நாலாயிர திவ்ய பிரபந்தம்

முதல் ஆயிரம்
ஆண்டாள்
நாச்சியார் திருமொழி

குயிற் பத்து
544மன்னு பெரும்புகழ் மாதவன் மா மணி
      வண்ணன் மணி-முடி மைந்தன்
தன்னை உகந்தது காரணமாக என்
      சங்கு இழக்கும் வழக்கு உண்டே?
புன்னை குருக்கத்தி ஞாழல் செருந்திப்
      பொதும்பினில் வாழும் குயிலே
பன்னி எப்போதும் இருந்து விரைந்து என்
      பவள-வாயன் வரக் கூவாய்            (1)
   
545வெள்ளை விளிசங்கு இடங்கையில் கொண்ட
      விமலன் எனக்கு உருக் காட்டான்
உள்ளம் புகுந்து என்னை நைவித்து நாளும்
      உயிர்ப்பெய்து கூத்தாட்டுக் காணும்
கள் அவிழ் செண்பகப்பூ மலர் கோதிக்
      களித்து இசை பாடும் குயிலே
மெள்ள இருந்து மிழற்றி மிழற்றாது என்
      வேங்கடவன் வரக் கூவாய்             (2)
   
546மாதலி தேர் முன்பு கோல்கொள்ள மாயன்
      இராவணன் மேல் சர-மாரி
தாய் தலை அற்று அற்று வீழத் தொடுத்த
      தலைவன் வர எங்கும் காணேன்
போது அலர் காவிற் புதுமணம் நாறப்
      பொறி வண்டின் காமரம் கேட்டு உன்
காதலியோடு உடன் வாழ் குயிலே என்
      கருமாணிக்கம் வரக் கூவாய்             (3)
   
547என்பு உருகி இன வேல் நெடுங் கண்கள்
      இமை பொருந்தா பல நாளும்
துன்பக் கடல் புக்கு வைகுந்தன் என்பது ஓர்
      தோணி பெறாது உழல்கின்றேன்
அன்பு உடையாரைப் பிரிவு உறு நோயது
      நீயும் அறிதி குயிலே
பொன் புரை மேனிக் கருளக் கொடி உடைப்
      புண்ணியனை வரக் கூவாய்             (4)
   
548மென்னடை அன்னம் பரந்து விளையாடும்
      வில்லிபுத்தூர் உறைவான் தன்
பொன்னடி காண்பது ஓர் ஆசையினால் என்
      பொரு கயற் கண்ணினை துஞ்சா
இன் அடிசிலொடு பால்-அமுது ஊட்டி
      எடுத்த என் கோலக் கிளியை
உன்னொடு தோழமைக் கொள்ளுவன் குயிலே
      உலகு அளந்தான் வரக் கூவாய்             (5)
   
549எத் திசையும் அமரர் பணிந்து ஏத்தும்
      இருடீகேசன் வலி செய்ய
முத்து அன்ன வெண் முறுவல் செய்ய வாயும்
      முலையும் அழகு அழிந்தேன் நான்
கொத்து அலர் காவில் மணித்தடம் கண்படை
      கொள்ளும் இளங் குயிலே என்
தத்துவனை வரக் கூகிற்றியாகில்
      தலை அல்லால் கைம்மாறு இலேனே             (6)
   
550பொங்கிய பாற்கடல் பள்ளிகொள்வானைப்
      புணர்வது ஓர் ஆசையினால் என்
கொங்கை கிளர்ந்து குமைத்துக் குதுகலித்து
      ஆவியை ஆகுலம் செய்யும்
அம் குயிலே உனக்கு என்ன மறைந்து உறைவு?
      ஆழியும் சங்கும் ஒண் தண்டும்
தங்கிய கையவனை வரக் கூவில் நீ
      சாலத் தருமம் பெறுதி             (7)
   
551சார்ங்கம் வளைய வலிக்கும் தடக்கைச்
      சதுரன் பொருத்தம் உடையன்
நாங்கள் எம் இல்லிருந்து ஒட்டிய கச்சங்கம்
      நானும் அவனும் அறிதும்
தேம் கனி மாம் பொழில் செந்தளிர் கோதும்
      சிறு குயிலே திருமாலை
ஆங்கு விரைந்து ஒல்லைக் கூகிற்றியாகில்
      அவனை நான் செய்வன காணே            (8)
   
552பைங்கிளி வண்ணன் சிரீதரன் என்பது ஓர்
      பாசத்து அகப்பட்டிருந்தேன்
பொங்கு ஒளி வண்டு இரைக்கும் பொழில் வாழ் குயி
      லே குறிக்கொண்டு இது நீ கேள்
சங்கொடு சக்கரத்தான் வரக் கூவுதல்
      பொன்வளை கொண்டு தருதல்
இங்கு உள்ள காவினில் வாழக் கருதில்
      இரண்டத்து ஒன்றேல் திண்ணம் வேண்டும்             (9)
   
553அன்று உலகம் அளந்தானை உகந்து
      அடிமைக்கண் அவன் வலி செய்ய
தென்றலும் திங்களும் ஊடறுத்து என்னை
      நலியும் முறைமை அறியேன்
என்றும் இக் காவில் இருந்திருந்து என்னைத்
      ததைத்தாதே நீயும் குயிலே
இன்று நாராயணனை வரக் கூவாயேல்
      இங்குத்தை நின்றும் துரப்பன்             (10)
   
554விண் உற நீண்டு அடி தாவிய மைந்தனை
      வேற்கண் மடந்தை விரும்பிக்
கண்ணுற என் கடல்-வண்ணனைக் கூவு
      கருங்குயிலே என்ற மாற்றம்
பண் உறு நான்மறையோர் புதுவைமன்னன்
      பட்டர்பிரான் கோதை சொன்ன
நண் உறு வாசக மாலை வல்லார் நமோ
      நாராயணாய என்பாரே             (11)