நாலாயிர திவ்ய பிரபந்தம்

முதல் ஆயிரம்
திருமழிசை ஆழ்வார்

திருச்சந்த விருத்தம்
751பூ நிலாய ஐந்துமாய் புனற்கண் நின்ற நான்குமாய்
தீ நிலாய மூன்றுமாய் சிறந்த கால் இரண்டுமாய்
மீ நிலாயது ஒன்றும் ஆகி வேறு வேறு தன்மையாய்
நீ நிலாய வண்ணம் நின்னை யார் நினைக்க வல்லரே?            (1)
   
752ஆறும் ஆறும் ஆறுமாய் ஓர் ஐந்தும் ஐந்தும் ஐந்துமாய்
ஏறு சீர் இரண்டும் மூன்றும் ஏழும் ஆறும் எட்டுமாய்
வேறு வேறு ஞானம் ஆகி மெய்யினோடு பொய்யுமாய்
ஊறொடு ஓசையாய ஐந்தும் ஆய ஆய மாயனே             (2)
   
753ஐந்தும் ஐந்தும் ஐந்தும் ஆகி அல்லவற்று உளாயுமாய்
ஐந்து மூன்றும் ஒன்றும் ஆகி நின்ற ஆதிதேவனே
ஐந்தும் ஐந்தும் ஐந்தும் ஆகி அந்தரத்து அணைந்து நின்று
ஐந்தும் ஐந்தும் ஆய நின்னை யாவர் காண வல்லரே?             (3)
   
754மூன்று முப்பது ஆறினோடு ஓர் ஐந்தும் ஐந்தும் ஐந்துமாய்
மூன்று மூர்த்தி ஆகி மூன்று மூன்று மூன்று மூன்றுமாய்
தோன்று சோதி மூன்றுமாய் துளக்கம் இல் விளக்கமாய்
ஏன்று என் ஆவியுள்புகுந்தது என் கொலோ? எம் ஈசனே             (4)
   
755நின்று இயங்கும் ஒன்று அலா உருக்கள் தோறும் ஆவியாய்
ஒன்றி உள்கலந்து நின்ற நின்ன தன்மை இன்னது என்று
என்றும் யார்க்கும் எண் இறந்த ஆதியாய் நின் உந்திவாய்
அன்று நான்முகற் பயந்த ஆதிதேவன் அல்லையே?             (5)
   
756நாகம் ஏந்து மேரு வெற்பை நாகம் ஏந்து மண்ணினை
நாகம் ஏந்தும் ஆக மாகம் மாகம் ஏந்து வார்புனல்
மாகம் ஏந்து மங்குல் தீ ஓர் வாயு ஐந்து அமைந்து காத்து
ஏகம் ஏந்தி நின்ற நீர்மை நின்கணே இயன்றதே             (6)
   
757ஒன்று இரண்டு மூர்த்தியாய் உறக்கமோடு உணர்ச்சியாய்
ஒன்று இரண்டு காலம் ஆகி வேலை ஞாலம் ஆயினாய்
ஒன்று இரண்டு தீயும் ஆகி ஆயன் ஆய மாயனே
ஒன்று இரண்டு கண்ணினானும் உன்னை ஏத்த வல்லனே?            (7)
   
758ஆதி ஆன வானவர்க்கும் அண்டம் ஆய அப்புறத்து
ஆதி ஆன வானவர்க்கும் ஆதி ஆன ஆதி நீ
ஆதி ஆன வான வாணர் அந்த-காலம் நீ உரைத்தி
ஆதி ஆன காலம் நின்னை யாவர் காண வல்லரே             (8)
   
759தாது உலாவு கொன்றை மாலை துன்னு செஞ்சடைச் சிவன்
நீதியால் வணங்கு பாத நின்மலா நிலாய சீர்
வேத வாணர் கீத வேள்வி நீதியான கேள்வியார்
நீதியால் வணங்குகின்ற நீர்மை நின்கண் நின்றதே             (9)
   
760தன்னுளே திரைத்து எழும் தரங்க வெண் தடங்கடல்
தன்னுளே திரைத்து எழுந்து அடங்குகின்ற தன்மை போல்
நின்னுளே பிறந்து இறந்து நிற்பவும் திரிபவும்
நின்னுளே அடங்குகின்ற நீர்மை நின்கண் நின்றதே             (10)
   
761சொல்லினால் தொடர்ச்சி நீ சொலப்படும் பொருளும் நீ
சொல்லினால் சொலப்படாது தோன்றுகின்ற சோதி நீ
சொல்லினால் படைக்க நீ படைக்க வந்து தோன்றினார்
சொல்லினால் சுருங்க நின் குணங்கள் சொல்ல வல்லரே?            (11)
   
762உலகுதன்னை நீ படைத்தி உள் ஒடுக்கி வைத்தி மீண்டு
உலகுதன்னுளே பிறத்தி ஓரிடத்தை அல்லையால்
உலகு நின்னொடு ஒன்றி நிற்க வேறு நிற்றி ஆதலால்
உலகில் நின்னை உள்ள சூழல் யாவர் உள்ள வல்லரே?            (12)
   
763இன்னை என்று சொல்லல் ஆவது இல்லை யாதும் இட்டிடைப்
பின்னை கேள்வன் என்பர் உன் பிணக்கு உணர்ந்த பெற்றியோர்
பின்னை ஆய கோலமோடு பேரும் ஊரும் ஆதியும்
நின்னை யார் நினைக்க வல்லர் நீர்மையால் நினைக்கிலே?             (13)
   
764தூய்மை யோகம் ஆயினாய் துழாய்-அலங்கல் மாலையாய்
ஆமை ஆகி ஆழ்கடற் துயின்ற ஆதிதேவ நின்
நாமதேயம் இன்னது என்ன வல்லம் அல்ல ஆகிலும்
சாம வேத கீதனாய சக்ரபாணி அல்லையே?             (14)
   
765அங்கம் ஆறும் வேதம் நான்கும் ஆகி நின்று அவற்றுளே
தங்குகின்ற தன்மையாய் தடங்கடற் பணத்தலை
செங்கண் நாகணைக் கிடந்த செல்வம் மல்கு சீரினாய்
சங்க வண்ணம் அன்ன மேனி சார்ங்கபாணி அல்லையே?             (15)
   
766தலைக் கணம் துகள் குழம்பு-சாதி சோதி தோற்றமாய்
நிலைக் கணங்கள் காண வந்து நிற்றியேலும் நீடு இரும்
கலைக் கணங்கள் சொற் பொருள் கருத்தினால் நினைக்கொணா
மலைக் கணங்கள் போல் உணர்த்தும் மாட்சி நின்தன் மாட்சியே            (16)
   
767ஏக மூர்த்தி மூன்று மூர்த்தி நாலு மூர்த்தி நன்மை சேர்
போக மூர்த்தி புண்ணியத்தின் மூர்த்தி எண் இல் மூர்த்தியாய்
நாக மூர்த்தி சயனமாய் நலங் கடற் கிடந்து மேல்
ஆக மூர்த்தி ஆய வண்ணம் என் கொல்? ஆதிதேவனே             (17)
   
768விடத்த வாய் ஒர் ஆயிரம் இராயிரம் கண் வெந்தழல்
விடுத்து வீழ்வு இலாத போகம் மிக்க சோதி தொக்க சீர்
தொடுத்து மேல் விதானமாய பௌவ-நீர் அராவணைப்
படுத்த பாயல் பள்ளிகொள்வது என்கொல் வேலைவண்ணனே            (18)
   
769புள்ளது ஆகி வேதம் நான்கும் ஓதினாய் அது அன்றியும்
புள்ளின்வாய் பிளந்து புட் கொடிப் பிடித்த பின்னரும்
புள்ளை ஊர்தி ஆதலால் அது என்கொல் மின் கொள் நேமியாய்
புள்ளின் மெய்ப் பகைக் கடல் கிடத்தல் காதலித்ததே?             (19)
   
770கூசம் ஒன்றும் இன்றி மாசுணம் படுத்து வேலை-நீர்
பேச நின்ற தேவர் வந்து பாட முன் கிடந்ததும்
பாசம் நின்ற நீரில் வாழும் ஆமையான கேசவா
ஏச அன்று நீ கிடந்தவாறு கூறு தேறவே             (20)
   
771அரங்கனே தரங்க நீர் கலங்க அன்று குன்று சூழ்
மரங்கள் தேய மாநிலம் குலுங்க மாசுணம் சுலாய்
நெருங்க நீ கடைந்தபோது நின்ற சூரர் என் செய்தார்?
குரங்கை ஆள் உகந்த எந்தை கூறு தேற வேறு இதே            (21)
   
772பண்டும் இன்றும் மேலுமாய் ஒர் பாலனாகி ஞாலம் ஏழ்
உண்டு மண்டி ஆலிலைத் துயின்ற ஆதிதேவனே
வண்டு கிண்டு தண் துழாய்-அலங்கலாய் கலந்த சீர்ப்
புண்டரீகப் பாவை சேரும் மார்ப பூமிநாதனே             (22)
   
773வால் நிறத்து ஓர் சீயமாய் வளைந்த வாள்-எயிற்றவன்
ஊன் நிறத்து உகிர்த்தலம் அழுத்தினாய் உலாய சீர்
நால்-நிறத்த வேதநாவர் நல்ல யோகினால் வணங்கு
பால்-நிறக் கடற்கிடந்த பற்பநாபன் அல்லையே?             (23)
   
774கங்கை நீர் பயந்த பாத-பங்கயத்து எம் அண்ணலே
அங்கை ஆழி சங்கு தண்டு வில்லும் வாளும் ஏந்தினாய்
சிங்கமாய தேவதேவ தேன் உலாவு மென் மலர்-
மங்கை மன்னி வாழும் மார்ப ஆழி மேனி மாயனே             (24)
   
775வரத்தினிற் சிரத்தை மிக்க வாள்-எயிற்று மற்றவன்
உரத்தினிற் கரத்தை வைத்து உகிர்த்தலத்தை ஊன்றினாய்
இரத்தி நீ-இது என்ன பொய்?-இரந்த மண் வயிற்றுளே
கரத்தி உன் கருத்தை யாவர் காண வல்லர்? கண்ணனே             (25)
   
776ஆணினோடு பெண்ணும் ஆகி அல்லவோடு நல்லவாய்
ஊணொடு ஓசை ஊறும் ஆகி ஒன்று அலாத மாயையாய்
பூணி பேணும் ஆயன் ஆகி பொய்யினோடு மெய்யுமாய்
காணி பேணும் மாணியாய்க் கரந்து சென்ற கள்வனே             (26)
   
777விண் கடந்த சோதியாய் விளங்கு ஞான மூர்த்தியாய்
பண் கடந்த தேசம் மேவு பாவநாச நாதனே
எண் கடந்த யோகினோடு இரந்து சென்று மாணியாய்
மண் கடந்த வண்ணம் நின்னை யார் மதிக்க வல்லரே?            (27)
   
778படைத்த பார் இடந்து அளந்து அது உண்டு உமிழ்ந்து பௌவ நீர்
படைத்து அடைத்து அதிற் கிடந்து முன் கடைந்த பெற்றியோய்
மிடைத்த மாலி மாலிமான் விலங்கு காலன்-ஊர் புகப்
படைக்கலம் விடுத்த பல் படைத் தடக்கை மாயனே             (28)
   
779பரத்திலும் பரத்தை ஆதி பௌவ நீர் அணைக் கிடந்து
உரத்திலும் ஒருத்திதன்னை வைத்து உகந்து அது அன்றியும்
நரத்திலும் பிறத்தி நாத ஞானமூர்த்தி ஆயினாய்
ஒருத்தரும் நினாது தன்மை இன்னது என்ன வல்லரே?             (29)
   
780வானகமும் மண்ணகமும் வெற்பும் ஏழ் கடல்களும்
போனகம் செய்து ஆலிலைத் துயின்ற புண்டரீகனே
தேன் அகஞ்செய் தண் நறும் மலர்த் துழாய் நன் மாலையாய்
கூன் அகம் புகத் தெறித்த கொற்ற வில்லி அல்லையே?             (30)
   
781காலநேமி காலனே கணக்கு இலாத கீர்த்தியாய்
ஞாலம் ஏழும் உண்டு பண்டு ஒர் பாலன் ஆய பண்பனே
வேலை வேவ வில் வளைத்த வெல் சினத்த வீர நின்
பாலர் ஆய பத்தர் சித்தம் முத்தி செய்யும் மூர்த்தியே             (31)
   
782குரக்கினப் படை கொடு குரை கடலின் மீது போய்
அரக்கர் அங்கு அரங்க வெஞ்சரம் துரந்த ஆதி நீ
இரக்க மண் கொடுத்தவற்கு இரக்கம் ஒன்றும் இன்றியே
பரக்க வைத்து அளந்து கொண்ட பற்பபாதன் அல்லையே?             (32)
   
783மின் நிறத்து எயிற்று அரக்கன் வீழ வெஞ்சரம் துரந்து
பின்னவற்கு அருள் புரிந்து அரசு-அளித்த பெற்றியோய்
நன்னிறத்து ஒர் இன்சொல் ஏழை பின்னை கேள்வ மன்னு சீர்ப்
பொன் நிறத்த வண்ணன் ஆய புண்டரீகன் அல்லையே?             (33)
   
784ஆதி ஆதி ஆதி நீ ஒர் அண்டம் ஆதி ஆதலால்
சோதியாத சோதி நீ அது உண்மையில் விளங்கினாய்
வேதம் ஆகி வேள்வி ஆகி விண்ணினோடு மண்ணுமாய்
ஆதி ஆகி ஆயன் ஆய மாயம் என்ன மாயமே?             (34)
   
785அம்பு உலாவு மீனும் ஆகி ஆமை ஆகி ஆழியார்
தம்பிரானும் ஆகி மிக்கது அன்பு மிக்கு அது அன்றியும்
கொம்பு அராவு நுண்மருங்குல் ஆயர்-மாதர் பிள்ளையாய்
எம்பிரானும் ஆய வண்ணம் என்கொலோ? எம் ஈசனே             (35)
   
786ஆடகத்த பூண்-முலை யசோதை ஆய்ச்சி பிள்ளையாய்
சாடு உதைத்து ஓர் புள்ளது ஆவி கள்ள தாய பேய்மகள்
வீட வைத்த வெய்ய கொங்கை ஐய பால் அமுதுசெய்து
ஆடகக் கை மாதர் வாய்-அமுதம் உண்டது என்கொலோ?             (36)
   
787காய்த்த நீள் விளங்கனி உதிர்த்து எதிர்ந்த பூங் குருந்தம்
சாய்த்து மா பிளந்த கைத் தலத்த கண்ணன் என்பரால்
ஆய்ச்சி பாலை உண்டு மண்ணை உண்டு வெண்ணெய் உண்டு பின்
பேய்ச்சி பாலை உண்டு பண்டு ஓர் ஏனம் ஆய வாமனா             (37)
   
788கடம் கலந்த வன்கரி மருப்பு ஒசித்து ஒர் பொய்கைவாய்
விடம் கலந்த பாம்பின் மேல் நடம் பயின்ற நாதனே
குடம் கலந்த கூத்தன் ஆய கொண்டல்வண்ண தண்துழாய்
வடம் கலந்த மாலை மார்ப காலநேமி காலனே             (38)
   
789வெற்பு எடுத்து வேலை-நீர் கலக்கினாய் அது அன்றியும்
வெற்பு எடுத்து வேலை-நீர் வரம்பு கட்டி வேலை சூழ்
வெற்பு எடுத்த இஞ்சி சூழ் இலங்கை கட்டழித்த நீ
வெற்பு எடுத்து மாரி காத்த மேகவண்ணன் அல்லையே?            (39)
   
790ஆனை காத்து ஒர் ஆனை கொன்று அது அன்றி ஆயர்-பிள்ளையாய்
ஆனை மேய்த்தி ஆனெய் உண்டி அன்று குன்றம் ஒன்றினால்
ஆனை காத்து மை-அரிக் கண் மாதரார் திறத்து முன்
ஆனை அன்று சென்று அடர்த்த மாயம் என்ன மாயமே             (40)
   
791ஆயன் ஆகி ஆயர்-மங்கை வேய தோள் விரும்பினாய்
ஆய நின்னை யாவர் வல்லர் அம்பரத்தொடு இம்பராய்?
மாய மாய மாயை கொல்? அது அன்றி நீ வகுத்தலும்
மாய மாயம் ஆக்கினாய் உன் மாயம் முற்றும் மாயமே             (41)
   
792வேறு இசைந்த செக்கர் மேனி நீறு அணிந்த புன்சடைக்
கீறு திங்கள் வைத்தவன் கை வைத்த வன்கபால் மிசை
ஊறு செங் குருதியால் நிறைத்த காரணந்தனை
ஏறு சென்று அடர்த்த ஈச பேசு கூசம் இன்றியே             (42)
   
793வெஞ்சினத்த வேழ வெண் மருப்பு ஒசித்து உருத்த மா
கஞ்சனைக் கடிந்து மண் அளந்துகொண்ட காலனே
வஞ்சனத்து வந்த பேய்ச்சி ஆவி பாலுள் வாங்கினாய்
அஞ்சனத்த வண்ணன் ஆய ஆதிதேவன் அல்லையே?             (43)
   
794பாலின் நீர்மை செம்பொன் நீர்மை பாசியின் பசும் புறம்
போலும் நீர்மை பொற்பு உடைத் தடத்து வண்டு விண்டு உலாம்
நீல நீர்மை என்று இவை நிறைந்த காலம் நான்குமாய்
மாலின் நீர்மை வையகம் மறைத்தது என்ன நீர்மையே?             (44)
   
795மண்ணுளாய் கொல்? விண்ணுளாய் கொல்? மண்ணுளே மயங்கி நின்று
எண்ணும் எண் அகப்படாய் கொல்? என்ன மாயை நின் தமர்
கண்ணுளாய் கொல்? சேயை கொல்? அனந்தன்மேல் கிடந்த எம்
புண்ணியா புனந்துழாய்-அலங்கல் அம் புனிதனே             (45)
   
796தோடு பெற்ற தண் துழாய்-அலங்கல் ஆடு சென்னியாய்
கோடு பற்றி ஆழி ஏந்தி அஞ்சிறைப் புள் ஊர்தியால்
நாடு பெற்ற நன்மை நண்ணம் இல்லையேனும் நாயினேன்
வீடு பெற்று இறப்பொடும் பிறப்பு அறுக்குமோ சொலே             (46)
   
797காரொடு ஒத்த மேனி நங்கள் கண்ண விண்ணின் நாதனே
நீர் இடத்து அராவணைக் கிடத்தி என்பர் அன்றியும்
ஓர் இடத்தை அல்லை எல்லை இல்லை என்பர் ஆதலால்
சேர்வு-இடத்தை நாயினேன் தெரிந்து இறைஞ்சுமா சொலே            (47)
   
798குன்றில் நின்று வான் இருந்து நீள் கடற் கிடந்து மண்
ஒன்று சென்று அது ஒன்றை உண்டு அது ஒன்று இடந்து பன்றியாய்
நன்று சென்ற நாளவற்றுள் நல் உயிர் படைத்து அவர்க்கு
அன்று தேவு அமைத்து அளித்த ஆதிதேவன் அல்லையே?             (48)
   
799கொண்டை கொண்ட கோதை மீது தேன் உலாவு கூனி கூன்
உண்டை கொண்டு அரங்க ஓட்டி உள் மகிழ்ந்த நாதன் ஊர்
நண்டை உண்டு நாரை பேர வாளை பாய நீலமே
அண்டை கொண்டு கெண்டை மேயும் அந் தண் நீர் அரங்கமே            (49)
   
800வெண் திரைக் கருங் கடல் சிவந்து வேவ முன் ஒர் நாள்
திண் திறற் சிலைக்கை வாளி விட்ட வீரர் சேரும் ஊர்
எண் திசைக் கணங்களும் இறைஞ்சி ஆடு தீர்த்த நீர்
வண்டு இரைத்த சோலை வேலி மன்னு சீர் அரங்கமே             (50)
   
801சரங்களைத் துரந்து வில் வளைத்து இலங்கை மன்னவன்
சிரங்கள் பத்து அறுத்து உதிர்த்த செல்வர் மன்னு பொன்-இடம்
பரந்து பொன் நிரந்து நுந்தி வந்து அலைக்கும் வார் புனல்
அரங்கம் என்பர் நான்முகத்து அயன் பணிந்த கோயிலே             (51)
   
802பொற்றை உற்ற முற்றல் யானை போர் எதிர்ந்து வந்ததைப்
பற்றி உற்று மற்று அதன் மருப்பு ஒசித்த பாகன் ஊர்
சிற்றெயிற்று முற்றல் மூங்கில் மூன்று தண்டர் ஒன்றினர்
அற்ற பற்றர் சுற்றி வாழும் அந்தண் நீர் அரங்கமே             (52)
   
803மோடியோடு இலச்சையாய சாபம் எய்தி முக்கணான்
கூடு சேனை மக்களோடு கொண்டு மண்டி வெஞ்சமத்து
ஓட வாணன் ஆயிரம் கரங் கழித்த ஆதி மால்
பீடு கோயில் கூடு நீர் அரங்கம் என்ற பேரதே             (53)
   
804இலைத் தலைச் சரம் துரந்து இலங்கை கட்டழித்தவன்
மலைத் தலைப் பிறந்து இழிந்து வந்து நுந்து சந்தனம்
குலைத்து அலைத்து இறுத்து எறிந்த குங்குமக் குழம்பினோடு
அலைத்து ஒழுகு காவிரி அரங்கம் மேய அண்ணலே             (54)
   
805மன்னு மா மலர்க் கிழத்தி வைய மங்கை மைந்தனாய்
பின்னும் ஆயர் பின்னை தோள் மணம் புணர்ந்து அது அன்றியும்
உன்ன பாதம் என்ன சிந்தை மன்ன வைத்து நல்கினாய்
பொன்னி சூழ் அரங்கம் மேய புண்டரீகன் அல்லையே?             (55)
   
806இலங்கை மன்னன் ஐந்தொடு ஐந்து பைந்தலை நிலத்து உக
கலங்க அன்று சென்று கொன்று வென்றி கொண்ட வீரனே
விலங்கு நூலர் வேத நாவர் நீதியான கேள்வியார்
வலங் கொளக் குடந்தையுள் கிடந்த மாலும் அல்லையே?             (56)
   
807சங்கு தங்கு முன் கை நங்கை கொங்கை தங்கல் உற்றவன்
அங்கம் மங்க அன்று சென்று அடர்த்து எறிந்த ஆழியான்
கொங்கு தங்கு வார் குழல் மடந்தைமார் குடைந்த நீர்
பொங்கு தண் குடந்தையுள் கிடந்த புண்டரீகனே             (57)
   
808மரம் கெட நடந்து அடர்த்து மத்த யானை மத்தகத்து
உரம் கெடப் புடைத்து ஒர் கொம்பு ஒசித்து உகந்த உத்தமா
துரங்கம் வாய் பிளந்து மண் அளந்த பாத வேதியர்
வரம் கொளக் குடந்தையுள் கிடந்த மாலும் அல்லையே?             (58)
   
809சாலி வேலி தண் வயல் தடங்கிடங்கு பூம்பொழில்
கோல மாடம் நீடு தண் குடந்தை மேய கோவலா
காலநேமி வக்கரன் கரன் முரன் சிரம் அவை
காலனோடு கூட விற்குனித்த வில்-கை வீரனே             (59)
   
810செழுங் கொழும் பெரும்பனி பொழிந்திட உயர்ந்த வேய்
விழுந்து உலர்ந்து எழுந்து விண் புடைக்கும் வேங்கடத்துள் நின்று
எழுந்திருந்து தேன் பொருந்து பூம்பொழில் தழைக் கொழும்
செழுந் தடங் குடந்தையுள் கிடந்த மாலும் அல்லையே?             (60)
   
811நடந்த கால்கள் நொந்தவோ? நடுங்க ஞாலம் ஏனமாய்
இடந்த மெய் குலுங்கவோ? இலங்கு மால் வரைச் சுரம்
கடந்த கால் பரந்த காவிரிக் கரைக் குடந்தையுள்
கிடந்தவாறு எழுந்திருந்து பேசு வாழி கேசனே             (61)
   
812கரண்டம் ஆடு பொய்கையுள் கரும் பனைப் பெரும் பழம்
புரண்டு வீழ வாளை பாய் குறுங்கொடி நெடுந்தகாய்
திரண்ட தோள்-இரணியன் சினங் கொள் ஆகம் ஒன்றையும்
இரண்டு கூறு செய்து உகந்த சிங்கம் என்பது உன்னையே             (62)
   
813நன்று இருந்து யோக நீதி நண்ணுவார்கள் சிந்தையுள்
சென்று இருந்து தீவினைகள் தீர்த்த தேவதேவனே
குன்று இருந்த மாடம் நீடு பாடகத்தும் ஊரகத்தும்
நின்று இருந்து வெஃகணைக் கிடந்தது என்ன நீர்மையே?            (63)
   
814நின்றது எந்தை ஊரகத்து இருந்தது எந்தை பாடகத்து
அன்று வெஃகணைக் கிடந்தது என் இலாத முன்னெலாம்
அன்று நான் பிறந்திலேன் பிறந்த பின் மறந்திலேன்
நின்றதும் இருந்ததும் கிடந்ததும் என் நெஞ்சுளே             (64)
   
815நிற்பதும் ஒர் வெற்பகத்து இருப்பும் விண் கிடப்பதும்
நற்பெருந் திரைக் கடலுள் நான் இலாத முன்னெலாம்
அற்புதன் அனந்த-சயனன் ஆதிபூதன் மாதவன்
நிற்பதும் இருப்பதும் கிடப்பதும் என் நெஞ்சுளே             (65)
   
816இன்று சாதல் நின்று சாதல் அன்றி யாரும் வையகத்து
ஒன்றி நின்று வாழ்தல் இன்மை கண்டும் நீசர் என்கொலோ
அன்று பார் அளந்த பாத-போதை உன்னி வானின்மேல்
சென்று சென்று தேவராய் இருக்கிலாத வண்ணமே?             (66)
   
817சண்ட மண்டலத்தின் ஊடு சென்று வீடு பெற்று மேல்
கண்டு வீடு இலாத காதல்-இன்பம் நாளும் எய்துவீர்
புண்டரீக-பாத புண்ய-கீர்த்தி நும் செவி மடுத்து
உண்டு நும் உறுவினைத் துயருள் நீங்கி உய்ம்மினோ             (67)
   
818முத்திறத்து வாணியத்து இரண்டில் ஒன்றும் நீசர்கள்
மத்தராய் மயங்குகின்றது இட்டு அதில் இறந்து போந்து
எத்திறத்தும் உய்வது ஓர் உபாயம் இல்லை உய்குறில்
தொத்து இறுத்த தண் துழாய் நன் மாலை வாழ்த்தி வாழ்மினோ            (68)
   
819காணிலும் உருப் பொலார் செவிக்கு இனாத கீர்த்தியார்
பேணிலும் வரந்தர மிடுக்கு இலாத தேவரை
ஆணம் என்று அடைந்து வாழும் ஆதர்காள் எம் ஆதிபாற்
பேணி நும் பிறப்பு எனும் பிணக்கு அறுக்ககிற்றிரே             (69)
   
820குந்தமோடு சூலம் வேல்கள் தோமரங்கள் தண்டு வாள்
பந்தமான தேவர்கள் பரந்து வானகம் உற
வந்த வாணன் ஈரைஞ்ஞூறு தோள்களைத் துணித்த நாள்
அந்த அந்த ஆகுலம் அமரரே அறிவரே             (70)
   
821வண்டு உலாவு கோதை மாதர் காரணத்தினால் வெகுண்டு
இண்ட வாணன் ஈரைஞ்ஞூறு தோள்களைத் துணித்த நாள்
முண்டன் நீறன் மக்கள் வெப்பு மோடி அங்கி ஓடிடக்
கண்டு நாணி வாணனுக்கு இரங்கினான் எம் மாயனே             (71)
   
822போதில் மங்கை பூதலக் கிழத்தி தேவி அன்றியும்
போது தங்கு நான்முகன் மகன் அவன் மகன் சொலில்
மாது தங்கு கூறன் ஏறது ஊர்தி என்று வேத நூல்
ஓதுகின்றது உண்மை அல்லது இல்லை மற்று உரைக்கிலே            (72)
   
823மரம் பொதச் சரம் துரந்து வாலி வீழ முன் ஒர் நாள்
உரம் பொதச் சரம் துரந்த உம்பர்-ஆளி எம்பிரான்
வரம் குறிப்பில் வைத்தவர்க்கு அலாது வானம் ஆளிலும்
நிரம்பு நீடு போகம் எத்திறத்தும் யார்க்கும் இல்லையே             (73)
   
824அறிந்து அறிந்து வாமனன் அடியிணை வணங்கினால்
செறிந்து எழுந்த ஞானமோடு செல்வமும் சிறந்திடும்
மறிந்து எழுந்த தெண் திரையுள் மன்னு மாலை வாழ்த்தினால்
பறிந்து எழுந்து தீவினைகள் பற்று அறுதல் பான்மையே             (74)
   
825ஒன்றி நின்று நற்றவம் செய்து ஊழி ஊழிதோறு எலாம்
நின்று நின்று அவன் குணங்கள் உள்ளி உள்ளம் தூயராய்ச்
சென்று சென்று தேவதேவர் உம்பர் உம்பர் உம்பராய்
அன்றி எங்கள் செங்கண் மாலை யாவர் காண வல்லரே?             (75)
   
826புன் புல வழி அடைத்து அரக்கு-இலச்சினை செய்து
நன் புல வழி திறந்து ஞான நற் சுடர்கொளீஇ
என்பு இல் எள்கி நெஞ்சு உருகி உள் கனிந்து எழுந்தது ஓர்
அன்பில் அன்றி ஆழியானை யாவர் காண வல்லரே?             (76)
   
827எட்டும் எட்டும் எட்டுமாய் ஒர் ஏழும் ஏழும் ஏழுமாய்
எட்டும் மூன்றும் ஒன்றும் ஆகி நின்ற ஆதிதேவனை
எட்டின் ஆய பேதமோடு இறைஞ்சி நின்று அவன் பெயர்
எட்டு எழுத்தும் ஓதுவார்கள் வல்லர் வானம் ஆளவே             (77)
   
828சோர்வு இலாத காதலால் தொடக்கு அறா மனத்தராய்
நீர் அராவணைக் கிடந்த நின்மலன் நலங் கழல்
ஆர்வமோடு இறைஞ்சி நின்று அவன் பேர் எட்டு எழுத்துமே
வாரம் ஆக ஓதுவார்கள் வல்லர் வானம் ஆளவே             (78)
   
829பத்தினோடு பத்துமாய் ஒர் ஏழினோடு ஒர் ஒன்பதாய்
பத்து-நால் திசைக்கண் நின்ற நாடு பெற்ற நன்மையாய்
பத்தின் ஆய தோற்றமோடு ஒர் ஆற்றல் மிக்க ஆதிபால்
பத்தராம் அவர்க்கு அலாது முத்தி முற்றல் ஆகுமே?             (79)
   
830வாசி ஆகி நேசம் இன்றி வந்து எதிர்ந்த தேனுகன்
நாசம் ஆகி நாள் உலப்ப நன்மை சேர் பனங்கனிக்கு
வீசி மேல் நிமிர்ந்த தோளின் இல்லை ஆக்கினாய் கழற்கு
ஆசை ஆம் அவர்க்கு அலால் அமரர் ஆகல் ஆகுமே?             (80)
   
831கடைந்த பாற்கடற் கிடந்து காலநேமியைக் கடிந்து
உடைந்த வாலி தன் தனக்கு உதவ வந்து இராமனாய்
மிடைந்த ஏழ் மரங்களும் அடங்க எய்து வேங்கடம்
அடைந்த மால பாதமே அடைந்து நாளும் உய்ம்மினோ             (81)
   
832எத்திறத்தும் ஒத்து நின்று உயர்ந்து உயர்ந்த பெற்றியோய்
முத்திறத்து மூரி நீர் அராவணைத் துயின்ற நின்
பத்து உறுத்த சிந்தையோடு நின்று பாசம் விட்டவர்க்கு
எத்திறத்தும் இன்பம் இங்கும் அங்கும் எங்கும் ஆகுமே             (82)
   
833மட்டு உலாவு தண் துழாய்-அலங்கலாய் பொலன் கழல்
விட்டு வீழ்வு இலாத போகம் விண்ணில் நண்ணி ஏறினும்
எட்டினோடு இரண்டு எனும் கயிற்றினால் மனந்தனைக்
கட்டி வீடு இலாது வைத்த காதல் இன்பம் ஆகுமே             (83)
   
834பின் பிறக்க வைத்தனன் கொல்? அன்றி நின்று தன் கழற்கு
அன்பு உறைக்க வைத்த நாள் அறிந்தனன் கொல் ஆழியான்?
தன் திறத்து ஒர் அன்பிலா அறிவு இலாத நாயினேன்
என் திறத்தில் என்கொல் எம்பிரான் குறிப்பில் வைத்ததே?             (84)
   
835நச்சு-அரா அணைக்கிடந்த நாத பாத-போதினில்
வைத்த சிந்தை வாங்குவித்து நீங்குவிக்க நீ இனம்
மெய்த்தன் வல்லை ஆதலால் அறிந்தனன் நின் மாயமே
உய்த்து நின் மயக்கினில் மயக்கல் என்னை மாயனே             (85)
   
836சாடு சாடு பாதனே சலம் கலந்த பொய்கைவாய்
ஆடு அராவின் வன்பிடர் நடம் பயின்ற நாதனே
கோடு நீடு கைய செய்ய பாதம் நாளும் உள்ளினால்
வீடனாக மெய் செயாத வண்ணம் என்கொல்? கண்ணனே            (86)
   
837நெற்றி பெற்ற கண்ணன் விண்ணின் நாதனோடு போதின்மேல்
நற்றவத்து நாதனோடு மற்றும் உள்ள வானவர்
கற்ற பெற்றியால் வணங்கு பாத நாத வேத நின்
பற்று அலால் ஒர் பற்று மற்றது உற்றிலேன் உரைக்கிலே             (87)
   
838வெள்ளை வேலை வெற்பு நாட்டி வெள் எயிற்று அராவு அளாய்
அள்ளலாக் கடைந்த அன்று அருவரைக்கு ஓர் ஆமையாய்
உள்ள நோய்கள் தீர் மருந்து வானவர்க்கு அளித்த எம்
வள்ளலாரை அன்றி மற்று ஒர் தெய்வம் நான் மதிப்பனே?             (88)
   
839பார் மிகுத்த பாரம் முன் ஒழிச்சுவான் அருச்சுனன்
தேர் மிகுத்து மாயம் ஆக்கி நின்று கொன்று வென்றிசேர்
மாரதர்க்கு வான் கொடுத்து வையம் ஐவர் பாலதாம்
சீர் மிகுத்த நின் அலால் ஒர் தெய்வம் நான் மதிப்பனே?             (89)
   
840குலங்களாய ஈரிரண்டில் ஒன்றிலும் பிறந்திலேன்
நலங்களாய நற்கலைகள் நாலிலும் நவின்றிலேன்
புலன்கள் ஐந்தும் வென்றிலேன் பொறியிலேன் புனித நின்
இலங்கு பாதம் அன்றி மற்று ஒர் பற்று இலேன் எம் ஈசனே            (90)
   
841பண் உலாவு மென் மொழிப் படைத் தடங்கணாள் பொருட்டு
எண் இலா அரக்கரை நெருப்பினால் நெருக்கினாய்
கண் அலால் ஒர் கண் இலேன் கலந்த சுற்றம் மற்று இலேன்
எண் இலாத மாய நின்னை என்னுள் நீக்கல் என்றுமே             (91)
   
842விடைக் குலங்கள் ஏழ் அடர்த்து வென்றி வேற்-கண் மாதரார்
கடிக் கலந்த தோள் புணர்ந்த காலி ஆய வேலை-நீர்
படைத்து அடைத்து அதில் கிடந்து முன் கடைந்த நின்தனக்கு
அடைக்கலம் புகுந்த என்னை அஞ்சல் என்ன வேண்டுமே             (92)
   
843சுரும்பு அரங்கு தண் துழாய் துதைந்து அலர்ந்த பாதமே
விரும்பி நின்று இறைஞ்சுவேற்கு இரங்கு அரங்கவாணனே
கரும்பு இருந்த கட்டியே கடல் கிடந்த கண்ணனே
இரும்பு அரங்க வெஞ்சரம் துரந்த வில் இராமனே             (93)
   
844ஊனில் மேய ஆவி நீ உறக்கமோடு உணர்ச்சி நீ
ஆனில் மேய ஐந்தும் நீ அவற்றுள் நின்ற தூய்மை நீ
வானினோடு மண்ணும் நீ வளங் கடற் பயனும் நீ
யானும் நீ அது அன்றி எம்பிரானும் நீ இராமனே             (94)
   
845அடக்கு அரும் புலன்கள் ஐந்து அடக்கி ஆசையாம் அவை
தொடக்கு அறுத்து வந்து நின் தொழிற்கண் நின்ற என்னை நீ
விடக் கருதி மெய்செயாது மிக்கு ஒர் ஆசை ஆக்கிலும்
கடற் கிடந்த நின் அலால் ஒர் கண்ணிலேன் எம் அண்ணலே            (95)
   
846வரம்பு இலாத மாய மாய வையம் ஏழும் மெய்ம்மையே
வரம்பு இல் ஊழி ஏத்திலும் வரம்பு இலாத கீர்த்தியாய்
வரம்பு இலாத பல் பிறப்பு அறுத்து வந்து நின்கழல்
பொந்துமா திருந்த நீ வரம்செய் புண்டரீகனே             (96)
   
847வெய்ய ஆழி சங்கு தண்டு வில்லும் வாளும் ஏந்து சீர்க்
கைய செய்ய போதில் மாது சேரும் மார்ப நாதனே
ஐயில் ஆய ஆக்கை-நோய் அறுத்து வந்து நின் அடைந்து
உய்வது ஓர் உபாயம் நீ எனக்கு நல்க வேண்டுமே             (97)
   
848மறம் துறந்து வஞ்சம் மாற்றி ஐம்புலன்கள் ஆசையும்
துறந்து நின்கண் ஆசையே தொடர்ந்துநின்ற நாயினேன்
பிறந்து இறந்து பேர் இடர்ச் சுழிக்கணின்று நீங்குமா
மறந்திடாது மற்று எனக்கு மாய நல்க வேண்டுமே             (98)
   
849காட்டி நான் செய் வல்வினைப் பயன்தனால் மனந்தனை
நாட்டி வைத்து நல்ல-அல்ல செய்ய எண்ணினார் எனக்
கேட்டது அன்றி என்னது ஆவி பின்னை கேள்வ நின்னொடும்
பூட்டி வைத்த என்னை நின்னுள் நீக்கல் பூவை வண்ணனே             (99)
   
850பிறப்பினோடு பேர் இடர்ச் சுழிக்கண் நின்றும் நீங்கும் அஃது
இறப்ப வைத்த ஞான நீசரைக் கரைக்கொடு ஏற்றுமா
பெறற்கு அரிய நின்ன பாத-பத்தி ஆன பாசனம்
பெறற்கு அரிய மாயனே எனக்கு நல்க வேண்டுமே             (100)
   
851இரந்து உரைப்பது உண்டு வாழி ஏம நீர் நிறத்து அமா
வரம் தரும் திருக்குறிப்பில் வைத்தது ஆகில் மன்னு சீர்
பரந்த சிந்தை ஒன்றிநின்று நின்ன பாத-பங்கயம்
நிரந்தரம் நினைப்பதாக நீ நினைக்க வேண்டுமே             (101)
   
852விள்வு இலாத காதலால் விளங்கு பாத-போதில் வைத்து
உள்ளுவேனது ஊன நோய் ஒழிக்குமா தெழிக்கு நீர்ப்
பள்ளி மாய பன்றி ஆய வென்றி வீர குன்றினால்
துள்ளுநீர் வரம்பு செய்த தோன்றல் ஒன்று சொல்லிடே            (102)
   
853திருக் கலந்து சேரும் மார்ப தேவதேவ தேவனே
இருக் கலந்த வேத நீதி ஆகி நின்ற நின்மலா
கருக் கலந்த காளமேக மேனி ஆய நின் பெயர்
உருக் கலந்து ஒழிவிலாது உரைக்குமாறு உரைசெயே            (103)
   
854கடுங் கவந்தன் வக்கரன் கரன் முரன் சிரம் அவை
இடந்து கூறு செய்த பல் படைத் தடக்கை மாயனே
கிடந்து இருந்து நின்று இயங்கு போதும் நின்ன பொற்கழல்
தொடர்ந்து மீள்வு இலாதது ஒர் தொடர்ச்சி நல்க வேண்டுமே            (104)
   
855மண்ணை உண்டு உமிழ்ந்து பின் இரந்து கொண்டு அளந்து மண்
கண்ணுள் அல்லது இல்லை என்று வென்ற காலம் ஆயினாய்
பண்ணை வென்ற இன்சொல் மங்கை கொங்கை தங்கு பங்கயக்
கண்ண நின்ன வண்ணம் அல்லது இல்லை எண்ணும் வண்ணமே             (105)
   
856கறுத்து எதிர்ந்த காலநேமி காலனோடு கூட அன்று
அறுத்த ஆழி சங்கு தண்டு வில்லும் வாளும் ஏந்தினாய்
தொறுக் கலந்த ஊனம் அஃது ஒழிக்க அன்று குன்றம் முன்
பொறுத்த நின் புகழ்க்கு அலால் ஒர் நேசம் இல்லை நெஞ்சமே            (106)
   
857காய் சினத்த காசி மன்னன் வக்கரன் பவுண்டிரன்
மாசினத்த மாலி மான் சுமாலி கேசி தேனுகன்
நாசம் உற்று வீழ நாள் கவர்ந்த நின் கழற்கு அலால்
நேச பாசம் எத் திறத்தும் வைத்திடேன் எம் ஈசனே             (107)
   
858கேடு இல் சீர் வரத்தினாய்க் கெடும் வரத்து அயன் அரன்
நாடினோடு நாட்டம்-ஆயிரத்தன் நாடு நண்ணினும்
வீடது ஆன போகம் எய்தி வீற்றிருந்த போதிலும்
கூடும் ஆசை அல்லது ஒன்று கொள்வனோ குறிப்பிலே?            (108)
   
859சுருக்குவாரை இன்றியே சுருங்கினாய் சுருங்கியும்
பெருக்குவாரை இன்றியே பெருக்க மெய்து பெற்றியோய்
செருக்குவார்கள் தீக்குணங்கள் தீர்த்த தேவதேவன் என்று
இருக்கு வாய் முனிக் கணங்கள் ஏத்த யானும் ஏத்தினேன்            (109)
   
860தூயனாயும் அன்றியும் சுரும்பு உலாவு தண் துழாய்
மாய நின்னை நாயினேன் வணங்கி வாழ்த்தும் ஈதெலாம்
நீயும் நின் குறிப்பினிற் பொறுத்து நல்கு வேலை-நீர்ப்
பாயலோடு பத்தர் சித்தம் மேய வேலை வண்ணனே             (110)
   
861வைது நின்னை வல்லவா பழித்தவர்க்கும் மாறில் போர்
செய்து நின்ன செற்றத் தீயில் வெந்தவர்க்கும் வந்து உனை
எய்தல் ஆகும் என்பர் ஆதலால் எம் மாய நாயினேன்
செய்த குற்றம் நற்றமாகவே கொள் ஞால-நாதனே             (111)
   
862வாள்கள் ஆகி நாள்கள் செல்ல நோய்மை குன்றி மூப்பு எய்தி
மாளும் நாள் அது ஆதலால் வணங்கி வாழ்த்து என் நெஞ்சமே
ஆளது ஆகும் நன்மை என்று நன்குணர்ந்து அது அன்றியும்
மீள்வு இலாத போகம் நல்க வேண்டும் மால பாதமே             (112)
   
863சலம் கலந்த செஞ்சடைக் கறுத்த கண்டன் வெண்தலைப்
புலன் கலங்க உண்ட பாதகத்தன் வன் துயர் கெட
அலங்கல் மார்வில் வாச நீர் கொடுத்தவன் அடுத்த சீர்
நலங்கொள் மாலை நண்ணும் வண்ணம் எண்ணு வாழி நெஞ்சமே             (113)
   
864ஈனமாய எட்டும் நீக்கி ஏதம் இன்றி மீதுபோய்
வானம் ஆள வல்லையேல் வணங்கி வாழ்த்து என் நெஞ்சமே
ஞானம் ஆகி ஞாயிறு ஆகி ஞால முற்றும் ஓர் எயிற்று
ஏனமாய் இடந்த மூர்த்தி எந்தை பாதம் எண்ணியே             (114)
   
865அத்தன் ஆகி அன்னை ஆகி ஆளும் எம் பிரானுமாய்
ஒத்து ஒவ்வாத பல் பிறப்பு ஒழித்து நம்மை ஆட்கொள்வான்
முத்தனார் முகுந்தனார் புகுந்து நம்முள் மேவினர்
எத்தினால் இடர்க்கடற் கிடத்தி ஏழை நெஞ்சமே?             (115)
   
866மாறு செய்த வாள்-அரக்கன் நாள் உலப்ப அன்று இலங்கை
நீறு செய்து சென்று கொன்று வென்றி கொண்ட வீரனார்
வேறு செய்து தம்முள் என்னை வைத்திடாமையால் நமன்
கூறுசெய்து கொண்டு இறந்த குற்றம் எண்ண வல்லனே?             (116)
   
867அச்சம் நோயொடு அல்லல் பல் பிறப்பு அவாய மூப்பு இவை
வைத்த சிந்தை வைத்த ஆக்கை மாற்றி வானில் ஏற்றுவான்
அச்சுதன் அனந்த கீர்த்தி ஆதி அந்தம் இல்லவன்
நச்சு நாகனைக் கிடந்த நாதன் வேத கீதனே             (117)
   
868சொல்லினும் தொழிற்கணும் தொடக்கு அறாத அன்பினும்
அல்லும் நன் பகலினோடும் ஆன மாலை காலையும்
அல்லி நாள்-மலர்க் கிழத்தி நாத பாத-போதினைப்
புல்லி உள்ளம் விள்வு இலாது பூண்டு மீண்டது இல்லையே            (118)
   
869பொன்னி சூழ் அரங்கம் மேய பூவை-வண்ண மாய கேள்
என்னது ஆவி என்னும் வல்வினையினுட் கொழுந்து எழுந்து
உன்ன பாதம் என்ன நின்ற ஒண்சுடர்க் கொழுமலர்
மன்ன வந்து பூண்டு வாட்டம் இன்றி எங்கும் நின்றதே             (119)
   
870இயக்கு அறாத பல் பிறப்பில் என்னை மாற்றி இன்று வந்து
உயக்கொள் மேகவண்ணன் நண்ணி என்னிலாய தன்னுளே
மயக்கினான் தன் மன்னு சோதி ஆதலால் என் ஆவி தான்
இயக்கு எலாம் அறுத்து அறாத இன்ப வீடு பெற்றதே             (120)