நாலாயிர திவ்ய பிரபந்தம்

முதல் ஆயிரம்
பெரியாழ்வார்
பெரியாழ்வார் திருமொழி

அடிமைப்பட்டுத் தாம் பெற்ற நன்மைகளை நினைத்துக் களித்தல்
462சென்னி ஓங்கு தண் திருவேங்
      கடம் உடையாய் உலகு
தன்னை வாழ நின்ற நம்பீ
      தாமோதரா சதிரா
என்னையும் என் உடைமையையும் உன்
      சக்கரப் பொறி ஒற்றிக்கொண்டு
நின் அருளே புரிந்திருந்தேன்
      இனி என் திருக்குறிப்பே?               (1)
   
463பறவை ஏறு பரமபுருடா
      நீ என்னைக் கைக்கொண்டபின்
பிறவி என்னும் கடலும் வற்றிப்
      பெரும்பதம் ஆகின்றதால்
இறவு செய்யும் பாவக் காடு
      தீக்கொளீஇ வேகின்றதால்
அறிவை என்னும் அமுத-ஆறு
      தலைப்பற்றி வாய்க்கொண்டதே (2)
   
464எம்மனா என் குலதெய்வமே
      என்னுடைய நாயகனே
நின்னுளேனாய்ப் பெற்ற நன்மை இவ்
      உலகினில் ஆர் பெறுவார்?
நம்மன் போலே வீழ்த்து அமுக்கும்
      நாட்டில் உள்ள பாவம் எல்லாம்
சும்மெனாதே கைவிட்டு ஓடித்
      தூறுகள் பாய்ந்தனவே             (3)
   
465கடல் கடைந்து அமுதம் கொண்டு
      கலசத்தை நிறைத்தாற்போல்
உடல் உருகி வாய் திறந்து
      மடுத்து உன்னை நிறைத்துக்கொண்டேன்
கொடுமை செய்யும் கூற்றமும் என்
      கோல்-ஆடி குறுகப் பெறா
தட வரைத் தோள் சக்கரபாணீ
      சார்ங்க விற் சேவகனே             (4)
   
466பொன்னைக் கொண்டு உரைகல் மீதே
      நிறம் எழ உரைத்தாற் போல்
உன்னைக் கொண்டு என் நாவகம்பால்
      மாற்றின்றி உரைத்துக்கொண்டேன்
உன்னைக் கொண்டு என்னுள் வைத்தேன்
      என்னையும் உன்னில் இட்டேன்
என் அப்பா என் இருடீகேசா
      என் உயிர்க் காவலனே             (5)
   
467உன்னுடைய விக்கிரமம்
      ஒன்று ஒழியாமல் எல்லாம்
என்னுடைய நெஞ்சகம்பால்
      சுவர்வழி எழுதிக்கொண்டேன்
மன் அடங்க மழு வலங்கைக்
      கொண்ட இராம நம்பீ
என்னிடை வந்து எம்பெருமான்
      இனி எங்குப் போகின்றதே?            (6) 6
   
468பருப்பதத்துக் கயல் பொறித்த
      பாண்டியர் குலபதி போல்
திருப் பொலிந்த சேவடி என்
      சென்னியின் மேல் பொறித்தாய்
மருப்பு ஒசித்தாய் மல் அடர்த்தாய்
      என்று என்று உன் வாசகமே
உருப் பொலிந்த நாவினேனை
      உனக்கு உரித்து ஆக்கினையே             (7)
   
469அனந்தன்பாலும் கருடன்பாலும்
      ஐது நொய்தாக வைத்து என்
மனந்தனுள்ளே வந்து வைகி
      வாழச் செய்தாய் எம்பிரான்
நினைந்து என்னுள்ளே நின்று நெக்குக்
      கண்கள் அசும்பு ஒழுக
நினைந்திருந்தே சிரமம் தீர்ந்தேன்
      நேமி நெடியவனே             (8)
   
470பனிக் கடலில் பள்ளி- கோளைப்
      பழகவிட்டு ஓடிவந்து என்
மனக் கடலில் வாழ வல்ல
      மாய மணாள நம்பீ
தனிக் கடலே தனிச் சுடரே
      தனி உலகே என்று என்று
உனக்கு இடமாய் இருக்க என்னை
      உனக்கு உரித்து ஆக்கினையே             (9)
   
471தட வரைவாய் மிளிர்ந்து மின்னும்
      தவள நெடுங்கொடி போல்
சுடர்- ஒளியாய் நெஞ்சின் உள்ளே
      தோன்றும் என் சோதி நம்பீ
வட தடமும் வைகுந்தமும்
      மதிற் துவராபதியும்
இட வகைகள் இகழ்ந்திட்டு என்பால்
      இடவகை கொண்டனையே             (10)
   
472வேயர் தங்கள் குலத்து உதித்த
      விட்டுசித்தன் மனத்தே
கோயில்கொண்ட கோவலனைக்
      கொழுங்குளிர் முகில்வண்ணனை
ஆயர்-ஏற்றை அமரர் கோவை
      அந்தணர்தம் அமுதத்தினைச்
சாயை போலப் பாட வல்லார்
      தாமும் அணுக்கர்களே             (11)