நாலாயிர திவ்ய பிரபந்தம்

முதல் ஆயிரம்
ஆண்டாள்
நாச்சியார் திருமொழி

கண்ணன் உகந்த பொருள்கொண்டு காதல்நோய் தணிமின் எனல்
626கண்ணன் என்னும் கருந்தெய்வம்
      காட்சிப் பழகிக் கிடப்பேனைப்
புண்ணிற் புளிப் பெய்தாற் போலப்
      புறம் நின்று அழகு பேசாதே
பெண்ணின் வருத்தம் அறியாத
      பெருமான் அரையிற் பீதக
வண்ண ஆடை கொண்டு என்னை
      வாட்டம் தணிய வீசீரே             (1)
   
627பால்-ஆலிலையில் துயில் கொண்ட
      பரமன் வலைப்பட்டு இருந்தேனை
வேலால் துன்னம் பெய்தாற் போல்
      வேண்டிற்று எல்லாம் பேசாதே
கோலால் நிரைமேய்த்து ஆயனாய்க்
      குடந்தைக் கிடந்த குடம்-ஆடி
நீலார் தண்ணந் துழாய் கொண்டு என்
      நெறி மென் குழல்மேல் சூட்டிரே             (2)
   
628கஞ்சைக் காய்ந்த கருவில்லி
      கடைக்கண் என்னும் சிறைக்கோலால்
நெஞ்சு ஊடுருவ வேவுண்டு
      நிலையும் தளர்ந்து நைவேனை
அஞ்சேல் என்னான் அவன் ஒருவன்
      அவன் மார்வு அணிந்த வனமாலை
வஞ்சியாதே தருமாகில்
      மார்விற் கொணர்ந்து புரட்டீரே             (3)
   
629ஆரே உலகத்து ஆற்றுவார்?
      ஆயர்-பாடி கவர்ந்து உண்ணும்
காரேறு உழக்க உழக்குண்டு
      தளர்ந்தும் முறிந்தும் கிடப்பேனை
ஆராவமுதம் அனையான் தன்
      அமுத வாயில் ஊறிய
நீர்தான் கொணர்ந்து புலராமே
      பருக்கி இளைப்பை நீக்கீரே             (4)
   
630அழிலும் தொழிலும் உருக் காட்டான்
      அஞ்சேல் என்னான் அவன் ஒருவன்
தழுவி முழுசிப் புகுந்து என்னைச்
      சுற்றிச் சுழன்று போகானால்
தழையின் பொழில்வாய் நிரைப் பின்னே
      நெடுமால் ஊதி வருகின்ற
குழலின் தொளைவாய் நீர் கொண்டு
      குளிர முகத்துத் தடவீரே             (5)
   
631நடை ஒன்று இல்லா உலகத்து
      நந்தகோபன் மகன் என்னும்
கொடிய கடிய திருமாலால்
      குளப்புக்கூறு கொளப்பட்டு
புடையும் பெயரகில்லேன் நான்
      போழ்க்கன் மிதித்த அடிப்பாட்டில்
பொடித்தான் கொணர்ந்து பூசீர்கள்
      போகா உயிர் என் உடம்பையே             (6)
   
632வெற்றிக் கருளக் கொடியான்தன்
      மீமீது ஆடா உலகத்து
வெற்ற வெறிதே பெற்ற தாய்
      வேம்பே ஆக வளர்த்தாளே
குற்றம் அற்ற முலைதன்னைக்
      குமரன் கோலப் பணைத்தோளோடு
அற்ற குற்றம் அவை தீர
      அணைய அமுக்கிக் கட்டீரே             (7)
   
633உள்ளே உருகி நைவேனை
      உளளோ இலளோ என்னாத
கொள்ளை கொள்ளிக் குறும்பனைக்
      கோவர்த்தனனைக் கண்டக்கால்
கொள்ளும் பயன் ஒன்று இல்லாத
      கொங்கைதன்னைக் கிழங்கோடும்
அள்ளிப் பறித்திட்டு அவன் மார்வில்
      எறிந்து என் அழலைத் தீர்வேனே             (8)
   
634கொம்மை முலைகள் இடர் தீரக்
      கோவிந்தற்கு ஓர் குற்றேவல்
இம்மைப் பிறவி செய்யாதே
      இனிப் போய்ச் செய்யும் தவம்தான் என்?
செம்மை உடைய திருமார்வில்
      சேர்த்தானேனும் ஒரு ஞான்று
மெய்ம்மை சொல்லி முகம் நோக்கி
      விடைதான் தருமேல் மிக நன்றே             (9)
   
635அல்லல் விளைத்த பெருமானை
      ஆயர்பாடிக்கு அணி-விளக்கை
வில்லி புதுவைநகர் நம்பி
      விட்டுசித்தன் வியன் கோதை
வில்லைத் தொலைத்த புருவத்தாள்
      வேட்கை உற்று மிக விரும்பும்
சொல்லைத் துதிக்க வல்லார்கள்
      துன்பக் கடலுள் துவளாரே             (10)