நாலாயிர திவ்ய பிரபந்தம்

முதல் ஆயிரம்
பெரியாழ்வார்
பெரியாழ்வார் திருமொழி

திருவரங்கம் (2)
411மரவடியைத் தம்பிக்கு வான்பணையம் வைத்துப்போய்
      வானோர் வாழச்
செரு உடைய திசைக்கருமம் திருத்திவந்து உலகாண்ட
      திருமால் கோயில்
திருவடிதன் திருஉருவும் திருமங்கை மலர்க்கண்ணும்
      காட்டி நின்று
உரு உடைய மலர்நீலம் காற்று ஆட்ட ஒலிசலிக்கும்
      ஒளி அரங்கமே             (1)
   
412தன் அடியார் திறத்தகத்துத் தாமரையாள் ஆகிலும்
      சிதகு உரைக்குமேல்
என் அடியார் அது செய்யார் செய்தாரேல் நன்று செய்தார்
      என்பர் போலும்
மன் உடைய விபீடணற்கா மதில் இலங்கைத் திசைநோக்கி
      மலர்க்கண் வைத்த
என்னுடைய திருவரங்கற்கு அன்றியும் மற்று ஒருவர்க்கு
      ஆள் ஆவரே?             (2)
   
413கருள் உடைய பொழில் மருதும் கதக் களிறும் பிலம்பனையும்
      கடிய மாவும்
உருள் உடைய சகடரையும் மல்லரையும் உடைய விட்டு
      ஓசை கேட்டான்
இருள் அகற்றும் எறி கதிரோன் மண்டலத்தூடு ஏற்றி வைத்து
      ஏணி வாங்கி
அருள் கொடுத்திட்டு அடியவரை ஆட்கொள்வான் அமரும் ஊர்
      அணி அரங்கமே (3)
   
414பதினாறாம் ஆயிரவர் தேவிமார் பணிசெய்யத்
      துவரை என்னும்
மதில் நாயகராகி வீற்றிருந்த மணவாளர்
      மன்னு கோயில்
புது நாள்மலர்க் கமலம் எம்பெருமான் பொன் வயிற்றிற்
      பூவே போல்வான்
பொது-நாயகம் பாவித்து இறுமாந்து பொன் சாய்க்கும்
      புனல் அரங்கமே             (4)
   
415ஆமையாய்க் கங்கையாய் ஆழ் கடலாய் அவனியாய்
      அரு வரைகளாய்
நான்முகனாய் நான்மறையாய் வேள்வியாய்த் தக்கணையாய்த்
      தானும் ஆனான்
சேமம் உடை நாரதனார் சென்று சென்று துதித்து இறைஞ்சக்
      கிடந்தான் கோயில்
பூ மருவிப் புள் இனங்கள் புள் அரையன் புகழ் குழறும்
      புனல் அரங்கமே             (5)
   
416மைத்துனன்மார் காதலியை மயிர் முடிப்பித்து அவர்களையே
      மன்னர் ஆக்கி
உத்தரைதன் சிறுவனையும் உயக்கொண்ட உயிராளன்
      உறையும் கோயில்
பத்தர்களும் பகவர்களும் பழமொழிவாய் முனிவர்களும்
      பரந்த நாடும்
சித்தர்களும் தொழுது இறைஞ்சத் திசை-விளக்காய் நிற்கின்ற
      திருவரங்கமே             (6)
   
417குறள் பிரமசாரியாய் மாவலியைக் குறும்பு அதக்கி
      அரசுவாங்கி
இறைப்பொழுதில் பாதாளம் கலவிருக்கை கொடுத்து உகந்த
      எம்மான் கோயில்
எறிப்பு உடைய மணிவரைமேல் இளஞாயிறு எழுந்தாற்போல்
      அரவு-அணையின்
சிறப்பு உடைய பணங்கள்மிசைச் செழுமணிகள் விட்டு
      எறிக்கும் திருவரங்கமே             (7)
   
418உரம் பற்றி இரணியனை உகிர்-நுதியால் ஒள்ளிய மார்வு
      உறைக்க ஊன்றிச்
சிரம் பற்றி முடி இடியக் கண் பிதுங்க வாய் அலறத்
      தெழித்தான் கோயில்
உரம் பெற்ற மலர்க்கமலம் உலகு அளந்த சேவடி போல்
      உயர்ந்து காட்ட
வரம்பு உற்ற கதிர்ச்செந்நெல் தாள்சாய்த்துத் தலைவணக்கும்
      தண் அரங்கமே            (8)
   
419தேவு உடைய மீனமாய் ஆமையாய் ஏனமரி
      குறளும் ஆகி
மூ-உருவில் இராமனாய்க் கண்ணனாய்க் கற்கியாய்
      முடிப்பான் கோயில்
சேவலொடு பெடை அன்னம் செங்கமல மலர் ஏறி
      ஊசல் ஆடிப்
பூ-அணைமேல் துதைந்து எழு செம்பொடி ஆடி விளையாடும்
      புனல் அரங்கமே            (9)
   
420செரு ஆளும் புள்ளாளன் மண்ணாளன் செருச்செயும்
      நாந்தம் என்னும்
ஒரு வாளன் மறையாளன் ஓடாத படையாளன்
      விழுக்கை யாளன்
இரவு ஆளன் பகலாளன் எனையாளன் ஏழு உலகப்
      பெரும் பேராளன்
திருவாளன் இனிதாகத் திருக்கண்கள் வளர்கின்ற
      திருவரங்கமே             (10)
   
421கைந்நாகத்து இடர் கடிந்த கனல் ஆழிப் படை உடையான்
      கருதும் கோயில்
தென்நாடும் வடநாடும் தொழநின்ற திருவரங்கத்
      திருப்பதியின் மேல்
மெய்ந்நாவன் மெய் அடியான் விட்டுசித்தன் விரித்த தமிழ்
      உரைக்க வல்லார்
எஞ்ஞான்றும் எம்பெருமான் இணையடிக்கீழ் இணை பிரியாது
      இருப்பர் தாமே            (11)