நாலாயிர திவ்ய பிரபந்தம்

முதல் ஆயிரம்
குலசேகராழ்வார்
பெருமாள் திருமொழி

அழகிய மணவாளன்பால் பித்தன் எனல்
667மெய் இல் வாழ்க்கையை மெய் எனக் கொள்ளும் இவ்
வையம்தன்னொடும் கூடுவது இல்லை யான்
ஐயனே அரங்கா என்று அழைக்கின்றேன்
மையல் கொண்டொழிந்தேன் என்தன் மாலுக்கே             (1)
   
668நூலின் நேர்-இடையார் திறத்தே நிற்கும்
ஞாலம் தன்னொடும் கூடுவது இல்லை யான்
ஆலியா அழையா அரங்கா என்று
மால் எழுந்தொழிந்தேன் என்தன் மாலுக்கே             (2)
   
669மாரனார் வரி வெஞ் சிலைக்கு ஆட்செய்யும்
பாரினாரொடும் கூடுவது இல்லை யான்
ஆர-மார்வன் அரங்கன் அனந்தன் நல்
நாரணன் நரகாந்தகன் பித்தனே             (3)
   
670உண்டியே உடையே உகந்து ஓடும் இம்
மண்டலத்தொடும் கூடுவது இல்லை யான்
அண்டவாணன் அரங்கன் வன் பேய்-முலை
உண்ட வாயன்தன் உன்மத்தன் காண்மினே             (4)
   
671தீதில் நன்னெறி நிற்க அல்லாது செய்
நீதியாரொடும் கூடுவது இல்லை யான்
ஆதி ஆயன் அரங்கன் அந் தாமரைப்
பேதை மா மணவாளன்தன் பித்தனே             (5)
   
672எம் பரத்தர் அல்லாரொடும் கூடலன்
உம்பர் வாழ்வை ஒன்றாகக் கருதலன்
தம்பிரான் அமரர்க்கு அரங்க நகர்
எம்பிரானுக்கு எழுமையும் பித்தனே             (6)
   
673எத் திறத்திலும் யாரொடும் கூடும் அச்
சித்தந்தன்னைத் தவிர்த்தனன் செங்கண் மால்
அத்தனே அரங்கா என்று அழைக்கின்றேன்
பித்தனாய் ஒழிந்தேன் எம்பிரானுக்கே             (7)
   
674பேயரே எனக்கு யாவரும் யானும் ஓர்
பேயனே எவர்க்கும் இது பேசி என்
ஆயனே அரங்கா என்று அழைக்கின்றேன்
பேயனாய் ஒழிந்தேன் எம்பிரானுக்கே             (8)
   
675அங்கை-ஆழி அரங்கன் அடியிணை
தங்கு சிந்தைத் தனிப் பெரும் பித்தனாய்க்
கொங்கர்கோன் குலசேகரன் சொன்ன சொல்
இங்கு வல்லவர்க்கு ஏதம் ஒன்று இல்லையே             (9)