நாலாயிர திவ்ய பிரபந்தம்

முதல் ஆயிரம்
பெரியாழ்வார்
பெரியாழ்வார் திருமொழி

கண்ணன் குழல் ஊதல்
274நாவலம் பெரிய தீவினில் வாழும்
      நங்கைமீர்கள் இது ஓர் அற்புதம் கேளீர்
தூ வலம்புரி உடைய திருமால்
      தூய வாயிற் குழல்-ஓசை வழியே
கோவலர் சிறுமியர் இளங் கொங்கை
      குதுகலிப்ப உடல் உள்-அவிழ்ந்து எங்கும்
காவலும் கடந்து கயிறுமாலை
      ஆகி வந்து கவிழ்ந்து நின்றனரே             (1)
   
275இட அணரை இடத் தோளொடு சாய்த்து
      இருகை கூடப் புருவம் நெரிந்து ஏறக்
குடவயிறு பட வாய் கடைகூடக்
      கோவிந்தன் குழல்கொடு ஊதின போது
மட மயில்களொடு மான்பிணை போலே
      மங்கைமார்கள் மலர்க் கூந்தல் அவிழ
உடை நெகிழ ஓர்கையால் துகில் பற்றி
      ஒல்கி ஓடு அரிக்கண் ஒட நின்றனரே            (2)
   
276வான் இளவரசு வைகுந்தக்
      குட்டன் வாசுதேவன் மதுரைமன்னன் நந்த-
கோன் இளவரசு கோவலர் குட்டன்
      கோவிந்தன் குழல்கொடு ஊதின போது
வான் இளம்படியர் வந்து வந்து ஈண்டி
      மனம் உருகி மலர்க்கண்கள் பனிப்பத்
தேன் அளவு செறி கூந்தல் அவிழச்
      சென்னி வேர்ப்பச் செவி சேர்த்து நின்றனரே (3)
   
277தேனுகன் பிலம்பன் காளியன் என்னும்
      தீப்பப் பூடுகள் அடங்க உழக்கிக்
கானகம் படி உலாவி உலாவிக்
      கருஞ்சிறுக்கன் குழல் ஊதின போது
மேனகையொடு திலோத்தமை அரம்பை
      உருப்பசியர் அவர் வெள்கி மயங்கி
வானகம் படியில் வாய் திறப்பு இன்றி
      ஆடல் பாடல் இவை மாறினர் தாமே            (4)
   
278முன் நரசிங்கமது ஆகி அவுணன்
      முக்கியத்தை முடிப்பான் மூவுலகில்
மன்னர் அஞ்சும் மதுசூதனன் வாயிற்
      குழலின் ஓசை செவியைப் பற்றி வாங்க
நன் நரம்பு உடைய தும்புருவோடு
      நாரதனும் தம் தம் வீணை மறந்து
கின்னர மிதுனங்களும் தம் தம்
      கின்னரம் தொடுகிலோம் என்றனரே             (5)
   
279செம் பெருந் தடங்- கண்ணன் திரள் தோளன்
      தேவகி சிறுவன் தேவர்கள் சிங்கம்
நம் பரமன் இந்நாள் குழல் ஊதக்
      கேட்டவர்கள் இடர் உற்றன கேளீர்
அம்பரம் திரியும் காந்தப்பர் எல்லாம்
      அமுத கீத வலையால் சுருக்குண்டு
நம் பரம் அன்று என்று நாணி மயங்கி
      நைந்து சோர்ந்து கைம்மறித்து நின்றனரே            (6)
   
280புவியுள் நான் கண்டது ஒர் அற்புதம் கேளீர்
      பூணி மேய்க்கும் இளங்கோவலர் கூட்டத்து
அவையுள் நாகத்து- அணையான் குழல் ஊத
      அமரலோகத்து அளவும் சென்று இசைப்ப
அவியுணா மறந்து வானவர் எல்லாம்
      ஆயர்-பாடி நிறையப் புகுந்து ஈண்டிச்
செவி-உணாவின் சுவை கொண்டு மகிழ்ந்து
      கோவிந்தனைத் தொடர்ந்து என்றும் விடாரே            (7)
   
281சிறுவிரல்கள் தடவிப் பரிமாறச்
      செங்கண் கோடச் செய்ய வாய் கொப்பளிப்பக
குறுவெயர்ப் புருவம் குடிலிப்பக்
      கோவிந்தன் குழல்கொடு ஊதின போது
பறவையின் கணங்கள் கூடு துறந்து
      வந்து சூழ்ந்து படுகாடு கிடப்பக்
கறவையின் கணங்கள் கால் பரப்பிட்டுக்
      கவிழ்ந்து இறங்கிச் செவி ஆட்டகில்லாவே (8)
   
282திரண்டு எழு தழை மழைமுகில் வண்ணன்
      செங்கமல மலர் சூழ் வண்டினம் போலே
சுருண்டு இருண்ட குழல் தாழ்ந்த முகத்தான்
      ஊதுகின்ற குழல்-ஓசை வழியே
மருண்டு மான்-கணங்கள் மேய்கை மறந்து
      மேய்ந்த புல்லும் கடைவாய் வழி சோர
இரண்டு பாடும் துலுங்காப் புடைபெயரா
      எழுது சித்திரங்கள் போல நின்றனவே             (9)
   
283கருங்கண் தோகை மயிற் பீலி அணிந்து
      கட்டி நன்கு உடுத்த பீதக ஆடை
அருங்கல உருவின் ஆயர் பெருமான்
      அவனொருவன் குழல் ஊதின போது
மரங்கள் நின்று மது தாரைகள் பாயும்
      மலர்கள் வீழும் வளர் கொம்புகள் தாழும்
இரங்கும் கூம்பும் திருமால் நின்ற நின்ற
      பக்கம் நோக்கி அவை செய்யும் குணமே (10)
   
284குழல் இருண்டு சுருண்டு ஏறிய குஞ்சிக்
      கோவிந்தனுடைய கோமள வாயிற்
குழல் முழைஞ்சுகளின் ஊடு குமிழ்த்துக்
      கொழித்து இழிந்த அமுதப் புனல்தன்னைக்
குழல் முழவம் விளம்பும் புதுவைக்கோன்
      விட்டுசித்தன் விரித்த தமிழ் வல்லார்
குழலை வென்ற குளிர் வாயினராகிச்
      சாதுகோட்டியுள் கொள்ளப் படுவாரே             (11)