நாலாயிர திவ்ய பிரபந்தம்

முதல் ஆயிரம்
பெரியாழ்வார்
பெரியாழ்வார் திருமொழி

உந்தி பறத்தல்
306என் நாதன் தேவிக்கு அன்று இன்பப்பூ ஈயாதாள்
தன் நாதன் காணவே தண்பூ மரத்தினை
வன் நாதப் புள்ளால் வலியப் பறித்திட்ட
என் நாதன் வன்மையைப் பாடிப் பற
      எம்பிரான் வன்மையைப் பாடிப் பற            (1)
   
307என் வில் வலி கண்டு போ என்று எதிர்வந்தான்
தன் வில்லினோடும் தவத்தை எதிர்வாங்கி
முன் வில் வலித்து முதுபெண் உயிருண்டான்
தன் வில்லின் வன்மையைப் பாடிப் பற
      தாசரதி தன்மையைப் பாடிப் பற (2)
   
308உருப்பிணி நங்கையைத் தேர் ஏற்றிக் கொண்டு
விருப்புற்று அங்கு ஏக விரைந்து எதிர் வந்து
செருக்கு உற்றான் வீரம் சிதையத் தலையைச்
சிரைத்திட்டான் வன்மையைப் பாடிப் பற
      தேவகி சிங்கத்தைப் பாடிப் பற (3)
   
309மாற்றுத்தாய் சென்று வனம்போகே என்றிட
ஈற்றுத்தாய் பின்தொடர்ந்து எம்பிரான் என்று அழ
கூற்றுத் தாய் சொல்லக் கொடிய வனம் போன
சீற்றம் இலாதானைப் பாடிப் பற
      சீதை மணாளனைப் பாடிப் பற (4)
   
310பஞ்சவர் தூதனாய்ப் பாரதம் கைசெய்து
நஞ்சு உமிழ் நாகம் கிடந்த நற் பொய்கை புக்கு
அஞ்சப் பணத்தின்மேல் பாய்ந்திட்டு அருள்செய்த
அஞ்சன வண்ணனைப் பாடிப் பற
      அசோதைதன் சிங்கத்தைப் பாடிப் பற (5)
   
311முடி ஒன்றி மூவுலகங்களும் ஆண்டு உன்
அடியேற்கு அருள் என்று அவன்பின் தொடர்ந்த
படியில் குணத்துப் பரத நம்பிக்கு அன்று
அடிநிலை ஈந்தானைப் பாடிப் பற
      அயோத்தியர் கோமானைப் பாடிப் பற (6)
   
312காளியன் பொய்கை கலங்கப் பாய்ந்திட்டு அவன்
நீள்முடி ஐந்திலும் நின்று நடம்செய்து
மீள அவனுக்கு அருள்செய்த வித்தகன்
தோள்-வலி வீரமே பாடிப் பற
      தூ மணிவண்ணனைப் பாடிப் பற (7)
   
313தார்க்கு இளந்தம்பிக்கு அரசு ஈந்து தண்டகம்
நூற்றவள் சொற்கொண்டு போகி நுடங்கு- இடைச்
சூர்ப்பணகாவைச் செவியொடு மூக்கு அவள்
ஆர்க்க அரிந்தானைப் பாடிப் பற
      அயோத்திக்கு அரசனைப் பாடிப் பற (8)
   
314மாயச் சகடம் உதைத்து மருது இறுத்து
ஆயர்களோடு போய் ஆநிரை காத்து அணி
வேயின் குழல் ஊதி வித்தகனாய் நின்ற
ஆயர்கள் ஏற்றினைப் பாடிப் பற
      ஆநிரை மேய்த்தானைப் பாடிப் பற            (9)
   
315காரார் கடலை அடைத்திட்டு இலங்கை புக்கு
ஓராதான் பொன்முடி ஒன்பதோடு ஒன்றையும்
நேரா அவன்தம்பிக்கே நீள் அரசு ஈந்த
ஆராவமுதனைப் பாடிப் பற
      அயோத்தியர் வேந்தனைப் பாடிப் பற (10)
   
316நந்தன் மதலையைக் காகுத்த னைநவின்று
உந்தி பறந்த ஒளியிழை யார்கள்சொல்
செந்தமிழ்த் தென்புது வைவிட்டு சித்தன்சொல்
ஐந்தினோடு ஐந்தும்வல் லார்க்குஅல்லல் இல்லையே (11)