதிர்நின்று அங்கு இனவளை இழவேல் என்ன
சந்தியில் நின்று கண்டீர் நங்கை தன்
      துகிலொடு சரிவளை கழல்கின்றதே             (8)
   
261வலங் காதில் மேல்-தோன்றிப் பூ அணிந்து
      மல்லிகை வனமாலை மௌவல் மாலை
சிலிங்காரத்தால் குழல் தாழ விட்டுத்
      தீங்குழல் வாய்மடுத்து ஊதி ஊதி
அலங்காரத்தால் வரும் ஆயப் பிள்ளை
      அழகு கண்டு என்மகள்
விலங்கி நில்லாது எதிர்நின்று கண்டீர்
      வெள்வளை கழன்று மெய்ம் மெலிகின்றதே             (9)
   
262விண்ணின்மீது அமரர்கள் விரும்பித் தொழ
      மிறைத்து ஆயர் பாடியில் வீதியூடே
கண்ணன் காலிப் பின்னே எழுந்தருளக்
      கண்டு இளஆய்க் கன்னிமார் காமுற்ற
வண்ணம் வண்டு அமர் பொழிற் புதுவையர்கோன்
      விட்டுசித்தன் சொன்ன மாலை பத்தும்
பண் இன்பம் வரப் பாடும் பத்தர் உள்ளார்
      பரமான வைகுந்தம் நண்ணுவரே             (10)