| முதல் ஆயிரம் ஆண்டாள்
 நாச்சியார் திருமொழி
 
 | 
		| திருவரங்கத்துச் செல்வனைக் காமுறல் | 
					
			
			
      | | 606 | தாம் உகக்கும் தம் கையிற் சங்கமே போலாவோ யாம் உகக்கும் எம் கையில் சங்கமும்? ஏந்திழையீர்
 தீ முகத்து நாகணைமேல் சேரும் திருவரங்கர்
 ஆ முகத்தை நோக்காரால் அம்மனே அம்மனே             (1)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 607 | எழில் உடைய அம்மனைமீர் என் அரங்கத்து இன்னமுதர் குழல் அழகர் வாய் அழகர் கண் அழகர் கொப்பூழில்
 எழு கமலப் பூ அழகர் எம்மானார் என்னுடைய
 கழல் வளையைத் தாமும் கழல் வளையே ஆக்கினரே             (2)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 608 | பொங்கு ஓதம் சூழ்ந்த புவனியும் விண்-உலகும் அங்கு ஆதும் சோராமே ஆள்கின்ற எம்பெருமான்
 செங்கோல் உடைய திருவரங்கச் செல்வனார்
 எம் கோல்-வளையால் இடர் தீர்வர் ஆகாதே?             (3)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 609 | மச்சு அணி மாட மதில் அரங்கர் வாமனனார் பச்சைப் பசுந் தேவர் தாம் பண்டு நீர் ஏற்ற
 பிச்சைக் குறையாகி என்னுடைய பெய்வளை மேல்
 இச்சை உடையரேல் இத் தெருவே போதாரே?             (4)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 610 | பொல்லாக் குறள் உருவாய்ப் பொற் கையில் நீர் ஏற்று எல்லா உலகும் அளந்து கொண்ட எம்பெருமான்
 நல்லார்கள் வாழும் நளிர் அரங்க நாகணையான்
 இல்லாதோம் கைப்பொருளும் எய்துவான் ஒத்து உளனே             (5)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 611 | கைப் பொருள்கள் முன்னமே கைக்கொண்டார் காவிரி நீர் செய்ப் புரள ஓடும் திருவரங்கச் செல்வனார்
 எப் பொருட்கும் நின்று ஆர்க்கும் எய்தாது நான் மறையின்
 சொற்பொருளாய் நின்றார் என் மெய்ப்பொருளும் கொண்டாரே             (6)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 612 | உண்ணாது உறங்காது ஒலிகடலை ஊடறுத்துப் பெண் ஆக்கை யாப்புண்டு தாம் உற்ற பேது எல்லாம்
 திண்ணார் மதில் சூழ் திருவரங்கச் செல்வனார்
 எண்ணாதே தம்முடைய நன்மைகளே எண்ணுவரே             (7)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 613 | பாசி தூர்த்தக் கிடந்த பார்-மகட்குப் பண்டு ஒரு நாள் மாசு உடம்பில் சீர் வாரா மானம் இலாப் பன்றி ஆம்
 தேசு உடைய தேவர் திருவரங்கச் செல்வனார்
 பேசியிருப்பனகள் பேர்க்கவும் பேராவே             (8)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 614 | கண்ணாலம் கோடித்துக் கன்னிதன்னைக் கைப்பிடிப்பான் திண் ஆர்ந்து இருந்த சிசுபாலன் தேசு அழிந்து
 அண்ணாந்து இருக்கவே ஆங்கு அவளைக் கைப்பிடித்த
 பெண்ணாளன் பேணும் ஊர் பேரும் அரங்கமே             (9)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 615 | செம்மை உடைய திருவரங்கர் தாம் பணித்த மெய்ம்மைப் பெரு வார்த்தை விட்டுசித்தர் கேட்டிருப்பர்
 தம்மை உகப்பாரைத் தாம் உகப்பர் என்னும் சொல்
 தம்மிடையே பொய்யானால் சாதிப்பார் ஆர் இனியே?             (10)
 | 
 |  | 
		
			|  |  |  |