| முதல் ஆயிரம் ஆண்டாள்
 நாச்சியார் திருமொழி
 
 | 
		| மேகவிடு தூது | 
					
			
			
      | | 576 | விண் நீல மேலாப்பு விரித்தாற்போல் மேகங்காள்
 தெண் நீர் பாய் வேங்கடத்து என்
 திருமாலும் போந்தானே?
 கண்ணீர்கள் முலைக்குவட்டிற்
 துளி சோரச் சோர்வேனைப்
 பெண் நீர்மை ஈடழிக்கும்
 இது தமக்கு ஓர் பெருமையே?                                                    (1)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 577 | மா முத்தநிதி சொரியும் மா முகில்காள் வேங்கடத்துச்
 சாமத்தின் நிறங்கொண்ட
 தாளாளன் வார்த்தை என்னே?
 காமத்தீ உள்புகுந்து
 கதுவப்பட்டு இடைக் கங்குல்
 ஏமத்து ஓர் தென்றலுக்கு
 இங்கு இலக்காய் நான் இருப்பேனே?         (2)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 578 | ஒளி வண்ணம் வளை சிந்தை உறக்கத்தோடு இவை எல்லாம்
 எளிமையால் இட்டு என்னை
 ஈடழியப் போயினவால்
 குளிர் அருவி வேங்கடத்து என்
 கோவிந்தன் குணம் பாடி
 அளியத்த மேகங்காள்
 ஆவி காத்து இருப்பேனே?             (3)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 579 | மின் ஆகத்து எழுகின்ற மேகங்காள் வேங்கடத்துத்
 தன் ஆகத் திருமங்கை
 தங்கிய சீர் மார்வற்கு
 என் ஆகத்து இளங்கொங்கை
 விரும்பித் தாம் நாள்தோறும்
 பொன் ஆகம் புல்குதற்கு என்
 புரிவுடைமை செப்புமினே             (4)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 580 | வான் கொண்டு கிளர்ந்து எழுந்த மா முகில்காள் வேங்கடத்துத்
 தேன் கொண்ட மலர் சிதறத்
 திரண்டு ஏறிப் பொழிவீர்காள்
 ஊன் கொண்ட வள்-உகிரால்
 இரணியனை உடல் இடந்தான்
 தான் கொண்ட சரி-வளைகள்
 தருமாகிற் சாற்றுமினே                   (5)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 581 | சலங் கொண்டு கிளர்ந்து எழுந்த தண் முகில்காள் மாவலியை
 நிலங் கொண்டான் வேங்கடத்தே
 நிரந்து ஏறிப் பொழிவீர்காள்
 உலங்கு உண்ட விளங்கனி போல்
 உள் மெலியப் புகுந்து என்னை
 நலங் கொண்ட நாரணற்கு என்
 நடலை-நோய் செப்புமினே             (6)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 582 | சங்க மா கடல் கடைந்தான் தண் முகில்காள் வேங்கடத்துச்
 செங்கண் மால் சேவடிக் கீழ்
 அடி-வீழ்ச்சி விண்ணப்பம்
 கொங்கை மேல் குங்குமத்தின்
 குழம்பு அழியப் புகுந்து ஒருநாள்
 தங்குமேல் என் ஆவி
 தங்கும் என்று உரையீரே             (7)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 583 | கார் காலத்து எழுகின்ற கார்முகில்காள் வேங்கடத்துப்
 போர் காலத்து எழுந்தருளிப்
 பொருதவனார் பேர் சொல்லி
 நீர் காலத்து எருக்கின் அம்
 பழ இலை போல் வீழ்வேனை
 வார் காலத்து ஒருநாள் தம்
 வாசகம் தந்தருளாரே             (8)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 584 | மத யானை போல் எழுந்த மா முகில்காள் வேங்கடத்தைப்
 பதியாக வாழ்வீர்காள்
 பாம்பு-அணையான் வார்த்தை என்னே
 கதி என்றும் தான் ஆவான்
 கருதாது ஓர் பெண்-கொடியை
 வதை செய்தான் என்னும் சொல்
 வையகத்தார் மதியாரே?             (9)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 585 | நாகத்தின் அணையானை நன்னுதலாள் நயந்து உரை செய்
 மேகத்தை வேங்கடக்கோன்
 விடு தூதில் விண்ணப்பம்
 போகத்தில் வழுவாத
 புதுவையர்கோன் கோதை தமிழ்
 ஆகத்து வைத்து உரைப்பார்
 அவர் அடியார் ஆகுவரே             (10)
 | 
 |  | 
		
			|  |  |  |