நாலாயிர திவ்ய பிரபந்தம்

இரண்டாம் ஆயிரம்
திருமங்கை ஆழ்வார்
பெரிய திருமொழி

திருச்சாளக்கிராமம்
987கலையும் கரியும் பரிமாவும்
      திரியும் கானம் கடந்துபோய்
சிலையும் கணையும் துணையாகச்
      சென்றான் வென்றிச் செருக்களத்து
மலை கொண்டு அலை நீர் அணை கட்டி
      மதிள் நீர் இலங்கை வாள் அரக்கர்
தலைவன் தலை பத்து அறுத்து உகந்தான்
      சாளக்கிராமம் அடை நெஞ்சே             (1)
   
988கடம் சூழ் கரியும் பரிமாவும்
      ஒலி மாத் தேரும் காலாளும்
உடன் சூழ்ந்து எழுந்த கடி இலங்கை
      பொடியா வடி வாய்ச் சரம் துரந்தான்-
இடம் சூழ்ந்து எங்கும் இரு விசும்பில்
      இமையோர் வணங்க மணம் கமழும்
தடம் சூழ்ந்து எங்கும் அழகு ஆய
      சாளக்கிராமம் அடை நெஞ்சே             (2)
   
989உலவு திரையும் குல வரையும்
      ஊழி முதலா எண் திக்கும்
நிலவும் சுடரும் இருளும் ஆய்
      நின்றான் வென்றி விறல் ஆழி
வலவன் வானோர்-தம் பெருமான்
      மருவா அரக்கர்க்கு எஞ்ஞான்றும்
சலவன்-சலம் சூழ்ந்து அழகு ஆய
      சாளக்கிராமம் அடை நெஞ்சே             (3)
   
990ஊரான் குடந்தை உத்தமன்
      ஒரு கால் இரு கால் சிலை வளையத்
தேரா அரக்கர் தேர்-வெள்ளம்
      செற்றான் வற்றா வரு புனல் சூழ்
பேரான் பேர் ஆயிரம் உடையான்
      பிறங்கு சிறை வண்டு அறைகின்ற
தாரான்-தாரா வயல் சூழ்ந்த
      சாளக்கிராமம் அடை நெஞ்சே             (4)
   
991அடுத்து ஆர்த்து எழுந்தாள் பில வாய் விட்டு
      அலற அவள் மூக்கு அயில் வாளால்
விடுத்தான் விளங்கு சுடர் ஆழி
      விண்ணோர் பெருமான் நண்ணார்முன்
கடுத்து ஆர்த்து எழுந்த பெரு மழையைக்
      கல் ஒன்று ஏந்தி இன நிரைக்காத்
தடுத்தான்-தடம் சூழ்ந்து அழகு ஆய
      சாளக்கிராமம் அடை நெஞ்சே             (5)
   
992தாய் ஆய் வந்த பேய் உயிரும்
      தயிரும் விழுதும் உடன் உண்ட
வாயான் தூய வரி உருவின்
      குறளாய்ச் சென்று மாவலியை
ஏயான் இரப்ப மூவடி மண்
      இன்றே தா என்று உலகு ஏழும்
தாயான் காயா மலர் வண்ணன்-
      சாளக்கிராமம் அடை நெஞ்சே             (6)
   
993ஏனோர் அஞ்ச வெம் சமத்துள்
      அரி ஆய் பரிய இரணியனை
ஊன் ஆர் அகலம் பிளவு எடுத்த
      ஒருவன் தானே இரு சுடர் ஆய்
வான் ஆய் தீ ஆய் மாருதம் ஆய்
      மலை ஆய் அலை நீர் உலகு அனைத்தும்
தான் ஆய் தானும் ஆனான்-தன்
      சாளக்கிராமம் அடை நெஞ்சே             (7)
   
994வெந்தார் என்பும் சுடு நீறும்
      மெய்யில் பூசி கையகத்து ஓர்
சந்து ஆர் தலைகொண்டு உலகு ஏழும்
      திரியும் பெரியோன்-தான் சென்று என்
எந்தாய் சாபம் தீர் என்ன
      இலங்கு அமுது நீர் திருமார்வில்
தந்தான்-சந்து ஆர் பொழில் சூழ்ந்த
      சாளக்கிராமம் அடை நெஞ்சே             (8)
   
995தொண்டு ஆம் இனமும் இமையோரும்
      துணை நூல் மார்வின் அந்தணரும்
அண்டா எமக்கே அருளாய் என்று
      அணையும் கோயில் அருகு எல்லாம்
வண்டு ஆர் பொழிலின் பழனத்து
      வயலின் அயலே கயல் பாயத்
தண் தாமரைகள் முகம் அலர்த்தும்
      சாளக்கிராமம் அடை நெஞ்சே             (9)
   
996தாரா ஆரும் வயல் சூழ்ந்த
      சாளக்கிராமத்து அடிகளை
கார் ஆர் புறவின் மங்கை வேந்தன்
      கலியன் ஒலிசெய் தமிழ்மாலை
ஆர் ஆர் உலகத்து அறிவு உடையார்
      அமரர் நல் நாட்டு அரசு ஆளப்
பேர் ஆயிரமும் ஓதுமின்கள்
      அன்றி இவையே பிதற்றுமினே             (10)