நாலாயிர திவ்ய பிரபந்தம்

இரண்டாம் ஆயிரம்
திருமங்கை ஆழ்வார்
பெரிய திருமொழி

திருவதரி ஆச்சிரமம்
977ஏனம் முன் ஆகி இரு நிலம் இடந்து அன்று
      இணை-அடி இமையவர் வணங்க
தானவன் ஆகம் தரணியில் புரளத்
      தடஞ் சிலை குனித்த என் தலைவன்-
தேன் அமர் சோலைக் கற்பகம் பயந்த
      தெய்வ நல் நறு மலர் கொணர்ந்து
வானவர் வணங்கும் கங்கையின் கரைமேல்
      வதரி ஆச்சிரமத்து உள்ளானே             (1)
   
978கானிடை உருவை சுடு சரம் துரந்து
      கண்டு முன் கொடுந் தொழில் உரவோன்
ஊன் உடை அகலத்து அடு கணை குளிப்ப
      உயிர் கவர்ந்து உகந்த எம் ஒருவன்-
தேன் உடைக் கமலத்து அயனொடு தேவர்
      சென்று சென்று இறைஞ்சிட பெருகு
வானிடை முது நீர்க் கங்கையின் கரைமேல்
      வதரி ஆச்சிரமத்து உள்ளானே             (2)
   
979இலங்கையும் கடலும் அடல் அரும் துப்பின்
      இரு நிதிக்கு இறைவனும் அரக்கர்
குலங்களும் கெட முன் கொடுந் தொழில் புரிந்த
      கொற்றவன்-கொழுஞ் சுடர் சுழன்ற
விலங்கலில் உரிஞ்சி மேல்நின்ற விசும்பில்
      வெண் துகில் கொடி என விரிந்து
வலம் தரு மணி நீர்க் கங்கையின் கரைமேல்
      வதரி ஆச்சிரமத்து உள்ளானே             (3)
   
980துணிவு இனி உனக்குச் சொல்லுவன் மனமே
      தொழுது எழு தொண்டர்கள்- தமக்குப்
பிணி ஒழித்து அமரர் பெரு விசும்பு அருளும்
      பேர் அருளாளன் எம் பெருமான்-
அணி மலர்க் குழலார் அரம்பையர் துகிலும்
      ஆரமும் வாரி வந்து அணி நீர்
மணி கொழித்து இழிந்த கங்கையின் கரைமேல்
      வதரி ஆச்சிரமத்து உள்ளானே             (4)
   
981பேய் இடைக்கு இருந்து வந்த மற்று அவள்-தன்
      பெரு முலை சுவைத்திட பெற்ற
தாய் இடைக்கு இருத்தல் அஞ்சுவன் என்று
      தளர்ந்திட வளர்ந்த என் தலைவன்-
சேய் முகட்டு உச்சி அண்டமும் சுமந்த
      செம்பொன் செய் விலங்கலில் இலங்கு
வாய் முகட்டு இழிந்த கங்கையின் கரைமேல்
      வதரி ஆச்சிரமத்து உள்ளானே             (5)
   
982தேர் அணங்கு அல்குல் செழுங் கயல் கண்ணி
      திறத்து ஒரு மறத் தொழில் புரிந்து
பார் அணங்கு இமில் ஏறு ஏழும் முன் அடர்த்த
      பனி முகில் வண்ணன் எம் பெருமான்-
காரணம்- தன்னால் கடும் புனல் கயத்த
      கரு வரை பிளவு எழக் குத்தி
வாரணம் கொணர்ந்த கங்கையின் கரைமேல்
      வதரி ஆச்சிரமத்து உள்ளானே             (6)
   
983வெம் திறல் களிறும் வேலைவாய் அமுதும்
      விண்ணொடு விண்ணவர்க்கு அரசும்
இந்திரற்கு அருளி எமக்கும் ஈந்தருளும்
      எந்தை எம் அடிகள் எம் பெருமான்-
அந்தரத்து அமரர் அடி-இணை வணங்க
      ஆயிரம் முகத்தினால் அருளி
மந்தரத்து இழிந்த கங்கையின் கரைமேல்
      வதரி ஆச்சிரமத்து உள்ளானே             (7)
   
984மான் முனிந்து ஒரு கால் வரி சிலை வளைத்த
      மன்னவன் பொன் நிறத்து உரவோன்
ஊன் முனிந்து அவனது உடல் இரு பிளவா
      உகிர் நுதி மடுத்து அயன் அரனைத்
தான் முனிந்து இட்ட வெம் திறல் சாபம்
      தவிர்த்தவன்-தவம்புரிந்து உயர்ந்த
மா முனி கொணர்ந்த கங்கையின் கரைமேல்
      வதரி ஆச்சிரமத்து உள்ளானே             (8)
   
985கொண்டல் மாருதங்கள் குல வரை தொகு நீர்க்
      குரை கடல் உலகு உடன் அனைத்தும்
உண்ட மா வயிற்றோன் ஒண் சுடர் ஏய்ந்த
      உம்பரும் ஊழியும் ஆனான்-
அண்டம் ஊடு அறுத்து அன்று அந்தரத்து இழிந்து அங்கு
      அவனியாள் அலமரப் பெருகும்
மண்டு மா மணி நீர்க் கங்கையின் கரைமேல்
      வதரி ஆச்சிரமத்து உள்ளானே             (9)
   
986வரும் திரை மணி நீர்க் கங்கையின் கரைமேல்
      வதரி ஆச்சிரமத்து உள்ளானை
கருங் கடல் முந்நீர் வண்ணனை எண்ணி
      கலியன் வாய் ஒலிசெய்த பனுவல்
வரம்செய்த ஐந்தும் ஐந்தும் வல்லார்கள்
      வானவர் உலகு உடன் மருவி
இருங் கடல் உலகம் ஆண்டு வெண் குடைக் கீழ்
      இமையவர் ஆகுவர் தாமே (10)