நாலாயிர திவ்ய பிரபந்தம்

முதல் ஆயிரம்
பெரியாழ்வார்
பெரியாழ்வார் திருமொழி

அனுமன் சீதைக்குக் கூறிய அடையாளம்
317நெறிந்த கருங்குழல் மடவாய் நின் அடியேன் விண்ணப்பம்
செறிந்த மணி முடிச் சனகன் சிலை இறுத்து நினைக் கொணர்ந்தது
அறிந்து அரசு களைகட்ட அருந்தவத்தோன் இடை விலங்கச்
செறிந்த சிலைகொடு தவத்தைச் சிதைத்ததும் ஓர் அடையாளம்             (1)
   
318அல்லியம்பூ மலர்க்கோதாய் அடிபணிந்தேன் விண்ணப்பம்
சொல்லுகேன் கேட்டருளாய் துணைமலர்க் கண் மடமானே
எல்லியம் போது இனிதிருத்தல் இருந்தது ஓர் இட வகையில்
மல்லிகை மா மாலைகொண்டு அங்கு ஆர்த்ததும் ஓர் அடையாளம் (2)
   
319கலக்கிய மா மனத்தனளாய்க் கைகேசி வரம் வேண்ட
மலக்கிய மா மனத்தனனாய் மன்னவனும் மறாது ஒழியக்
குலக்குமரா காடு உறையப் போ என்று விடை கொடுப்ப
இலக்குமணன் தன்னொடும் அங்கு ஏகியது ஓர் அடையாளம்            (3)
   
320வார் அணிந்த முலை மடவாய் வைதேவீ விண்ணப்பம்
தேர் அணிந்த அயோத்தியர்கோன் பெருந்தேவீ கேட்டருளாய்
கூர் அணிந்த வேல் வலவன் குகனோடும் கங்கைதன்னிற்
சீர் அணிந்த தோழமை கொண்டதும் ஓர் அடையாளம்             (4)
   
321மான் அமரும் மென்நோக்கி வைதேவீ விண்ணப்பம்
கான் அமரும் கல்-அதர் போய்க் காடு உறைந்த காலத்துத்
தேன் அமரும் பொழிற் சாரல் சித்திரகூடத்து இருப்பப்
பால்மொழியாய் பரதநம்பி பணிந்ததும் ஓர் அடையாளம்             (5)
   
322சித்திரகூடத்து இருப்பச் சிறுகாக்கை முலை தீண்ட
அத்திரமே கொண்டு எறிய அனைத்து உலகும் திரிந்து ஓடி
வித்தகனே இராமாவோ நின் அபயம் என்று அழைப்ப
அத்திரமே அதன்கண்ணை அறுத்ததும் ஓர் அடையாளம்             (6)
   
323மின் ஒத்த நுண்- இடையாய் மெய்- அடியேன் விண்ணப்பம்
பொன் ஒத்த மான் ஒன்று புகுந்து இனிது விளையாட
நின் அன்பின் வழிநின்று சிலை பிடித்து எம்பிரான் ஏகப்
பின்னே அங்கு இலக்குமணன் பிரிந்ததும் ஓர் அடையாளம்             (7)
   
324மைத் தகு மா மலர்க்குழலாய் வைதேவீ விண்ணப்பம்
ஒத்த புகழ் வானரக்கோன் உடன் இருந்து நினைத் தேட
அத்தகு சீர் அயோத்தியர்கோன் அடையாளம் இவை மொழிந்தான்
இத் தகையால் அடையாளம் ஈது அவன் கைம் மோதிரமே             (8)
   
325திக்கு நிறை புகழாளன் தீ வேள்விச் சென்ற நாள்
மிக்க பெரும் சபை நடுவே வில் இறுத்தான் மோதிரம் கண்டு
ஒக்குமால் அடையாளம் அனுமான் என்று உச்சிமேல்
வைத்துக்கொண்டு உகந்தனளால் மலர்க்குழலாள் சீதையுமே             (9)
   
326வார் ஆரும் முலை மடவாள் வைதேவி தனைக் கண்டு
சீர் ஆரும் திறல் அனுமன் தெரிந்து உரைத்த அடையாளம்
பார் ஆரும் புகழ்ப் புதுவைப் பட்டர்பிரான் பாடல் வல்லார்
ஏர் ஆரும் வைகுந்தத்து இமையவரோடு இருப்பாரே             (10)